NewsBlog

Thursday, July 23, 2015

லென்ஸ் கண்ணாலே - 003. கையாள்வது எளிது; ஆனாலும் கடினம்!

“வரும்.. ஆனால்… வராது!” – என்ற ஒரு பிரபலமான ஜோக் நினைவுக்கு வருகிறது. இந்த ஜோக்கை தற்போதைய மின்னணு வளர்ச்சியின் பரிணாமத்தில் அபரீதமாக வளர்ந்திருக்கும் காமிராக்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

தற்போதைய நவீன DSLR காமிராக்களை கையாள்வது எளிது; அதே நேரம் மிகவும் கடினம்.

90 களின் பிற்பகுதியில் உணர்வு வார இதழில் சிறப்பு செய்தியாளராக இருந்தபோது, மற்றைய ஊடகங்களில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக வெளியாகும் செய்திகளையும், கட்டுரைகளையும் சரிபார்த்து புலனாய்ந்து உண்மையை வெளிக் கொணர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயணித்திருக்கிறேன். நகரங்கள், கிராமங்கள் என்று சுற்றியிருக்கிறேன். காடு, மேடுகள் அலைந்திருக்கிறேன். சாமான்யனிலிருந்து அதிகார பீடங்கள்வரை கேள்விகளால் துளைத்திருக்கிறேன். எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் ஒளிப்படங்களை எடுத்திருக்கிறேன். பரபரப்பு, திகிலூட்டும் அந்த சம்பவங்களை மற்றொரு தொடரில் இறைவன் நாடினால் பார்க்கலாம்.

இத்தகைய புலனாய்வு நிகழ்வுகளுக்கு அன்றைக்கு நான் பயன்படுத்தியது ஒரு சாதாரணமான பிலிம் காமிரா.

 புலனாய்வு செய்திக்காக மிகவும் சிரமப்பட்டு, ஒருவரை சந்தித்து படம் பிடித்து, பிலிமை கழுவி ‘பிரிண்ட்’ எடுக்கும்வரை அந்த அவுட்புட்டின் ரிசல்ட் நமக்கு  தெரியாது.

பிலிமை பயன்படுத்துவதால், ஒரு படம் அல்லது அதற்கு மாற்றாக மற்றொரு படம் மட்டுமே எடுக்க முடியும். எடுத்த படம் சரியாக வரவில்லையென்றால் நமது உழைப்பு, அதற்காக பட்ட சிரமங்கள் எல்லாம் வீணாகிவிடும்.

பிலிம் விலை, அதை கழுவுவது, பிரிண்ட் போடுவது என்று நேரம் மற்றும் செலவும் அதிகம்.
ஆனால், டிஜிட்டல் காமிராவில் இத்தகைய சிரமங்கள் இல்லை. காமிரா, ஒரு மெமரி கார்ட் இன்னும் சில துணை சாதனங்கள் இருந்தாலே போதும். நூற்றுக்கணக்கான படங்களை எடுக்கலாம். எடுத்த படத்தை உடனே பகிரலாம். ஒவ்வொரு படத்தையும், ஒன்றுக்கு நான்காக எடுத்து மனதுக்கு விருப்பமான படத்தை கையாளலாம். (அண்மையில், சொந்த பணிகள் மற்றும் பத்திரிகைகள் பணிகளுக்காக கேரளாவரை செல்ல வேண்டி வந்தபோது, ஷதாப்தி விரைவு வண்டியில் கதவோரம் நின்று நான் ரசித்து எடுத்த படங்கள் சுமார் 1000 இருக்கும். இன்னும் அவற்றை சரிபார்த்து தேர்வு செய்யவில்லை)

அதேபோல, படம் பிடிக்கும்போதே எல்சிடி குறுந்திரையில் பார்த்து, நாம் எடுக்கும் காட்சிகளையும் திரைக்கு பொருத்திக் கொள்ள முடியும். சரிபார்க்கவும் முடியும். தேவையில்லை என்றால் படம் பிடித்த அந்த ஆரம்ப நிலையிலேயே அவற்றை அழித்துவிடவும் முடியும்.

இந்த நேரத்தில் இந்த தொடரைப் படிப்பவர் எவராவது இதழியலை தமது வாழ்க்கை இலக்காக தேர்வு செய்திருந்தால்… அவருக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஒரு ‘டிப்ஸ்’ தருகிறேன்.

நண்பர்களே! தோழியரே! உங்களுக்கு உங்கள் விலையுயர்ந்த காமிராவைவிட முக்கியமானது அந்த காமிராவில் உள்ள மெமரி கார்ட்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதிகார வர்க்கம் மற்றும் சமூக விரோதிகள் இவர்களால் ஆபத்து என்னும் நிலையில் நீங்கள் முதலில் விரைந்து செய்ய வேண்டியது மெமரி கார்ட்டை காமிராவிலிருந்து அகற்றி பத்திரமாக இடம் மாற்றி வைத்துக் கொள்வதுதான்! 
இவையெல்லாம் நவீன மின்னணு காமிராக்கள் என்னும் ஒளிப்பட சாதனங்களில் உள்ள வசதிகள் ஆகும். எடுத்த படங்களை அப்படியே கணிணியில் பதிவிறக்கம் செய்து கொண்டு ஒளி கூட்டலாம். குறைக்கலாம். தேவையான ‘எடிட்டிங்’ செய்து கொள்ளலாம். இதைப் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளது உண்மைதான்! 

அதேநேரத்தில், ஆட்டோ ஃபோகஸ், பிளாஷ் வசதிகள், வீடியோ வசதிகள், மெகா பிக்ஸல், MP3 பிளேயர் என்று ஏராளமான கட்டமைப்புகளுடன், பல்வேறு Setting மற்றும் நுணுக்கங்களுடன் இருக்கும் நவீன மின்னணு காமிராக்களை கையாள்வது அவ்வளவு சுலபமானது அல்ல. இதற்கென்று தனியான திறமை வேண்டும்.

இப்போது நான் சொன்னது சரிதானா? “வரும்..! ஆனால்.. வராது!”

அடுத்தது காமிராக்களை தேர்வு செய்வது.

உங்களுக்கான உடையை, உங்களுக்கான உணவை நீங்களே தேர்வு செய்வது போன்றதுதான் உங்களது காமிரா எப்படியிருக்க வேண்டும் என்பதும்!

உதாரணமாக, செல்லிடைப்பேசிகள் என்னும் செல்போன்களில் உள்ள காமிராக்களில் படம் பிடிக்கலாம். பல அற்புதங்களை நிகழ்த்தலாம். ஆனால், அதன் முக்கிய நோக்கம் தகவல் பறிமாற்றம் மட்டுமே அதாவது பேசுவது மட்டுமே! காமிரா என்பது செல்போனின் துணை சாதனமாக உள்ள உள்கட்டமைப்பு மட்டுமே! செல்போன்களில் எடுத்த படங்களை, காமிராக்களில் எடுத்த படங்களோடு ஒப்பீடு செய்யக் கூடாது.

அதேபோல, போட்டோவுக்கான காமிராக்களில் இருக்கும் வீடியோ வசதிகளைப் பயன்படுத்தி படமெடுத்துவிட்டு, வீடியோ எடுப்பதற்கென்றே பிரத்யோகமாக இருக்கும் வீடியோ காமிராவின் படங்களோடு ஒப்பீடு செய்யக் கூடாது.

எந்தெந்த நோக்கத்துக்காக சாதனங்கள் உள்ளனவோ அதற்காகதான் பயன்படுத்த வேண்டும். அவசர அவசியங்களுக்கு மட்டுமே அவற்றின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்தது, விளையாட்டுகள், இயற்கை காட்சிகள், அசத்தும் நில பரப்புகள், சுற்றுலா பயணம், செய்தி சேகரிப்பு, காட்டுயிர் மற்றும் ஆழ்கடல் ஆய்வுகள் என்று படம் பிடிக்கும் நோக்கம்  வெவ்வேறானது. அதற்கு ஏற்றாற் போல காமிராக்களை தேர்வு செய்து கொள்வதே நல்லது.

எளிதாக விளங்கிக் கொள்ள காமிராக்களை ஒரு மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1.   சிறிய எடை குறைந்த, கையடக்கமான ‘காம்பாக்ட்’ காமிராக்கள்.

2.   டிஜிட்டில் காமிராக்களைப் போலவே ஓரளவு செயல்படும் ‘சூப்பர் ஜும்’ காமிராக்கள்.

3.   DSLR (Digital Single Lense Reflex) எனப்படும் லென்ஸ்களை கழற்றி மாற்றிக் கொள்ளக்கூடிய காமிராக்கள்.

இவற்றில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகை எது என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

ஒளிப்படங்கள் அதாவது புகைப்படங்கள், செய்திகளை, வரலாற்றை, ஆவணங்களை ஆக காலத்தை தன்னுள் பொதித்து வருங்கால தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உதவுபவை. அதனால், ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு செய்தி, ஒரு அவலம், ஒரு மகிழ்ச்சி, ஒரு மாறுப்பட்ட பார்வை இருக்கட்டும்.

இந்த தொடரின் முடிவாக, அன்பு நபிகளாரின் அந்த அறவுரையை முன் வைக்கிறேன்: “தயவுசெய்து, (புகழ்ச்சி என்னும் பெயரில்) என் மீது யாரும் மண்ணை வாரி இறைக்காதீர்!” எனக்கு தெரிந்ததை, கற்றதை, செயல்படுத்துவதை மட்டுமே நான் அடுத்தவர்க்கு சேர்க்கிறேன்.

இவன் இன்னும் ஆரம்ப பள்ளி மாணவனாக எல்லையற்ற தேடல்களில் ஈடுபட்டுவருபவன். எப்போதும், தனது சகாக்களிடமிருந்து பாவமன்னிப்புக்கான இறைஞ்சுதல்கள் மட்டுமே யாசிக்கிறான்.

- இறைவன் நாடினால், வண்ணங்கள் ஒளிரும்..

இதற்கு முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
001 அனுபவங்களின் பகிர்வின்றி.. அறிவின் ஊற்றல்ல..!
http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html

002 உங்களுக்கான காமிரா எது?
http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html





Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive