NewsBlog

Sunday, February 5, 2017

நிழல் நிஜமாகுமா?


1956-ல், திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியின் மகளாக சசிகலா பிறந்தார். ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து, தமிழகத்தின் ஆளும் கட்சியின் தலைவராக உயர்ந்த சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் பல திருப்பங்களையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டது.

சசிகலாவுடன் பிறந்தவர்கள் - சுந்தரவதனன், வினோதகன், ஜெயராமன், வனிதாமணி, திவாகரன் ஐந்து பேர். திருத்துறைப்பூண்டியில் பிறந்து வளர்ந்தாலும் சில ஆண்டுகள் கழித்து, குடும்பம் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தனர்.

மன்னார்குடிக்கு அருகில் இருந்த விளார் என்ற ஊரைச் சேர்ந்த நடராஜனை திருமணம் செய்தார் சசிகலா. இந்தத் திருமணத்தை நடத்திவைத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

1984-ஆம் ஆண்டில் வினோத் வீடியோ விஷன் என்ற வீடியோ கடையை வைத்திருந்த சசிகலா, அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவின் பரிந்துரையின் பேரில் ஜெயலலிதாவுக்கு முதன் முதலாக அறிமுகமானார்.

அப்போது அவரது கணவர் மா. நடராஜன் கடலூர் மாவட்டத்தில் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார்.

அந்த நேரத்தில், அ.தி.மு.கவின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைக்க, ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்தார் சசிகலா.

அதற்குப் பிறகு, மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக வளர ஆரம்பித்தார். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினரானபோது, அவரோடு தில்லி செல்லும் அளவுக்கு நெருக்கமானார் சசிகலா.

தமிழக முதலமைச்சரும் ஜெயலலிதாவின் அரசியல் ஆசானுமாக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் மறைந்த போது, கட்சி இரண்டாக உடைந்த சமயத்தில், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவிற்குப் பின்னால் அணி திரண்டனர். இதுவே, ஜெயலலிதா வெகுவாக சசிகலாவைச் சார்ந்திருப்பவராக மாற்றியது.

1991-இல் ஜெயலலிதா முதன் முறையாக தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சமயத்தில், அவருக்கு எல்லாமுமாக மாறியிருந்தார் சசிகலா. அப்போதிலிருந்து ஜெயலலிதா, அம்மாவாகவும் சசிகலா சின்னம்மாவாகவும் அழைக்கப்பட ஆரம்பித்தார்கள். ஜெயலலிதா எங்கு சென்றாலும் நிழலாகப் பின்தொடர்ந்தார் சசிகலா.

இதனால், சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் சகோதரர்கள், அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கமும் அ.தி.மு.கவின் மீது பற்றிப் படர ஆரம்பித்தது.

1995-இல் சசிகலாவின் உறவினரான வி.என். சுதாகரனை தனது தத்துப் பிள்ளையாக தத்தெடுக்கும் அளவுக்கு சசிகலாவை நம்பினார் ஜெயலலிதா. அந்த சுதாகரனுக்கு ஜெயலலிதா செய்துவைத்த ஆடம்பரத் திருமணம், உலகில் மிகவும் செலவழித்து நடத்தப்பட்ட திருமணமாக சாதனை படைத்தது.

இதற்குப் பிறகு, ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்தே சிறைக்குப் போக நேர்ந்தது. பிறகு சிறிது காலத்திற்கு அவரை ஒதுக்கிவைக்கவும் செய்தார் ஜெயலலிதா. ஆனால், இது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார் சசிகலா.

அதற்குப் பிறகு, 2011 வரை போயஸ் தோட்ட இல்லத்திலும் அ.தி.மு.க என்ற கட்சியிலும் சசிகலாவின் அனுமதியின்றி எதுவும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டது.

2011-இல், தனக்கு எதிராக சசிகலா செயல்படுவதாகக் கருதிய ஜெயலலிதா, அவரை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார். ஆனால், சில மாதங்களிலேயே சசிகலாவின் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் அவரை போயஸ் தோட்டத்திற்குள் அனுமதித்தார். அதற்குப் பிறகு, ஜெயலலிதா காலமாகவும் வரை, அவரை நிழலாகத் தொடர்ந்தார் சசிகலா.

2014-ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா-சசிகலா இருவருமே ஒன்றாக சிறைசெல்ல நேர்ந்தது.

ஜெயலலிதாவின் நிழலாகவே இருந்தாலும், கட்சியின் முன்னணியில் ஒருபோதும் சசிகலா தென்பட்டதில்லை. ஆனால், கட்சியின் முக்கியமான தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பவராக சசிகலாவே இருந்தார்.

2002-இல் ஜெயலலிதா முதல்வராக பதவி வகிக்க முடியாமல் போனபோது, ஓ.பன்னீர்செல்வம் அந்த இடத்திற்கு முன்னிறுத்தப்பட்டது சசிகலாவின் ஆலோசனையின்பேரில்தான். அதற்குப் பிந்தைய தேர்தல்களில் எல்லாம் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்போது அதில் சசிகலாவின் பங்கும் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஜெயலலிதாவால் உடன்பிறவா சகோதரி என்று அழைக்கப்பட்ட சசிகலா, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினார்.

டிசம்பர் 29-ஆம் தேதியன்று சென்னையில் நடந்த பொதுக் குழுக்கூட்டத்தில் அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு முன்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும் முதலமைச்சருமான ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதியன்று உயிரிழந்ததையடுத்து அந்தப் பதவி காலியானது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுவித்துவிட்டாலும், இது தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் முடிவடைந்து, இதன் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு, சசிகலாவின் எதிர்கால அரசியல்வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமையக்கூடும்.

இருந்தாலும் இப்போதைக்கு சசிகலா உச்சத்தை அடைந்திருக்கிறார். கட்சியைக் கைப்பற்றியிருக்கும் சசிகலா, முதல்வர் பதவி குறித்து என்ன முடிவுசெய்திருக்கிறார் என்பது விரைவில் தெரிய வரும்.

ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள், அவர் மறைந்த பிறகு அவரது உடலைச் சுற்றி நின்றது கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. சசிகலா தற்போது கட்சியின் உயரிய பதவியை அடைந்திருக்கும் நிலையில், அவரது சொந்தங்கள் அதற்கான பலனை அடைய நினைக்கலாம்.

கட்சியின் நிர்வாகிகள் இப்போது சசிகலாவை ஏற்றுக்கொண்டிருந்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் ஜெயலலிதா என்ற ஆளுமைக்குதான் வாக்களித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா என்ற யதார்த்த நிலையில், அ.தி.மு.கவுக்கு வாக்களித்த எளிய வாக்காளர்கள் சசிகலா தலைமையிலான அ.தி.மு.கவையும் ஆதரிப்பார்களா என்ற மற்றொரு கேள்விக்கும் விரைவில் காலம் பதில் சொல்லிவிடும்.

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive