NewsBlog

Saturday, July 22, 2017

எங்கே என் விண்மீன்கள்?

காணாமல் போன
என் விண்மீன்கள்
கண்டவர்கள்
தயவுசெய்து
தெரிவிப்பீரா
என்னிடம்?

அவர்கள்
விடுதலை இந்தியாவின்
நம்பிக்கை
நட்சத்திரங்கள்..!
அதனால்,
மெதுவாக …
ஆம்… மெதுவாக...
களைத்திருக்கும்
அவர்கள்
உறக்கம் கலையாமல்
செய்தியை
தெரிவிப்பீராக..!

பத்துமாதம்
சுமந்து பெற்ற
தாயினும் அதிகமதிகம்
அகமகிழ்ந்திருந்தேன் நான்…
என் நாட்டின்
அத்தனை பிரச்னைகளுக்கும்
தீர்வளிப்பவர்கள் என்று
நெஞ்சமெல்லாம்
நம்பிக்கையோடு
காத்திருந்தேன் நான்..
அந்த
மெரீனா இளம் போராளிகளின்
உக்கிரத்தாண்டவம் கண்டு..
ஆகா… இனி
என் நாட்டுக்கு
இல்லை… கவலை என்று
மகிழ்ச்சிக்கரை
புரண்டிந்தேன் நான்!

ஒரு காந்தியும், ஒரு மார்க்ஸும்
ஒரு கட்டபொம்மனும், திப்புச்சுல்தானும்,
ஒரு வேலு நாச்சியாரும், அலி சகோதரர்களும்,
ஒரு வஉசியும், சுபாஷ் சுந்திர போஸுமாய்
எத்தனை கலவைகளுடன்
தோள் தட்டி நின்றார்கள்
அந்த
ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட
எனது பிள்ளைகள்..!

ஆகா…! எனது நாட்டின் விடிவெள்ளிகள்
இந்திய அரசியல் நீரோக்களை
விரட்டவந்த அறப்போராளிகள்
என்று எத்தனை இரவுகள்
சந்தோஷத்தால்
தூங்க மறந்தன
எனது விழிகள்..!
ஆனால், அத்தனை கனவுகளும்
பகல் கனவுகளோ என்று
திகைப்புடன்
நிற்கிறேன் நான்..!

மெரீனாவுக்கு பின்
எங்கே போனீர்கள்…
எனது பிள்ளைகளே..!
நெடுவாசலில்
உங்கள் முகங்களைக்
காணாமல்
தேடித்… தேடி..
களைத்து
போனேன் நான்..!
கதிராமங்கலத்திலாவது
போராடும்
எம் மக்களை
கரைச்சேர்ப்பீர்கள்
என்று எத்தனை எத்தனை
கனவுகளை
சுமந்திருந்தேன் தெரியுமா…?
அத்தனைக் கனவுகளும்
கலைந்ததுதான் நிஜம்..!

எண்ணெய் துரப்பண கிணறுகள்தோறும்
பூமித்தாயின் முகத்தில்
கருமைப்பூசி
பிசுப்பிசுப்புடன்
வழிந்தோடும்
கச்சா எண்ணெய்யில்
உங்கள் முகம் காண
ஆவலோடு மேற்கொண்ட
எனது அத்தனை பயணங்களிலும்…
தொலைந்து போன
எனது அன்பு உறவுகளாகிய
நீங்கள்
திரும்ப கிடைக்காமல்
தலை குனிந்து
நின்றதுதான் நிஜம்..

கணம் தோறும்…
பொன்னான மண்ணை
இந்த நீரோ மன்னர்கள்
ஊதிய அரசியல்வாதிகள்…
அன்னியனுக்கு
சொற்ப ஆதாயங்களுக்கு
மண்ணையும், மரத்தையும்,
வேளாண் நிலங்களையும்,
ஆற்றையும், காற்றையும்
விற்பனை செய்யும்
ஒவ்வொரு கணம் தோறும்…
இறந்து… இறந்து
பிழைக்கிறேன் நான்!

நாளைய
என் பிள்ளைகளுக்கு
அற்புதமான
இந்த நிலத்தை,
காற்றை, மரத்தை,
செடி-கொடிகளை,
நம்மைச் சுற்றி வாழும்
அற்புதமான உயிர்களை
ஒப்படைத்து
”இனி நீங்கள்தான்
பொறுப்பாளிகள்
பத்திரமாய்
பாதுகாத்து வாருங்கள்!” என்று
அவர்களுக்கான
அடைக்கலப் பொருளை
ஒப்படைத்து…
நிம்மதியாய்
வந்த ஊர்
சென்று சேர
ஆவலுடன் காத்திருக்கும்
ஒவ்வொரு கணம் அது..!

நம்பிக்கைகளாய்…
துன்பத்துயரங்கள்
விலகும் என்ற
நம்பிக்கைகளாய்
எனது பொழுதுகள்
விடிகின்றன..!

காணாமல் போன
என் விண்மீன்கள்
திரும்பவும்
நான் மீட்டெடுப்பேன் என்ற
பெருத்த நம்பிக்கையோடு
நகர்கின்றன
எனது தேய்மான பொழுதுகள்..!

அதனால்,
தொலைந்துபோன
என் விண்மீன்களை
அடிவானத்து
நட்சத்திரங்களை
தேடித்தேடி
திரிகின்றேன் நான்..!
எங்கேயாவது
அவர்களைக் கண்டால்…
தயவுசெய்து
அய்யன்மீர்…
சத்தம்போடாமல்
களைத்திருக்கும்
அவர்களின்
துயில் களையாமல்
தெரிவிப்பீர்..
என்னிடம்..!

- நம்பிக்கை இழக்காமல் இக்வான் அமீர்

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive