எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல, ஆளும் பாரதிய ஜனதா கட்சியினரே கூட, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெருபான்மை பலத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதிலும், தர்மசங்கடத்தை உருவாக்குவதிலும் முனைப்பாக இருக்கின்றனர்.
எல்லா வன்முறை தொடர்பான சம்பவங்களையும் மத்திய அரசால் தடுத்துவிட முடியாது என்பதும் அந்தந்த மாநில அரசுகளுக்குத்தான் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதில் முழுபொறுப்பும் இருக்கிறது என்பதும் எல்லா எதிர்க்கட்சியினருக்கும் அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும். இருந்தாலும்கூட, பல்வேறு மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களுக்கு எல்லாம் மத்திய அரசும், குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியும்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
இப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பாஜக அரசின் செயல்பாட்டை மட்டுப்படுத்த முடியும். அது அரசியல் ரீதியாக பாஜகவை பலவீனப்படுத்துவதற்கு உதவலாம். ஆனால், இந்தியாவைப் பற்றி இப்படிப்பட்ட தோற்றம் உருவாக்கப்படுவது இந்தியாவின் வளர்ச்சியையும் சேர்த்து முடக்கிவிடும் என்பதையும் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உணர வேண்டும்.
அண்மையில், பெங்களூர் வந்திருந்த ஆஸ்திரேலிய மாணவர் மேட் கீத் என்பவர் தனது முழங்காலில், இந்து தெய்வ உருவமாகிய எல்லம்மாவை பச்சைக் குத்திக்கொண்டிருந்ததால், அவர் மிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறார். பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் எழுதிய "ஆந்தையும் இல்லை, புறாவும் இல்லை' நூல் வெளியீட்டு விழா அண்மையில் மும்பையில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியை நடத்தியவர் பாஜக பிரமுகரான சுதீந்திர குல்கர்னி. பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் எழுதிய புத்தகம் என்பதால் சிவசேனை கட்சியைச் சேர்ந்த சிலர் சுதீந்திர குல்கர்னி முகத்தில் கருப்பு மையைக் கொட்டினார்கள். மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் ஆதரவுடன் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்பதால் பாஜகவின் ஆசியுடன்தான் இந்த சம்பவம் நடந்ததாக அனைத்து எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும் விமர்சிக்கப்படுகிறது.
அதேபோல, மீண்டும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தை மும்பையில் நடத்த முடியாதபடி சிவசேனை கட்சியினர் அலுவலகத்துக்குள் நுழைந்து ரகளை செய்தார்கள். சிவசேனையின் செயல்பாடுகளை கூட்டணிக் கட்சி என்பதால் முதல்வர் தேவேந்திர பட்னவிஸின் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு தடுக்கவில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
கர்நாடகத்தில் எழுத்தாளர் கலபுர்கி கொலை செய்யப்படுகிறார். அவர் மூடநம்பிக்கையை எதிர்த்து எழுதுபவர் என்பதை கொலை செய்யப்பட்ட பிறகுதான் உலகம் அறிய வருகிறது. அவரது எழுத்தையும் கருத்தையும்விட, அவரது உயிர் அரசியல்பொருளாக மாற்றப்படுகிறது. இத்தனைக்கும் கர்நாடகத்தில் ஆட்சியிலிருப்பது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு. கொûலையாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்தும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இருக்கிறது.
அதேபோலதான் சமாஜவாதி கட்சி ஆட்சி நடத்தும் உத்தரப்பிரதேசத்தில் தாத்ரி என்கிற கிராமத்தில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்பதற்காக நடந்த படுகொலை. இந்த நிகழ்விலும் சட்டம் ஒழுங்கையும் அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் சமாஜவாதி கட்சியை குற்றம் சாட்டாமல் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீதுதான் குற்றம் சுமத்துகின்றன.
இருக்கும் தொல்லையெல்லாம் போதாதென்று, பாஜக, விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி போன்றவற்றை சார்ந்தவர்களும் ஆளுக்கு ஆள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு மேலும் தர்மசங்கடத்தை அதிகரித்து வருகின்றனர். இதேபோன்ற சிக்கல், முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கும் இருந்தது. அயோத்தியில் ராமர் கோயில் தொடர்பான சர்ச்சைக்குரிய பேச்சுக்களை சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த பலரும் வெளியிட்டு பிரதமர் வாஜ்பாய்க்கு அவ்வப்போது நெருக்கடியை ஏற்படுத்தி வந்தனர். இப்போது ராமர் கோயில் விவகாரம் மறக்கப்பட்டுவிட்டது. மோடியின் ஆர்எஸ்எஸ் தொடர்பும் ஈடுபாடும் பெரிதாக்கப்படுகின்றன.
மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கிடைக்கும் வெற்றியும், வந்து குவியும் தொழில்முனைவோரும் இந்தியாவை ஒரு பாதுகாப்பான, தொழில்சூழலுக்கு உகந்த நாடாகப் பார்க்க வேண்டும் என்றால், பாஜகவினர் தங்களது கட்சியின் கொள்கைகள் வேறு, மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வேறு என்பதை உணர வேண்டும். அவர்களுக்கு அதை உணர்த்த வேண்டிய பொறுப்பு பிரதமர் மோடிக்கு உள்ளது. இப்போதுதான் அவர் தனது தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவினர் சிலரது அநாகரீகச் செயல் இந்தியர் அனைவருக்குமான முத்திரையாக குத்தப்பட்டுவிடும்.
இத்தகைய சம்பவங்களில் பிரதமர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவர் இது தொடர்பாகப் பதில் அளிப்பதில்லை என்பதுதான். மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் நடைபெறும் சம்பவங்களுக்கு எல்லாம் பிரதமர் பதில் அளிப்பது என்றால் அது கேலிக்கூத்தாகிவிடும் என்பது மட்டுமல்ல, அது நரேந்திர மோடியை மேலும் தனி நபர் வழிபாட்டுக்கு உரியவராக மாற்றிவிடவும் கூடும். அதேநேரத்தில், இதுபோன்ற சம்பவங்களில் உடனடியாகத் தலையிட்டு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் பொறுப்பு உள்துறை அமைச்சருக்கு உண்டு!
( 21.10.2015 அன்றைய தினமணி நாளேட்டின் தலையங்கம்)
நன்றி: தினமணி.
0 comments:
Post a Comment