NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Tuesday, August 15, 2017

70 ஆண்டுகள் கழிந்தும்...


"எழுபதாண்டுகள் கழிந்தும்...மாறாத என் அரசியல் நாயகர்கள்!"
Share:

பகலில் வரலாற்றை உருவாக்குகின்றேன்!



 25.11.1919 - இல், அரசாங்கக் கட்டளையின்படி அலி சகோதரர்கள் விடுதலையடைந்து நேராக, அமிர்தரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார்கள். அங்கு ஒருவர், முஹம்மது அலியைப் பார்த்து, "தாங்கள் வெளிவந்துவிட்டீர்களா?" - என்று கேட்க, அவர், "ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கின்றோம்!" - என்றார் புன்னகையுடன். ~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

"நாங்கள் இரவு 11 மணிக்கு வழக்கம்போல தூங்கச் சென்றோம். இரவு 2 அல்லது 2.30 மணிக்கு நோன்பிற்காக சஹர் (நோன்புக்கால காலை உணவு) செய்தோம். சுமார் 4 மணிக்கு பங்களாவின் வாசலில் காலடிச் சத்தங்கள் கேட்டு விழித்துக் கொண்டேன். "யார் அது?" என வினவியதற்கு, "தாங்கள் தானா, மிஸ்டர் ஷவ்கத் அலி?" - என டிப்டி கமிஷனரான மிஸ்டர் புலூட்டன் கேட்டார். இவர்கள் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என உணர்ந்து கொண்டேன்....

..... புலூட்டன் கைது செய்ய வந்திருப்பதாக அறிந்ததும் முஹம்மது அலி, "இதோ..! தயாராக இருக்கின்றேன்!"- எனக் கூறினார்.

இதற்குள்ளாக தாயாரும்,  புர்கா அணிந்து வந்து எங்களுடன் வருவதாக சொன்னார் புலூட்டன், "இவ்விருவரையம் அழைத்துச் செல்லத்தான் எங்களுக்கு உத்திரவு!" - எனக் கூறிவிட்டார்.

முஹம்மது  ஹீஸைன் (குடும்ப உறுப்பினர்) என்னுடன் கட்டித் தழுவும்போது அழுது விட்டான். நான் பலமாக அவன் கன்னத்தில் ஓர் அறை கொடுத்து, "ஜாக்கிரத்தை, வெள்ளையன் முன் அழக்கூடாது!" - என கத்தி எச்சரித்தேன்"

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அலி சகோதரர்களில் ஒருவரான மெளலானா ஷவ்கத் அலியின் டைரிக் குறிப்பு ஒன்றே மேலே காணப்படுவது.

இந்திய விடுதலைப் போரில், அலி சகோதரர்கள் என்று சிறப்புப் பட்டம் பெற்ற சகோதரர்களில் மூத்தவர் ஷவ்கத் அலி. இளையவர் முஹம்மது அலி.

முஹம்மது அலி தமது 18 வயதில் பி.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்தார். அதன்பின், ஆக்ஸ்போர்ட்டிலுள்ள லிங்கன் கல்லூரியில் 1898 முதல், 1902 வரை கல்வி கற்றார். மேலைக் கல்வி கற்ற அதேசமயம், சிறந்த சமயப் பற்றாளராகத் திகழ்ந்தார். அங்கு பி.ஏ.ஹானர்ஸ் படித்துத் தேறினார்.

1902 - இல், முஹம்மது அலி இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பினார். சிறிது காலம் ராம்பூர் சமஸ்தானத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் இரண்டு வருட நீண்ட விடுப்பில் கல்கத்தா சென்று காம்ரேட் பத்திரிகையைத் தொடங்கினார். 1911 ஜனவரி 11- ஆம், நாள் வெளியான காம்ரேட் வெறும் இரு நூற்றைம்பது ரூபாய் கைமாற்றில் ஆரம்பிக்கப்பட்டு, இந்தியப் பத்திரிகை வானில் தாரகையாய் மிளிர்ந்தது. அரசியல் பிரமுகர்கள் எல்லாம் அதன் வாசகர்கள்.

ஒத்துழையாமை இயக்க நாட்களில் மெளலானா அவர்களின் பேச்சினால் ஏற்பட்ட உத்வேகத்தில் முப்பது நாட்களில் ... முப்பதாயிரம் ஆண்களும், பெண்களும் சிறை நிரப்பும் போராட்டங்களில் பங்கு கொண்டனர்.

பகலில் அரசியல் பணிகளும், இரவில் எழுத்து பணிகளுமாய் மூழ்கி இருக்கும் மௌலானா முஹம்மது அலி, "நான் பகலில் வரலாற்றை உருவாக்குகின்றேன். இரவிலோ வரலாற்றை எழுதுகின்றேன்!" - என்பார்.

வெள்ளையர் ஏகாத்பத்தியத்தின் கொடுந்துன்பங்களுக்கும், வெஞ்சிறைச் சாலைகளுக்கும் அலி சகோதரர்கள் அஞ்சியதில்லை. 1915 - மே, 15 - ஆம் தேதி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி ஷவ்கத் அலியும், முஹம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

25.11.1919 - இல், அரசாங்கக் கட்டளையின்படி அலி சகோதரர்கள் விடுதலையடைந்து நேராக, அமிர்தரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார்கள். அங்கு ஒருவர், முஹம்மது அலியைப் பார்த்து, "தாங்கள் வெளிவந்துவிட்டீர்களா?" - என்று கேட்க, அவர், "ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கின்றோம்!" - என்றார் புன்னகையுடன்.


1923, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஜான்ஸியில் முஹம்மது அலி விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின் அவர் பேசிய முதல் கூட்டத்தில், "நான் விடுதலையானது.. எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது. ஏனென்றால்... நாட்டினுடைய பெரும் சுமை என் மீது சுமத்தப்பட்டுவிட்டது. என் அண்ணன் ஷவ்கத் அலியைவிட நான் அதிகமாக நேசிக்கும் அந்தப் பெருந்தலைவர், காந்திஜி இங்கு இல்லாத நிலையில் நான் சிறிய சிறையிலிருந்து.. பெரிய சிறைக்கு வந்திருப்பதாகவே உணர்கின்றேன்! இனி என் முதல் கடமை, விடுதலையின் (சுயராஜ்ஜியம்) திறவுக்கோலைத் தேடி எடுத்து இந்தியாவின் ஆன்மா அடைப்பட்டுக் கிடக்கும் எரவாடா சிறைக் கதவைத் திறப்பதுவேயாகும்!" - என்றார்.

நாட்டு விடுதலைக்காக.. முதன் முதலில் சிறைப் புகுந்த பெருமை மௌலானா முஹம்மது அலியையே சாரும். அரசியல் போர்க்களங்களின் இடைவிடாத போராட்டங்களில் பல்லாண்டுக் கால தொடர் சிறைவாசத்தை அலி சகோதரர்கள் அனுபவித்தார்கள். அவர்களின் விடுதலையின் போது, வறுமையின் கோரம் தாண்டவமாடியது. உண்ண உணவின்றி, இருந்த இடத்திற்கு வாடகை கொடுக்கப் பணமின்றி சிரமப்பட்டனர். அந்த நிலைமையிலும், மக்கள் திரட்டிக் கொடுத்த ரூபாய் 12 ஆயிரம் பண முடிப்பையும் , அவர்களைக் கவுரவித்து அணிவித்த ஆயிரம் பவுன் மதிப்புள்ள தங்கச் சரிகை மாலையையும் கிலாஃபத் நிதியில் சேர்த்துவிட்டனர்.

லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்கு வைஸிராய் லார்டு இர்வின் கொடுத்த அழைப்பை ஏற்று மௌலானா புறப்பட்டபோது, அவரது உடல்நிலை கடுமையாய்யப் பாதிக்கப்பட்டிருந்தது. கட்டிலில் படுக்க வைத்தவாறு பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றிய காட்சி கண்ணீர் வரவழைப்பதாகும். கடுமையான நோய்களால் அவதிப்பட்ட அப்பெரியார் தம் நாடு சுதந்திரம் பெற்றேயாக வேண்டுமென்று முனைப்புடன் பயணம் செய்தார்.

லண்டன் மாநாட்டில், "சமாதானத்திற்காகவும், நேசத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாங்கள் இங்கு வந்தோம். இவற்றை எல்லாம் பெற்றே திரும்புவோம்!" - என நம்புகின்றேன். இல்லை என்றால்.. போராட்டக் குழுக்களுடன் இணைந்து விடுவோம். தேசத்துரோகிகள், கலகக்காரர்கள், வரம்பு மீறியவர்கள் என்று நீங்கள் எங்களை அழைத்தாலும் கவலையில்லை!

சுதந்திரத் தாயத்துக்கே நான் திரும்ப விரும்புகின்றேன். இல்லாவிட்டால்.. அந்நிய நாடாக இருந்தாலும், உங்கள் நாடு சுதந்திர நாடாக இருப்பதால்... எனக்கு இங்கேயே ஒரு சவக்குழி தந்துவிடுங்கள்!" - என்று மெளலான முழக்கமிட்டார்.

இந்த வரலாற்றுப் புகழ் மிக்க பேருரைக்குப் பின் அவரது உடல்நிலை மிகவும் சீர்குலைந்தது. 03.01.1931 இல், அவரது ஆவி பிரிந்தது(இன்னா லில்லாஹி).

மௌலானாவின் அடக்கம் சம்பந்தமாக, பிரச்னை எழுந்தது. உடலை இந்தியாவுக்கு அனுப்பினால்.. 'பெரும் எழுச்சி ஏற்படும்!' - என்று பயந்த வெள்ளையர் அரசு, பாலஸ்தீனத்தில் மஸ்ஜிதே அக்ஸாவிற்கு அருகில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது.

கடைசிவரை இந்திய விடுதலைக்காகப் போராடிய மெளலான முஹம்மது அலி ஜவஹர் உயிரைத் தன் நாட்டுக்காக தந்தாரே தவிர, உடலைத் தரவில்லை!

ஏனென்றால்... அடிமை மண்ணில் சிறைப்பட அவரது உடல்கூட தயாராக இல்லை!

(ஆகஸ்ட் 20, 1995-ல், தினமணி நாளேட்டில் பிரசுரமான எனது கட்டுரை)


Share:

Sunday, August 13, 2017

கோராக்பூர் சோகமும், சங்பரிவார் இந்தியாவும்!



நினைத்தாற்போல டாக்டர் கபீல் கான் மனித நேயப் பணியும், பிஞ்சுக் குழந்தைகளைக் காக்க அவர் மேற்கொண்ட சாதுர்ய நடவடிக்கைகளும் மதவாத சக்திகளால் ஜீரணிக்க முடியவில்லை. பாசிஸ வெறியர்களால் அதை அங்கீகரிக்கவும் முடியவில்லை - இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
உ.பியின் கோராக்பூர் பாபா ராகவ தாஸ் (BRD) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் இன்றி பலியான சம்பவம் ஓரிரு நாட்களாகதான் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது.

முழுக்க... முழுக்க ஆட்சி, அதிகார எந்திரத்தின் கோளாறுகளால், அலட்சியத்தால்.. இந்த பிஞ்சு உயிர்களின் பலி நிகழ்ந்தது.

மாநில அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்காததும், தகுந்த மருந்துபொருட்கள் இல்லாததும், உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையுமாய் சேர்ந்து இந்த மரண பலிக்கு காரணமானது.

இந்நிலையில் மரணவாசலில் நின்ற குழந்தைகளைக் காக்க போராடிய குழந்தைகள் நல மருத்துவர் கபீல் கான் குறித்து ஒரு மடல் எழுதியிருந்தேன். அதில் மதவாத சக்திகள் அவரது நற்பணியை அங்கீகரிக்க முடியாமல் அவரை கழுவில்கூட ஏற்றலாம் என்ற அச்சமும் தெரிவித்திருந்தேன். http://ikhwanameer.blogspot.in/2017/08/blog-post_13.html மற்றும் https://www.facebook.com/ikhwan.ameer.9/posts/860537287432635

நினைத்தாற்போல டாக்டர் கபீல் கான் மனித நேயப் பணியும், அவரது சாதுர்ய நடவடிக்கைகளும் மதவாத சக்திகளால் ஜீரணிக்க முடியவில்லை. பாசிஸ வெறியர்களால் அதை அங்கீகரிக்கவும் முடியவில்லை.

தற்போது டாக்டர் கபீல் கான் பணி நீக்கம் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுதான் மோடி சர்க்காரும், அவரது சிந்தனை ஊற்றான ஆர்எஸ்எஸ் சங்பரிவார் குழுக்களும் உருவாக்க நினைக்கும் இந்தியா.

நமது ஜனநாயக அமைப்பில் மதவாத சக்திகளை அரியணையில் அமர்த்தி மாபெரும் பிழை இழைத்ததாக, சொந்த மக்களை நோக்கி வருங்கால சந்ததிகள் தூற்ற இருக்கும் இந்தியா.

இது வால்மீகியும், கம்பனும் எழுதாத சங்பரிவார் ராமாயணம்

வனவாசம் இல்லாத ராமாயணம்!

குகன் நீக்கப்பட்ட ராமாயணம்!!

வெறும் பிணங்கள்... அழுகிய பிணங்கள்...

விழிபிதுங்கி... வயிறு கிழிக்கப்பட்டு, கருக்கள் பிடுங்கப்பட்டு,

கங்கையும், காவிரியும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட அழுகிய

பிணங்கள் மீது கட்டமைக்கப்பட்ட

ஆர்எஸ்எஸ் - சங்பரிவார் கனவு காணும் இந்தியா! 

கற்காலத்தைய இந்தியா..!


Share:

அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,


டாக்டர் கபீல் கான்

அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,

தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக!

செத்த பிணங்களை வைத்து வணிகம் செய்யும் மருத்துவ உலகில், முடிந்தவரை பிடுங்கி பஞ்சபராரியாக்கும் மருத்துவர் இடையில், தாங்கள் தனி ஆளுமைப் பண்பாளராக மிளிர்வதைக் கண்டு உண்மையிலேயே உள்ளம் பூரிக்கின்றேன் டாக்டர்.

உ.பியின் கோராக்பூர் பாபா ராகவ தாஸ் (BRD) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் இன்றி பலியான சம்பவம் ஓரிரு நாட்களாகதான் உலகின் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

முழுக்க... முழுக்க ஆட்சி எந்திரத்தின் கோளாறுகளால், அலட்சியத்தால்..  இந்த பிஞ்சு உயிர்களின் பலி நிகழ்ந்தது.

மாநில அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்காததும், தகுந்த மருந்துபொருட்கள் இல்லாததும், உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையுமாய் சேர்ந்து இந்த மரண பலிக்கு காரணமானது.

வெறுப்பு அரசியல்விதைகளை விதைக்க நேரமில்லாத மதவாத அதிகார வர்க்கத்துக்கு குடிமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து என்னதான் கவலை. அதுவும் மாநில முதல்வரின் சொந்த தொகுதியிலேயே நடந்துள்ள இந்த உயிரிழப்பு அவர்களின் மக்களுக்கான அக்கறையின்மையைத் தவிர சொல்லும் செய்திதான் என்ன?

டாக்டர் கான் சாப், 

ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் நிகழ்கால உதாரணம் என்பதில் பெருமையடைகிறேன்.

வெறுப்பு அரசியல்வாதிகள் அதிகார ஆர்ப்பாட்டத்துக்கு இடையே அமைதியாக தாங்கள் செய்திருக்கும் பணி மகத்தானது.

ஆகஸ்ட் 10 அன்றைய நள்ளிரவில், பிராணவாயு வினியோகத்துக்கான பிரதான குழாயில் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. பிராணவாயுவின் அளவு குறைந்து போனதற்கான சிவப்பு அடையாள எச்சரிக்கை அது. உயிர்க்காக்கும் பிராணவாயுவின் அளவு ஓரிரு மணிநேரம்கூட தாக்குப்பிடிக்காது என்ற நிலையில் மருத்துவமனை பணியாளர்களும், மருத்துவர்களும் கைகளைப் பிசைந்து நின்ற கொடுமையான வேளை அது.

ஒரு குழந்தை மருத்துவரான நீங்கள் தாயுமானவராக அல்லவா அந்த நேரத்தில் மாறி நின்றீர்கள்..! எவ்வித பதட்டமும் படாமல் நிலைமையை சமாளிக்க முடிவெடுத்தீர்கள்..! சீரான திட்டமிட்டீர்கள்..! நேரடியாக களத்தில் இறங்கினீர்கள்! ஒருவேளை திரும்பிவருவதற்குள் பிராணவாயு குறைந்து போனால்... செயற்கை சுவாசப் பைகளை (Ambu bag) பயன்படுத்தி குழந்தைகளை காக்க வேண்டும்! என்று கீழ்நிலை மருத்துவர்களுக்கு ஆணை பிறப்பித்தீர்கள்.

ஓடோடி சென்று பிராணவாயு உருளைகளுக்கான வினியோகஸ்தரிடம் கெஞ்சியிருக்கிறீர்கள். அதுவரையிலான பாக்கித் தொகை கணக்கு முடிக்காமல் பிராணவாயுவை வழங்க முடியாது என்று கை விரித்த வணிகரிடமிருந்து தோல்வியுடன் திரும்பிவந்த நீங்கள் அத்துடன் நிற்கவில்லை.

நட்பு ரீதியாய் அண்டை மருத்துவமனைகளை அணுகி மூன்று பிராணவாயு உருளைகளை காரில் எடுத்து வருகிறீர்கள். அவற்றின் கொள்ளளவு வெறும் அரைமணி நேர பயன்பாடுதான்..!

காலை 6 மணி. பதற்றத்துடனேயே விடிகிறது. அவசர சிகிச்சைப் பெற்று வந்த பல குழந்தைகள் பிராணவாயு இல்லாமல் உயிருக்கு போராடும் தகவல் கேட்டு மீண்டும் பதறியடித்துக் கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாய் செல்கிறீர்கள். 12 பிராணவாயு சிலிண்டர்கள் மீண்டும் இரவலாக பெற்று வருகிறீர்கள். இதற்காக நான்குமுறை பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் மனம் இளகிய பிராண வாயு வினியோகஸ்தர் ஒரு நிபந்தனையுடன் உருளைகளை தர முன்வருகிறார். மோடி சர்க்காரின் பணமில்லா வர்த்தகம் - காஷ்லெஸ் எகனாமி ஏற்கனவே கேலியான நிலையில், கையில் பணம் கொடுத்து பிராணவாயு உருளைகளை வாங்கிக் செல்ல சம்மதிக்கிறார்.

உண்மையிலேயே உங்கள் தாய், தந்தையர் அற்புதமானவர்கள் டாக்டர் கான் சாப். இவ்வளவு தாராளமனம் கொண்டவராக  உங்களை வளர்த்திருக்கிறார்கள்..! உடனுக்குடன் பத்தாயிரம் ரூபாய் சொந்த பணம் கொடுத்து, அதுவரையிலான போக்குவரத்து செலவுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு பிராணவாயு உருளைகளை நீங்கள் வரவழைத்திருக்காவிட்டால்... எங்கள் இளைய சிற்பிகளில் இன்னும் பலர் பரலோகம் சென்றிருப்பார்கள். எங்கள் தாய்மார்கள் ஆற்றாமையால் காலமெல்லாம் அழுதழுது புலம்பியிருப்பார்கள். எங்கள் ஆட்சியாளர்களோ வாக்குக்காக கிளிசரின் போடாமலேயே கண்ணீர் சிந்தியிருப்பார்கள்.

டாக்டர் கபீல் கானின் போற்றுதலுக்குரிய மனிதநேயப் பண்பை கண்டுக் கொள்ள முடியாமல், இந்நேரம், அநேகமாய் இந்திய ஊடகங்கள் அனைத்தும், பார்வையிழந்திருக்கலாம். செவிப்புலன் பறிபோய் இருக்கலாம். வாய்ப்பேச முடியாமையால் தடுமாறியிருக்கலாம். அதனால், தாங்களும், தங்களின் அரிய சேவையும், அவர்களின் உலகாயதப் புலன்களுக்கு படாமல் போயிருக்கலாம். ஆனால், அந்த சில மணி நேரத்தில் நீங்கள் பெற்றிருக்கும் மன நிம்மதியும், பெற்றோர்களிடமிருந்து பெற்ற ஆசிகளுக்கும், தங்களின் சகாக்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், அவற்றின் கனமும் வார்த்தைகளால் வடிக்க இயலாதவை டாக்டர்.

உண்மையிலேயே இவற்றையெல்லாம் நீங்கள் விளம்பரத்துக்காக செய்யும் அரசியல்வாதி இல்லை என்பதே உண்மை.

நீங்கள் சார்ந்த சமுதாயத்தின் இறந்த பெண்மணிகளின் சடலங்களை தோண்டியெடுத்து அவற்றை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குங்கள் என்று ஆக்ரோஷமாய் முழக்கமிட்டு, மதவாதம் அரசியல் கடிவாளத்தைக் கைப்பற்றிய அதே உத்தரப் பிரதேசத்தில்தான் நீங்களும் பணியில் இருந்தீர்கள்.

உங்கள் உணவு எது? உறைவிடம் எது? கல்வி எது? உணர்வுகள் எவை? என்று உங்கள் வீட்டு உள்ளறைகள் வரை அத்துமீறி நுழைந்து, மூஸா காலத்து பனீஇஸ்வேரலர் சமுதாயம் ஒடுக்கப்பட்டதுபோல, கடும் சட்டங்களால் ஒடுக்கிக் கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் மத்தியில்தான் அன்றாடம் நடந்தீர்கள். ஆனாலும், உங்கள் தனித்துவமும், ஆளுமையும் எவரும் உங்களை மிஞ்ச முடியாதளவு உயர்ந்தது என்பது எவ்வித சந்தேகமுமில்லை.


மாடுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு தர மறுக்கிறது இந்த ஓட்டுக்கான ஆட்சி அதிகாரம். அப்படி மனிதர்களுக்கு முக்கியத்துவம் தந்திருந்தால்...

காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!
சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்
கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு!

என்று தாலாட்டுப்பாடி தூங்க வைக்க வேண்டிய மழலையரை தகுந்த மருத்துவ வசதிகள் இல்லாமல் பறிக் கொடுத்த தாய்மார்கள் இப்போது, ஒப்பாரி பாட வைத்துவிட்டார்களே நமது ஆட்சியாளர்கள்.

இனி, எதிர்கட்சிகளின் கூப்பாடுகள் விண்ணதிரும்..! முதல்வர் அய்யா ஆதித்யாநாத்தும் அவரது மதவாத கும்பல்களும் மற்றொரு பக்கம் மக்களை திசைத்திருப்ப எத்தனிப்பார்கள். மீண்டும் தீவிரவாதம் என்பார்கள். குண்டுகளை வெடிக்க வைப்பார்கள். இந்தியர் மனங்களை ஒட்ட வைக்க முயலும் அனைத்து முயற்சிகளையும் சீர்க்குலைப்பாரகள். நீங்களாகவே ஒரு மருத்துவரின் அரிய கடமையாய் கருதி, முன்னெடுத்து குழந்தைகளை காத்திருக்கும் முயற்சிகளைக்கூட திசைத்திருப்பி உங்கள் மீதே குற்றம் சுமத்தி தூக்கு மேடையிலேற்றினாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை டாக்டர்..!

இந்த அனைத்து களேபரத்தின் மத்தியிலும், நல்லதொரு மனிதனை, மருத்துவ சேகவரை கண்ட மகிழ்ச்சி என் மனதில் பொங்கி பிரவாகிக்கிறது.

எப்போதும் கான்கள் உலகுக்கானவர்கள் அல்ல. மனித சேவையில் இறைவனைக் காண்பவர்கள் என்பது பாலூட்டும்போதே அன்னை ஊட்டியது என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பெருமைப்பட முடிகிறது டாக்டர்.

நீங்கள் நீடூடி வாழ்க என்று மனம் வாழ்த்துகிறது டாக்டர் கபீல் கான்.


பெருமையோடு,

இக்வான் அமீர்
மூத்த இதழியலாளர்.

(மடலுக்கான ஆதார இணைப்பு: http://www.dnaindia.com/india/report-gorakhpur-tragedy-meet-dr-kafeel-khan-the-hero-who-saved-the-lives-of-countless-children-2528035)

 



Share:

Thursday, August 10, 2017

ஆகச் சிறந்த வெகுமானம்



வாழ்வியல் சோதனைகள் என்னும் முதல் தூண் நிலைக்கொள்ள இறைத்தொடர்புகள் என்னும் இரண்டாவது தூண் மிகவும் இன்றியமையாதது. அதாவது இறைவனுக்கும், இறையடியானுக்கும் இடையேயுள்ள உறவை, பிணைப்பை வலுப்படுத்துவதுதான் இரண்டாவது தூண் எனப்படுகிறது.~இக்வான் அமீர்.
 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பொறுமை என்னும் அருங்குணம் ஓர் இறைநம்பிக்கையாளன் வாழ்வில் அடித்தளம் எனலாம். இதுவே ஒவ்வொரு நம்பிக்கையாளனின் இம்மை, மறுமை எனப்படும் ஈருலக வாழ்விலும் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. அதனால், இறைநம்பிக்கையாளர்கள் பொறுமையை தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல உதவும் ஒளிவிளக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்வின் கணம்தோறும் எதிர்படும் பிரச்னைகளில் சில நேரம் வெல்லலாம். பல நேரம் தோல்வியுறலாம். அந்த தோல்விகளை வெற்றிகளாக்க பொறுமை என்னும் அருங்குணத்தால்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், எல்லாவிதமான கஷ்டங்களையும், இழப்புகளையும் சகித்துக் கொள்ள இறைநம்பிக்கையாளர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருகாலும் பொறுமையை இழந்து அவரவர் மரணக்குழியை அவரவர் கரங்களாலேயே பறித்துக் கொள்ளக் கூடாது. பொறுப்புகளை எதிர்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதில் தயக்கம், வாழ்வியல் யதார்த்தத்தை உள்வாங்குவதில் ஏற்படும் குழப்பம், தோல்வியைக் கண்டு மனதில் ஏற்படும் அச்சம் இவை எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்கச் செய்து ஓர் இறைநம்பிக்கையாளனை வன்முறைப் பக்கம் திசைத் திருப்பக் கூடாது.

பொறுமை எனப்படும் பெரும் பண்பு, சோதனைகள், இறைநம்பிக்கையின் ஆழமான வெளிப்பாடு என்னும் இரண்டு தூண்கள் மீது நிலைகொண்டுள்ளதாக இஸ்லாம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

கருணையுள்ள இறைவன் இந்த உலகியல் அமைப்பை வெறும் ஆனந்தம், நிம்மதியும் கொண்டதாக படைக்கவில்லை. சோதனைகள் நிரம்பிய களமாகவே படைத்தான். ஒன்றிலிருந்து மற்றொன்று என்று ஒன்றுக்கு மற்றொன்று மாற்றமான புதுபுது சோதனைகள் மனிதனைப் பின் தொடர்கின்றன. இறைவனின் பேரருளால் சுலைமான் (சாலமன்) நபி பிரமாண்டமான ஒரு சாம்ராஜ்ஜியத்தைப் பெற்றபோது, "இறைவன் ஆட்சி, அதிகாரம் மூலமாக தன்னை சோதிக்க முற்பட்டுவிட்டதாக" தெளிவாக உணர்ந்தார் அவர்.

பரந்து, விரிந்த சாம்ராஜ்ய சிம்மாசனத்தில் அமர்ந்தபோது, சுலைமான் நபி தெளிவாக சொன்னதை திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது இப்படி: "இது என் இறைவன் நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா? இல்லையா? என்று என்னைச் சோதிப்பதற்காக என் மீது பொழியப்பட்ட அருட்கொடையாகும். எவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றானோ, அவன் தனக்கே நன்மை செய்து கொள்கின்றான். எவன் நன்றி மறக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கின்றான்"

வாழ்வியல் சோதனைகள் என்னும் முதல் தூண் நிலைக்கொள்ள இறைத்தொடர்புகள் என்னும் இரண்டாவது தூண் மிகவும் இன்றியமையாதது. அதாவது இறைவனுக்கும், இறையடியானுக்கும் இடையேயுள்ள உறவை, பிணைப்பை வலுப்படுத்துவதுதான் இரண்டாவது தூண் எனப்படுகிறது.
 
ஒரு மனிதன் இறைவன் மேல் கொண்டுள்ள நம்பிக்கை ஆழமானதா? மேம்போக்கானதா என்பதை சோதனைகள் மூலம்தான் தெரிகிறது. இதைக் குறித்து திருக்குர்ஆன் அழகிய சொல்லோவியமாய் வரைகிறது: "நாங்கள் நம்பிக்கைக் கொண்டோம் என்று கூறுவதால் மட்டும் இவர்கள் விட்டுவிடப்படுவார்கள். மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்களா என்ன? உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்தே இருக்கிறோம். உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்று இறைவன் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது."

இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனைக்களமாக உள்ளபோது, நல்லவர், தீயவர் என்று மனிதரின் இருவேறு தகுதிகள் பகிரங்கமாக வெளிப்படவும், நன்மைக்கு நன்மையும், தீமைக்கான தீமையும் பகிரங்கமாக பெறவுமே இந்த முடிவு.

உண்மையில், பொறுமை ஒரு வெகுமதி என்கிறார் நபிகளார் இப்படி: "பொறுமையை முறைப்படுத்திக் கொள்பவனுக்கு இறைவன் பொறுமையை வழங்குகின்றான். இந்த பொறுமை வழங்கப் பெற்றவரைவிட ஆகச் சிறந்த வெகுமானம் பெற்றவர் வேறு யாருமில்லை!"

'''''''''''''''''''''''''''''''''''''''
தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் இன்று (10.08.2017) பிரசுரமான எனது கட்டுரை



Share:

Wednesday, August 9, 2017

அதிகரித்துவரும் சூழல்மாசு:


"இனியும் நம்மாலே தாக்குப் பிடிக்க முடியாதுடா சாமி!"
Share:

அரசியல் நாயகர்கள் கைவிடும்போது.. வேறு என்னதான் செய்வது?


காற்று அதிகளவு மாசு அடைவது மிகை காற்று மாசு எனப்படுகிறது. மிகை காற்று மாசு ஏற்பட்டால், மாசு துகள்கள் நுரையீரலில் நிரம்பிவிடுகிறன. இதனால், நாம் உயிர் வாழ இன்றியமையாத பிராணவாயுவான ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் திறன் நுரையீரலுக்கு குறைந்துவிடுகிறது. அத்துடன் உடலுக்கு சீராக ஆக்சிஜன் செல்வது பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். ஒவ்வாமையால் சளி பிடிக்கும். நாளடைவில் மாசு நிறைந்த காற்றை வடிகட்டும் திறனை நுரையீரல் இழந்துவிடும். இதே நிலை தொடரும்போது, நுரையீரல் சுருங்கி, நாட்பட்ட மூச்சுக்குழல் அடைப்பு நோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. ~ இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வடசென்னை மணலியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால், அந்தப் பகுதியில் வாழும் மக்கள் சுவாச நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

சென்னையில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி வடசென்னை. அதில் மணலி, இரசாயன ஆலைகளின் கேந்திரமாக உள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் அதனால் ஏற்படும் கனரக வாகன போக்குவரத்தால், அப்பகுதியில் அண்மைக் காலமாக காற்று மாசடைவது அதிகரித்து வருகிறது. http://tamil.thehindu.com/tamilnadu/article19443454.ece இப்பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றில் மிதக்கும் 2.5 மைக்ரோ கிராம் அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு கலந்துள்ளன என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப்படுகிறது. ஒரு கன மீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம் வரை நுண்ணிய துகள்கள் இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவாகும்.

ஆனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மணலியில் தொடர்ந்து 7 நாட்கள் காற்றில் அதிக மாசு கலந்துள்ளது பதிவானது. கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் அதிகபட்ச சராசரி அளவாக, காற்றில் உள்ள துகள்களின் அளவு, முறையே 362, 361 மைக்ரோ கிராமும், அதே நாட்களில் அதிகபட்சமாக முறையே 417, 500 மைக்ரோ கிராமும் பதிவாகியுள்ளது.

“இப்பகுதியில் தொழிற்சாலைகள் இயங்கும்போது, சாப்பிடும் உணவில் கரித்துகள்கள் விழுந்து கலக்கின்றன. இதனால், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் இன்னும் தீராத சளித்தொல்லைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காற்று மாசுவை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”- அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இப்படி புலம்புகின்றனர்.

“பல ஆண்டுகளாக மணலி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுவை தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நட வடிக்கை எடுப்பதே இல்லை. தற்போதுள்ள நிலை, விஷவாயு நிரப்பிய அறையில் பொதுமக்கள் வசிப்பதற்கு சமமாக உள்ளது. எனவே காற்று மாசுக்கான காரணத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆராய்ந்து, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆயத்த பதில் அளிப்பதற்கு பதிலாக உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனோ, “மணலியில் காற்று மாசுபடுவதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்கிறார்.

காற்று அதிகளவு மாசு அடைவது மிகை காற்று மாசு எனப்படுகிறது. மிகை காற்று மாசு ஏற்பட்டால், மாசு துகள்கள் நுரையீரலில் நிரம்பிவிடுகிறன. இதனால், நாம் உயிர் வாழ இன்றியமையாத பிராணவாயுவான ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் திறன் நுரையீரலுக்கு குறைந்துவிடுகிறது. அத்துடன் உடலுக்கு சீராக ஆக்சிஜன் செல்வது பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். ஒவ்வாமையால் சளி பிடிக்கும். நாளடைவில் மாசு நிறைந்த காற்றை வடிகட்டும் திறனை நுரையீரல் இழந்துவிடும். இதே நிலை தொடரும்போது, நுரையீரல் சுருங்கி, நாட்பட்ட மூச்சுக்குழல் அடைப்பு நோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன.

இதைத் தவிர்க்க,

• மக்கள் வசிப்பிடங்களை மாற்றியாக வேண்டும் அல்லது

• வீட்டின் வாயில், ஜன்னல் கதவுகளை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.

• வசதி உள்ளோர் வேண்டுமானால், காற்று சுத்திகரிப்பு கருவிகளை பயன்படுத்தலாம்.

எப்போதும் பாவப்பட்ட ஜனங்களான வடசென்னைவாசிகள் வழக்கமான மௌனத்தில் கரைந்து நிற்காமல் தங்களால் இயன்ற இந்த செயலையாவது செய்ய வேண்டும். அது வடசென்னையை மரங்களால் நிரம்பிய வனங்களாக்கிவிடுவது.

வேறு என்னதான் செய்வது? அரசும், நமது அரசியல் நாயகர்களும் நம்மை காக்காதபோது இயற்கையின் காவலர்களான மரங்களின் துணை நாடுவதை தவிர நமக்கு வேறு வழியே இல்லை.

மரம் மனிதர்களின் உயிர்த்தோழன் என்பது இதற்குதான்..!


Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive