அசைக்க முடியாத
உங்கள் செல்வாக்கு, சங்பரிவார் அமைப்பை செயலிழக்கச் செய்தது. அதன் அரசியல்
பிரிவு பாஜக ஹரியாணாவில் முற்றிலும் செயலிழந்து போனது. லட்சக்கணக்கான
உங்கள் அபிமானத்துக்குரிய வன்முறையாளார்கள் வீதிகள் இறங்கி பேயாட்டம்
போட்டனர். அப்பாவி மனித உயிர்களைப் பறித்தனர். விலைமதிப்பற்ற நாட்டின்
பொருளாதாரத்தை சூறையாடினர். தீக்கிரையாக்கினர். சட்டம், ஒழுங்கு முற்றிலும்
செயலிழந்து போன நேரம் அது... ஒரு குஜராத்தைப் போல..! >>> இக்வான் அமீர் <<<
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
குர்மீத் ராம், ரஹீம் சிங்குக்கு,
முதலில் கொஞ்சம் அழுகையை நிறுத்துங்கள் குர்மீத். ஏனெனில் இறைவனின் திருசந்நிதியில் உங்கள் தவறுகளை முன்வைத்து பாவமன்னிப்பு கேட்டு அழ மிச்சம் மீதி இருக்கும் கண்ணீர் துளிகள் உங்களுக்கு உதவலாம்.
ஆஹா..! அந்தக் காட்சியை நான் என்னவென்பேன்? குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டு நீதிபதியிடம் நீங்கள் கெஞ்சியதும், சிறைவளாகத்திலேயே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நீதிமன்றத்தைவிட்டு வெளியேறாமல் ஒரு குழந்தையைப் போல அடம் பிடித்து அழுததும் எப்படி மறக்க முடியும்? நீங்கள் ஒரு போலியான ஆன்மிகவாதி என்று உங்கள் முகத்திரையை விலகிய நிமிடங்கள் அல்லவா அவை..!
நீங்கள் கடவுளாகக் காட்டி அபலைப் பெண்களை உங்கள் உடற்பசிக்கு இரையாக்கிக் கொண்டது கடைசியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலப்பட்டது.
கடவுள் ஒருபோதும் பலவீனமானவர் அல்ல. குற்றம், குறையுடையோனும் அல்ல என்பதுகூட உங்களுக்கு தெரியவில்லை என்பது எவ்வளவு துரதிஷ்டம்!
ஆண்டான் வெள்ளையனின் சட்டங்களை தூக்கியெறிந்து, ஒருவேளை இந்தியாவிலுள்ள எல்லா மதநம்பிக்கையாளர்களின் சட்டங்களையும் ஒன்று திரட்டி, ஆரோக்கியமான ஒரு அமர்வில், எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமல் பரிசீலித்து தொகுக்கப்படும் பொதுசிவில் சட்டம் அமலில் இருக்குமேயானால், அந்த இஸ்லாமிய சட்டத்தின் உட்பிரிவின்படி இந்நேரம் நீங்கள் உங்கள் கழுத்தைப் பறிக்கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.
அதனால், தப்பித்தேன் என்று கொஞ்சம் அமைதியாக இருங்கள் குர்மீத்.
உங்கள் ஆசிரமத்தின் பாதாளலோக நிலவறைக்குள் பெண் சீடர்களை மட்டுமே பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தி கொண்டு அவர்களின் வறுமையையும், அறியாமையையும் மூலதனமாக்கிக் கொண்டு கடவுளின் அவதாரமாக நீங்கள் அரங்கேற்றிய லீலைகளின் இரண்டு அத்தியாயங்கள் இப்போது வெளிப்பட்டுள்ளன. கிருஷ்ணர்-கோபியர் என்றும், ‘மன்னிப்பு’ என்ற பெயரிலும் நீங்கள் துகில் உரித்த பெண்களின் பட்டியல் நீண்ட, நெடியது என்பது நீங்கள் அறிவீர்கள். 15 ஆண்டுகள் நீடித்த வழக்கில் உண்மையின் வீரியம் இப்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது.
அசைக்க முடியாத உங்கள் செல்வாக்கு, சங்பரிவார் அமைப்பை செயலிழக்கச் செய்தது. அதன் அரசியல் பிரிவு பாஜக ஹரியாணாவில் முற்றிலும் செயலிழந்து போனது. லட்சக்கணக்கான உங்கள் அபிமானத்துக்குரிய வன்முறையாளார்கள் வீதிகள் இறங்கி பேயாட்டம் போட்டனர். அப்பாவி மனித உயிர்களைப் பறித்தனர். விலைமதிப்பற்ற நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடினர். தீக்கிரையாக்கினர். சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து போன நேரம் அது... ஒரு குஜராத்தைப் போல..!
கடைசியில், நீதிமன்றமே களத்தில் இறங்கி, அரசியல் ஆதாயத்துக்காக சரணாகதியா என்று ஹரியாணா மாநில பாஜக அரசை கண்டிக்க வேண்டிய ஒரு சூழலை உருவாக்கிய உங்கள் செல்வாக்கு சாதாரணமானதா குர்மீத்! இதற்கு போய் நீங்கள் அழலாமா..?
அதிலும் மாநில பாஜக அரசு கலவரக்காரர்களை அடக்க பின்பற்றிய அணுகுமுறையில்கூட உங்கள் செல்வாக்கல்லவா வெளிப்பட்டது.
கடவுள் குர்மீத் பெயரால் நடைப்பெற்ற கலவரத்தில் 32 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் நமது இராணுவமும், காவல்துறையினரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டவர்கள் அல்ல!
வன்முறையாளர்களை நோக்கி திரும்ப வேண்டிய துப்பாக்கிகள் வானத்தை நோக்கியல்லவா திரும்பி சுட்டன.
கலவரத்தில் சிக்கி கொல்லப்பட்ட சாமான்ய மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணம் நீங்களாக இருக்க அதற்கு யார் தண்டனை தருவது குர்மீத்?
நமது மற்றுமோர் மாநில காஷ்மீர் உமர் அப்துல்லாஹ்,
ஹரியாணா வன்முறையாளர்களை இராணுவ ஜீப்பில் கட்டிவைத்து மனிதக் கேடயமாகப் பயன்படுத்திக் கலவரத்தை ஏன் அடக்கவில்லை?
கண்களைத் துளைத்து பார்வையைப் பறிக்கும் குண்டுகளை ஏன் சுடவில்லை?”
– என்றெல்லாம் கேள்வி கேட்கும் அளவுக்கு உங்கள் விசுவாசிகளிடம் பாஜக மென்மையுடன் நடந்து கொண்டது உங்களுக்குத் தெரியாதா?
அட, அதையெல்லாம் விடுங்கள்...
மனதோடு கொஞ்சம், அதுதான் மன்கீபாத்தில், நமது பிரதமர் மோடி சர்க்கார் உங்களைக் குறித்தும், உங்கள் அட்டூழியங்களைக் குறித்தும், உங்களது ஆதரவாளர்களின் வன்முறைகள் குறித்தும் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லையே..! ஒரு இம்மியளவும் கண்டனம் தெரிவிக்கவில்லையே இதெல்லாம் உங்கள் செல்வாக்கின்றி வேறென்ன?
ஓட்டறுவடைக்கு மனித உயிர்கள்தான் உரம் என்பது சங்பரிவார் தத்துவம் என்பதை உல்லாச லோகியான நீங்கள் அறிந்திருக்க நியாமில்லைதான்..!
சகலவசதிகளோடு கூடிய சொகுசு சிறைவாழ்க்கையில் உங்களுக்கு என்னதான் கவலையிருக்கிறது குர்மீத் சிங்?
இந்திய ஜனநாயக அமைப்பில், குற்றவாளிகள் நிரபராதிகளாவதும், நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப்படுவதும் சகஜம்தானே குர்மீத் சிங்?
நாட்டில் நீதிக்காக ஏங்கும் ஆயிரக்கணக்கான சங்கரராமன்களிருக்க நீங்கள் ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள் குர்மீத் சிங்..?
மறதியுள்ளவர்கள் மிகைத்துப் போன நாட்டில், நீங்கள் மீண்டும் உல்லாச புரியில் உலாவர கொஞ்சம் நாளாகலாம். அதுவரை கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா பாபா?
0 comments:
Post a Comment