NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Wednesday, October 11, 2017

உலக பெண் குழந்தைகள் தினம்: சுவனத்தின் நுழைவுச் சீட்டுகள்


”யார் மூன்று பெண் மக்கள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை கருணையுடனும், பரிவுடனும் அவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அத்தகையோருக்கு இறைவன் சுவனத்தைக் கடமையாக்கிவிட்டான்” – என்று நபிகளார் கூறியபோது, அங்கிருந்தவர்களில் ஒருவர், ”ஒரு பெண் குழந்தை இருந்தபோதும் இந்த உயர் பதவி கிடைக்குமா?” – என்று விசாரிக்க ”ஆம்..!” – என்று ஆமோதிக்கிறார் நபிகளார். >>> இக்வான் அமீர் <<<

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
”பெண்ணே! நான் எப்போது திரும்பி வருவேன் என்று தெரியாது! அதோ! உனது கட்டிலுக்குக் கீழே ஒரு பள்ளம் வெட்டியுள்ளேன். பிறக்கப் போகும் குழந்தை ஆணாக இருந்தால்… அதை பத்திரமாய் வளர்த்து வா..! பிறப்பது பெண்ணாக இருந்தால்…. அவளைப் பள்ளத்தில் போட்டு மூடிவிடு!” – நிறைமாத கர்ப்பிணியான மனைவியிடம் வணிகம் நிமித்தம் விடைபெற்றுச் செல்லும் கணவன் சொன்னவை இவை.

குழந்தையும் பிறந்தது, கொழு கொழு பெண் சிசுவாய்! தாய்மைக்கு சிசுவைக் கொல்ல மனம் ஒப்பவில்லை. ஒரு திட்டம் போட்டாள். விளைவு, பெற்ற குழந்தை எதிர்வீட்டில் வளர்ந்தது.

செங்கீரைப் பருவம், தாலப்பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம் என்று குழந்தை வளர்கிறது. சொந்த வீட்டிற்கும் வருகிறது. அங்குள்ளவர்களிடம் ஒட்டிக் கொள்கிறது. ”மாமா..! மாமா..!” – என்று சதா சொந்தத் தந்தையின் மடியிலேயே கொஞ்சி குலாவுகிறது.

இதை மறைந்திருந்து பார்க்கும் பெற்றவளுக்குக் கண்கள் குளமாகின்றன. ”எப்படியோ.. நம் குழந்தை தகப்பனிடம் ஒட்டுதலாகிவிட்டதே!” – பெரு மூச்சு வெளிப்பட்டு மனம் சமாதானமடைகிறது.

ஒரு நாள்.

‘இவ்வளவு பாசத்துடன் குழந்தையிடம் பழகுகிறாரே! உண்மையைச் சொல்லிவிட்டாள் என்ன?’ - என்று யோசித்தாள். சொல்லவும் செய்தாள் அந்த அபலைத் தாய்.

உண்மைத் தொிந்ததும், கணவன் மகிழ்ச்சியால் குதிப்பான் என்று எதிர்பாா்த்திருந்தவளுக்கு அதிா்ச்சி! கண்கள் சிவக்க.. நெஞ்சு துடிக்க.. மனம் கொதிக்க.. ”எங்கே அவள்?” – என்று சீற, சிரித்தவாறு, ”மாமா..!” – என்று வந்தாள் யாழினும் இனிய மழலை மொழியுடன் பிஞ்சு அவள்.

ஓட்டமும், நடையுமாய் ஊருக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. தக்க இடம் தேடி கெல்லினார் பள்ளத்தை.

”ஓ..! மாமா.. புது விளையாட்டு கற்றுத் தருகிறார் போலும்..!” – என்று எண்ணிய குழந்தை தானும் கூடச் சேர்ந்து மண் எடுத்தாள்.

”மாமா! ஓ மாமா..! உங்க தாடி எல்லாம் மண்.. ஹி..ஹி..!” – பிஞ்சுக் கரங்களால்.. தாடியில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டுச் சிரித்தாள். கடைசியில், பள்ளத்தில் தான் இறக்கப்பட்டது ஏனென்று தொியாமல் விழித்தாள். மண் சரிய ஆரம்பித்ததும், கத்தினாள். கதறினாள். ”மாமா..! மாமா..! மா.. மா..!” – குரலோசை முனகலாய் மறைய, புதைகுழி மூடிக்கொண்டது.

முடிந்தது, ஒரு கொலை. தணிந்தது கோபம். பாலைப் பெருவெளியில் மழலையின் மரண ஓலம் கலந்து மறைந்தது.

முந்தைய அறியாமைக் காலத்து அரபு சமூகத்து உசிலம்பட்டிகள் இவை. வீடு தோறும் அரங்கேறிவந்த கொடூரங்கள். வறுமையின் அச்சமும், குலப்பெருமையும் பெண் சிசுக்களின் உயிர் பறிக்கும் காரணங்களாயின.

இதனை ஆணவம் என்பதா? அறியாமை என்பதா? பழகிப் போன முட்டாள்தனம் என்பதா? என்னவானாலும் இந்த அக்கிரமத்துக்கு ஒரு முடிவு வரத்தான் செய்தது!

”வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலைச் செய்யாதீர்கள். நாம்தாம் அவர்களுக்கு உணவளிக்கின்றோம். உங்களுக்கும் உணவளிக்கின்றோம். உண்மையில், அவர்களை கொல்வது பெரும் பாவமாகும்!” –

”எவர்கள் தம் குழந்தைகளை அறியாமையினாலும், மூடத்தனத்தினாலும் கொன்று விட்டார்களோ அவர்கள் நிச்சயமாக பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். உண்மையில் அவர்கள் வழித் தவறிப் போய் விட்டார்கள்”

சிசுக் கொலைக்கு முடிவு கட்டி திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கியருளப்பட்டன.

தோழர் ஒருவர், நபிகளாரிடம் எழுப்பிய வினா – விடை இவை:

”இறைனின் தூதரே! எல்லாவற்றையும்விட கொடிய பாவம் எது?”

”இறைவனுக்கு இணை வைப்பது!”

”அதற்கு அடுத்தது?”

”பெற்றோருக்கு மாறு செய்வது”

”அதற்கும் அடுத்தது?”

”உங்களுடன் அவர்களும் சாப்பிடுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகளைக் கொன்றுவிடுவது”

சிசுக்கொலை கொடும் பாவமானது என்று எச்சரிக்கிறார் நபிகளார். பெண் சிசுக்களை மனநிறைவோடு பேணி வளர்க்க வேண்டும். அது சுவனம் செல்வதற்கான நற்செயல் என்றும் ஊக்கம் தருகிறார்.

”யார் மூன்று பெண் மக்கள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை கருணையுடனும், பரிவுடனும் அவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அத்தகையோருக்கு இறைவன் சுவனத்தைக் கடமையாக்கிவிட்டான்” – என்று நபிகளார் கூறியபோது, அங்கிருந்தவர்களில் ஒருவர், ”ஒரு பெண் குழந்தை இருந்தபோதும் இந்த உயர் பதவி கிடைக்குமா?” – என்று விசாரிக்க ”ஆம்..!” – என்று ஆமோதிக்கிறார் நபிகளார்.

வீட்டில் ஏதுமில்லாத நிலையில், தம்மிடம் வந்த ஏழைப் பெண்ணொருத்தியிடம் இருந்த ஒரே ஒரு பேரீத்தம் தரப்பட்ட நிலையில், அவள் அதை இரண்டாக்கி தனது இரு பெண் குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்ட சம்பவத்தை ஆயிஷா நாச்சியார், நபிகளாரிடம் பகிர்ந்துகொண்டார்.

”யார் பெண் மக்களின் பிறப்பால் சோதனைக்குள்ளாகி, அச்சோதனையிலும், வெற்றி பெறுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் மறுமை நாளில் நரகத்திற்கு தடுப்பாய், கேடயமாய் மாறி நிற்பார்கள். பெற்றோர் நரகத்திலிருந்து காக்கப்படுவார்கள்!” – என்று தம் மனைவியார் ஆயிஷா நாச்சியாரிடம் அப்பெண் குறித்து உயர்வுடன் சொல்கிறார் நபிகளார்.

குழந்தைகளிடம் சம அன்பு காட்ட வேண்டும். பாராபட்சம் கூடாது என்று வலியுறுத்தும்விதமாக, ”யாருக்குப் பெண் குழந்தை பிறந்து அதை அவர் அறியாமைக் காலத்து முறைப்படி உயிரோடு புதைக்காமல், கேவலமாகவும் கருதாமல், அந்தப் பெண் குழந்தைக்கு எதிராக ஆண் குழந்தைக்கு எள்ளளவும் முக்கியத்துவம் தராமல் சமமாக நடத்துகிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழையச் செய்வான்!” – என்றும் அறிவுறுத்துகிறார்.

”நான் உங்களுக்கு மிகச் சிறந்த தர்மம் ஒன்றைக் கூறட்டுமா? அது தனக்குப் பொருளீட்டி உணவளிக்கக் கூடியவர் வேறு எவருமில்லை என்ற இயலாத நிலையில் இருந்தபோதிலும், திருப்பி அனுப்பப்பட்ட மகளை பராமரிப்பதுதான்!”

அழகின்மை, உடல் ஊனம் போன்ற காரணங்களால் மணமாகாத பெண் அல்லது இன்னும் பல காரணங்களால் விவாகரத்துப் பெற்று தனது வாழ்வாதாரத்துக்காக பிறரை நம்பியிருக்கும் பெண் இவர்களைப் போஷிப்பது தர்மத்தில் மிகச் சிறந்த தர்மம் என்கிறார் நபிகளார்.

திருக்குர்ஆனின் கட்டளைகளும், திருநபிகளாரின் அருளுரைகளும், ஆண், பெண் இருவருக்கும் சம கல்வி அளித்தல், சொத்துக்களில், பெண் குழந்தைகளின் பங்கை முழு மனதோடு பிரித்து கொடுத்தல், சிசுக்களைப் பாதுகாத்தல், அவர்களைப் பாராபட்சம் காட்டாமல் போஷித்தல் இன்னும் பல்வேறு வாழ்வியல் கூறுகளை இறைநம்பிக்கையின் அங்கமாகவே ஆக்கியுள்ளன.


Share:

Sunday, October 1, 2017

Thursday, September 28, 2017

ஹிஜ்ரத் புலம்பெயர்வில் எண்ணற்ற படிப்பினைகள்



உண்மையில் இறைத்தூதர்கள் யாரொருவரும், துன்பத்துயரங்களுக்கும், இன்னல், இடர்பாடுகளுக்கும் அஞ்சி தாய்மண்ணை விட்டு துறத்தல் என்பது அபத்தமானது. எல்லையற்ற அருளாளனின் வழிகாட்டுதல் பிரபஞ்சத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டுமானது என்ற கருத்தை தகர்த்தெறிந்து எங்கும் நிறைந்திருக்கும் அப்பரம்பொருளின் வழிகாட்டுதலை உலகின் யாராலும் பின்பற்ற இயலும் என்ற சாசுவதத்தின் காரணமிது ~இக்வான்  அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1438 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவழிகாட்டுதலுக்கு ஏற்ப, நபிகளார் தமது தோழர் அபூபக்கருடன் மதீனா நகருக்கு புலம்பெயர்ந்து சென்றார். வீடு, வாசல், மனைவி, மக்கள், உற்றார், உறவுகள் என்று தாய்மண்ணை விட்டு நபிகளார் பிரிந்து சென்ற இந்நிகழ்வு வரலாற்றில் ஹிஜ்ரத் எனப்படுகிறது. இதுதான் இஸ்லாமிய நாட்காட்டியின் துவக்க ஆண்டாக கணக்கிடப்பட்டு முஹர்ரம் முதல் மாதமாக வழங்கப்படுகிறது. ஹிஜ்ரத் நிகழ்வின்போது, நபிகளாரின் கொள்கை வழி ஆதரவாளர்களாக மதீனா நகரில் இணைந்து நின்றவர் வெறும் 75 பேர் மட்டுமே! 

இஸ்லாத்தின் அரசியல், அதிகார தலைமையகமாக மதீனா தேர்வு செய்யப்படுவதற்கு காரணம் என்ன? இறைவனின் இல்லமான கஅபாவும், அதை கட்டியமைத்த நாயகரான இறைத்தூதர் இப்ராஹீம், அவரது மகனார் இஸ்மாயீலும் காலடி பதித்த இடங்கள் மக்காவாக இருக்கஅதிகார பீடமாக மக்கா ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்ற கேள்விகள் எழுவது சகஜம். இதற்கான மேலோட்டமான பதில், நபிகளார் மக்காவில் கடும் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவரது பரப்புரைகளுக்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான். 

ஆனால், உண்மையில் இறைத்தூதர்கள் யாரொருவரும், துன்பத்துயரங்களுக்கும், இன்னல், இடர்பாடுகளுக்கும் அஞ்சி தாய்மண்ணை விட்டு துறத்தல் என்பது அபத்தமானது. எல்லையற்ற அருளாளனின் வழிகாட்டுதல் பிரபஞ்சத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டுமானது என்ற கருத்தை தகர்த்தெறிந்து எங்கும் நிறைந்திருக்கும் அப்பரம்பொருளின் வழிகாட்டுதலை உலகின் யாராலும் பின்பற்ற இயலும் என்ற சாசுவதத்தின் காரணமிது. 

நபிகளாரின் இந்த ஹிஜ்ரத் புலம்பெயர்தல் நிகழ்வு மனித இனத்தில் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவந்த அத்தனை பழக்கவழக்கங்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்தது. மனித இனம் அதுவரையில் இறைநம்பிக்கையாளர், இறைநம்பிக்கையற்றவர் என்று இருவேறு உலகங்களாக பிளவுப்பட்டிந்தது. இந்நிலையை மாற்றியமைத்து, எல்லா உலகிலும் அதிகாரம் செலுத்துபவன் இறைவன் என்றது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவையும் ஆக்கியாள்பவன், அவற்றின் மீது முழுமையான அதிகாரம் கொண்டவன் இறைவன் என்று நிரூபித்தது. குறைந்த எண்ணிக்கையினராக இருந்தாலும் தம் செய்தியை அடுத்தவர்க்கு பகிர முடியும் என்று அப்பட்டமாக்கியது.

ஹிஜ்ரத் நிகழ்வாக நபிகளார் மதீனா மாநகருக்கு மேற்கொண்ட பயணம் ஒவ்வொரு இனத்தாரும் பன்முகசமூகத்தில் இணந்து வாழ முடியும் என்று நிதர்ச்சனப்படுத்தியது. அதுவரையில் பல்வேறு கோத்திரங்களாக பிரிந்து, பிளவுப்பட்டுக் கிடந்தவர்களை நபிகளார் ஒருங்கிணைத்தார். அதற்காக பிரதானமாக செல்வாக்கு பெற்ற கோத்திரத் தலைவர்களை அழைத்து, ஒப்பந்தங்களையும் செய்து சமூகத்தில் அமைதி நிலவுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். இன, சமய பின்னணி எதுவானாலும் ஒவ்வொரு தனிமனிதனும் சுயசுதந்திரம் கொண்டவனாக மதீனாவில் நடமாடுவது அவனது பிறப்புரிமை என்பதை அரசியலமைப்பு சட்டமாகவே வடிவமைத்தார். அவரவர் கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றி வாழும் ஒரே நாட்டின் ஒரே மக்களாகவும், பன்முகசமூகத்தின் ஒரு முன்மாதிரி நகரமாகவும் மதீனாவை மாற்றியமைத்தார். 

மதீனா மாநகரின் பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும்விதமாக எல்லா தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து வலிமை வாய்ந்த ஒரு ராணுவத்தை கட்டமைப்பதற்கான அனைத்துவித முயற்சிகளையும் நபிகளார் மேற்கொண்டார். எல்லையில் நாட்டைக் காப்பதற்காக உயிர் துறக்கும் அமரர்களின் குடும்பத்தாரின் அத்தனை தேவைகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொண்டது. இதுதான் இன்றைய சொல்வழக்கில் இன்ஷீரன்ஸ் காப்பீடு என்றழைக்கப்படுகிறது. அதேபோல, ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு சமயத்தாரும் அவரவர் சட்டங்களை பின்பற்றி வாழ்வதற்கான அனைத்து சூழல்களும் உருவாக்கப்பட்டன. 

ஹிஜ்ரத் நிகழ்வின் விளைவாக பெண்ணுரிமைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அத்தோடு நபிகளாரின் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து நின்ற அவாஸ் கோத்திரத்தாரின் நான்கு உட்பிரிவினர் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் அளிக்கப்பட்டது. 

ஆக மொத்தத்தில் நபிகளார் மதீனா மாநகருக்கு மேற்கொண்ட ஹிஜ்ரத் புலம்பெயர்வு வரலாற்றில் ஜனநாயகத்தின் முன்மாதிரி வடிவம் பெற்ற நிகழ்வானது.

Share:

Sunday, September 17, 2017

சாரணர் இயக்க தலைவராக மணி வெற்றி: பாஜக எச்.ராஜா தோல்வி


தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார். இப்பதவிக்கு போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தோல்வி அடைந்தார். 

தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ம் ஆண்டு நடந்தது. தொடர்ந்து, 2013-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய தலைவர் பதவிக்கு போட்டிக்கான தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-ம் தேதி கூடி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.

தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் போட்டியிட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்தது.

தலைவர் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று காலை 10.20 மணியளவில் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு தேர்தல் நடத்தும் அதிகாரி எம்.வி.கலாவதி தலைமையில், மதியம் 2 மணி வரை நடைபெற்றது. சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 504 வாக்காளர்களில் 286 பேர் வாக்களித்தனர்.

மாலையில் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி, மொத்தம் பதிவான 286 வாக்குகளில், பி.மணி 232 வாக்குகளும், எச்.ராஜா 52 வாக்குகளும் பெற்றனர். 2 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, பி.மணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு சாரணர் இயக்க தேர்தல் தொடர்பாக பாரத சாரணர் இயக்க தலைமையகத்துக்கு பல புகார்கள் சென்றதால் நேற்று முன்தினம் மதியம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தலைமையகத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரத சாரணர் இயக்கத்தின் தேசிய ஆணையர் உத்தரவு வரும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, இந்த தேர்தல் செல்லாதுஎன்றார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பி.மணி கூறும்போது, “பள்ளிக் கல்வித்துறை உதவியுடன் சாரணர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதை பொதுமக்கள் இயக்கமாக மாற்றுவேன் எனவும் உறுதி அளிக்கிறேன்என்றார்.

  
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive