NewsBlog

Sunday, August 19, 2018

ஆய்வு கட்டுரை: நச்சு மரத்தில் காய்த்த நல்ல கனியா வாஜ்பேய்?


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வாஜ்பேய் குறித்து ஊடகங்கள் உருவாக்க முயலும் பிம்பம் என்ன? நிஜம் என்ன என்பதைக் குறித்து மே 16-31, 1998, பக்கம் 13-16 அன்றைய சமரசத்தில் நான் எழுதிய ஆய்வு கட்டுரை இது.

தரவுகள், சம்பவங்கள் எல்லாமும் கட்டுரை எழுதப்பட்ட சூழலில், காலத்தில் சம்பந்தப்பட்டவை என்பதை வாசகர்கள் நினைவில் வைக்க வேண்டும். - இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள வாஜ்பேய் குறித்து பத்திரிகைகள் ஊதி… ஊதி.. பெரிதாக்கிய அளவுக்கு அவர் சிறப்பானவர்தானா? என்பதை நாம் தெரிந்து கொண்டேயாக வேண்டும்.

வாஜ்பேய், ஒரு ‘மாடரேட்’ அதாவது ‘முற்போக்குவாதி’ ‘நல்லவர்’ ‘வல்லவர்’ ‘நளினமானவர்’ – என்றெல்லாம் சொல்லப்படுவது எந்தளவுக்கு உண்மை? இதை ஒரே வரியில் சொன்னால், வாஜ்பேய், “ஆர்.எஸ்.எஸ். சிந்தனையுடன் சிறிதும் முரண்பாடு இல்லாதவர்” எனலாம். உண்மையும் இதுதான். அவர், ‘திறமையான பிரதமர்’; ‘நச்சு மரத்தில் காய்த்த நல்ல கனி’ என்னும் கூற்றுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

1996-ல், 13 நாட்கள் நாடாண்ட பா.ஜ.க தலைவரான வாஜ்பேய், நாட்டின் ஒருமைப்பாட்டுணர்வை மதிப்பவர் என்றும், எல்லாத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருப்பவர் என்றும், சிறுபான்மையினரின் தார்மீக உரிமைகளை காப்பாற்றும் சூரர் என்றும் செய்யப்பட்ட பரப்புரைகள், பொய்யுரைகளாகும். கலப்படமில்லாத கட்டுக் கதைகளாகும்.

பி.ஜே.பியின் முக்கியமான மூன்று தலைவர்களில் வாஜ்பேயும் ஒருவர். அத்துடன், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகிய இவர்களைவிட மூத்தவர் அதாவது சீனியர். பி.ஜே.பி. துவங்கிய நாளிலிருந்து இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இதற்கும் முன்பாக ‘ஜனசங்’ காலத்திலிருந்து வாஜ்பேய் அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவராய், தளகர்த்தாவாய், சிந்தாந்தத்தில் முக்குளித்த பிரமுகராய் உள்ளவர். கடந்த ஐம்பதாண்டுகளாய் அவர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். இவ்வளவு நீண்ட நெடிய காலம் இயக்கத்துடன் நகமும், சதையுமாய் உறவு வைத்துள்ள இந்த ‘மாடரேட்’ ஒருநாளும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரதான கொள்கையாள முஸ்லிம் விரோதப் போக்கையும், அதை செயல்படுத்த மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைகளையும் கண்டித்ததேயில்லை. அதற்கு மாறாக, இயக்கத்தின் முஸ்லிம் விரோதப் போக்கை நீரூற்றி பேணுதலோடு கண்காணித்து வளர்த்து வந்தவர் அவர் என்றே சொல்லலாம்.

அதேசமயம், மிகவும் எச்சரிக்கையோடும், ‘இரட்டை நாக்கு’ தோரணையில், தன்னை நடுநிலைவாதியாகவும், முற்போக்கு சிந்தனையாளராகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் வண்ணம் நடந்து கொண்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த போலி சித்திரமே இன்று ஒருபுறம் பா.ஜ.கவுக்கும், மறுபுறம் வாஜ்பேய்க்கும் லாபம் தந்து கொண்டிருக்கிறது.

அசாம் அசாமியர்களுக்கே என்ற போராட்டம் முற்றிவரும்நிலையில், ‘அசாமில் பல நூற்றாண்டுகளாய், தலைமுறை தலைமுறையாய் வசித்துவரும் முஸ்லிம்களால்தான் இந்துக்கள் அவதிப்படுவதாகவும், அதனால், இந்துக்கள் தங்கள் பலத்தைப் பிரயோகிக்க வேண்டியிருக்கும் என்றும் வாஜ்பேய் சொன்னதாய் முன்னாள் உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா கூறியிருக்கிறார்.

இதுதான் வாஜ்பேய்.

பாபரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளி, ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரிழப்புக்கு காரணமானது. குறிப்பாக வடஇந்தியாவில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயினும், ‘மாடரேட்’ வாஜ்பேயின் இதயமோ இரக்கத்தால் கசியவில்லை. தனது கட்சி செய்யும் முஸ்லிம் விரோதப் பரப்புரைகளை அவர் ஒருநாளும் தடுக்கவில்லை. பல்வேறு வகுப்பு கலவரங்கள் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கைள்படி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்களவையில் ஒருமுறைகூட அவர் குரல் எழுப்பியதில்லை.

ஏனென்றால், கலவரங்களை முன்னின்று நடத்திய சக்திகள் எவை என்பது வாஜ்பேயிக்கு நன்றாகவே தெரியும். அதுவே அவரது மௌனத்துக்கு காரணம்.

1993, ஜனவரியில் மும்பை நகரில் சுமார் 15 நாட்கள் தலைவிரித்தாடிய முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்பு கலவரங்களின்போது, ‘மாடரேட்’ வாஜ்பேய் இந்த மரணகாண்டத்தை உடனே நிறுத்தும்படி சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேயையோ, அரசு எந்திரத்தையோ கேட்டுக் கொண்டதில்லை. 
பாபரி மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்கியபோது, இது ‘பக்தி’ பரவசத்தால், விளைந்த செயல் என்று அதை அசல்டாக வர்ணித்தவர் வாஜ்பேய்.

பாபரி மஸ்ஜித் விவகாரம் மட்டுமல்ல காசி, மதுரா இன்னும் வி.ஹெச்.பி பட்டியலில் இடம் பெற்றுள்ள நூற்றுக் கணக்கான மசூதிகளை கோயில்களாக்கும் மதவெறியைக் கண்டித்து அவர் ஒருநாளும் வாய் திறந்து பேசியதேயில்லை.

ஜனதா கட்சி அரசாண்டபோது, வாஜ்பேய் வெளியுறவு அமைச்சராக பொறுப்பிலிருந்தார். அப்போது அவர் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவுகள் மேற்கொண்டதாக செய்திகள் பரபரப்பாய் வெளிவந்தன. ஆனால், இதற்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? இந்திய முஸ்லிம்கள் இந்திய மண்ணில் பிறந்து, இந்த மண்ணிலேயே வளர்ந்து, இந்த மண்ணிலேயே மரணிக்கிறார்கள். அண்டை, அயல்நாடுகளுடன் வாஜ்பேய் கொள்ளும் உறவால் இந்திய முஸ்லிம்களுக்கு ஆகப் போவதும் ஒன்றுமில்லை. இருப்பினும் இந்த செய்திக்கு ஊடகங்களால் முக்கியத்துவம் தரப்பட்டது.

பல்லாண்டு காலம் நன்கு திட்டமிட்டு வாஜ்பேய் மிகவும் எச்சரிக்கையுடன் தன்னை ஒரு மாடரேட் தலைவராய் காட்டி பெயர் சம்பாதித்துக் கொண்டார். அவரது பயங்கரமான சிந்தனையை உள்ளுக்குள் மறைத்து, புறத்தில் தேன் தடவிய சொற்களாய் உதிர்த்து கேட்பவரை வசீகரம் செய்யும் திறமைசாலி அவர்.

தீவிரமான இந்துத்துவ வகுப்புவாதி என்று பெயர் பெற்ற எல்.கே.அத்வானியால் கட்சிக்கு ஓட்டு கிடைக்காது என்று முடிவெடுத்த ஆர்.எஸ்.எஸ் வாஜ்பேயை களத்தில் இறக்கியது. இதன் விளைவாக 1991 ஏப்ரல் 30, அன்றைய சூழலை முன் வைத்து அத்வானியின் பெயரை பிரதமர் பொறுப்புக்கு வாஜ்பேய் முன்மொழிந்தார். அதே ஸ்டைலில் தற்போது, வாஜ்பேய்தான் பிரதமர் பொறுப்புக்கு பொருத்தமானவர் என்று அத்வானி முன்மொழிந்தார். உண்மையில், இந்த இருவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கைப்பாவைகளே! ஒரே சித்தாந்த குட்டையில் ஊறிய மட்டைகளே..!

நவம்பர் 9, 1995-ல், மும்பையில் வாஜ்பேய் பேசிய பேச்சுகள் அவரது உண்மை முகத்தை வெளிப்படுத்தின. “இந்திய ஒருமைப்பாடு இந்துத்துவத்தின் மீது ஆதாரப்பட்டிருக்கிறது. இந்துத்துவம், இந்துயிஸம் எல்லாம் ஒன்றுதான். இந்தியா மதம் சார்ந்த நாடாகவே பாவிக்கப்படும்” – என்றார் அப்போது வாஜ்பேய். (தி ஆசியன் ஏஜ், நவ.10,1995)

இந்திய நாட்டின் மதச்சார்பின்மையை வாஜ்பேயால் ஒருகாலும் ஜீரணித்துக் கொள்ள இயலாது. அத்வானியோ, முரளிமனோகர் ஜோஷியோ, ராஜேந்திர சிங்கோ யாராக இருந்தாலும் இவர்களது சிந்தனையும், எண்ணங்களும் ஒன்றுதான். இவற்றில் எந்த முரண்பாட்டையும் காண முடியாது. இப்படியிருக்கும்போது, வாஜ்பேய் எப்படி மாடரேட்டாக இருக்க முடியும்? இவர்களுக்குள் இருந்த வேறுபாடு என்னவென்றால், அத்வானி, ராஜேந்தி சிங் போன்றவர்கள் இந்துத்துவம் குறித்து பேசும்போது முரட்டுத்தனமாய் வெட்டு ஒன்று. துண்டு இரண்டு என்று பேசுவார்கள். ஆனால், வாஜ்பேயோ தேன் தடவி இந்துத்துவ கருத்துக்களை சமர்பிப்பதில் அதிவல்லவர்.

ஏப்ரல் 30, 1991. ஜெய்பூர் மக்களவைத் தேர்தல்களில் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும், கிரிமினல்களுக்கும் சாட்சாத் இதே வாஜ்பேய் பரிந்துரைத்தார் என்பதே அவரது ‘நல்லவர்’, ‘வல்லவர்’ பெயர்களுக்கு ஓர் உதாரணம். “இவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் அல்ல!” என்று கிரிமினல்கள் குறித்து இவர், நற்சான்றிதழும் தந்தார்.

சமீபத்தில், உ.பியில் பி.ஜே.பி கட்சி கிரிமினல்களுக்கு அமைச்சரவையில் இடம் தந்தபோது, கடும் விமர்சனம் எழுந்தது. அந்த நேரத்தில் வாஜ்பேய் அப்பிரச்சினையை மிகச் சாமார்த்தியமாக சமாளித்தார். காட்சி ஊடகங்களிலும், செய்தியாளர் கூட்டங்களிலும், “கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் உ.பியின் பி.ஜே.பி அமைச்சர்கள். இவர்களை குற்றவாளிகள் என்று எப்படி சொல்ல முடியும்? இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டனவா?” – என்று குதர்க்கவாதம் புரிந்தார்.

பா.ஜ.கவின் கொள்கையிலும், கோட்பாடுகளிலும், வழிமுறைகளிலும் வாஜ்பேய் என்றும் முரண்பட்டதேயில்லை. வெகு சாமார்த்தியமாக அவர் மாடரேட் முகமூடியை தரித்துக் கொண்டார். வாய்ப்பு கிடைத்தால் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இவர்களைவிட ஒருபடி மேலே சென்று முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தவும் அவர் தயங்கியதே இல்லை. அவர் ஒருகாலும் ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்த கொள்கைகளிலிருந்து நூலிழையும் விலகி நடக்க விரும்பியதேயில்லை.
மாடரேட்டான வாஜ்பேய்-ஆர்.எஸ்.எஸ் இடையிலான உறவு குறித்து ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, வாஜ்பேய், “நான் மாடரேட் என்றும், கட்சி அப்படியில்லை என்றும், நான் மதசார்பின்மையை கடைப்பிடிப்பவன் என்றும், கட்சி அப்படியில்லை என்றும், நான் நல்லவன், கட்சி அப்படியில்லை என்றும் இடதுசாரிகள்தான் (போலியாக) பிரச்சாரம் செய்கிறார்கள்” – என்றார். தனது சித்தாந்தத்தை விளக்க வரும்போது, “இந்துத்துவமும், தேசிய கலாச்சாரமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. இவற்றைப் பிரிக்கவே முடியாது!. இதுவே என் கொள்கை” – என்றார். (சண்டே 30.06.1996). அத்வானி சொல்வதும் இதுதான்.

கோல்வால்கர் இந்த விஷயம் குறித்து எழுதும்போது, “இந்த நாட்டில் தேசிய வாழ்க்கை என்பது இந்து மக்களுடையதே..! இது முழுமையான இந்து நாடு!” – என்கிறார். இதைத்தான் வாஜ்பேய் வேறு வார்த்தைகளில், “இந்துத்துவமும், தேசிய கலாச்சாரமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை” – என்கிறார்.

1970-ல், ஜனசங்கம் நடத்திய அகில இந்திய மாநாட்டில், வாஜ்பேய் இந்துத்துவ பிரச்சாரகராக பொறுப்பு வகித்தார். அதேசமயம் தன்னை மாடரேட்டாக நிலைப்படுத்திக் கொள்ள அவர் பேசிய பேச்சை கவனமாக கையாண்டார் இப்படி:

“மதபேதமில்லாமல் இந்திய மக்கள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டுமென்று நான் கொள்கை ரீதியாக நினைக்கிறேன். ஆனால், ஆர்.எஸ்.எஸ் இந்து சமுதாயத்திற்கு சேவைச் செய்ய முயல்கிறது. ஆர்.எஸ்.எஸ் மாறிவிட்டாலும் இன்னும் நிறைய மாற்றங்கள் அதில் வர வேண்டும்!” (16.03.1979)

ஆகஸ்ட் 2, 1979 – ல், இந்தியன் எக்ஸ்பிரஸில் ஆர்.எஸ்.எஸ் குறித்து வாஜ்பேய் எழுதிய கட்டுரையொன்றில், “ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் அல்லாதவரை தனது இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லையே ஏன்? – என்று கேள்வி எழுப்புவது நியாயமானதே..! ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னுள்ள பணி இந்து மத சமூகப் புனரமைப்பு பணியாகும். இந்து மத்ததிலுள்ள தீமைகளை களைந்து நீக்கும் அமைப்பாக இருப்பதால்தான் (இது சாத்தியமில்லை!)
ஆனால், அதே ஆண்டு டிசம்பர் 8-ல், ஆர்.எஸ்.எஸ் தனது கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்வது அவசியம் என்றும், இந்து ராஷ்டிரத்தாகம் இந்திய ராஷ்டிரமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்று வாஜ்பேய் ஆலோசனை வழங்கினார்.

இந்த செயல்பாடுகள், வாக்கியங்கள், சொல்லாடல்கள் எல்லாமே திட்டமிட்டு ‘சமநிலைப்படுத்தவே’ கையாளப்பட்டவை. தன்னைத் தானே முற்போக்குவாதியாய் காட்டிக் கொள்ள 1979-ல், வாஜ்பேய் ஆரம்பித்த முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கின எனலாம். ஆனால், சில ஆண்டுகள்கூட இந்த முகமூடி நிலைக்கவில்லை என்பதே உண்மை. அதற்குள் வாஜ்பேயின் சுயமுகம் வெளிப்பட்டுவிட்டது.

ஜுலை 10, 1985-ல், ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்வியும் வாஜ்பேய் அளித்த பதிலும் இதோ:

“பா.ஜ.க மீண்டும் பழைய ஜனசங் பாதையை நோக்கி செல்கிறதா?”

“நாங்கள் ஜனசங் கொள்கையிலிருந்து எப்போது விலகினோம். மீண்டும் அதை நோக்கி செல்வதற்கு?” (தி ஸ்டேட்மேன், ஜுலை 26, 1985)

‘தி சங் ஈஸ் மை சோல்’ – என்று வாஜ்பேய் மே 7, 1995-ல் எழுதிய ஒரு கட்டுரை அவருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸீக்கும் இடையே உள்ள இணைப்பை நன்கு புலப்படுத்தும்.

இந்து ராஷ்டிரம், இந்து ராஜ்ஜியம் இவற்றுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை விளக்கி வாஜ்பேய் பேட்டியளிக்கும்போது,

“ஆர்.எஸ்.எஸ் இந்து ராஜ்ஜியத்திற்காக போராடவில்லையென்றும், இந்து என்னும் சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதால், இந்தியன் என்ற சொல்லைப் பயன்படுத்துவது நல்லது என்றும், தனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்து ராஷ்டிரா கொள்கையில் எவ்வித முரண்பட்ட கருத்தும் இல்லை என்றும் சொன்னார். (தி இந்துஸ்தான் டைம்ஸ், ஆக.11,1983)

வாஜ்பேயின் இத்தகைய பேச்சுகள் சில பத்திரிகையாளர்களை கவர்ந்தது. இதன் விளைவாக வாஜ்பேய் மாடரேட்டாக மாறினார்.

மே 17, 1987 சி.பி.ஐ தலைவர் எம். பாரூக்கி ஒரு கூட்டத்தில், “விஸ்வ இந்து பரிஷத் இந்து ராஷ்டிரத்தை கோருவதாய் விமர்சனம் செய்தார். பதறிப்போன வாஜ்பேய், “இந்து ராஷ்டிரம் என்பது ஒரு பண்பாட்டு அமைப்பு” என்று சொல்லி அதற்கு வக்காலத்து வாங்கவும் செய்தார். அதற்காக பல கதைகளை அவர் கதைக்க வேண்டி வந்தது.
ஏப்ரல் 6, 1989-ல், மும்பையில் வாஜ்பேய் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை பேசும்போது, பாபரி மஸ்ஜித் விவாதத்திற்குள்ளாகியிருக்கும் கட்டிடம். தேசிய சின்னமாக மாற்றுவதற்கு ஒப்புக் கொள்ளும்படியும், அது இந்துக்களின் கலாச்சார வாரிசுத்துவம் என்றும், இந்துத்துவம் என்பது உலகின் தொன்மை வாய்ந்த பண்பாடு என்றும், அந்த இடம் மீது (பாபரி மஸ்ஜித்) நியாயமான உரிமைகள் இந்துக்களுக்கே இருப்பதாகவும், இதை, தான் ஒரு பிஜேபி தலைவராய் சொல்லவில்லை என்றும், மாறாக, ஒரு சுயம்சேவக்காகவும், ஒரு இந்துவாகவும் சொல்வதாக சொன்னார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 7, 1989)

இந்துத்துவத்தை இந்தியனாக மாற்றச் சொல்லும் வாஜ்பேய் சமயத்துக்கு ஏற்றாற்போல, பாபரி மஸ்ஜித் இந்துக்களுக்கே சொந்தமானது என்று வாதிக்கிறார். மீண்டும் மாடரேட் முகமூடியை தரித்துக் கொண்டு, இந்துத்துவம் ஒரு மதம் அல்ல. அது ஒரு கலாச்சாரம் என்கிறார்.

அத்வானியின் ரத யாத்திரை ரத்த யாத்திரையாக மாறிக் கொண்டிருந்த சமயம் அது. வி.பி.சிங் அரசு அதிகாரத்தை இழந்த நிலை. இந்த சமயத்தில் வாஜ்பேய் பேசும்போது, “மண்டல் பிரச்னை மீது நாங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வது நல்லதல்ல என்று நினைத்தோம். ஆனால், எங்களுக்கு நல்ல வாய்ப்பை (ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியது) வி.சி.சிங் தந்தார். அத்வானியை உ.பிக்குள் நுழைய அனுமதிக்காவிட்டால்.. ஆதரவை விலக்கிக் கொள்வது என்று முடிவெடுத்தோம்!” – என்றார்.

வாஜ்பேயின் குள்ள நரித்தனத்துக்கும், இரட்டை நாக்கு பேச்சுகளுக்கும் இந்த சம்பவம் நல்ல உதாரணம்.

“நாங்கள் இந்திய ராஷ்டிரம் தேவை என்கிறோம். இந்து ராஷ்டிரம் என்ற பெயர் வைத்தவர்களின் பார்வையில் இந்தியர் அனைவரும் முஸ்லிம்கள் உட்பட இந்துக்களே! மதத்தைப் பொருத்தவரை அவர்கள் முஸ்லிம்களாக இருக்கலாம். இந்து ராஷ்டிரம் வேண்டுமென்று யாராவது கோரினால் அவர்களுடன் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை” (தி இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆப் இண்டியா ஜனவரி 26, 1991)

1989-ல், ஒரு ஸ்வயம் சேவக்காக, ஒரு இந்துவாக, இந்தியன் எக்ஸ்பிரஸில் வாஜ்பேய் காட்டிய முகத்தோடு பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் இந்துக்களுக்கே உரிமை என்ற வகுப்புவாத முகத்தை ஒப்பிட்டு பார்த்தால் வாஜ்பேயின் உண்மை முகம் வெளிப்பட்டுவிடும். நயவஞ்சகத்தனமும், கடைந்தெடுத்த ஏமாற்று சித்து வேலைகளுமே அவரது நற்பண்புகளாய் இருப்பது வெளிப்படையாய் தெரிந்து கொள்ளலாம்.

தேவைப்படும்போது வாஜ்பேய் அதிதீவிரமான வகுப்பு வெறியராய் பேசுவார்.

அத்வானி ரத யாத்திரை விமரிசையாக நடந்தபோது, அத்வானி முன் வைத்த இந்துத்துவத்தால் அவரது செல்வாக்கு பெருகுவதைக் கண்ட வாஜ்பேய்கூட தானும் வகுப்புவாத வெறியுணர்வுக்கு சற்றும் குறைந்தவனல்ல என்று காட்டிக் கொள்ள வேண்டி வந்த்து. அதன் அடிப்படையில், பைசாபாத்தில் பேசும்போது அவர், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது அத்யாவசியமானது என்றும், அதுவே இந்துக்களின் ஆத்ம கௌரவத்தைக் காப்பதாக இருக்கும்” - என்றார். (டைம்ஸ் ஆப் இந்தியா மே 31, 1991)

“தேவைப்பட்டால், இதற்காக ஆட்சி மாற்றமும் தவிர்க்க இயலாதது” - என்றும் முழங்கினார். “அயோத்தி தேசிய அடையாளத்துடன் தொடர்புடைய பிரச்னை என்றும் அது இந்துக்களின் இதயங்களைப் பாதித்த பிரச்னை என்றும்” - அப்போது அவர் சொன்னார்.

ஆக, வாஜ்பேயின் பார்வையில் இந்துக்களின் நலனே தேசிய நலன் என்று பொருள்.

காசி, மதுரா தமது செயல் திட்டத்தில் இல்லை என்று வாஜ்பேய், சொல்லிக் கொண்டிருப்பார். அதேசமயம், ‘தற்காலிகமாக’ என்ற சாதுர்யமான வார்த்தையை மறக்காமல் பேச்சினூடே திணித்துவிடுவார்.

பதிமூன்று நாள் அரியணை கவிழ்ந்ததும், ஜுன் 9, 1996 சென்னையில் வாஜ்பேய் பேசும்போது, “இந்துத்துவம் விஷயத்தில் எதையும் விட்டுத்தர முடியாது என்றும், ஒரு கூட்டணி அரசு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், தற்போது, தமது அரசு வாத, விவாதங்களில் ஈடுபட போவதில்லையென்றும் மக்களுக்கு சொல்லி தனது இந்துத்துவ விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொள்ளவும் செய்தார்.

மத துவேஷங்களை விதைத்து, வர்ணாசிரம சித்தாந்தத்தை நிலைநிறுத்த முயலும் பா.ஜ.க தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்ளும் என்பது வீணான கற்பனையாகும். அதேபோல, நச்சு மரம் நல்ல கனிகளை என்றும் காய்ப்பதில்லை என்பதும் யதார்த்தமாகும்.
ஆர்.எஸ்.எஸ் என்ற பாசிஸ நச்சு மரத்தின் ஆணி வேராக இருக்கும் வாஜ்பேய்யும், அவரது அரசும் எந்நாளும் மக்களுக்கு பலன் தர முடியாது.

வாஜ்பேய் இந்துத்துவ காற்றை சுவாசித்தவாறே பிறந்தார். அந்த சுவாசத்தை உள்வாங்கி வளர்ந்தார். மேலுக்கு என்னதான் அவர் நடித்தாலும் அவரது உண்மை முகம் பயங்கரமான பாசிஸ முகமாகும். உலகம் மாபெரும் இழப்பை சந்தித்த சித்தாந்தத்திற்கு சொந்தமான முகமாகும்.

(சமரசம், மே 16-31, 1998, பக்கம் 13-16)



Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive