சென்ற பாடத்தில் ஒளிப்படங்களைத் தீர்மானிக்கும் 7 அம்சங்களைக் கண்டோம். இதை கவனத்தில் வைத்துக் கொண்டால் காமிராவின் அத்தனை இயக்கங்களையும் எளிதாக கையாண்டு அற்புதமான படங்களை எடுக்க முடியும். இறைவன் நாடினால், உலகப் புகழ் பெற்ற ‘போட்டோ கிராபராக’ மாற முடியும் என்றும் சொன்னேன்.
ஒரு நினைவுக்காக…
ஒளிப்படங்களை இந்த 7 அம்சங்கள்தான் தீர்மானிக்கின்றன.
1. வெளிச்சம் அல்லது ஒளி (LIGHT)
2. லென்ஸ் (LENS)
3. அபெர்சர் (APERTURE) அதாவது ஒளி ஊடுருவ லென்ஸின் விட்டம் விரிந்து சுருங்கும் அளவு.
4. நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) அதாவது காமிராவின் மூடி திறக்கும் ஒரு கதவு வழியே ஒளி ஊடுருவதற்கான நேரம்.
5. ஐஎஸ்ஓ (ISO – Sensation of Sensor) அதாவது சென்ஸார் திரை தொடு உணர்வின் அளவு.
6. படம் பிடிப்பதற்கான தொகுப்பு (COMPOSITION - Placement or Arrangement of Visual Elements)
7. ஈர்க்கப்படுதல் (INSPIRATION).
மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஏழு அம்சங்களில் அபெர்சர் (APERTURE), நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) மற்றும் ஐஎஸ்ஓ (ISO – Sensation of Sensor) இவற்றை ஒவ்வொன்றாக இனி பார்க்கலாம்.
இதில் முதலில், அபெர்சர் (APERTURE) அதாவது ஒளி ஊடுருவ லென்ஸின் விட்டம் விரிந்து சுருங்கும் அளவு. பெரிய வட்டம் அல்லது சிறிய வட்டமாக மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் யாராவது செல்லப் பிராணியாக பூனையை வளர்ப்பவர்களாக இருந்தால் இனி கவனமாக அதை கண்காணியுங்கள். இரவு நேரங்களில் அதன் கண்களை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.
இரவில், பூனையின் கருவிழிகள் இருட்டு, வெளிச்சம் இவற்றுக்கு ஏற்றாற் போல, சுருங்கி விரிகின்றன. இதைதான் நான் பெரிய வட்டம். சிறிய வட்டம் என்று மேலே குறிப்பிட்டிருந்தேன். இது ‘அபெர்சர்’க்கு (APERTURE) சரியான உதாரணமாகும்.
அபெர்சர் (APERTURE) என்பது சென்ஸார் உணர்வு பலகையில் அதாவது தொடு திரையில், லென்ஸ் வழியே எவ்வளவு வெளிச்சம் பாய வேண்டும் என்று தீர்மானிக்கும் ஒளி அளவீட்டின் விட்ட அளவாகும்.
எடுக்கப்போகும் படத்தின் தன்மையை, படம் கருப்பாக (Darkness) வரவேண்டுமா, வெளுப்பாக (Lightness) வரவேண்டுமா? என்று இது தீர்மானிக்கும் அளவீடாகும்.
அபெர்சர் (APERTURE), ஆங்கில ‘எஃப்’ எழுத்தில் (F) குறியீடுகளாக பயன்படுத்தப்படுகிறது. இது ஆங்கிலத்தில் எஃப் ஸ்டாப்ஸ் (F Stops) என்றும் அழைக்கப்படுகிறது.
உதாரணமாக, F1.4, F2, F2.8, F4, F5.6, F8, F16, F22
F1.4 என்பது லென்ஸ்ஸில் அதிகரிக்கப்படும் பெரிய அளவு விட்டத்தின் அளவு. பெரிய வட்டம். அதிக அளவு ஒளி பாயும்.
