சங்பரிவார் என்னும் கொடூர ஆக்டோபஸின் மற்றுமோர் கரமான பாஜக-வை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல. 'டவுசர்ஸ் பாய்ஸ்' என்று நக்கலடிப்பவர்கள் வெறும் 'முகநூல் புலிகள்தான்' என்பதை நினைவில் கொள்க.
ஒன்றுமே இல்லாமலிருந்து வெறும் சொற்ப எண்ணிக்கை இடங்களைக் கைப்பற்றி அதிலிருந்து 'குயுக்தி' வியூகங்களால் அரியணைப் பிடித்திருக்கும் ஒரு வலிமையான சித்தாந்தம்.
அது மனித இனத்துக்கு தீமை பயப்பதாக இருந்தாலும், அர்ப்பணங்கள், கடும் உழைப்பால் உயரங்களைத் தொட்டவர்களே அதன் தொண்டர்கள். ஆட்சியதிகாரம், அரசு எந்திரம், ஆள்-அம்பாரி என்று சகல ஆயுதங்களுடன் இருப்பவர்கள் அவர்கள்.
மிக எளிதாக மதத்தை அபினாக்கி மக்களை அடிமையாக்க அவர்கள் கையாளும் சூழ்ச்சியே நிகழ்கால வரலாறு. ஆம்.. ஒவ்வொரு அரசியல்வாதிக்குள்ளும், ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இந்த அபின் போதையை ஏற்றி எளிதாக அவர்களை தங்கள் கைவசப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த சாணக்கியம் சங்பரிவாருக்கு கைவந்த கலை! அதன் ஒரு பகுதிதான் தேர்தலுக்கு பிறகான தேர்தல் கணிப்புகள்.
ஆக, ஜனநாயகத்துக்கான தேர்தல் களத்தில், எதிரியின் வலிமைத் தெரியாமல் கிண்டலடித்து, நையாண்டி செய்வது வெறும் பொழுதுகழிப்பாகவே முடிந்துவிடும்.
சக மனிதரிடையே துவேஷங்களை வளர்க்கும் ஒரு தத்துவம், சக மனிதரை அடக்கியாள துடிக்கும் ஒரு சித்தாந்தம், எளிய மனிதர்களின் குருதி ஆற்றில் சிம்மாசனங்களை அமைக்க விரும்பும் ஒரு தத்துவம் மக்களால் விரும்பப்படுவது எப்படி? என்று எழும் நியாயமான கேள்விக்கு பதில் தேடுவதும் அவசியம்.
அப்படியானால், மேற்குறிப்பிட்ட சங்பரிவார் தத்துவத்தைவிட மோசமான தத்துவம் அல்லது நடத்தைக் கொண்டவரா பிற அரசியல் கட்சியினர்? சங்பரிவாரைவிட மோசமானவரா நாம்?
இந்த தேடலில்தான் இந்தியாவின் இறையாண்மையும், இயல்பான இயக்கவியல் நியதியும் அடங்கியிருக்கிறது.
ஓட்டைகளை அடைக்காமல் எவ்வளவு சிறப்பான மாலுமியாக இருந்தாலும் கப்பல் கரைசேருமா என்ன?
தனது முகம் வகுப்புவாதத்தால் தோய்த்தெடுத்த இயற்கைக்கு புறம்பான வெறுப்பு முகத்திலானதா?
அல்லது சக மனிதர்களை மனதோடு நேசிக்கும் இயற்கையின் நியதிக்கு உட்பட்டதா? என்ற ஒரு முடிவுக்காக மொத்த இந்தியாவே காத்திருக்கிறது.
இத்தனை இயலாமை, பலவீனங்களுக்கு மத்தியில், ஒரு 'மாஜிக்' நடக்குமானால்.. நிச்சயம் அது இந்திய வாக்களார்களால் மட்டும் நிகழ்ந்தது அல்ல என்று மட்டும் மனம் உறுதியுடன் சொல்கிறது.
0 comments:
Post a Comment