இயற்கை வனப்பின் விலாசமாக இருந்தது அந்த மலைக்குன்று!
அங்கே ஒரு துறவி.
இறைவனைத் தொழுது நன்றி செலுத்துவதற்காக அந்த இடத்துக்கு அவர் வந்து அறுபது ஆண்டுகள் முடிந்துவிட்டன.
மலை முகட்டிலிருந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த துறவியின் முகத்தில் புன்முறுவல்.
"உலக வாழ்க்கை சொற்பமானது! மறுமையோ நீண்ட நெடியது.. அழிவில்லாதது! உலக மாந்தர் சென்று சேர வேண்டிய அசலான தாயகம் அது!" - என்ற நிலையாமைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட மந்தகாசமது!
சில நாட்களுக்கு முன் பெய்திருந்த மழையால் அந்தப் பகுதி முழுவதும் சௌந்தர்ய சேலை கட்டியிருந்தது. அந்த அழகை ரசித்து அள்ளிப் பருக முடிவெடுத்த துறவி, வழியில் உண்ண இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்துக் கொண்டு நடந்தார்.
அப்போது அவர் கண்களில் ஓர் இளமங்கை பட்டாள்.
படைப்பின் திறன் அனைத்தையும் இறைவன் அவள் மீது வாரி இறைத்திருந்தான்.
'களுக்'கென்ற சிரிப்பும், ஒய்யார நடையுமாய் வந்தவள் துறவியிடம் பேசவும் செய்தாள்.
அதேபோல, துறவியின் பேச்சை முகம் மலர ரசிக்கவும் செய்தாள்.
ஏகாந்தமும், அவளுடைய அழகும் உணர்வுகளைத் தூண்டிவிட இருவரும் மலர்-வண்டுகளாய் மாறினர்.
பிறகு அருகிலிருந்த அருவியில் குளிக்கச் சென்றார் துறவி.
வழியில் பசிக் கொடுமையால் வாடிக் கொண்டிருந்த ஒரு யாசகனுக்கு கையிலிருந்த ரொட்டித் துண்டுகளை இரக்கப்பட்டு கொடுத்தார்.
திடிரென்று ஒருநாள் அவர் இறந்துவிட்டார்.
இறை சந்நிதியில் நிறுத்தப்பட்ட அவரது கணக்கு-வழக்குகள் எடை போடப்பட்டன. அறுபதாண்டு தொழுகை, தியானங்கள் நன்மையின் தட்டிலும்,
இளம் பெண்ணுடன் கொண்ட தகாத 'விபச்சார' உறவு பாவங்களின் தட்டிலும் நிறுத்தப்பட்டபோது, பாவங்களின் தட்டே எடை கனத்திருந்தது.
அதன் பின் அவர், பசியால் வாடிய யாசகனுக்குச் செய்த தர்மமான இரண்டே இரண்டு ரொட்டித் துண்டுகள் நன்மையின் தட்டில் வைக்கப்பட்டதும் அதன் எடை கூடி விட்டது.
துறவியின் அந்த தர்மச் செயலலால் மகிழ்வுற்ற இறைவன், துறவியின் பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். அவரை மன்னித்து ஈடேற்றமளித்தான்.
தான தர்மங்களின் சிறப்பை வலியுறுத்தி அண்ணல் முஹம்மது நபிகளார் (ஸல்) தமது தோழருக்குச் சொன்ன முன் சென்று போன சமுதாயத்தாரின் வரலாற்றுச் சம்பவம் இது.
-- இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க: - அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
- நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
- குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
- கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
0 comments:
Post a Comment