ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்தார். “இறைவனின் திருத்தூதரே, நானோ வறிய
நிலையில் உள்ளவன். ஆனால், எனது பராமரிப்பில் ஒரு ஆதரவற்ற சிறுவன் உள்ளான்.
அவனைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவுக்காக அச்சிறுவனின் சொத்தை நான்
பயன்படுத்தலாமா?” என்று கேட்டார்~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
யாரோடெல்லாம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றொரு வழிகாட்டும் பட்டியலை முன்வைக்கிறது இஸ்லாம். அப்பட்டியலில் முதன்மை இடம் பிடிப்பவர்கள் ஆதரவற்றவர்கள்.
ஆதரவற்றவர்களிடம் மிகச் சிறந்த முறையில் நடந்துகொள்ள வேண்டும். அவர்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும். தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் நீள்கின்றன. இந்தச் செயல்கள் எல்லாம் மிகத் தூய இறைவணக்கமாகக் கருதப்படும் என்றும் இறைநம்பிக்கையாளர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய நற்பண்புகளை மேற்கொள்ளும் வழிகேடர்கள்கூட நேர்வழி பெற்ற நிலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற ஊக்கமும் தரப்படுகிறது.
ஒருமுறை நபிகளாரின் திருச்சபைக்கு வந்த ஒருவர் தனது கல்நெஞ்சம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வேண்டி நின்றார்.
அதற்கு நபிகளார், “சகோதரரே! நீங்கள் உங்கள் இதயத்தை மென்மையானதாக்க விரும்பினால்... அந்த இலக்கை அடைய விரும்பினால்... ஆதரவற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களின் தலையைக் கருணையோடு நீவிவிடுங்கள். நீங்கள் உண்ணும் உணவை அவர்களுக்குக் கொடுங்கள். உங்கள் இதயம் மென்மையாகிவிடுவதைக் காண்பீர்கள்” என்று அறிவுறுத்தி அனுப்பினார்.
மற்றொரு முறை, ஆதரவற்றவர்கள், தேவையுடையோர் ஆகியோரைப் பராமரிப்பவரும் நானும் சுவனத்தில் அருகருகில் இருப்போம் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக நடுவிரலையும் சுட்டுவிரலையும் உயர்த்திக் காட்டினார். ஆதரவற்றவர்களைப் பராமரிப்பவர்கள் மட்டுமல்லாமல் திக்கற்ற ஏழைகளைப் பராமரிப்பவரும் சுவனத்தில் தன்னோடு இருப்பர் என்பதையும் அப்போது விளக்கினார்.
“ஆதரவற்றவர்களை நல்லமுறையில் பராமரிக்கும் வீடே சிறந்த வீடு. ஆதரவற்றவர்களைத் தீயமுறையில் நடத்தும் வீடே மிக மோசமான வீடு” என்றும் எச்சரிக் கிறார்.
நபிகளார் அடிக்கடி இறைவனின் திருமுன் இப்படி முறையிடுவார் என்கிறது வரலாறு:
“இறைவா! பலவீனர்களின் உரிமைகளைக் கண்ணியத்திற்குரியதாகக் கருதுகிறேன். அருள்புரிவாயாக!” என்கிறார் நபி.
ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்தார். “இறைவனின் திருத்தூதரே, நானோ வறிய நிலையில் உள்ளவன். ஆனால், எனது பராமரிப்பில் ஒரு ஆதரவற்ற சிறுவன் உள்ளான். அவனைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவுக்காக அச்சிறுவனின் சொத்தை நான் பயன்படுத்தலாமா?” என்று கேட்டார்.
அதற்கு நபிகளார், “சகோதரரே! தங்கள் ஏழ்மைநிலையைக் கருத்தில் கொண்டு ஆதரவற்றசிறுவனைப் பராமரிக்கும் செலவுக்காக அவனது சொத்தைப் பயன்படுத்தலாம். அதேநேரத்தில் வீண் செலவு செய்வதோ அந்தச் சொத்தை அபகரித்துக்கொள்வதோ ஒருபோதும் கூடாது!” என்று எச்சரித்தும் அனுப்பினார்.
தன் பொறுப்பிலிருக்கும் ஆதரவற்றவர்களை எந்தெந்தக் காரணங்களுக்காகக் கண்டிக்கலாம் என்று வினா எழுப்பிய ஒருவரின் சந்தேகத்துக்கு நபிகளாரின் அழகிய வழிகாட்டுதல் இது:
“கல்வி கற்பிக்க... ஒழுக்கம் போதிக்க... என்று எந்தெந்தக் காரணங்களுக்காக உங்கள் குழந்தையைக் கண்டிப்பீர்களோ அதே காரணங்களுக்காக மட்டும் ஆதரவற்றவர்களைக் கண்டிக்கலாம்” என்ற வரம்பிட்டுக் காட்டினார் நபிகளார்.
(தி இந்து, ஆனந்த ஜோதியில், 24.08.2017 அன்று வெளியான எனது கட்டுரை)
0 comments:
Post a Comment