F22 என்பது லென்ஸ்ஸில் குறைக்கப்படும் சிறிய அளவு விட்டத்தின் அளவு. மிகச் சிறிய வட்டம். குறைந்தளவு ஒளி பாயும்.
குறைந்தளவு எஃப் அளவீட்டு எண் என்பது லென்ஸ்ஸின் விட்டத்தை அதிகப்படுத்தும். பூனையின் விழித்திரை இருட்டில் விரிந்து பெரிதாவது போல.
அதிகளவு எஃப் அளவீட்டு எண் என்பது லென்ஸ்ஸின் விட்டத்தை குறைத்துவிடும். பூனையின் விழித்திரை பகலில் சுருங்கிவிடுவதைப் போல!
ஒளிப்படமெடுப்பவர் மத்தியில், ‘டெப்த் ஆஃப் பீல்ட்’ – Depth of Field (DOF) என்றொரு வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படும். இது நாம் போகஸ் செய்யும் படத்தின் ஆழத்தை அல்லது வீச்சை (Depth Of Focus) குறிக்கும் சொல்லாகும். அதனால், இதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.
அதிக அபெர்சர் (Widest APERTURE) (அதாவது F5.6) காட்சிப்படுத்தவிருக்கும் பொருளின் பின்னணியை மங்கலாக்கிவிடும். குறிப்பிட்ட காட்சிகள், நபர்கள் ஆகியவற்றை படம் எடுக்கும்போது இந்த முறையை கையாளலாம்.
சிறிய அபெர்சர் (APERTURE) (அதாவது F16) பின்னணி உட்பட காட்சிப்படுத்தும். இயற்கைக் காட்சிகள் மற்றும் பின்னணி உட்பட துல்லியமாக பதிவாக வேண்டும் என்று நினைக்கும்போது இதை பயன்படுத்தலாம்.
சிறிய அபெர்சர் எண் குறியீடுகள் என்பவை அதாவது F1.4, F2 போன்ற F Stops லென்ஸ்ஸின் விட்டத்தை பெரிதாக்கி (Wide APERTURE) அதிகளவு ஒளியை ஊடுருவச் செய்யும். இரவு போன்ற மங்கலான வெளிச்சத்தில் படமெடுக்க உதவுபவை.
பெரியளவு அபெர்சர் எண் குறியீடுகள் என்பவை அதாவது F8, F16, F22 போன்றவை. பளீர் வெளிச்சத்தில் படமெடுக்க உதவும். லென்ஸ்ஸின் விட்டத்தை சிறிதாக்கி குறைந்தளவு ஒளியை ஊடுரவச் செய்யும்.
கொஞ்சம் ஆழ்ந்து படித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் இது. விளக்கத்துக்காக படங்களை தந்திருக்கிறேன். கவனமாக பார்த்து செயல் ரீதியாக களத்தில் இறங்கி படமெடுங்கள்.
இறைவன் நாடினால் அடுத்தது, நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) அதாவது காமிராவின் மூடி திறக்கும் ஒரு கதவு வழியே ஒளி ஊடுருவதற்கான நேரம் சம்பந்தமாக பார்ப்போம்..
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய தொடர்களை வாசிக்க:
001. அனுபவங்களின் பகிர்வன்றி.. அறிவின் ஊற்றல்ல - http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html
002. உங்களுக்கான காமிரா எது? - http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html
003. கையாள்வது எளிது! ஆனாலும், கடினம்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/3_23.html
004. வாய்ப்பு என்பது ஒருமுறைதான்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/4_24.html
005. படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/07/5_30.html
006. என்கவுண்டர் செய்யாதீர்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/08/6.html
007. பிளாஷை பயன்படுத்துவது எப்படி? : http://ikhwanameer.blogspot.in/2015/08/7.html
008. புகைப்படக் கலையின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/08/8_31.html
009. காமிரா எப்படி இயங்குகிறது? : http://ikhwanameer.blogspot.in/2015/09/9.html
009. காமிரா எப்படி இயங்குகிறது? : http://ikhwanameer.blogspot.in/2015/09/9.html
0 comments:
Post a Comment