NewsBlog

Friday, August 18, 2017

சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீடு



சமூக அமைப்பில் பொய் எங்கெல்லாம் உலா வர வாய்ப்புள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுட்டிக்காட்டி நபிகளார் அறிவுறுத்தியுள்ளார். அதன் செயலுருவாக்கத்தை கடுமையாக கண்டித்தும் உள்ளார். பொய்ப் பிரயோகிப்பவர்களுக்கு கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எச்சரித்தும் உள்ளார். இதன் விளைவாக ஒரு சாதாரண பணியாள்கூட மக்களைத் தவறாக வழி நடத்த முடியாது. ஒரு சாமான்யன்கூட உண்மையின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்துவிட முடியாது. 
-இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''

ஒருமுறை நான் நபிகளாரின் இல்லத்தில் இருக்கும்போது எனது தாயார் "என்னிடம் வந்தால் உனக்கொன்றை தருவேன்..!" - என்று என்னை அழைத்தார்.

அப்போது நபிகளார், "குழந்தைக்கு என்ன தரப்போகிறீரகளம்மா..?" - என்று விசாரித்தார்.

"பேரீத்தம்பழம் தரப் போகிறேன் இறைவனின் தூதரே!"- என்றார் எனது தாயார்.

"ஞாபகமிருக்கட்டும்... ஒருவேளை பேரீத்தம் பழத்தை குழந்தைக்குத் தரவில்லை என்றால்... நீங்கள்  பொய் சொன்னதாக இறைவனிடம் பதியப்படும்" - என்று நபிகளார் அறிவுறுத்தியதாக நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் பதிவு செய்கிறார்.

ஒரு குழந்தையை அழைப்பதற்காககூட எதையாவது தருகிறேன் என்று சொல்லி அதை தராமலிருப்பது ஏமாற்றுச் செயலாகும் என்று பெற்றோரை இஸ்லாம் எச்சரிக்கிறது. குழந்தைகளின் உள்ளங்களில் நேர்மை, உண்மை இவற்றின் விதைகளை அதிகதிகமாக தூவுங்கள் என்றே அது தனது பின்பற்றாளர்களை எச்சரிக்கிறது.

குழந்தைகள் பொய்மையின் நிழல்கூட படாதவர்களாக திகழ்ந்து, உண்மையாளர்களாக வளர்ந்து, நேர்மையான உருவங்களில் வாழ்ந்து, சொல்லாலும், செயலாலும் வாய்மையாளர்களாக சமூகத்தில் உலா வர வேண்டும் என்று இஸ்லாம்  விரும்புகிறது. குழந்தை வளர்ப்பில் பொய் பெரும் பாவம் என்று அறிவுறுத்துவதோடு, வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இளந்தலைமுறையினர், நேர்மையாளர்களாகவே கட்டமைக்கப்பட வேண்டும் என்பது அதன் அழுத்தான கட்டளையாகும்.

நபித்தோழி அஸ்மா பின்த் யஜீத் மற்றொரு சம்பவத்தை பதிவு செய்கிறார்:

"நான் ஒருமுறை நபிகளாரிடம், "பெண்களாகிய எங்களில் ஒருசிலர் ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டும் அதன் மீது ஆசை இல்லை என்று கூறுவதும் பொய்யாகுமா இறைவனின் திருத்தூதரே?" - என்று கேட்டேன். அதற்கு நபிகளார், "பொய்... பொய்யாகவே எழுதப்படும்!" -  என்று பதிலளித்தார்.

சமூக அமைப்பில் பொய் எங்கெல்லாம் உலா வர வாய்ப்புள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுட்டிக்காட்டி நபிகளார் அறிவுறுத்தியுள்ளார். அதன் செயலுருவாக்கத்தை கடுமையாக கண்டித்தும் உள்ளார். பொய்ப் பிரயோகிப்பவர்களுக்கு கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எச்சரித்தும் உள்ளார். இதன் விளைவாக ஒரு சாதாரண பணியாள்கூட மக்களைத் தவறாக வழி நடத்த முடியாது. ஒரு சாமான்யன்கூட உண்மையின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்துவிட முடியாது.

சிலசமயம், நண்பர்களிடையே அரட்டை அடிக்கும்போது, வேடிக்கைக்காக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதுண்டு. சொல்பவரோ அல்லது கேட்பவரோ பொய் என்று இதை மனதில் நினைப்பதில்லை. அதைக் கண்டிப்பதுமில்லை.

வேடிக்கைப் பேச்சில், தவறான தகவல்களைத் தருவதிலோ, கற்பனையாக மிகைப்படக் கூறுவதிலோ தவறு என்ன இருக்கிறது? என்று எண்ணுவோருக்கு இஸ்லாத்தின் தெளிவான செய்தி இதுதான்: "வேடிக்கையாகப் பேசுவதில் ஒரு தவறும் இல்லை. அதேநேரத்தில் இந்த வேடிக்கையும், சிரிப்புகளும் வாய்மை என்ற வரம்புகளுக்குள்ளாகவே இருக்க வேண்டும். பொய் எப்போதும் பொய்தான். உண்மை பொய்யிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தனித்துவம் வாய்ந்தது.

இதுகுறித்து நபிகளாரின் எச்சரிக்கையும், நற்செய்தியும் இது: "அடுத்தவரை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பொய்யான கதைகளைக் கூறுபவனுக்கு மரணம் உண்டாகட்டும். அவனுக்கு அழிவு காத்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல, "வேடிக்கையில் ஈடுபட்ட நிலையிலும், பொய்யைவிட்டு விலகி இருப்பவனுக்கு சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீடு உண்டு என்று நான் உறுதி அளிக்கிறேன்"

வேடிக்கை, விவாதங்களில் பொய் சொல்வதை விட்டுவிடாதவரை ஒருவர் தனது இறைநம்பிக்கையில் முழுமைப் பெற முடியாது. அவர் மற்றைய விவகாரங்கள் அனைத்திலும் உண்மையாக இருந்தாலும் சரியே..!

வேடிக்கைப் பேச்சுகள் எல்லா நிலைகளிலும் சிரிப்பூட்டுவதில்லை..! மகிழ்ச்சியூட்டுவதுமில்லை. அப்போது கட்டவிழ்த்துவிடும் பொய்களின் பின்விளைவுகளால் குடும்பங்களில் சுமூகநிலை பாதிக்கப்படுகிறது. சிலபோது விபரீதங்களை விளைவிக்கிறது. குடும்ப உறவுகளை சீர்க்குலைக்கிறது. பகைமையை வேர்விடச் செய்கிறது என்பதே உண்மை.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 17.08.2017 அன்று வெளியான எனது கட்டுரை)  

படம்: நன்றி: Subhan's Photography:  https://www.facebook.com/groups/716821555091965/
Share:

1 comment:

  1. வீண் பேச்சு எப்பயுமே கூடாது

    ReplyDelete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive