காக்கைகள் மிகச் சிறந்த அறிவு கூர்மை உள்ளவை. இந்த உலகில் முதன் முதலில் சிந்திய மனித படுகொலையை கண்ட சாட்சி அவை. ஆதி மனிதனுக்கு சவ அடக்க முறையை கற்றுக் கொடுத்த ஆசான்கள் அவை - இக்வான் அமீர்
வீட்டைச் சுற்றியும் ஏழு தென்னைகள், அதில் ஒரு தென்னையை பற்றிப் பிடித்து வளர்ந்து நிற்கும் கம்மார் வெற்றிலைக்கொடி. கிணற்றருகே நெடிது வளர்ந்து காய்ப்புக்கு வந்திருக்கும் ஒரு புளிய மரம். வீட்டுக்குள்ளேயே வளரந்து நிற்கும் கொய்யா. முதல் மாடியை தொட்டுவிட்ட மூங்கில். எனது ஆயுளில் பல முறை முயன்றும் வளராமல் தற்போது வளர்ந்து காய்ப்புக்கு தயாராக இருக்கும் மூன்று முருங்கை மரங்கள். வீட்டுக்கு தேவையான முட்டைகளுக்காக கூண்டு வளர்ப்பு முறையில் சில நாட்டு கோழிகள். மாடியில் பலவிதமான மலர்கள், மாதுளை, மூலிகைச் செடிகள் கொண்ட நந்தவனம். அந்த நந்தவனத்தின் ஒரு பகுதியில் காதல்பறவைகள், மறுபுறம் புறாக்கள் என்று இயற்கை எழிலோடான எனது குடில்.
மரங்கள் நிரம்பிய வீடாகையால், பறவைகள், அணில் பிள்ளைகள், சில நேரங்களில் அதிரடியாய் வருகைத் தரும் குரங்குகளுக்கு பஞ்சமேயில்லை. அதிலும் குறிப்பாக, காக்கைகளால் நிரம்பிய ஒரு பகுதி அது. வளர்ப்பு பறவைகளின் உணவு சிதறல்கள், குடிநீர் வசதி என்று அருகிலேயே அனைத்தும் கிடைப்பதால்... அதிலும் ஜிஎஸ்டி போன்ற எந்த வரி தொல்லைகளும் இல்லாததால் நிம்மதியாக தென்னை மரங்களில் குடும்பம் நடத்தும் காக்கைகள்.
ஏறக்குறைய மரம், செடி, கொடிகளோடு நில்லாமல் பறவைகள், அணில், பூச்சிகள் போன்ற சக உயிரிகளுடன் ஒரு புரிந்துணர்வும், இணக்கமும் எப்போதும் உண்டு. அவற்றின் எல்லை மீறல்களை மறந்து மன்னிப்பதும் உண்டு.
இத்தகைய ஒரு சூழலில்தான் தென்னை மரமொன்றில் காக்கைகள் குஞ்சு பொரித்திருந்தன. மாடியில் பயபாடுக்கான குழாய் அருகே இருந்த தென்னைமரம் அது.
காக்கைகள் மிகச் சிறந்த அறிவு கூர்மை உள்ளவை. இந்த உலகில் முதன் முதலில் சிந்திய மனித படுகொலையை கண்ட சாட்சி அவை. ஆதி மனிதனுக்கு சவ அடக்க முறையை கற்றுக் கொடுத்த ஆசான்கள் அவை.
அத்தகைய கூர்மதி மிக்க காக்கைகள்தான் குஞ்சு பொறித்திருந்தன. குறிப்பிட்ட அந்த மரமருகே நான் செல்ல விடாமல் தடுத்தன. தலைக்கு மேலாக பறந்து கொத்துவது போல என்னை எச்சரிக்கவும் செய்தன. ஒருமுறை எல்லை மீறி எனது முகத்தில் கழியவும் செய்தன.
காக்கைகளின் தாய்மையுணர்வை நான் உணர்ந்து கொள்ளாவிட்டால் வேறு யார் அறிந்து கொள்வர்?
தலைக்கு மேலாக தொங்கிக் கொண்டிருந்த தென்னம் ஓலையில், சில அடி தொலைவில் அமர்ந்து கொண்டு என்னை எச்சரித்து கொண்டிருந்த காக்கையை மிக அருகில் இருந்து எடுத்த படம் இது. சிறு அசைவுகளும் காக்கைகளை எச்சரித்துவிடும். ஆனால், என் மீது கொண்ட நம்பிக்கையால் மிக அருகில் அமர்ந்திருந்த அந்த தாய் காகத்தின் துடிப்பை, பதபதைப்பு உணர்த்தவே நான் இந்தப் படத்தில் முயன்றிருக்கிறேன்.
பதற்றம் வேண்டாம் தாயே...! நான் உனது தோழன்.!
0 comments:
Post a Comment