NewsBlog

Friday, July 28, 2017

அழகை விரும்பும் இறைவன்



மனிதன் மிடுக்கான தோற்றத்துடனிருக்க தன்னை அலங்கரித்துக்கொள்வதை இறைவணக்கத்துடன் ஒப்பிடுகிறது இஸ்லாம். "ஆதமுடைய மகனே..! தொழும்போதெல்லாம் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்" - என்று திருக்குா்ஆன் இதைக் கட்டளையாகவே வைத்துள்ளது.

இறைநம்பிக்கையாளர்கள் கண்ணியம் மிக்கத் தோற்றத்திலிருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நபிகளார், இதற்காக தம் தோழர்களுக்குத் தூய்மைப் பயிற்சியும் அளிக்கிறார். தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் வீட்டிலும் வெளியிலும் இறையடியார்கள் தங்கள் தோற்றத்தில் கவனம் செலுத்திட வேண்டும் என்பது முக்கியமானது.

நபிகளாரிடம் ஒருவர் வந்தார். அவருடைய தலைமுடியும் தாடியும் கலைந்து அலங்கோலமாகக் காணப்பட்டன. தலைமுடியை வெட்டி அழகுபடுத்தி வரும்படி நபிகளார் அவரைப் பணித்தார். அதன் பின்னர், தோழர்களை நோக்கி, “உங்களில் ஒருவர் என்னிடத்தில் நல்ல தோற்றத்தில் வருவது, மோசமான சாத்தானின் தோற்றத்துடன் வருவதைவிடச் சிறந்தது அல்லவா?” என்று சிலாகித்துப் பேசினார்.

மற்றொருமுறை ஒரு மனிதர் அழுக்கடைந்த ஆடைகளோடு வருவதை நபிகளார் கண்டார். “நீங்கள் உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் அளவுக்கு உங்களிடம் பணவசதி இல்லையா சகோதரரே?” - என்று அவரிடம் விசாரிக்கவும் செய்தார்.

வீண் செலவுகள் இன்றி, செயற்கைத்தனமின்றி ஒருவர் தன்னை அலங்கரித்துக்கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுப்பதில்லை.

நபிகளாரிடம் ஒருவர், “தமது ஆடைகளைச் சிறந்ததாகவும், காலணிகளை அழகுமிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவது பெருமை என்ற கணக்கில் வருமா இறைவனின் திருத்தூதரே?” என்று கேட்டார். “இறைவன் அழகன். அவன் அழகை விரும்புகிறான்!” என்றார் நபிகளார்.

ஒருமுறை நபிகளார் உடல் நலமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் போர்வை ஒன்றைத் தம்மீது போர்த்தியிருந்தார். அதுபோன்ற சுத்தமானதொரு போர்வையை நான் பார்த்ததேயில்லை என்று நபித்தோழர் பாராவின் பதிவே உள்ளது.

“இறைவன் தூய்மையானவன். அவன் தூய்மையை விரும்புகிறான். இறைவன் தாராளத்தன்மை மிக்கவன். அந்தக் குணத்தையே அவன் விரும்புகிறான். இறைவன் கருணையானவன். அவன் சக மனிதர்களிடம் கருணை காட்டுவதை விரும்புகிறான். எனவே, நீங்கள் உங்கள் உடலையும் வசிப்பிடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்று வலியுறுத்துகிறார் நபிகளார்.

(தி இந்து, ஆனந்த ஜோதியில் 27.07.2017 அன்று வெளியான எனது கட்டுரை)

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive