NewsBlog

Monday, October 19, 2015

இஸ்லாம் வாழ்வியல் - 4: கண்ணீர் சிந்திய தலைமை நீதிபதி



அவள் ஏழை மூதாட்டி. விதவை. கஷ்டமான ஜீவனம். அதனால், தன் மகனை ஒரு கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள்.

கடையின் பக்கத்தில் ஒரு பாடசாலை.

கடைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சிறுவன் பாடசாலைக்குச் சென்று விடுவான். 

சிறுவனின் ஆர்வத்தைக் கண்டு ஆசிரியர் அன்பு கொண்டார்; கவனத்துடன் பாடங்களைக் கற்பித்தார்.

விரைவில் விஷயம் வீட்டுக்குத் தெரிந்தது. தாய் சிறுவனுக்கு அறிவுரை சொன்னாள். அது முடியாமல் போகவே நேரே பாடசாலைக்குச் சென்றாள். ஆசிரியரைக் கடிந்து கொண்டாள்.

காலம் கடந்தது.

சிறுவன் வளர்ந்து பேரறிஞனான்.

ஜனாதிபதி ஹாரூன் ரஷீத், அந்த அறிஞரின் புகழைக் கேட்டு, தம் அரசின் தலைமை நீதிபதியாக நியமித்தார்.

ஒருநாள். ஹாரூன் ரஷீத், தலைமை நீதிபதியைக் கௌரவிக்கும் பொருட்டு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் சிறப்பு உணவாக, 'ரோஹ்னி பிஸ்தா' (நெய்யால்  செய்யப்பட்டட உயர்தரமான ஒரு வித இனிப்புப் பண்டம்) பரிமாறப்பட்டது.

அதைக் கண்டதும் நீதிபதியின் கண்களில் கண்ணீர் திரண்டது.

பதறிப் போன ஜனாதிபதி, "இமாம் அவர்களே! என்னவானது தங்களுக்கு?" - என்று விசாரித்தார்.

அதற்கு அந்த அறிஞர், "ஜனாதிபதி அவர்களே! எனக்கு பழைய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

அப்போது நான் மாணவனாக இருந்தேன். ஒருமுறை கோபம் கொண்ட என் தாயார், என் ஆசிரியரை திட்டலானார். எல்லாவற்றையும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்ட என் ஆசிரியர் இமாம் அபூ ஹனீபா அவர்கள், "பெரியம்மா! கவலைப்படாதீர்கள்! உங்கள் மகன் வெறும் காய்ந்த ரொட்டித் துண்டுகளை சம்பாதிப்பதற்கு பதிலாக கல்வி, கேள்விகளில் சிறந்து 'ரோஹ்னி பிஸ்தா' உண்ணும் காலம் வரத்தான் போகிறது. பொறுமையாய் இருங்கள்!" - என்றார்.

எவ்வளவு தீர்க்கத்தரிசனம் அவருடையது! அதை நினைத்து அழுகிறேன்!" - என்றார் மாமேதை அறிஞர் பெருமானார் இமாம் அபூ யூஸீஃப்.

(தினமணி 'ஆன்மிகச் சிந்தனைப்' பகுதியில், 16.06.1995 வெளியான எனது ஆக்கம்)
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive