NewsBlog

Thursday, August 24, 2017

சொல்வதை செய்யுங்கள்! வெற்றிப் பெறுவீர் இளைஞர்களே..!



"பாசிசத்துக்கு எதிரான கருத்துக்களும், இஸ்லாத்துக்கு ஆதரவான எந்தக் கருத்துக்களும் வெளிபட்டுவிடக்கூடாது என்பதில் சிலர் கவனமாக இருக்கிறார்கள் என்பதை உள்வாங்குங்கள்" ~இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''
சங்பரிவார் குழுக்களான இவர்கள் எப்போதும் இப்படிதான். ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மக்களவை உறுப்பினர்களாக இருந்த சமயம் அது. விவாத மேடைகளில் அடுத்தவர் கருத்து சேராமல் இருக்க உரத்தக் குரலில் பேசி திசைத்திருப்பும் தற்போதைய செயல்களைப் போலவே அப்போதும் எழுத்து ஊடகங்களில் ஊடுருவி கருத்துருவாக்கம் செய்து வந்தார்கள்.

"பர்தாவை தூக்கி எறிவோம்!", "வேலூரில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி" - இது போன்ற பல்வேறு பொய்யான ஆக்கங்களை நாளேடுகள் முதற்கொண்டு பிரபல வார ஏடுகள்வரை ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள் இவர்களுக்கு எதிராக சங்பரிவார் பயன்படுத்தி வந்தார்கள். தற்போதும் பயன்படுத்திவருகிறார்கள். ஆனால், சமூக வலைத்தளங்கள் என்னும் பிரமாண்ட வீச்சால் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் அது தொடர்கிறது. ஊடகங்களின் கட்டுரையாளர்களாக, செய்தியாளர்களாக, வாசகர்களாக சங்பரிவார் குழுக்கள், அவர்களின் ஆதரவாளர்கள் இந்தப் பணிக்காக முழு வீச்சில் செயல்படுகின்றனர் 

இந்தச் சிக்கலை  எதிர்கொள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மையினத்தாருக்கும் எதிராக அச்சேற்றப்படும் கருத்துக்களை எதிர்கொள்ளவும், பொய்யான கருத்துக்களுக்கு தகுந்த பதிலளிக்கவும் வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்காக மறைந்த தமிழறிஞர் கவிக்கோவின் தலைமை  உட்பட டாக்டர் கே.வி.எஸ், மௌலானா ஜபருல்லாஹ் ரஹ்மானி போன்ற அறிஞர்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், மாணவ இயக்கங்களைச் சார்ந்தவர்கள் எல்லாம் ஊர்கூடி தத்தம் கவலையைப் பகிர்ந்து கொண்டார்கள் ஊடக கண்காணிப்பகம் போன்ற பெயர்களில் செயல்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள். 

இந்தப் பணியை என்னைப் பொருத்தவரை மிகவும் சிறப்பாக செய்ததாகவே எண்ணுகின்றேன். அன்றைய இளைஞனான நான் இரண்டுவிதங்களாக எனது செயல்பாட்டை அமைத்துக் கொண்டேன்.

1. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைக் கண்காணிக்கவும், தகுந்த முறையில் பதிலளிக்கவும் மாணவர் ஊடகக் கண்காணிப்புக் குழுக்களை உருவாக்குவது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளையொட்டி வழிகாட்டுவது; அறிவூட்டுவது. அந்த பதில் அந்தந்த ஊடகங்களுக்கு அஞ்சல் செய்யும்வரை துணை நிற்பது.
2.  அடுத்தது, செய்திகளை பின்தொடர்ந்து புலனாய்வது. இந்தப் பணிக்காக தமிழகத்தின் அநேகமாக எல்லா மாவட்டங்களுக்கும் பயணப்பட்டிருக்கிறேன். குறிப்பாக நாகர்கோவில், குளச்சல், மேல்மருவத்தூர் கோயில், வேலூர் பேரணாம்பட்டு, சித்தூர் பகுதிகளின் குக்கிராமங்கள் என்றெல்லாம் இரவு, பகல் பாராமல் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொண்டு அலைந்து திரிந்து, புலனாய்ந்து செய்திகளைத் திரட்டிய காலமது. செய்திகளுக்குட்பட்ட சாமான்யனிலிருந்து, அரசு அதிகாரம்வரை ஒரு துறையையும் விடாமல் துல்லியமாக புலனாய்வு செய்த நிகழ்வுகள் அவை. இறைவன் எனக்கு வாய்ப்பளித்தால் அவற்றை விரிவாக சொல்ல இருக்கிறேன்.

தற்போதைய சூழலில் மேற்கூறப்பட்ட வரையரைகளோடு இன்னும் செய்ய வேண்டியதும் உள்ளது. அதுவும் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் சமூக ஊடகங்களை ஓரளவு உருப்படியாக பயன்படுத்தி வரும் தற்போதைய நிலைமையில் ஒன்றுபடுவதும், ஓரணியாக திரண்டு அறிவு யுத்தம் செய்வதும் தவிர்க்கவே இயலாதது.

எந்தக் கொள்கை, கோட்பாடுகள் தங்களின் உயிரினும் மேலாக கருதுகிறார்களோ, எந்த சித்தாந்தம் அவர்களின் இம்மை, மறுமை வாழ்க்கையை சிறப்பாக்கும் என்று நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அதை உறுதிப்படுத்த ஒன்றுபடல் என்ற இந்த வழியைத் தவிர வேறு எந்தவழியும் சாத்தியமே இல்லை.

அவரவர் சார்ந்த அமைப்புகள் இருக்கட்டும். அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொள்ளட்டும். ஒருவிதத்தில் இந்த பிரிவுகள் ஒரு பலவீனமாக இருந்தாலும் மறுவிதத்தில் ஒவ்வொரு இயக்கமும் தத்தமது பணிகளை அடுத்தவர் இடர்பாடு இல்லாமல் செயல்பட உதவும் என்ற பலமும் இந்த பிளவுகளில் உண்டு. இந்த ஆரோக்கியத்தை உணரும்வரை எந்த ஆபத்தும் இல்லை.

அதனால், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களானாலும் ஊடகங்களின் கருத்துக்களை எதிர்க்கொள்ள அமைப்புகளின் கட்டுப்பாடுகளை, அந்த விக்கிரமாதிதனின் வேதாளச் சுமைகளை கொஞ்சம் நேரம் இறக்கி விட்டுக் கொள்ளலாம்.

இந்த இளைஞர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:

பொதுத்தளத்தில் இயங்கும், எழுத்து என்னும் அறிவாயுதத்தை எடுத்து தொடர்ந்து அறப்போர் புரிந்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களையும், (என்னை நானாக முன்மொழிவது சரியா? என்று எனக்குள்ளேயே ஒரு கேள்வி எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை. ஆனாலும் வேறு வழி தெரியவில்லை. மன்னிக்கவும்) என்னிலும் மூத்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள். தன்னுணர்வை மூட்டைக்கட்டி இவர்களை அடையாளம் காணுங்கள்.

மூத்தவர்களான இவர்களின் அழகிய வழிகாட்டுதலைப் பெற தொடர்ந்து முயலுங்கள்.

சமூகத்தின் அரிய சொத்துக்களான இவர்களால் கட்டப்பட்ட ஒரு பாசறையை நிறுவுங்கள். அந்தப் பாசறையில் அறிவாயுத பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

இயக்கச்சாயல்களை விட்டு இந்த மூத்தவர்கள் வெளியேற மறுக்கிறார்களா?அடம் பிடிக்கிறார்களா? கவலையை விடுங்கள்.. சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை  என்பது போல இறையருளால் நான் பெற்ற அறிவை, அனுபவங்களை பகிர்ந்து உங்களின் ஏணியாகிறேன் வாருங்கள்..!

இளைஞர்களே நீங்கள்தான் இந்திய சமூக அமைப்பின் வழிகாட்டிகள். உலக அரங்கில் உங்கள் தாய் நாட்டுக்கான வெல்லப் பிறந்தவர்கள் என்பதை மட்டும் ஒருகாலும் மறந்துவிடாதீர்கள்...!

சமூக ஊடகங்களில் ஆரம்ப நிலையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:

• விருப்பு, வெறுப்பின்றி பிரச்னைகளை அணுகுங்கள்.

• மறுப்புகளை தெரிவிக்கும் கையோடு உங்களின் ஆதரவாக  செயல்படுவோரின் கருத்துகளுக்கும் செவி கொடுங்கள்.

• கரம் கொடுத்து அவர்களுக்கு ஆதரவு தெரிவியுங்கள்.

• அந்தந்த இணைப்புகளுக்குச் சென்று பின்னூட்டமிடுங்கள். கருத்துக்களைப் பதியுங்கள்.

பாசிசத்துக்கு எதிரான கருத்துக்களும், இஸ்லாத்துக்கு ஆதரவான எந்தக் கருத்துக்களும் வெளிபட்டுவிடக்கூடாது என்பதில் சிலர் கவனமாக இருக்கிறார்கள் என்பதை உள்வாங்குங்கள்.

முத்தலாக் சம்பந்தமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும், முகநூலிலும், https://www.facebook.com/photo.php?fbid=865354370284260&set=a.107624929390545.15685.100004291150487&type=3&theater எனது வலைப்பூவிலும் https://ikhwanameer.blogspot.in/2017/08/blog-post_23.html#comment-form ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன். உங்களில் எத்தனைப் பேர் இதனை வாசித்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனது வலைப்பூவில் வந்த பின்னூட்டத்தை (படம்) இணைத்திருக்கிறேன் பாருங்கள்.

ஒரு வலைப்பூ மட்டுமல்ல, பொதுவெளி ஊடகங்களில் எழுதப்படும் ஆக்கங்களையும் இப்படிதான் கருத்துப் பிறழ்ந்து மோசமான வார்த்தைகளால் சிலர் பின்னூட்டமிடுகிறார்கள். ஆக இவர்களின் நோக்கம் இனியும் எங்களைப் போன்றோர் எழுதக்கூடாது என்பதுதான்!

"சரி நாங்கள் செய்ய வேண்டியது என்ன?" - என்ற கேள்வியை நீங்கள் எழுப்பினால் எங்களை தொடர்ந்து வாசியுங்கள் என்பேன் முதலாவதாக! அக்கருத்துக்களின் வழிகாட்டுதல்களை உள் வாங்குங்கள் என்பேன் அடுத்ததாக! அவற்றுக்கு பின்னூட்டமிடுங்கள். பதிவேற்றப்படும் எதிர்தரப்பினரின் பின்னூட்டங்களுக்கு அழகிய முறையில் பதிலளியுங்கள் என்பேன் தொடர்ச்சியாக!

அநேகமாய் எங்களைப் போன்றோரின் காலம் முடிந்தது. இறையருளால் ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டிருக்கிறது. வாய்ப்புகள் பறிபோன பின் இரங்கல் செய்திகளாய் பதிவேற்றம் செய்வதைவிட இருக்கும் காலத்தை உருப்படியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இளைஞர்களே தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் உங்கள் சமூகத்துக்கான வழிகாட்டிகள் நீங்கள்தான்! மதவெறுப்புகளால், மனங்களைப் பிரித்து, இந்திய சமூகத்தை அதளப்பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கும் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தத் தகுதியானவர்களும் நீங்கள்தான்.

இறையருளால் ஜெயம் உண்டாகும் இளைஞர்களே.. சொல்வதைக் கேளுங்கள்..!

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive