வீண்
சர்ச்சைகளில் மூழ்கித் திளைப்பதையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்கள் விவாத
வேகத்தில் வரையறை தாண்டிச் சென்று, ஒரு கட்டத்தில் அதைக் கட்டுப்படுத்த
முடியாமல் திணற வேண்டியதிருக்கும். அந்நிலையிலும் அவர்களின் நாக்கு நீண்டு
கொண்டேயிருக்கும். தங்கள் விவாதச் சொற்கள் மேலோங்கி நிற்க வேண்டும்
என்பதையே இவர்கள் இலக்காகக் கொண்டிருப்பதால் உண்மைக்கு மதிப்பளிப்பதில்லை.
உண்மையை முதன்மைப்படுத்துவதும் இல்லை. - இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வீணான விவாதங்களிலிருந்து விலகி இருக்கும்படி இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஏனென்றால், விவாதத்தில் ஈடுபடுபவர்கள் எதிர்தரப்பு வாதம் ஒன்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு அவரை வெற்றிகொள்ள முனைகின்றனர். இதன் விளைவாகப் பொய்யானவற்றையும் சரியென்று வாதத்தில் முன்வைக்கிறார்கள். விவாதக் களத்தில் தனது தரப்பு மேலோங்க வேண்டும் என்பது ஒன்றே நோக்கமாகக் கொண்டிருப்பர். விவாதங்கள் நன்மையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வீணான குழப்பத்தையும் கோபத்தையுமே அதிகம் ஏற்படுத்துகின்றன.
தனது ஒழுக்கத்தைச் சீர்திருத்திக் கொள்பவனுக்குக் சுவனத்தின் மேற்பகுதியில் வீடமைத்துத் தருவது போலவே, வீணான விவாதங்களிலிருந்து விலகி இருப்போருக்கும் இறைவன் சுவனத்தின் கீழ்ப்பகுதியில் வீடமைத்துத் தருவதாக நபிகளார் அறிவுறுத்துகிறார்.
சிலர் நாவன்மை மிக்கவராக இருப்பார்கள். பேச்சுத்துறையிலும் சிறப்பானவர்களாக இருப்பர். இது இறையருள். இந்த உண்மையை அறியாமல் அத்தகையவர்கள் தனது நாவன்மை மிக்க பேச்சுக்களால் அடுத்தவர் மீது தமது ஆதிக்கத்தைத் திணிப்பார்கள். அவர்கள் கற்றவரோ கல்லாதவரோ யாராயினும் அவர்களை வெற்றி கொள்ளும்வரை இந்த நாவன்மை மிக்கவர்கள் உறங்க மாட்டார்கள். இந்த ஆதிக்க மனோபாவத்தால் மற்றவர்களின் உணர்வுகள் ஊனப்படுவதுதான் மிச்சம்.
விவாதங்களில் ஈடுபட்டு உரக்கக் குரல் கொடுத்து ஓங்கி முழங்கிடுபவரை, “இறைவனிடத்தில், மிக அதிக வெறுப்புக்குரியவர்கள் சர்ச்சைகள் நிறைந்த விவாதங்களில் ஈடுபடுபவர்களே!” என்று நபிகளார் எச்சரிக்கிறார்.
வீண் சர்ச்சைகளில் மூழ்கித் திளைப்பதையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்கள் விவாத வேகத்தில் வரையறை தாண்டிச் சென்று, ஒரு கட்டத்தில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணற வேண்டியதிருக்கும். அந்நிலையிலும் அவர்களின் நாக்கு நீண்டு கொண்டேயிருக்கும். தங்கள் விவாதச் சொற்கள் மேலோங்கி நிற்க வேண்டும் என்பதையே இவர்கள் இலக்காகக் கொண்டிருப்பதால் உண்மைக்கு மதிப்பளிப்பதில்லை. உண்மையை முதன்மைப்படுத்துவதும் இல்லை.
ஒருமுறை ஒருவர் நபிகளாரின் திருச்சபையில் கலந்துகொண்டார். போலியும் பகட்டுமான அந்த மனிதர் தமது மிடுக்கை வெளிப்படுத்தும்விதமாக ஆடம்பரமான ஆடைகளையும் அணிந்து வந்திருந்தார். நபிகளார் உரையாடும் போதெல்லாம் தேவையில்லாமல் குறுக்கிட்டார். நபிகளாரின் குரலை அழுத்தும் வண்ணம் உரத்தக் குரலில் பேசலானார்.
கடைசியில் அவர் சபையிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது அங்கிருந்தவர்களிடம் நபிகளார், “இறைவன் இத்தகைய மனிதர்களை விரும்புவதில்லை. கால் நடைகள் தங்கள் உணவை மீண்டும் தாடைக்குக் கொண்டுவந்து அசைபோடுவதைப் போல இவர்கள் தங்கள் நாக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் இத்தகையவர்களின் முகங்களை நரகத்தின் பக்கம் திருப்புவான். எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள் சகோதரர்களே!” என்று அறிவுறுத்தினார்.
“நாங்கள் வீணான விவாதங்களில் ஈடுபட்டிருப்பதை இறைவனின் தூதர் கண்டால் அன்னாரின் முகத்தில் கனல் தெறிக்க எங்களைப் பார்ப்பார்கள். நபிகளாரின் திருமுகத்தில் அப்போது தேங்கி நிற்கும் கடுமையை அதற்கு முன்னரோ பின்னரோ நாங்கள் கண்டதில்லை” – என்று பல நபித்தோழர்கள், பல்வேறு நிகழ்வுகளில் இதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இத்தகைய சூழல்களில் நபிகளார் தமது தோழர்களைக் கண்டித்திருக்கிறார். மன்னித்தும் இருக்கிறார். கீழ்க்கண்டவாறு எச்சரித்தும் இருக்கிறார் என்பது முக்கியமானது.
“இறைவனின் நல்லடியார்களே, உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமுதாயத்தவர்கள் அவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்காகவே அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலிருக்கும் நன்மையைவிடத் தீமையே அதிகம் என்பதால் தர்க்கம் செய்வதை விட்டுவிடுங்கள். நீங்கள் அதிக அளவு பாவம் செய்தவர்கள் என்பதற்கு, நீங்கள் அதிகளவு சர்ச்சைகளில் ஈடுபடுவதே அடையாளம். இறைவன் உங்களுக்கு உயிர் தந்து எழுப்பும் அந்நாளில் உங்களுக்காக தர்க்கம் செய்து வழக்காட யாராலும் முடியாது என்பதால் அந்தக் கொடிய பழக்கத்தை விட்டுவிடுங்கள்!”
(தி இந்து நாளேடு, ஆனந்த ஜோதியில், 03.08.2017 அன்று வெளியான எனது கட்டுரை)
நல்ல சிந்தனை
ReplyDelete