திங்களன்று உ.பி. காஸியாபத்தில் நடந்த ஒரு நிகழ்வை ஹாஜிக்கள்
தாக்கப்பட்டதாக படத்துடன் தவறான தகவல் ஒன்றை முகநூலில் சிலர்
பரப்பியிருந்தனர். அதன் உண்மை என்னவென்று அறியாமல் மெத்தப் படித்த சிலரும்,
அறிஞர் பெருமக்கள் சிலரும் பின்னூட்டமிட்டிருந்தனர். தவறான அந்த
செய்திக்கு விருப்பம் தெரிவித்தனர் சிலர். இன்னும் சிலரோ சபித்திருந்தனர். >>> இக்வான் அமீர் <<<
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நண்பர்களே!
முகநூலும் அவற்றின் பிற இணைப்புகளாய் முக்கியமாக விளங்கும், டிவிட்டர், யுடியூப் போன்றவையும் நமக்கு இலவசமாக கிடைத்துள்ள மிகச் சிறந்த சமூக ஊடகங்கள். ATM போல உடனடியாக பயன்பாட்டுக்கான சாதனங்கள். நடப்புச் செய்திகளை, நிகழ்வுகளை, கருத்துக்களை பகிர கிடைத்த அற்புதமான மின்னணு ஊடகங்கள் இவை.
ஆட்சி அதிகாரத்தை, அரசியல் அவலங்களைத் தோலுரித்துக் காட்ட கிடைத்திருக்கும் நல்லதொரு சந்தர்ப்பம். அச்சு ஊடகங்களையும், மின்னணு செய்தி ஊடகங்களையும் திகைக்க வைத்து அவர்களின் பாரபட்சத்தை தோலுரித்துக் காட்ட கிடைத்துள்ள அரிய வாய்ப்பு.
'மார்க் தம்பி' லட்சக்கணக்கான பயனாளர்களுக்கு செய்துதந்துள்ள நல்லதொரு வசதிக்கு உண்மையிலேயே நாம் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
நண்பர்களே, அண்மையில் ஒளிப்படங்களுக்கான ஒரு பயணத்தில் சூழலியல் ஆர்வலரான நண்பர் Yukaanthan Yuva யுகாந்தனுடன் பழவேற்காடு சென்றுவிட்டு அங்கிருந்து மீஞ்சூர் வழியே திரும்பிக் கொண்டிருந்தோம்.
மீஞ்சூரில் ரயில்வே கேட் ஒன்றுள்ளது. அந்த கேட் மூடிய நிலையில் பாதசாரிகளும், இரு சக்கர வாகனமோட்டிகளும் அத்துமீறி அந்த ஆபத்துக்குள் நுழைவதால் அடிக்கடி ரயில் விபத்துக்கள் நடக்கும் பகுதி அது.
நாங்கள் சென்றிருந்தபோதும், ரயில்வே கேட் மூடியிருந்தது. இருசக்கர வாகனமோட்டிகள் சகஜமாக குறுக்குவழியில் ரயில் பாதையை கடந்து கொண்டிருந்தார்கள். நான் அவர்களை படமெடுக்க ஆரம்பித்தேன். "ஏன் படமெடுக்கிறீர்கள்?" - என்று அதட்டலான குரல் ஒன்று பக்கத்தில் கேட்க, திரும்பிப் பார்த்தால் காவல்துறை அதிகாரி ஒருவர் புல்லட்டில் மிடுக்குடன் அமர்ந்திருந்தார்.
"ஓ..! அதிகார வர்க்கத்தின் ஆர்ப்பரிப்பு!" - என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே, "நான் பத்திரிகையாளன். நான் படமெடுப்பதில் என்ன பிரச்னை உங்களுக்கு?" - என்று கேட்டேன்.
"காவல்துறை அதிகாரி முன்னிலையில் மூடிய கேட்டுக்குள் மக்கள் வாகனங்களில் நுழைவதை படத்துடன் போட்டுடப் போறீங்க சார்?" - என்றார் அவர்.
"அப்படியானால், அத்துமீறும் இவர்களை தடுத்து நிறுத்தி இரண்டு அறை விட வேண்டியதுதானே?' - என்றேன் நான் சிரிப்போடு.
"நீங்க வேற சார். நான் அடிக்க போய்... என் பின்னாலிருந்தே யாராவது செல்போனில் வீடியோ எடுத்து அப்லோடு செய்து என் வேலைக்கு உலை வைக்கவா? நல்லாயிருக்கே நீங்க சொல்றது!"
நான் விளையாட்டாக சொன்னதை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், விளைவுகளை உணர்ந்தேயிருந்தார்.
அவ்வளவு வலிமையான ஊடகங்களின் ஒருவிதமான எஜமானர்கள் நாம் என்பதை விளக்கவே இந்த நிகழ்வை நான் சொல்ல வேண்டியிருந்தது நண்பர்களே!
அறிவியல் நமக்குத் தந்துள்ள இந்த நல்வாய்ப்பை சரியாக, சீரிய முறையில் பயன்படுத்திக் கொள்வது உத்தமம்.
மாறாக,
>>> மனம் போன போக்கில் பதிவேற்றம் செய்வதும்,
>>> கச்சைக் கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவதும்,
>>> அடுத்தவர் கருத்தை காது கொடுத்து கேட்க மறுப்பதும்,
>>> அவை உண்மையாக இருப்பினும் சமூக நல்லிணக்கத்தை சீர்க்குலைக்கும் செய்திகளை பரப்புவதும்,
>>> எவ்வித ஆதாரமும் அற்ற சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வதந்திகளை செய்திகளாக்குவதும்
ஒரு காலும் விரும்பத்தக்கதல்ல.
உங்களுக்கு மொழி புரியாவிட்டால் தெரிந்தவரிடம் அந்த இணைப்புகளை அனுப்பி செய்தி என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு மொழி தெரியாவிட்டால்... கற்றவரிடம் உதவியோடு அந்த மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்.
கூடுமானவரை உங்கள் செய்திகளுக்கு ஆதாரத்துடன் இணைப்புகளை இணையுங்கள்.
நீங்கள் பரப்பும் பொய்யான தகவல்களால் ஏற்படும் விளைவுகளுக்கு சமூக ரீதியாகவும், ஆத்மார்த்த ரீதியாகவும் நீங்கள்தான் பொறுப்பு; பதில் சொல்ல வேண்டியவர் என்பதை நினைவில் வையுங்கள்.
திங்களன்று உ.பி. காஸியாபத்தில் நடந்த ஒரு நிகழ்வை ஹாஜிக்கள் தாக்கப்பட்டதாக படத்துடன் தவறான தகவல் ஒன்றை முகநூலில் சிலர் பரப்பியிருந்தனர். அதன் உண்மை என்னவென்று அறியாமல் மெத்தப் படித்த சிலரும், அறிஞர் பெருமக்கள் சிலரும் பின்னூட்டமிட்டிருந்தனர். தவறான அந்த செய்திக்கு விருப்பம் தெரிவித்தனர் சிலர். இன்னும் சிலரோ சபித்திருந்தனர்.
அந்த செய்தியின் உண்மை சுருக்கமாக இதுதான்:
உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவால் காஸியாபாத்தில் துவக்கப்பட்ட அஃலா ஹஜரத் ஹஜ் ஹவுஸ் கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவடையவிருக்கும் நிலையில், அதை உடனே முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அமைப்பினர் நஸீம் கான் தலைமையில் திங்கட்கிழமை ஹஜ் ஹவுஸ் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.
கல்வீச்சில் ஈடுபட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://indianexpress.com/…/ala-hazrat-haj-house-locals-pol…/
இந்திய அரசியலமைப்பில் எதிர்படவிருக்கும் நாட்கள் கடுமையானவை. அவற்றை எதிர்கொள்ள இந்த நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்பும் ஒவ்வொருவரும் பொறுமையுடனும், விவேகத்துடனும், சாதுர்யத்துடனும், ஒற்றுமையோடும் பிரச்னைகளை அணுக முன்வர வேண்டும்.
அமைதியை தொலைத்துவிட்ட எந்தவொரு சமூகத்திலும் ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்கள் ஏதுமிருக்கா என்பதை அனைவரும் நினைவில் கொள்க!
0 comments:
Post a Comment