NewsBlog

Wednesday, October 21, 2015

சா்வதேசம்: 'தக்ரீர் சதுக்கத்திலிருந்து தக்ஸீம் சதுக்கம்வரை..'



இந்த இரண்டு சதுக்கங்களை ஒப்பிட முடியாதுதான்!

ஆம்..! எகிப்தின் கெய்ரோ தக்ரீர் சதுக்கத்தையும், துருக்கியின் தக்ஸீம் சதுக்கத்தையும் ஒப்பிடவே முடியாதுதான்! இரண்டும் வெவ்வேறு காரணங்களுக்காக மக்களைத் திரட்டிய சதுக்கங்கள். ஆனாலும், இரண்டையும் ஒன்று போலவே ஒப்பீடு செய்து செய்திகள் வெளியிடுவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன்; அதுவும் வழக்கம் போல ஒரு கோரஸ் குரலில்.

2011 - ஆம், ஆண்டு எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி 'அரபு வசந்தம்' என்று பெயர் சூட்டிக் கொண்டது. அறிவு ஜீவிகள் இந்த பெயரைக் கேட்டு சகிக்க முடியாமல் "வசந்தமாம்...! வசந்தம்..!" - என்று நீண்ட நாட்களுக்கு முணு முணுத்துக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து துருக்கியரின் போராட்டம் ஆரம்பித்தது. மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மீண்டும் ஒப்பீடு ஆரம்பித்தது.

அறிவு ஜீவிகளின் விமர்சனங்கள் வெளிப்படையாக.. தெளிவாக வெளிப்படாமல் சந்தர்ப்ப வாதங்களாயின. அதுவும் மேற்குலகின் அரசியல் விரிவாக்க திட்டங்களை ஒட்டிய பிரதிபலிப்புகளாகவே அவை விளங்கின.

'அரபு வசந்தம்' அரசியல் ரீதியாக மத்திய கிழக்கத்திய நாடுகளை வடிவமைக்கும் என்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சு போன்ற நாடுகளை பீதிக் கொள்ளச் செய்தது. அதனால் வெடிக்க இருக்கும் மக்கள் புரட்டிசிகளை கண்டு அவை திகிலடையவே செய்தன.

அரபுலக சர்வாதிகாரிகளோ பெரும் பகுதி அமைதி வழியில் போராடிய மக்களை 'நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராகவே' கருதி இரும்பு கரம் கொண்டு அடக்கலாயினர். அரபு கொடுங்கோலர்களின் இந்த அடக்குமுறை 'NATO' படைகள் தலையிடும்வரை தொடர்ந்தது.


லிபியாவில் இப்படிதான் நடந்தது.  'NATO' படைகளின் வரையரைக்குட்பட்ட ஒத்துழைப்பும்.. சொற்ப அளவிலான ஆயுதம் வழங்கலும் சர்வாதிகாரியின் முழுமையான ஆயுதப்படையினரோடு எதிர்க்க வைத்தது. இதன் விளைவாக ஆயிரக் கணக்கான மக்கள் படுகாயமுற்றனர்... கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கானோர் காணாமல் போயினர். லிபியாவின் மீது நடத்தப்பட்ட போரோ புவியியல் ரீதியாக நிலபரப்பையே பாழாக்கி மாற்றி அமைத்தது. ஒவ்வொரு இனமும் இனப்படுகொலை செய்யப்பட்ட கொடுமையும் நடந்தது.

மத்திய கிழக்கத்திய நாடுகள் மீதான மேற்கத்திய நாடுகளின் 'மனிதாபிமான' தலையீடு மேற்கத்திய நாடுகளின் தன்னலங்களைக் கொண்ட அரசியல் பாணியாகும். துருக்கியில் அண்மையில் நடந்த மக்கள் போராட்டங்களின் போது இதுதான் நடந்தது. இத்தகைய மேற்கத்திய தலையீடுக்கு வழிவகுத்த நாடுகளில் துருக்கி முதலிடத்தை வகிக்கிறது என்றால் அது மிகையல்ல.

சிரியாவில் குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அரபு வசந்தம் துருக்கியின் மேற்கு பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டது. துருக்கியின் வெளிவிவகார கொள்கையையே இது மறு சீரமைப்புக்கு உட்படுத்தியது. மேற்கத்திய முகாம்களுக்கு அருகில் துருக்கி வரும்விதமாக இது மாற்றியமைக்கப்பட்டது. 'அங்காரா' 'NATO'-வின் கொள்கை கோட்பாடுகளை முழுமையாக பின்பற்ற ஆரம்பித்தது.

'NATO'-வின் கொள்கை - கோட்பாடுகள் நயவஞ்சகத்தனமானவை.

உதாரணமாக, 2011, செப். 17 - இல், 'வால்ட் ஸ்டீரீட் இயகத்தின்' போரட்டத்தை காவல்துறை கடுமையாக இரும்புகரம் கொண்டு அடக்கியது. போராட்டங்களில் ஈடுபட்ட நிரயுதபாணியான மக்களின் மீது மிருகத்தனமான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டு கைதுகளோடு நிற்காமல் அடித்து துவம்சம் செய்தது. போராட்டக்காரர்களை கண்காணித்துக் கொண்டிருந்த 'FBI' மற்றும் 'Department of Homeland Security' படையினரும் இணைந்து ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அதிரடி படைவீரர்களை ஏவினர். இதை எதிர்த்து 'Naomi Wolf ' கடந்தாண்டு டிச. 29 இல், 'தி கார்டியன் நாளேட்டிலும்' எழுதவும் செய்தார்.

இந்த மேற்கத்திய மனித நேயப் போராளிகள்தான் அண்மையில் பெரும் ஊழலில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் 'National Security Agency' (NSA) பாதுகாப்பு என்ற போர்வையில் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களை ஏவுப்பார்த்ததே அது. இந்த கொடிய குற்றம் உப்பு - சப்பில்லாமல் போனது. இவையெல்லாம் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளுக்கும் சகஜமானது. 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்!'- என்ற பழமொழிக்கு பேர் போன நாடுகள் இவை.



அரபு நாடுகள் எல்லாம் போர்களால் சீரழிக்கப்பட்ட நாடுகள் என்ற நிலையிலும், அந்நாடுகளின் மொத்த தலைமுறையும் பாதிக்கப்பட்வர்கள் என்ற உண்மையையும் உணராத அதன் சர்வாதிகார தலைவர்கள் டேவிட் கேமரோனோடும், பிரான்ஸின் 'பிரான் ஓயிஸ் ஹோலண்ட்' மற்றும் பராக் ஒபாமாவுடனும் சேர்ந்து நின்று கையாட்டி மகிழ்ந்து திளைக்கிறார்கள். இஸ்ரேலின் பாதுகாப்பில் இவர்களின் நிகழ்காலம்.. எதிர்காலம் ஆகியவை அடங்கியுள்ளதை இந்த பதவி வெறியர்கள் புரிந்து கொள்வதாயில்லை.

மேற்கத்திய அதிகார மேலாண்மையே அரபு நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையை தீர்மானிக்கிறது. முஸ்லிம் நாடுகளை இயக்கிக் கொண்டிருக்கிறது.  மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் விதியை தீர்மானிப்பதும் இந்த அளவு கோல்தான்!

அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசியல் நலன்களையொட்டிய நிகழ்வுகள்தான் அனைத்தும்... தற்போதைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்து அதிபர் மூர்ஸியின் ஆட்சி கவிழ்ப்பு உட்பட!

ஆனால், பதவி வெறிபிடித்த ஆட்சியாளர்களுக்கும், கொள்கைக்காக அர்ப்பணித்துக் கொண்ட இயக்கவாதிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உண்டு. மலைக்கும் - மடுவுக்கும் இடையிலான வேறுபாடு அது. ஆட்சியாளர்களை அரியணைகளைக் காட்டி விலைக்கு வாங்க முடியும்! பயமுறுத்தி ஒடுக்கவும் முடியும். இயக்கவாதிகளை இப்படி செய்யவே முடியாது. அவர்கள் மீண்டும்.. மீண்டும் களத்தில் நின்றுகொண்டுதான் இருப்பார்கள்; தங்கள் இலக்குகளை எட்டும்வரை!
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive