NewsBlog

Thursday, August 16, 2018

இரு ‘மனங்கள்’ வாழ்க!


“ஒரு காலம் வரும் அந்நாளில், மேற்கத்திய ஒழுக்கச் சீர்கேடுகளால் மிகைத்துப் போன ஆணும், பெண்ணுமாய் நமது நாட்டின் இளம் சமூகம் மாறி நிற்கும். சூறைக்காற்றாய் அந்த ஒழுக்கக் கேடுகள் நமது ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி நிற்கும். எச்சரிக்கையாக இருங்கள் பெற்றோரே..! உண்மையில், இதை ஒரு நற்செய்தி என்பேன் நான். எவரொருவர் அழகிய ஒழுக்கத்தோடு தங்கள் பிள்ளைகளை வளர்த்து வருகிறார்களோ.. அவர்கள் வீட்டு இளைஞனும், இளம் பெண்ணும் மதித்துப் போற்றப்படவிருக்கும் காலமது. அதிலும் குறிப்பாக உங்கள் வீட்டு இளம் பெண்கள் குத்துவிளக்குகளாய் மதிப்பளிக்கப்பட்டு பிரகாசிக்க இருக்கும் காலமது! ~இக்வான் அமீர்

 '''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தமிழ் சீரியல்களில் நடப்பதைபோலவே இந்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டது.

வாழ்க்கையில் முதன் முதலாய் ஒரு வில்லன் பக்கம் நின்று அவன் செய்யும் செயலை அங்கீகரிப்பதாய் அந்த மண ஒப்பந்தத்தில் சாட்சியாய் கையெழுத்திட்ட நிகழ்வு அது. மணமகள் ஒப்புதல் பெற பலிகிடாவாய் மணப்பெண்ணின் பெரியோருடன் சென்ற துர்பாக்கிய நிலை அது. தனக்குப் பிடிக்காத ஒருவனை கணவனாய் ஏற்பதற்கு தந்தையின் பிடிவாதங்கள் ஒருகாலும் தீர்வாகாது.

பெற்றோரின் விருப்பங்களுக்காக, தனது விருப்பத்தை கண்ணீராய் வடித்து அந்த மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அந்த இளம் பெண்ணின் துயரம் என்னை பிழிந்தெடுக்கிறது.

இன்று முதலிரவு. இஸ்லாமிய மார்க்க ரீதியாய் ஒரு பெண்ணுக்கு எல்லாவித உரிமைகள் இருந்தும், அவை பறிக்கப்பட்டு, அந்த அபலைக்கு மறவாத வடுக்களைத் தர இருக்கும் துரதிஷ்டவச இரவு. விரும்பியவனை மனதில் சுமந்து, பெரியோரின் நிர்பந்தங்களால் இன்னொருவனை சுமக்க இருக்கும் இரவு.

இரு மனங்கள் ஒப்பிய எனது திருமணத்தை தடுக்க என் தாய் மாமன் “நீ எப்படி திருமணம் செய்கிறாய் என்று நான் பார்க்கிறேன்!” – என்று சபதமேற்ற அந்த மாலைவேளை எனக்கு இன்னும் நினைவில் நிழலாடுகிறது.

பேச்சு வழக்கில் சொல்ல வேண்டுமென்றால்.. அசால்டாய், “முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்!” – என்று ஒரு அரும்பு மீசை இளைஞன் பதிலுக்கு பதில் அறைகூவலிட்ட அந்த மாலைவேளை இன்னும் பசுமையாய் நெஞ்சில் எழுகிறது.

எனது திருமணத்தைத் தொடர்ந்து இரு மனங்கள் ஒப்பிய எத்தனையோ திருமணங்களை முன்னின்று நடத்தியிருக்கிறேன். எனது மூன்று பெண்களின் திருமணங்கள் உட்பட.

நான் நடத்தி வைத்த திருமணங்களில் சில திருமணங்கள் மனம் சிறக்க பேரன் பேத்திகளாய், குழந்தை குட்டிகளாய் ஒரு மலர் தோட்டமாய் உருவெடுத்தபோது, மனம் மகிழ்ந்த்திருக்கிறேன். மன முரண்பாடுகளால் தம்பதிகளிடையே பிரச்னைகள் உருவெடுத்தபோது, துக்கித்திமிருக்கிறேன்.

இந்த மகிழ்வும், துக்கமுமாய் வாழ்க்கை என்னை முதுமை கரைச் சேர்த்தபோது முதன்முறையாய் ஒரு வில்லனுடன் கைக்கோர்த்த துரதிஷ்டம் என் வாழ்விலும் நடந்தேறிவிட்டதை எண்ணி எண்ணி குமைகிறேன்.

இத்தனைக்கும் எந்த தகப்பன் தனது மகளின் மன விருப்பத்திற்கு எதிராக தனது மன விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டானோ அதே தகப்பனின் மன விருப்பத்தை நிறைவேற்ற நான் உயிர் கொடுத்து போராடியிருக்கிறேன். அதற்காக, எடுத்த முடிவுகளால் நான் எனது அன்பிற்கினிய சொந்த, பந்தங்களின் எதிர்ப்பை ஒரு இருபது ஆண்டுகளுக்கும் அதிகமாக சுமக்க வேண்டியிருந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை எத்தனை ஜனனம், மரணம், நல்லது, கெட்டதுகள் நடந்தேறி விட்டனா.. கடவுளே..!

இப்போது மீண்டும் பிளவுண்ட உறவுகள் இணைந்தபோதும் அந்த இழப்புகளை யாராலும் திருப்பித் தர இயலாது என்பது இந்த துயரம் அனுபவித்தோரால்தான் முடியும்.

என் மடியில் வளர்ந்திருக்க வேண்டிய குழந்தைகள், இன்று இளைஞர்களாகவும், இளைஞிகளாகவும் பல தலைமுறை இடைவெளியில் வளர்ந்து நிற்கிறார்கள். ஒரு அந்நியதனத்தோடு இந்த உறவுகள் தொடர்கிற மாபெரும் இழப்பு இது.

ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர், ஜமாஅத்தே இஸ்லாமி பெண்கள் வட்டத்தின் பொறுப்பில் இருந்தபோது, நான் ஆற்றிய உரையின் சில வரிகள் இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. “ஒரு காலம் வரும் அந்நாளில், மேற்கத்திய ஒழுக்கச் சீர்கேடுகளால் மிகைத்துப் போன ஆணும், பெண்ணுமாய் நமது நாட்டின் இளம் சமூகம் மாறி நிற்கும். சூறைக்காற்றாய் அந்த ஒழுக்கக் கேடுகள் நமது ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி நிற்கும். எச்சரிக்கையாக இருங்கள் பெற்றோரே..! உண்மையில், இதை ஒரு நற்செய்தி என்பேன் நான். எவரொருவர் அழகிய ஒழுக்கத்தோடு தங்கள் பிள்ளைகளை வளர்த்து வருகிறார்களோ.. அவர்கள் வீட்டு இளைஞனும், இளம் பெண்ணும் மதித்துப் போற்றப்படவிருக்கும் காலமது. அதிலும் குறிப்பாக உங்கள் வீட்டு இளம் பெண்கள் குத்துவிளக்குகளாய் மதிப்பளிக்கப்பட்டு பிரகாசிக்க இருக்கும் காலமது!” – நான் ஆற்றிய இந்த சிற்றுரை இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

“ஆஹா.. சொன்னது போலவே நடந்துவிட்டது!” - என்று எண்ணி மகிழவா? அல்லது சீர்க்கேடுகளால் மிகைத்துப் போன இளம் சமுதாயத்தின் நிலையை எண்ணி வெட்கி தலைக்குனியவா?” இப்போது தடுமாறி நிற்கிறேன் நான்.

தன்னைச் சுற்றிலும் அசுரத்தனமாய் வளர்ந்துவரும் அறிவியல் வளர்ச்சியை எதிர்க்கொள்ள வேண்டிய தருணமிது. இளம் தலைமுறையினரைத் தாக்கும் அக, புறச் சூழல்கள் என்னவென்று பெற்றோர்கள் பரிசீலிக்க வேண்டிய காலகட்டமிது. ஒவ்வொரு சூழலையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள திட்டமிட ஞானம் பெற வேண்டிய நேரமிது.

இதை விடுத்து, கவுர கொலைகள் போல உங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள அவற்றை உங்கள் இளம் தலைமுறையினர் மீது திணிக்காதீர்கள் பெற்றோரே. அதிலும் குறிப்பாக நபிகளாருக்கு மிகவும் அன்புக்குரிய, அண்ணலாரின் பெருமதிப்பிற்குரிய பெண்ணினத்தை ஒரு காலும் அச்சுறுத்தி பணிய வைக்காதீர் பெற்றோரே. இஸ்லாம் என்ற வாழ்வியல் திட்டத்தால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளை ஒரு காலும் அபகரித்துக் கொள்ளாதீர் பெற்றோரே.

பெற்றோராய் நீங்கள் வரமாய் பெற்றப் பிள்ளைகள் வெறுமனே உங்கள் அம்புகள் அல்ல உங்கள் இலக்குகளை எட்ட.

வில்லில் நாணேற்ற உங்கள் பிள்ளைகளைப் பழக்குங்கள். நல்லதொரு இலக்குகள் எவை என்று உங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள். சற்று விலகி நின்று சுயமாய் அவர்கள் அம்புகள் செலுத்த வழிவிட்டு நில்லுங்கள்.

நீங்கள் நம்பிக்கைக் கொண்ட மார்க்கம் சீரிய வழிகாட்டுதல் கொண்டது; என்றும் ஜெயம் தரக்கூடியது என்று முதலில் நீங்கள் நிரூபித்துக் காட்டுங்கள். குழந்தைகள் தவறிழைக்கும்போது, நீங்கள் குழந்தைகளாகி பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

அதிலும் குறிப்பாக இரு மனங்கள் இணையும் திருமண விவகாரங்களில் பிள்ளைகளின் தோழனாய் இருந்து நல்வழிகாட்டுங்கள். மீண்டும்… மீண்டும் அறிவுறுத்தியவாறே இருங்கள். மிகவும் பலவீனமான பெண் இனத்தின் தகப்பன் என்ற உறவுமுறையால் பெண்களை அடக்கி ஆள ஒருகாலும் நினைக்காதீர். இந்த சர்வாதிகாரமே இளம் தலைமுறையினரை எல்லை மீற வைக்கின்றன என்பது நினைவிருக்கட்டும்..! 

நிர்பந்தங்களால் இத்தகைய மண ஒப்பந்தங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகலாம்.

ஆனால், தார்மீக ரீதியாக அத்தகைய (பெற்றோரின் பலாத்கார) திருமணங்கள் ‘கபூல்’ (ஒப்புக் கொண்டேன்) என்ற மணமகளின் ஒற்றைச் சொல்லால் ஒருகாலும் செல்லுபடியாக சாத்தியமே இல்லை என்பேன் நான்.


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive