NewsBlog

Tuesday, February 21, 2017

மாசடையும் கடல்

 
இந்தியாவில் குடிநீரில் புளோரைடு நச்சு அதிகளவு கலக்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலில் வடசென்னையும் ஒன்று. நீர் நச்சாகிப் போனதால்.. அதை பயன்படுத்திய மூன்று தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வளைந்த கால்களாகி .. பற்கள் கரைப் படிந்து அழகிழந்தார்கள்.. அத்தனை எலும்பு நோய் தொற்றுக்கும் ஆளானார்கள். முடங்கிப் போனது இளைய பாரதம்! - இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''
ஆரம்ப கல்வி நாட்களில் என் தாயாரோடும், அண்டை, அயலாரோடும்  காற்றுடன் சேர்ந்து அழகிய சங்கீதம் இசைக்கும் அந்த அடர்ந்த சவுக்குத் தோப்புக்கு சுள்ளி பொறுக்கச் செல்வோம். உயர்நிலைக் கல்வி நாட்களில் ஓட்டப் பயிற்சிக்காக அலைக் கடல் நீரின் ஈரத்தில் தட்.. தட்.. என்று கால்களைப் பதித்து மைல் கணக்கில் ஓடுவது ஒரு பேரின்பம்!

பல நூறு மீட்டர் அகலத்தில் வெள்ளை வெளேரென்று பூவாய் படர்ந்திருக்கும் கடலோரத்து வெண் மணல். அதில் முளைத்திருக்கும் புற், பூண்டு தாவரங்கள். அவற்றில் கால்பந்து அளவுக்கு பூக்கும் முட்பூக்கள்! அவை காற்றில் உருண்டு உருண்டு ஓட.. வேட்டை விலங்குகளாய் விரட்டிச் செல்லும் நண்பர்கள் குழு.

கிழக்கில் வங்கக் கடல். மேற்கு மற்றும் வடக்கில் சவுக்கு, உப்பு இவற்றின் நீர்வழி தடமாக விளங்கிய பக்கிங்காம் கால்வாய். இவற்றின் இடையே பெரும் மடியை விரித்து பரந்து விரிந்து எண்ணற்ற உயிரினங்களின் இருப்பிடமாக விளங்கும் கடற்கழி. கரையெங்கும் பச்சைப் பசேல் என படர்ந்திருந்த அலையாத்திக் காடுகள். தெற்கில் நிலப்பரப்பு என்று எல்லைகள் கொண்ட பகுதி.

முந்திரி, சவுக்கு, மணமணக்கும் பூக்களுடன் காணப்படும் தாழம்புதர்கள், கண்ணுக்கெட்டிய தொலைவுரை வெள்ளை வெளேர் உப்பளங்கள் என்று வரைப்படத்தில் சுற்றலாத்தலமாக சிறப்புப் பெற்றிருந்த இடமிது.

இப்படி, ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் இயற்கையின் வசந்தமாய் காணப்பட்ட சென்னை மாநகரின் வடக்குப் பகுதியும், சென்னை மாநகராட்சியின் முதலாவது மற்றும் இரண்டாவது வட்டத்தைச் சேர்ந்த வடசென்னையின் எண்ணூர் இன்று அதன் அசல் வடிவில் இல்லை!

சவுக்குத் தோப்பை நிர்மூலமாக்கிவிட்டு கொட்டப்பட்ட உரத்தொழிற்சாலைகளின் மலைக்குன்றுகள் போன்ற ஜிப்ஸம். அத்தொழிலுக்கு மூலப் பொருளான திரவ நிலை அம்மோனிய வாயு நிரப்பப்பட்ட மெகா சைஸ் பூமி உருண்டை வடிவ கொள்கலன். அம்மோனியம் வாயுவை குழாய் வழியே நிரப்ப கடல் மார்க்கத்தில் காத்திருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட ரோஸ் வண்ண கப்பல்கள்!

இந்த பேராபத்தை உணராமல் ஜிப்ஸத்தின் மீது, “வெள்ளை பிட்ச்“ என்ற சிறப்பு பெயரிட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் சிறார்கள்.

சென்னை துறைமுகத்தை அடுத்து, காமராஜர் செயற்கை துறைமுகத்தை வடிவமைத்த மலிவான தொழில்நுட்பத்தால்… கடற்கரை காணாமல் போய் பாறைகளே கரையாகிப் போன துரதிஷ்டம்.  பாறையோரத்து கிழிந்த கடலில் மகிழ்ந்து குளிக்கும் சிறுவர்கள்!

இந்தியாவில் குடிநீரில் புளோரைடு நச்சு அதிகளவு கலக்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலில் வடசென்னையும் ஒன்று. நீர் நச்சாகிப் போனதால்.. அதை பயன்படுத்திய மூன்று தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வளைந்த கால்களாகி .. பற்கள் கரைப் படிந்து அழகிழந்தார்கள்.. அத்தனை எலும்பு நோய் தொற்றுக்கும் ஆளானார்கள். முடங்கிப் போனது இளைய பாரதம்!

மாணவப் பருவத்தில் தந்தையாருடன் பொழுதுபோக்காக மீன் பிடிக்கச் செல்லும்போது ஏற்பட்டது அந்த நண்டுசிண்டுகளோடான பரிச்சயம். வடசென்னை எண்ணூர் கடற்கழியைத் தாண்டி அத்திப்பட்டு குருவிமேடு பகுதி கால்வாய் ஓரமாக கலர் கலராய் மஞ்சள், சிவப்பு, நீலம் என்று கண் கொள்ளா காட்சியாக வலைக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் நூற்றுக் கணக்கான நண்டுகள்.

ராணுவ வீரனைப் போல தடித்த ஒரு கொடுக்குடன் அவை கையாட்டி கையாட்டி அவற்றுக்குள் தகவல் பறிமாறிக் கொள்ளும் அழகே தனி!

இது முடிந்து பொதிகை தொலைக்காட்சிக்காக 'கல்ஃப் ஆசியா' தரப்பில் குறும்படங்களைத் தயாரிக்க (உப்பளம் சம்பந்தமாக) அந்தப் பக்கம் போனபோது அதே நண்டுசிண்டுகள் எண்ணிக்கையில் குறைந்திருந்திருப்பதை காண முடிந்தது.

ஆனால், தற்போது அதே பால்ய கால சிநேகிதர்களைத் தேடிப் போனபோது.. அவை காணாமல் சுற்றி.. சுற்றி தேட வேண்டியிருந்தது.  கண் கவரும் வண்ணங்கள் இல்லை. கருத்துப் போய் கால நிலைக்கேற்ப அந்த நண்டுகளும் மாறுதல் அடைந்திருந்தது அதிர்ச்சியளித்தது.

பெருகிவரும் தொழிலகங்களும், அவற்றின் மாசுகளும் நம்மைச் சுற்றி வசிக்கும்.. நமக்காக உயிர் வாழும் உயிரினங்களை கொன்றுவருவது சகிக்க முடியாதது. சக ஜீவன்களை அழித்துவிட்டு என்னதான் சாதிக்கப் போகிறோம் நாம்? வருத்தமே மிஞ்சுகிறது. வேதனை நெஞ்சைப் பிளக்கிறது.

எண்ணூர் அனல்மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என்று ஒன்றுக்கு மூன்று மின்நிலையங்களின் எரிபொருளான நிலக்கரியின் சாம்பலை சுவாசித்துக் கொண்டிருக்கும் மக்கள்.

இந்த மின்நிலையங்களுக்காக நூற்றுக்கணக்கில் கையகப்படுத்தப்பட்ட காட்டுப்பள்ளி வனங்களும், அவற்றில் வாழும் எண்ணற்ற உயிரிகளும் இன்னும் சிலநாளில் காணாமல் போகும் அவலம்.  வடசென்னைக்கு ஒட்டியுள்ள இந்தப் பகுதியில்தான் அடர்த்தியான பனை மரங்களும், முந்திரி, சவுக்குத் தோப்புகளும் குறும்புதர்களும் நிரம்பியுள்ளன.

பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் சாம்பலால் ஆழம் குறைந்து போன கால்வாய். இதனால், பழவேற்காடுவரையிலான மீனவர்களின் கேள்விகுறியாகும் ஜீவாதாரம்.

ஒருமுறை,  பூஉலக நண்பர் சுந்தரராஜனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ”நமது உள்ளுர் தேவைக்கு ஏற்ப மின்நிலையங்களை அமைத்துக் கொள்வது சூழல்மாசுவுக்கு பாதுகாப்பானது.!”- என்றார்.

உண்மைதான்… உற்பத்தி செய்யப்படும் விளைப்பொருட்கள் விவசாயிகளுக்கு சொந்தமில்லை என்பது போல, இங்குள்ள மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உள்ளுா் பயன்பாடுக்கு இல்லை என்பது அவலமானது.

இது போதாதென்று மணலியைச் சுற்றியுள்ள இரசாயன தொழிற்சாலைகள் உமிழும் கருமேக தீ சுவாலைகள் ஒட்டுமொத்த வான்பரப்பையும் நஞ்சாக்கி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் அண்மையில் காமராஜர் துறைமுகத்துக்கு அருகில் நடந்த கப்பல் விபத்தும், கச்சா எண்ணெய் கசிவும்! ஏற்கனவே மயானமான பகுதியில் மற்றுமோர் தகனமேடை இது எனலாம்!

இந்த கப்பல் விபத்து சம்பந்தமாக ஆரம்பத்தில் வெளியான தகவல்கள் பொறுப்பற்ற நமது நிர்வாக அமைப்பை அடையாளப்படுத்துகிறது.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சமையல் எரிவாயுவை இறக்கிய பி.டபுள்யூ மாபில் என்ற டேங்கர் கப்பல், துறைமுகக் கால்வாய் வழியாக வெளியேறியது. அப்போது டீசல், மோட்டார் ஸ்பிரிட் ஏற்றிக்கொண்டு டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் துறைமுகத்துக்கு உள்ளே வந்தது. இந்த இரு கப்பல்களும் எதிர்பாராத விதமாக, "டி' வடிவில் மோதிக் கொண்டன.

விபத்து நடந்த நாளன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் லேசான விபத்துதான் என்றும் இதனால் எவ்வித எண்ணெய்க் கசிவும் ஏற்படவில்லை என்றும் சொன்னார்கள்.

ஆனால் அதற்கு அடுத்தநாள் காலை கருப்பு நிற போர்வை போன்ற எண்ணெய்ப் படலம் எண்ணூர் எர்ணாவூர் பாரதியார் நகர் அருகே கடற்கரையில் ஒதுங்கியது. இந்தப் பகுதியில் ஏராளமான ஆமைகள், மீன்கள் செத்து மிதந்தன. இதனையடுத்து உஷரான நிர்வாகத்துறை அன்று இரவே எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

எண்ணெய் படலத்தை உறிஞ்சி எடுக்கும் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பணி தோல்வியில் முடிந்தது.

இதனால், இரண்டாம் நாளில் ஊழியர்கள் மூலம் நேரடியாக பக்கெட்டுகளைக் கொண்டு எண்ணெய்க் கழிவை கையால் அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.

விசித்திரமான பக்கெட் தொழில்நுட்பம் இது.  200-300 மீட்டர் கடற்கரையில் ஒதுங்கியுள்ள தார் போன்ற வடிவில் காணப்படும் கச்சா எண்ணெயை பக்கெட்டால் வாரி அப்புறப்படுத்தும் விசித்திரமான தொழில்நுட்பம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் கடலோரக் காவல்படையினருடன் இணைந்து இந்தப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.

அப்புறப்படுத்தும் பணி தொடங்கியபோது, 4 டன் அளவில் மட்டுமே எண்ணெய் கழிவு கடலில் கலந்துள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால், ஒரு வாரம் கடந்த நிலையில் 200 டன்னுக்கும் அதிக அளவு எண்ணெய் கழிவு அகற்றப்பட்டுவிட்டபோதும், கடலில் கலந்திருக்கும் எண்ணெய் படலம் குறையாமலே இருக்கிறது.

தொடக்கத்தில் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 25 பேர் மட்டுமே அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நிலையில், இப்போது மாநகராட்சி, கழிவு நீர் அகற்றல் வாரியம், தீயணைப்பு படையினர், நெடுஞ்சாலைத் துறை, சென்னை, எண்ணூர் துறைமுகங்களின் ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இருந்தபோதும், எடுக்க எடுக்க எண்ணெய் படலம் குறைவதாக இல்லை.

இதற்கு மதிப்பீடு, திட்டமிடலில் ஏற்பட்ட தோல்வியே காரணம் என்கின்றனர் நிபுணர்கள். வெளியேறிய எண்ணெய்க் கசிவின் அளவை, கப்பல் நிறுவனம் தெரிவிக்காத நிலையில் கழிவுகளை மதிப்பீடு செய்தது யார்? அகற்றும் பணிக்கான வரைவுத் திட்டம் யாரால் வகுக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது கடலோரக் காவல் படையினரிடமோ பதில் இல்லை.

மேலும் இப்பிரச்னையால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தாரு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தாரு, காங்கிஸ் கட்சி மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் வந்தாரு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் எல்லாம் வந்து வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

எண்ணெய் படலத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அவசர அவசரமாகக் கழிவுகள் கடலிலிருந்து அகற்றப்பட்டு வரும் நிலையில், அவற்றிலிருந்து வெளியேறும் சிதறல்களால் கடற்கரை மணல் பகுதி, தடுப்புச் சுவர்கள், அருகாமையில் அமைந்துள்ள சாலைகளிலும் எண்ணெய்க்கழிவுகள் பரவியுள்ளன.

தண்ணீருக்குள் இருந்தபோது ஒரளவு கெட்டியாக இருந்த இக்கழிவுகள், வெயில் காரணமாக உருகி சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலைமைத் தொடர்ந்தால் ஏற்கனவே கடும் சூழல்மாசுவால் பாதிக்கப்பட்டிருக்கும் வடசென்னைவாசிகளை பொக்லைன் எந்திரத்தால் அப்புறப்படுத்தி புதைக்குழிக்குள் தள்ளிவிட வேண்டிய துரதிஷ்டநிலைதான் ஏற்படும்.

(சமரசம் மாதமிருமுறை பிப்.16-28 இதழில், வெளியான முகப்புக் கட்டுரை)

 


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive