தீமைகளில் தம்மைக் கரைத்துக் கொள்வதும், தீமைகளை வளரவிட்டு சுயநலமாய் தம்மை
மட்டும் காத்துக் கொள்வதும் ஒன்றுதான்..! இந்த வகையினரும் தீயவர்கள்தான்!
அதாவது தீயோராய் வாழ்வதும், தீமைகள் சமூகம் முழுக்க படர துணை நிற்பதற்கு
ஏதுவாய் தன்னை மட்டும் நல்லோராய் காத்துக் கொள்ளதும் ஒன்றுதான்! > இக்வான் அமீர் <
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நாட்டின் உயர் பொறுப்பில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்அமர்ந்திருக்கிறார். இங்கு தமிழ்நாட்டிலோ, கொள்ளைக்கும்பலின் பினாமிகள் கூச்சநாச்சமில்லாமல், மூர்க்கத்தனமாய் காட்சிகளை நகர்த்தி கொண்டிருக்கின்றன. ஆக நாடு முழுக்க ஏதோ ஒரு வகையில் கறைப்படிந்த கரங்களாலேயே மக்கள் ஆளப்பட்டுவரும் அவலநிலை தொடர்கிறது.
நாட்டின் ஒவ்வொரு தேர்தல்களிலும், கொலைக்காரர்களும், கொள்ளையரும் முண்டியடித்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற முனைப்புக் காட்டுகிறார்கள். நடப்பு தேர்தல்கள் உட்பட.
இந்நிலையில் நமது பொறுப்புகள்தான் என்ன?
தற்சமய சூழலில் மூன்றுவிதமான நிலைபாடுகள்தான் நாம் எடுக்க முடியும்.
1. தீமைகளில் தம்மையும் கரைத்துக் கொள்வது. தீயோரோடு கரம் சேர்த்து அவர்களுடன் இணைந்து கொள்வது.
2. யார் எக்கேடு கெட்டால் என்ன? நான் மட்டும் நல்லவனாய் வாழ்ந்து கொள்கிறேன் என்று தீமைகளைக் கண்டும், காணாமலும் இருந்து கொள்வது.
3. தன்னை தீமைகள் அண்டாதவாறு பார்த்துக் கொள்வதோடு, அடுத்தவரையும் அந்த தீமைகள் பற்றிப் பீடிக்காமலிருக்க தீமைகளை எதிர்த்து போராடுவது அதாவது தானும் நல்லோராய் வாழ முனைப்பு காட்டுவதோடு, சமூகத்தின் அடுத்த மனிதரும் அந்த வழியில் பயணிக்க பாடுபடுவது.
மேலோட்டமாய் இந்த நிலைப்பாடுகள் மூன்றாக தெரிந்தாலும், உண்மையில் அவை இரண்டு வகைப்பட்டதுதான்.
தீமைகளில் தம்மைக் கரைத்துக் கொள்வதும், தீமைகளை வளரவிட்டு சுயநலமாய் தம்மை மட்டும் காத்துக் கொள்வதும் ஒன்றுதான்..! இந்த வகையினரும் தீயவர்கள்தான்! அதாவது தீயோராய் வாழ்வதும், தீமைகள் சமூகம் முழுக்க படர துணை நிற்பதற்கு ஏதுவாய் தன்னை மட்டும் நல்லோராய் காத்துக் கொள்ளதும் ஒன்றுதான்!
தீமைகளையும், தீயோரையும் தொடர்ந்து எதிர்த்துப் போராடுவதும், அந்த தீமைகள் சமூகத்தை தீண்டாதவாறு விரட்டி அடிப்பதும், அதற்கான அர்ப்பணங்களை மேற்கொள்வதும் நல்லோர் வழி..
இதில் நீங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்று உடனே முடிவெடுங்கள். வளம் மிக்க நாட்டை அதன் உயர் ஒழுக்க விழுமியங்கள் கொண்டவ சமூக மக்களோடு உலக அரங்கில் அடையாளப்படுத்துங்கள்..!
எந்த சமூகமும் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாதவரை இங்கே மாற்றமெனும் மாயாஜாலங்கள் திடுப்பென்று விண்ணிலிருந்து நிகழ்வதேயில்லை என்பதை உறுதியாக நம்புங்கள்!
0 comments:
Post a Comment