சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்செயல்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவரான நீதிபதி ராஜேஷ்வரன் இன்று விசாரணையைத் துவக்கினார்.
கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸ் தடியடியால் வன்முறை வெடித்தது.
காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வன்முறையில், மெரினா கடற்கரை பகுதிக்கு அருகே இருந்த மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்செயல்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இன்று காலை மெரினா பகுதியில் விசாரணையைத் துவக்கிய நீதிபதி, பின்னர் நடுக்குப்பம் பகுதிக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசாரணை முடிய நான்கு மாதங்களாகலாம் என்று அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும், கிரீன்வேஸ் சாலையில் அதிகாரப்பூர்வ அலுவலகம் ஒன்று திறக்கப்படும் என்று தெரிவித்த ராஜேஷ்வரன், அங்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், அனைத்து ஆதாரங்களும் தீவிரமாக ஆராயப்படும் என்றும் கூறினார்.
சென்னை மட்டுமின்றி மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு தொடர்பில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் விசாரிக்கப்படும் என்றும், யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்க கமிஷனுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் நீதிபதி ராஜேஷ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment