NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Saturday, August 22, 2015

அழைப்பது நம் கடமை - 9 - அழைப்பாளர்களின் இலக்கு!


யூதர்களும், கிருத்துவர்களும் இறைவனின் திருச்  செய்தியை பின்பற்ற மறுத்தார்கள். அதை அடுத்தவர்க்கு எடுத்துரைக்கவும் மறந்தார்கள். இறைவனின் கோபத்துக்கு ஆளானார்கள். இவை படிப்பினை மிக்க முஸ்லிம் சமுதாயத்துக்கான வரலாறுகளாகும். இறைவனின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இறைவனின் எச்சரிக்கையிலேயே அறிவுரையும் இருக்கிறது.

"நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அவற்றை மக்கள் அனைவருக்காகவும் நம் வேதத்தில் எடுத்துரைத்த பின்னரும், எவர் அவற்றை மறைக்கின்றாரோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். மேலும், சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கிறார்கள். ஆனால், யார் (இந்தத் தவறிலிருந்து) திருந்தி தம் செயல்முறையை ஒழுங்குப்படுத்திக் கொண்டு (தாம் மறைத்திருந்தவற்றை) எடுத்துரைக்கின்றார்களோ, அவர்களை நான் மன்னிப்பேன். நான் பெரிதும் மன்னிப்பவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றேன்!" - ( திருக்குர்ஆன் - 2:159,160)

மன்னிப்பதற்கு இறைவன் வைத்துள்ள நிபந்தனைகள் இவை:

  • இறைவனின் திருச்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துரைக்காத கடமையை செய்யத் தவறியதற்காக பாவமன்னிப்புக் கோர வேண்டும். 
  • தங்களைச் சீர்த்திருத்திக் கொண்டு இறைவனின் திருப்பணியை தொடர வேண்டும்.

வெறும் கையளவு முஸ்லிம்கள் மக்காவில் இருந்த அந்தக் காலம்! அதுவும் விரல்விட்டு எண்ணிவிடக் கூடியவர்கள் அவர்கள். இவர்களைத் தவிர பெரும்பான்மையினராக இருந்தவர்கள் இறைமறுப்பு குறைஷியர்தான்!

இறைநம்பிக்கைக் கொண்ட சிறுபான்மை முஸ்லிம்கள் குறைஷிகளால் கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். எதிரிகள் இஸ்லாமிய இயக்கத்தினரை வேறோடு வேரடி மண்ணோடு கெல்லி எறிந்திட துடியாய் துடித்தார்கள். அதற்காக தங்களின் அனைத்து சக்தி சாமார்த்தியங்களையும் பயன்படுத்தினார்கள். ஆள் பலம், ஆயுத பலம் என்று அனைத்தையும் பிரயோகித்தார்கள்.

ஆனால், 14 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இஸ்லாமிய எதிரிகளின் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதை இன்று நாம் கண்ணாரப் பார்க்கின்றோம்.

அரபுலகையும் தாண்டி உலகின் மூலைமுடுக்கெல்லாம் இஸ்லாம் வாழும் நெறியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள இந்தியாவின் தழிழகம்வரை அந்த இஸ்லாமிய இயக்கம் பரவி ஆல்போல் தழைத்து வளர்ந்துள்ளது.

ஆபத்துகளிலும், பிரச்சினைகளிலுமே இஸ்லாம் என்ற விருட்சம் வேர் பிடித்து வானுயர வளர்ந்திருக்கிறது! 


வரலாற்றுக் கால பிர்அவ்ன் (பாரோ மன்னன்) மூஸா நபியையும் அவர்களைப் பின்பற்றிய முஸ்லிம்களையும் அழித்திட பயங்கரவாத்தை கட்டவிழ்த்துவிட்டான். இஸ்லாத்தை அழிக்க முடியாமல் கடைசியில் நீரில் மூழ்கி இறந்துபோனான்.

இறைத்தூதர்களின் தந்தையார் என்று அழைக்கப்படும் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் காலத்து நம்ரூத் (நிம்ரூத்) மன்னனும் இத்தகைய சாயல் கொண்டவன்தான்! இந்தக் கொடுங்கோலனும் ஆள்பலம், மிருகத்தனமான ஆட்சிபலம் இவற்றைக் கொண்டு முஸ்லிம்களை நசுக்கிட முயன்றான். இஸ்லாத்தை அழிக்க முடியாமல் அழிந்து போனான்.

இதைத் தொடர்ந்து மங்கோலிய-தார்த்தாரியர்கள் மனிதத்தன்மையை ஆழக் குழித்தோண்டிப் புதைத்து முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இவை வரலாற்றின் கருப்பேடுகள்!


ஆனால், இஸ்லாம் அந்த உக்கிரங்களையெல்லாம் தாண்டி வளர்ந்தது. இத்தனை இன்னல்களையம், இடுக்கண்களையும்  உள்வாங்கி முஸ்லிம்கள் நிலைகுலையாமல் நின்றார்கள். இந்தப் பொறுமை முஸ்லிம்களை அழிக்கவந்த கொடியவர்களைச் சிந்திக்க வைத்து பின்னாளில் அவர்களையும் இஸ்லாத்தின்பால் ஈர்த்தது. மிகச் சிறந்த மனித இன குணவான்களாகவும், மனித நேயம் மிக்கவர்களாகவும் மாற்றியது.

இப்படி எரிமலையின் தீக்குழம்பில் இஸ்லாம் பூத்து மலர்ந்துள்ளது. உலகெங்கும் மனித இனம் இருக்கும்வரை மணம் பரப்ப வல்லது!

இத்தகைய தொடரான கொள்கைப் போராட்டங்களிடையே இன்று முஸ்லிம் நாடுகளின் எண்ணிக்கை இஸ்லாமிய நாடுகளின் அமைப்புப் பட்டியலில் 57 ஆக உயர்ந்துள்ளது. உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனுக்கும் அதிகம். உலகளவில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம்! இஸ்லாம் இன்று வெகு வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம்.

உதாரணத்துக்காக ...

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் வெகுவேகமாக இஸ்லாம் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட  மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2001-2011 இடைப்பட்ட ஆண்டுகளில் 1.5 மில்லியனிலிருந்து 3 மில்லியனாக முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.  இங்கிலாந்தின் பல நகரங்களில் முஸ்லிம்களின் மக்கள்  தொகை 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. 'இலண்டன்', 'மான்செஸ்டர்' போன்ற பெருநகரங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 14 விழுக்காடு! இவர்களில் யாரும் அந்நிய நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் அல்ல. இங்கிலாந்தை தாயகமாகக் கொண்ட வெள்ளையர்கள்!


1994,1995-ஆம், ஆண்டுகளில் ஐ.நா-வால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, ஆண்டுதோறும் 6.40 விழுக்காடு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

1998-ஆம், ஆண்டுவரை உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 167 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரம்!

உலகின் இரண்டாவது மிகப் பெரிய சமயம் இஸ்லாம்.

அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிற நாடுகளுக்குச் சென்று குடியேறியதால் பரவிய இனமா முஸ்லிம்கள்? அப்படியானால்... உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அரபிகளா? இல்லை!

உண்மையில், வரலாற்றின்படி உலக முஸ்லிம்கள் எல்லாம் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் எல்லாம் இஸ்லாத்தின் உயரிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள். இஸ்லாத்தின் தூதை சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்தியவர்கள். தங்களின் உயரிய பண்புகளாலும், கொள்கையாலும் மற்றவர்களையும் ஈர்த்தவர்கள். செயல்முறையில் அழைப்பு விடுத்தவர்கள். அதேபோல, சொல்லாலும், இஸ்லாத்தின் பலவேறு கூறுகளை விளக்கி இறைவனின் திருத்தூதை சமர்பித்தவர்கள். இந்த மூதாதையர்களின் தொடர் பணிகளால்.. மாபெரும் அர்ப்பணிப்புகளால்.. அனைத்தையும் இழந்த வாழ்வியல் போராட்டங்களால்.. நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்தான் இஸ்லாம்! இம்மை - மறுமை ஈருலகின் வெற்றிக்கான அருள்நெறி!


அழைப்புப் பணியின் நோக்கமே இறைவனின் திருப்பொருத்ததிற்கு ஆளாவதுதான். அத்தோடு நல்ல முஸ்லிம் என்று நடைமுறைப்படுத்துவதும்கூட!

நபிகளார் நவில்கிறார்கள்:

:"செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்!" (புகாரி, முஸ்லிம்)

இறைவனின் திருப்பொருத்தத்தை சம்பாதிப்பதே அழைப்பாளர்களின் தலையாயப் பணியாகும். அழைப்புப்பணிக்குப் பின் பொதிந்துள்ள நோக்கமும் இதுதான்.

அழைப்பாளன் இந்த இலக்கை அடைவதில் கண்ணும்-கருத்துமாக இருக்க வேண்டும். இதன் மூலமே, அவன் சமூகத்திலும்... சூழல்களிலும் வெல்ல முடியும்!

-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html
Share:

சிறுவர் கதை:'உண்மையின் விலை!'

ஒரு நாள் இரவு. குமரேசன் வீட்டில் முகமூடி கொள்ளையர் நுழைந்தனர்.

"ம்.. மரியாதையாய் நகையும், பணமும் எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சீக்கிரம் சொல்லுங்கள்! இல்லையென்றால், உங்களை கொன்று விடுவோம்!" - என்று குமரேசனையும், அவரது மனைவியையும் கட்டிப் போட்டு மிரட்டினார்கள்.

"எங்கள் வீட்டில் நகை, நட்டு ஒன்றுமில்லை. தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள்!" - என்று கணவன், மனைவி இருவரும் கெஞ்சினார்கள். கொள்ளையர் அதை நம்பவில்லை. அவ்விருவரையும் அடித்துத் துன்புறுத்தினார்கள். 


அதற்குள் குமரேசனின் மகன் பனிரெண்டு வயது வயது சேகர், தான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்தான். கொள்ளையரிடம் சென்றான்.

"என் அப்பா, அம்மாவை துன்புறுத்தாதீர்கள். நான் உண்மையை சொல்கிறேன். அதோ! தெரிகிறதே அந்த பீரோவின் காலில் ஒரு ரகசிய அறை இருக்கிறது. அதில் நகைகள், பணம் இருக்கின்றன. இதோ சாவி!" - என்றவாறு கட்டில் படுக்கைக்குக் கீழே இருந்து எடுத்துக் கொடுத்தான்.

"ம்.. அப்படி வா.. வழிக்கு. எங்களைப் பார்த்து இப்படித்தான் பயப்பட வேண்டும்!" - என்றான் கொள்ளையரில் ஒருவன்.

"நானொன்றும் பயப்படவில்லை!" - என்றான் கோபத்தோடு சேகர். தன்னை பயந்தாங்கொள்ளி என்று கொள்ளையன் தூற்றியது அவனை ரோஷம் கொள்ளச் செய்தது.

இதைக் கேட்டதும் கொள்ளையர்க்கு வியப்பாக இருந்தது.  கொள்ளையர் தலைவன் சேகரிடம் வந்தான். 


"எங்களைப் பார்த்து பயப்படவில்லையா? அப்போது நீயும் உன் பெற்றோரைப் போல பணம் இல்லை என்று பொய் சொல்ல வேண்டியதுதானே? உண்மையை ஏன் சொன்னாய்?" - என்று கோபமுடன் அதட்டினான்.

அதற்கு சேகர், "என் பெற்றோருக்கு உண்மை, பொய் இவைகளின் விலை தெரியாது. எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் உண்மையைச் சொன்னேன்!" - என்று அமைதியாக பதில் சொன்னான்.

"என்னது! உண்மை, பொய் இவற்றுக்குமா விலை? அப்படியானால், உண்மையின் விலை என்ன? பொய்யின் விலை என்ன?" - என்று வியப்புடன் கேட்டான் கொள்ளையன்.

சற்றும் தயங்காமல் சேகர் சொன்னான்: "உண்மையின் விலை என் தாய், தந்தையரின் உயிர். பொய்யின் விலையோ சிறிது நகையும், கொஞ்சம் பணமும் ஆகும். இவை மீண்டும் சம்பாதித்துக் கொள்ள கூடிய மலிவானவை. ஆனால், என் தாய், தந்தையரின் உயிரோ விலை மதிப்பில்லாதது. போனால், திரும்பவும் பெற முடியாதது!"

சேகரின் பதில் கொள்ளையரை சிந்திக்க வைத்தது. சற்று நேரம் மௌனம் சாதித்தவர்கள், சேகரின் உண்மையை உரைக்கும் பண்பால் கவரப்பட்டார்கள். மனம் மாறிய அவர்கள் கொள்ளையடித்தப் பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டார்கள்.

உண்மையின் விலை எப்போதும் விலை மதிப்பிட முடியாதது.

(தீக்கதிர், வண்ணக்கதிர் இணைப்பு - குழந்தைகள் பூங்கா பகுதியில் 14.07.1996 அன்று பிரசுரமான எனது சிறுவர் கதை)
Share:

Friday, August 21, 2015

எனது கவிதை:'கனவுகளைத் தொலைத்துவிட்ட குழந்தையின் அழுகுரல்'


அச்சுறுத்தப்படும் தாய் நாட்டில்..
சுக்கலான இதயத்தோடு நான்!
எடுங்கள் வாளை..
வீசுங்கள் என்னைக் காக்க..
கனவுகளைத் தொலைத்துவிட்ட
பச்சிளம் குழந்தை நான்!
தனிமையில் அழுகிறேன்
கண்ணீரை துடைப்பீரோ?

காப்பாற்றுங்கள்..!
காப்பாற்றுங்கள்..!!
என் குரல் கேட்கிறதா?
என் தேவை... வாழும் உரிமை!
தாக்குதலை நிறுத்துங்கள்
வாழ அனுமதியுங்கள்!

 'குற்றவாளி.. குற்றவாளி..!'
என்று சொல்வோர்
இன்னும் குற்றத்தை
நிரூபிக்க காணோம்!
நாங்கள்
ஒப்புக் கொள்ளாதோரை
தடுத்து நிறுத்துவதுதான் எப்படி?

சோகமும், கோபமும்
பொங்கி வந்து
என்ன லாபம்?
மன உணர்வுகள்
கொடுமைகளைத்தான்
தடுக்குமா?

நீதியும் சமாதானமும்
வார்த்தைத் தோரணமா?
குருதிப் பொங்கும் உலகில்
மனித நேயம் வாழுமா?
அப்பா சொல்கிறார்
நிகழ்வுகள்
நான் அறியா வயசென்று!

 ஆய்வுகளும், அனுமதிகளும்
கட்டுப்படுத்துமா
என் நாட்டை?
எங்கள் எண்ணெய் வளம் சுரண்டி
மாற்றம்தான் சாத்தியமா?
சர்வதேச சட்டமாவது
மண்ணாங்கட்டியாவது
சட்டாம் பிள்ளையிடம்!

என் வயதுக்கு மிஞ்சி
இன்னும் பல பிரச்னைகள்!
போரின் அச்சம்தான்
புதைந்துள்ளது; சதா எனக்குள்!
நான் என்ன செய்ய?
விண்ணைத் தொடுகின்றன வினாக்கள்!

 என் சூரியன் அஸ்தமிக்க
அவர்கள் வானத்தில் இருட்டடிக்கிறார்கள்!
என் பிஞ்சு மனம் நிரம்பியுள்ளது; பேரச்சத்தால்!
என் அப்பாவி
முகம் முழுக்க
கண்ணீர் ஓடைகள்!

என் மனதின் ஓலம்
"யாராவது காப்பாற்ற வாருங்களேன்!"
என் கனவுகளின்
அமைதி தேவதை
சதா சிரித்துக் கொண்டு!
என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்டும்
நம்பிக்கையில் இன்னும் நான்!

முழு உலகின்
ஒரே அரியணைக்காக
ஜனநாயக முகமூடியில்
ஒரு சர்வாதிகரியின்
'கிறுக்குத்தனம்' போர் இது!
யார் காப்பது ..
எனது மனித உரிமைகளை!
எல்லாம் இழந்த பின் ..
காத்திருந்து என்ன பயன்?

 இராக்கிய குழந்தை
உங்கள் முன்
இதோ நான்!
அச்சுறுத்தப்படும்
தாய் நாட்டில்....
சுக்கலான இதயத்தோடு!
எடுங்கள் வாளை..
வீசுங்கள்
என்னைக் காக்க..

கனவுகளை தொலைத்துவிட்ட
பச்சிளம் குழந்தை நான்!
தனிமையில் அழுகிறேன்
கண்ணீரைத் துடைப்பீரோ?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..!
யாராவது காப்பாற்றுங்களேன்..!"
என் குரல் கேட்கிறதா?

மூலம்:  'மாய் ஹம்தி அலி டெசவ்கி'
(இராக்கிலிருந்து கண்ணீர் கவிதை)


தமிழில் : இக்வான் அமீர்

(வெளிச்சம் 2004 இல், சிறப்பு மலரில் வெளியானது)
Share:

இஸ்லாம் வாழ்வியல்: இரவில் ஒலித்த அழுகுரல்


வழிப்போக்கர்களைச் சுமந்துகொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று மதீனாவுக்கு வந்தது. அந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள். இதனை ஜனாதிபதி உமர் கண்டார். வழிப்போக்கர்களான அந்தப் பயணிகளுக்கு உதவ விரும்பினார். தமது நண்பரான நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபுடன் சேர்ந்து இரவு முழுவதும் அந்தக் குழுவினருக்குக் காவலராய் நின்றார்.

பின்னிரவு நேரத் தொழுகையான ‘தஹஜ்ஜுத்’-ஐ இருவருமாய் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது.

ஜனாதிபதி உமர் கூட்டத்தினரை நெருங்கி குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது நேரம் கழிந்தது. மீண்டும் அதே இடத்திலிருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது.

ஜனாதிபதி உமர் குழந்தையின் தாயிடம் விரைந்து சென்றார். “அம்மா! இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அழாமல் கவனித்துக் கொள்ளுங்கள்!” என்றார்.

கொஞ்சம் நேரம்கூட ஆகியிராது. மீண்டும் குழந்தை அழும் சத்தம் கேட்டது.

ஜனாதிபதி குழந்தையின் தாயிடம் சென்று குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார். இப்படி மூன்று முறை நடந்தது.


கடைசியாக, குழந்தை அழும் குரல் கேட்டு தாயாரிடம் சென்ற ஜனாதிபதி உமர், “அம்மா! நீங்கள் இரக்கமுள்ள ஒரு தாயாக ஏன் நடந்துகொள்ள மறுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இந்தக் குழந்தை இரவு முழுவதும் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது!” என்றார்.

தன்னிடம் பேசிக்கொண்டிருப்பது ஜனாதிபதி என்று தெரியாமல் அந்தத் தாய் சொன்னாள்:

“இறைவனின் அருள் உங்கள் மீது பொழிவதாக! இரவு பல முறை நீங்கள் தேவையில்லாமல் எனக்கு அறிவுரை என்ற பெயரில் வந்து தொந்தரவு செய்துவிட்டீர்கள். இந்தக் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை மறக்கடிக்க முயன்றுவருகிறேன். இந்தக் குழந்தையும் தாய்ப்பால் குடிப்பதை விட மாட்டேன் என்கிறது! நான் என்ன செய்ய?” என்று சலித்துக் கொண்டாள்.

இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஜனாதிபதி உமர், “அம்மா, குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால்குடி மறக்கடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?” என்று கேட்டார்.

“காரணமில்லாமல் செய்ய நான் கல்நெஞ்சம் கொண்டவளா? எங்கள் ஜனாதிபதி உமர் அவர்கள் பால்குடி நிறுத்திய குழந்தைகளுக்குத்தான் பைத்துல்மாலிலிருந்து (அரசு பொது நிதியகம்) நிதி உதவி செய்கிறார்கள்!”

“சரி.. இந்த குழந்தைக்கு வயதென்ன?”

“குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகின்றன!”

“குழந்தையைப் பால்குடி மறக்கடிக்க அவசரம் காட்ட வேண்டாமம்மா!” என்று சொல்லிவிட்டு ஜனாதிபதி உமர் அங்கிருந்து சென்றார்.

அதிகாலைத் தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி உமருக்கு இரவில் நடந்த சம்பவம் நினைவில் வர, தொழுகையின் நடுவிலேயே அழ ஆரம்பித்தார். மேற்கொண்டு திருக்குர்ஆன் வசனங்களை ஓத முடியாமல் நா தழுதழுத்தது. ஒருவழியாகத் தொழுகையை நடத்திவிட்டு முடிவில் சொன்னார்:

“உமர் அழிந்தான்! அவன் பச்சிளம் குழந்தைகளைக் கொன்று விட்டான்!”

அத்தோடு நில்லாமல் தமது ஆட்சிக்குட்பட்ட எல்லா பகுதிகளுக்கும் உடனடி ஆணையைப் பிறப்பித்தார்.

“குழந்தைகளுக்கான நிதி உதவி பெறும் பொருட்டு எந்தத் தாயும் குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால் குடியை நிறுத்தக் கூடாது! இனி, பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் அரசின் நிதி உதவி கட்டாயம் உண்டு!”

(தி இந்து, தமிழ் - ஆனந்த ஜோதி இணைப்பில், 20.08.2015 அன்று பிரசுரமானது.)
Share:

உடல் நலம்: 'இனி முகம் சிவக்க.. கண் கலங்க வேண்டாம்!'

 

உடல் நலத்துக்கு மிகவும் இன்றியமையாதது… உழைப்பும்.. உழைப்பைச் சார்ந்த பசி மற்றும் செரிமானமுமாகும். அவ்வகையில் நீங்கள் ‘ஓய்வறைக்கு’ (பன்னாட்டு தொழிலகங்கள் இந்தியாவில் படையெடுத்து வெற்றிவாகைச் சூடியபின் பயன்படுத்தும் மொழி இது) அதாவது ‘கழிவறைக்கு’ நாள்தோறும் இரண்டு முறை சென்று நிம்மதியுடன் திரும்புவரா? அதிஷ்டசாலிதான் போங்கள்! அல்லது ஓய்வறையில் நீண்ட நேரம் காலம் கழிப்பவராக இருந்தால்.. (நாளிதழ் வாசிப்பதற்காக அல்ல) நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள் இவை:

நாள்தோறும் 8-10 டம்ளர்கள் குடிநீர் அருந்துவது குடல் இயக்கத்துக்கு நலம் பயக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். தாமிர செம்பில் இரவு முழுவதும் இருத்திய குடிநீரை காலையில் வெறும் வயிற்றுடன் குடிப்பதும் நல்லது.

வெது வெதுப்பான டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி நெய் கலந்து படுக்கைக்குப் போகும் முன்னர் அருந்துவது மலச்சிக்கல்  பிரச்னை தீர உதவும். அதேபோல, காலை நடை பயிற்சிக்கு முன்னர் 2-3 டம்ளர் வெது வெதுப்பான நீரை அருந்துவதும் சிறந்தது.


பழவகைகள் மற்றும் காய்கறிகள் அதிலும் குறிப்பாக பப்பாளி, கொய்யா போன்றவற்றை உணவாக்கிக் கொள்வதும் நல்லது. தக்காளி, பீட்ரூட் துண்டுகள் மலச்சிக்கல் நீக்க பெரிதும் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது கொஞ்சம் விலை அதிகமான சமாச்சாரமாக இருந்தாலும், உடல் நலத்தை முன்னிட்டு ஒரு இயற்கை மருத்துவமாக ஏற்கலாம் அதாவது நாள்தோறும் காலையில் இரண்டு ஆப்பிள் பழங்களை நன்றாக கழுவி பல்லால் நேரடியாக கடித்து உண்பது மிகவும் நல்லது.

இதைவிட இன்னும் எளிய ‘கை – வைத்தியம்’, ஒரு டம்ளர் குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு சிட்டிகை அளவு உப்பு கலந்து குடிப்பது எப்பேர்பட்ட மலச்சிக்கலையும் நீக்கிவிடும் என்கிறார்கள் நம் கிராமத்து அனுபவ மருத்துவர்கள்.

 இவை எல்லாமே இயற்கை சார்ந்த எளிய மருத்துவமுறைகள். ஆதலால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

இனி நீண்ட நேரம் ‘ஓய்வறையில்’ தாமதிக்க வேண்டிய அவசியமும் இல்லை! முகம் சிவக்க … கண் கலங்கி கதவைத் திறந்து வர வேண்டிய சிக்கலும் இல்லை.

இனி எல்லாம் “ப்ரீதான் போங்கள்..!!”
Share:

Thursday, August 20, 2015

லென்ஸ் கண்ணாலே – 007: ‘பிளாஷை’ பயன்படுத்துவது எப்படி?


உச்சி வெய்யில் நேரத்தில் படம் எடுக்கிறீர்கள்.

எடுக்க நினைத்த நபரின் முகத்தில் நிழல் விழும். அப்படி முகத்தில் நிழல் விழாமல் படம் எடுப்பது எப்படி?

இங்கு இரண்டு படங்களை எடுத்திருக்கிறேன்.



இரண்டு சிறுவர்கள். இரு சக்கர வாகனத்தின் பஞ்சரான டயர் ஒன்றை சைக்கிளில் எடுத்துக் கொண்டு செல்லும் அழகிய காட்சி அது.

சைக்கிளின் இரு டயர்களிலும் சுத்தமாக காற்று இல்லை.

அத்துடன், காட்டில் பறித்த முந்திரிப் பழங்களை எடுத்துச் செல்லும் காட்சி.

பின்னால் அமர்ந்திருக்கும் சிறுவன் வாயில் எதையோ அடுக்கிக் கொண்டு மென்று கொண்டு செல்கிறான்.

இந்த சிறார்களின் பெயர் வசந்த குமார் மற்றும் முத்து குமார். வடசென்னை எண்ணூர் காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

நிழல் படிந்த நிலையில், ஒரு படம். நிழல் மறைந்த நிலையில் ஒரு படம் என்று எடுத்துள்ளேன்.

இதை எப்படி எடுத்தேன் தெரியுமா?

பிளாஷை இயக்கி படம் பிடித்தேன்.


அதேபோல காட்டுயிர் ஆய்வுக்காக காட்டுப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றிருந்தபோது, அடர்ந்த முந்திரி காட்டுக்குள் மிதமான பிளாஷைப் பயன்படுத்தி எனது மாணவன் மெஹர் அலியை படம் பிடித்ததை இணைத்துள்ளேன்.

சுட்டெரிக்கும் வெய்யிலிலும் பிளாஷை பயன்படுத்தலாம் என்பதற்காகவே இதெல்லாம்!

இதன் மூலம் படத்தில் நிழல் விடுவதை தடுக்க முடியும். அத்துடன் படமும் தெளிவாக பளிச்சென்று இருக்கும்.

பிளாஷ்ஷை பயன்படுத்தும்போது அந்த வெளிச்சம் மிதமாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. இல்லையென்றால் படத்தின் தரம் கெட்டுவிடும். பிளாஷ்ஷின் வெளிச்சம் எவ்வளவு என்பதை சூழலுக்கு ஏற்ப தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இது அனுபவத்தில் வருவது. பழகிக் கொள்ளலாம்.


சரி பிளாஷ் பொருத்தப்பட்ட காமிராக்கள் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

கவலை வேண்டாம்.

சாதாரணமான ஒரு வெள்ளை டவல் இருந்தால் போதும்.

அதுவும் இல்லையென்றால் ஒரு வெள்ளை அட்டை இருந்தால் போதும்.

சரி அதுவும் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம்.

ஒரு செய்தித்தாள் இருந்தால்கூட போதும் நிலைமையை சமாளித்துக் கொள்ளலாம்.

வெள்ளை டவலையோ, அட்டையையோ அல்லது செய்தித்தாளையோ பயன்படுத்தி அதன் மூலம் ஒளியைப் பாய்ச்சி படம் எடுக்கலாம். இதற்கு கொஞ்சம் பயிற்சி மட்டும் இருந்தால் போதும்.

சரி போட்டோகிராஃபி எனப்படும் இந்த புகைப்படக் கலையின் ஆரம்ப கதையை கொஞ்சம் பார்த்துவிட்டு தொடர்வோமே..!

இறைவன் நாடினால்… காமிராவில் கலைவண்ணங்கள் மிளிரும்

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
சென்ற அத்தியாயத்தின் சில பின்னூட்டங்களுக்கான பதில்கள்:

சகோதரர் Habeer Mohamed சில படங்களுக்கான கருத்து கேட்டிருந்தார்.

1. நீர் நிலையில் தென்னையும், வாழையுமான படம் அருமையான படம். கொஞ்சம் ஒளி கூட்டியிருக்கலாம்.


2. அடுத்தது இட்லி பூ என்று எங்கள் பக்கம் அழைப்பார்கள். இது மோசமான படம். உதிர்ந்து, ஒரு ஒழுங்கற்ற பூக்களை எடுக்க வேண்டிய தேவையில்லை. அவை பூத்திருக்கும் நிலையில் அற்புதமாக இருக்கும். நான் எடுத்த ஒரு படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.


3. மூன்றாவது படம் அற்புதமான காட்சிகள் கொண்ட படம். நண்பர் ஏனோ ஓடும் வண்டியிலிருந்து எடுத்திருக்கிறார்?

வாழ்த்துக்கள் Habeer Mohamed!

அடுத்தது, சகோ. Mohamed Fasil காரைக்கால் பீச்சில் எடுத்த படம். கடற்கரை என்று சொல்வதற்கான எந்த அடையாளமும் இல்லையே . Mohamed Fasil !


அடுத்தது Nazeem Bin Syed Meeran தனது சாம்சங் நோட் 2-ல் எடுத்த படங்களில் ஒன்று சுமாராகவும், மற்றொன்று சிறப்பாகவும் அமைந்துள்ளது.


வாழ்த்துக்கள் Nazeem Bin Syed Meeran இன்னும் கொஞ்சம் கம்போஸிங்கில் சரி பார்த்திருக்கலாம். ஆயினும் வாழ்த்துக்கள்.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
001. அனுபவங்களின் பகிர்வன்றி.. அறிவின் ஊற்றல்ல - http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html

002. உங்களுக்கான காமிரா எது? - http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html

003. கையாள்வது எளிது! ஆனாலும், கடினம்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/3_23.html

004. வாய்ப்பு என்பது ஒருமுறைதான்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/4_24.html

005. படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/07/5_30.html

006. என்கவுண்டர் செய்யாதீர்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/08/6.html
Share:

சிறுவர் கதை: 'வீணாக்கலாகாது பாப்பா!'



வாலுன்னா வாலு சரியான வாலு, அமுதன்.

அம்மாவை சதாய்ப்பது. அம்மா பேச்சை கேட்காமலிருப்பது. அம்மாவுக்கு கஷ்டம் தருவது என்று அமுதனின் ஒவ்வொரு நாள் பொழுதும் கழியும்.

அவர்களது கிராமத்தில் ஒரே ஒரு கிணறு இருந்தது. அதுவும் ஊருக்கு வெளியே இரண்டு மைல் தொலைவில்; வயல்காட்டில்.

ஊர்வாசிகள் குடி தண்ணீர் எடுக்க அங்குதான் போவார்கள்.

அமுதனின் அம்மாவும் அங்கிருந்துதான் குடி நீர் கொண்டு வருவார்.

இடுப்பில் ஒரு குடம். தலையில் இன்னொரு குடம். “அமுதா! நீயும் ஒரு சின்ன குடம் எடுத்து கொண்டு வாய்யா. அப்போதுதான் நாம் கொஞ்சம் தாராளமாய் நீரை பயன்படுத்தலாம்!” – என்று கூப்பிடுவாள்.

“போம்மா! உனக்கு வேற வேலையே இல்லை! நான் வரமாட்டேன் போ!” – என்று அவன் மறுத்துவிடுவான்.

அம்மா இருட்டோடு நீர் எடுக்கச் செல்வாள். வயல் வரப்புகளில் சிரமப்பட்டு நடப்பாள். கஷ்டத்துடன் நீர் மொண்டு வருவார்.

அம்மா படும் கஷ்டத்தை அமுதன் பார்க்கத்தான் செய்தான். பார்த்து என்ன செய்ய? ‘அம்மா பாவம்! சிரமப்பட்டு நீர் கொண்டு வருகிறாரே! நாமும் கொஞ்சம் உதவி செய்வோம். அவர் நமக்கும் சேர்த்து அல்லவா நீர் கொண்டு வருகிறார்!” – என்று நினைக்க வேண்டுமே!

உதவிதான் செய்ய வேண்டாம். சரி உபத்திரமாவது செய்யாமலிருக்கலாம் அல்லவா! ஆனால், அம்மா சிரமப்பட்டு கொண்டுவரும் குடிநீரை அவன் வீணாக்குவான். வேண்டுமென்றே இரண்டு முறை முகம் கழுவுவான். அடிக்கடி கை, கால்களை கழுவிக் கொண்டே இருப்பான். நீரில் சோப்பு கலப்பான். குடிக்க சொம்பு நிறைய நீர் மொண்டு கொஞ்சமாய் குடிப்பான். மிகுந்த நீரை கீழே கொட்டுவான். இப்படி குடிநீரை பலவகையில் விரயம் செய்வான். 

ஒருநாள். குடிநீர் முற்பகலிலேயே தீர்ந்துவிட்டது. குடிப்பதற்கு ஒரு சொட்டு நீர் கூட இல்லை. இதனால், அம்மாவுக்கு கோபம் வந்தது. அமுதனை திட்டினார். கோபத்தில் அடித்தும் விட்டார்.

அமுதனுக்கு ‘புர்’ என்று கோபம் தலைக்கேறியது. “இனி இந்த வீட்டில் எவன் இருப்பான்?” – என்று கூச்சல் போட்டான். பிறகு, அம்மாவிடம் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான்.

கிராமத்திலிருந்து.. வயல்காடுகளையும் தாண்டி… மலையடிவாரம் போனான். கோபத்தில் அவன் எவ்வளவு தூரம் சென்றான் என்பது அவனுக்கே தெரியவில்லை.

மலையடிவாரம்.

அமுதன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான்.

மதியம் வெய்யில் கடுமையாய் கொளுத்தியது.

பசி வயிற்றைக் கிள்ளியது. 'குடிக்க கொஞ்சம் நீர் இருந்தால் தேவலாம்!’ – என்று நினைத்துக் கொண்ட அமுதன் தண்ணீருக்காக சுற்றும் முற்றும் தேடினான்.

மலையடிவாரத்தில் எங்கு நீர் கிடைக்கும்? இதற்கு முன் அமுதன் அந்த இடத்திற்கு வந்ததேயில்லை! அதனால், நீர் எங்கே கிடைக்கும் என்பதும் அவனுக்குத் தெரியாது.

நேரம் செல்ல செல்ல பசி எடுத்தது. தாகம் அதிகரித்தது.

அமுதன் நீரைத் தேடி அலைந்தான். தொலைவில் வெய்யிலால் கானல் நீர் வரி வரியாய் தெரியும். “ஆஹ்..! அதோ நீர் நிலை!” – என்று ஓடிப் பார்த்தால் அங்கே ஒன்றும் இருக்காது! வெறும் சமவெளியாய் இருக்கும்.

தாகத்தால் தவித்துப் போன அமுதனின் கோபம் போன இடம் தெரியவில்லை. ‘மலையடிவாரத்தில் இனியும் இருந்தால்… தாகத்தால் செத்துப் போக வேண்டியதுதான்!’ – என்று பயந்து போனவன் அங்கிருந்து விறு விறுவென்று கிராமத்தை நோக்கி நடந்தான்.


கடுமையான வெய்யில். தாகத்தால் தொண்டை வறண்டு போனது. நடை தளர்ந்தது. கண்கள் இருண்டன. “யாராவது ஒரே ஒரு டம்ளர் குடிநீர் தர மாட்டார்களா?" - என்ற நப்பாசை. நாக்கால் உதடுகளை அடிக்கடி ஈரமாக்கிக் கொண்டான். தள்ளாடி தள்ளாடி நடந்தான்.

“வீட்டில் எவ்வளவு குடிநீரை வீணாக்கி இருக்கிறோம். பாவம் அம்மா! நமக்காக எவ்வளவு சிரமப்பட்டு குடி நீரை கொண்டு வருகிறார்! நான் எவ்வளவு மடத்தனமாய் நடந்து கொண்டேன். “அம்மா.. அம்மா.. என்னை மன்னித்து விடு!” – அமுதனின் உள்ளம் புலம்பியது. அவனது கண்களில் கண்ணீர் திரண்டது. நீரின் மதிப்பு அவனுக்குப் புரிந்தது.

‘இனி குடிநீரை வீணாக்குவதில்லை!’ – என்று தீர்மானித்துக் கொண்டான். சிரமப்பட்டு கிராமத்தை அடைந்தான்.

அம்மா அமுதனை எதிர்பார்த்து வாசற்படியில் நின்றிருந்தார். முகம் கறுத்துப் போய் உடல் வியர்த்து வந்த மகனைக் கண்டதும் அவள் பதறிப் போனார். நிலைமையைப் புரிந்து கொண்டார். அவனை வாரி அணைத்துக் கொண்டார். கட்டிலில் அமர்த்தினார். பானையிலிருந்து ‘ஜில்’லென்று சொம்பு நிறைய நீரை மொண்டு வந்தார். அமுதனிடம் நீட்டினார். ‘மடக் மடக்’ கென்று அமுதன் நீரை குடிக்கலானான். கடைசி சொட்டு நீரையும் மிச்சம் வைக்காமல் அவன் ஆசையுடன் குடித்து முடித்தான். போன உயிர் திரும்பியதைப் போல் இருந்தது.

அம்மாவை அணைத்துக் கொண்ட அமுதன், “அம்மா! என்னை மன்னிச்சிடுங்க! இனி நான் குடிநீரை வீணாக்க மாட்டேன்! எனக்கு நீரின் அருமை புரிந்தது. நாளையிலிருந்து நானும் உங்ககூட நீர் எடுக்க வருகிறேன். என்னை மன்னிச்சிடுங்க!” – என்று விக்கி விக்கி அழுதான்.

அம்மா அமுதனின் தலையை அன்பாய் வருடி விட்டார். மகன் திருந்திவிட்டது அந்தத் தாய் மனசுக்குப் புரிந்துவிட்டது. அந்த சந்தோஷம் அவளுடைய விரல்களின் வருடலில் பிரதிபலித்தது.

இறகைவிட மென்மையான தாய்மையின் வருடல் அது.

(தீக்கதிர், வண்ணக்கதிர் இணைப்பில் - குழந்தைகள் பூங்கா பகுதியில், 13.10.1996 அன்று பிரசுரமான எனது சிறுவர் கதை)
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive