மனசோட மடல்கள்… எனது
வாழ்வில் நான் சந்தித்த பல்வேறு வகையான மனிதர்களுடனான எனது கருத்து பறிமாற்றங்கள்.
நிஜங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால்.. நீங்களும் மடல்களை வாசிக்கலாம். கருத்துக்களை
ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். - இக்வான் அமீர்
மதிப்பிற்குரிய சகோதரருக்கு,
தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக..!
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களை இம்மடல் நல்ல உடல் நிலையுடனும், வீரியமான நல்லுணர்வுகளுடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன். அதற்காக இறைவனிடம் இரு கரமேந்தி நெஞ்சுருக இறைஞ்சுகின்றேன். தங்களின் அன்பான மடல் கண்டேன். மகிழ்ந்தேன். அதேபோல, அடுத்து சொல்லப்போகும் சம்பவம் நினைவுக்கு வந்ததால்… மனதில் வருத்தமும் ஏற்பட்டது.
அது எப்போதும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கத்துறையினரின் அலுவலகம். உயர் அதிகாரி சங்கரும், அவருடைய சகாவும் அமர்ந்திருக்கிறார்கள். அலுவல் விஷயமாக பேசும் நண்பர் ஒரு மாதிரியாக காணப்படவே சங்கர், ”என்ன விஷயம்?” – என்று விசாரிக்கிறார்.
”ஒன்றுமில்லை சார்.. நாம் குழு ரீதியாக உயிரைக் கொடுத்து ஒருங்கிணைந்து பாடுபடுகிறோம். ஆனால், அந்த ருக்மிணியோ கடைசியில் தனி ஆளாக பெயரும், புகழும் தட்டிக் கொண்டு சென்றுவிடுகிறாள். கடந்த மூன்று “ரெய்டு“களை வேண்டுமானால் நினைத்துப் பாருங்களேன்! நான் சொல்ல வந்தது உங்களுக்கு விளங்கும்” – நண்பர் நெருடலை வெளிப்படுத்துகிறார்.
மூத்த அதிகாரி சங்கர், நண்பரைச் செல்லமாக கண்டித்தாலும், அவரது கருத்து மனம் முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டதை அவரால் தடுக்க முடியவில்லை.
ருக்மிணி சற்று படபடப்பான அதேசமயம், துணிச்சலான பெண். ஜுனியர் அதிகாரி. கடத்தல்காரர்களைப் பிடிக்க சுங்கத்துறையினர் விரிக்கும் வலைகளில் முன்னணியில் நின்று கடத்தல்காரர்களைப் பிடிப்பவள். இளம் வயதுக்கேற்ப அலட்சியமும் அவளிடம் அதிகம்.
ருக்மிணி மீது அவளுடைய மூத்த அதிகாரி சங்கருக்கும் தப்பான அபிபிராயம் வளர்கிறது. நேரிடையாக அதை அவளிடமே வெளிப்படுத்தவும் செய்கிறார். அதைக் கேட்டு வழக்கம்போலவே ருக்மிணி கோபப்படுகிறாள். அந்தக் கோபம் வீட்டில், கல்லூரியில் பயிலும் தங்கையிடம் என்று பல இடங்களில் வெடிக்கிறது. வருங்கால கணவனிடமும் பாய்கிறது. கடைசியில், அந்த குழப்பமான மனநிலையிலேயே வேலையையும் விட்டுவிட முடிவெடுக்கிறாள். அதன்படியே ராஜினாமா கடிதத்தை மேல் அதிகாரியிடம் சமர்பிக்கவும் செய்கிறாள்.
”ருக்மிணி… ஒரு குழுவாக செயல்படும்போது, இப்படிப்பட்ட புரிதல் இன்மைகள் உண்டாவது சகஜம்தான்.! அதை மனம் விட்டு பேசும்போது, நம்மீதுள்ள தப்பிப்ராயங்கள் எல்லாம் களைந்துவிடும். அதைவிட்டுவிட்டு…. பெரிய பிரச்னையாக நினைத்து வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளாதே… பிரச்னைகளோடு மோதக் கற்றுக் கொள். பிரச்னைகளைக் கண்டு பயப்படாமல் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொள்ள பழக்கிக் கொள். சரி. உனக்கு ஒரு நாள் அவகாசம் தருகிறேன். நன்றாக ஆலோசித்துவிட்டு அதன் பிறகு முடிவெடு!” – அறிவுறுத்தலோடு ராஜினாமாவை ஏற்க மறுக்கிறார் மேலதிகாரி.
ருக்மிணியுடன் பல சாகஸங்கள் செய்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்ற துணையாக விஷயத்தைக் கேள்விப்பட்டு அவளோடு தேனீர் அருந்த அழைத்துச் செல்கிறார்.
”ருக்மிணி… மிகப் பெரிய ஒரு லட்சியத்துக்காக நாம் குழுவாய் ஒன்றிணைந்துள்ளோம். சின்னஞ்சிறு கருத்து வேறுபாடுகளில் சிக்கி பெரிய நோக்கத்திலிருந்து விலகிவிடுவது புத்திசாலிதனமல்ல. இந்த லட்சியப் பணியிலிருந்து நீயோ, நானோ விலகிவிடுவதால்.. நஷ்டம் ஒன்றுமில்லை அல்லது இந்த அமைப்பு இழுத்து மூடப்போவதுமில்லை. அந்த இடத்துக்கு வேறு நபர்கள் வருவார்கள். மீண்டும் அந்தப் பணி தொடரவே செய்யும். அதனால், இது நமது நன்மைக்கான, லட்சியப்பணி என்பதை நினைத்துப் பார்..!” – தேனீர் அருந்திக் கொண்டே நண்பர் அறிவுறுத்துகிறார்.
முதலில் மறுத்துரைக்கும் ருக்மிணி, இரவில் தீர யோசிக்கிறாள். மேலதிகாரி, தன் வருங்கால கணவன், சக அதிகாரி சொன்ன அறிவுரைகளை அசைப்போடுகிறாள்.
கடைசியில், பிரச்னைகளுடன் போராட ருக்மிணி தயாராகிவிட்டாள். இலக்கை நோக்கி முனைப்புடன் முன்னேற முடிவெடுத்துவிட்டாள். இனி அவள் என்றும் சோர்ந்திடப்போவதில்லை. குழு ரீதியாக… கூட்டமைப்புடன் … செயல்பட தன்னை முழு அளவில் சீர்த்திருத்திக் கொள்வதே இனி அவளது முதற் பணி.
சகோதரரே! இது 29.05.1992 சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “சங்கர்ஷ்“ தொடரின் இறுதிப்பகுதி. ஒவ்வொரு இயக்கவாதியும் படிப்பினைப் பெற வேண்டிய நல்ல நிகழ்ச்சி இது.
மிகச் சாதாரண சின்னஞ்சிறு இலட்சியம் கொண்ட ஓர் அமைப்பைச் சார்ந்தவர்களிடம் எவ்வளவு கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்துடன், ஒருங்கிணைப்புடன், முழு வீச்சுடன் செயல்பட வேண்டியிருக்கிறது.
ஆனால், மிகப் பெரிய இலட்சியத்துக்காக.. மனித குலத்துக்கு வழிகாட்டுவதற்காக, அவர்களின் முன்னேற்றத்துக்காக, இறைநெறியை மேலோங்கச் செய்வதற்காக ஒன்று திரண்டிருப்பவர் நாம். அதற்காக ஒரே அணியாய் நின்று நமது சக்தி, சாமார்த்தியங்களை எல்லாம் ஒன்றுத் திரட்டி பாடுபட வேண்டியவர்கள் நாம். இந்நிலையில், இயக்கத்திலிருந்து விலக முடிவெடுத்துவிட்டேன்!” – என்று பேசுவது புத்திசாலித்தனமான செயலே அல்ல. .. ருக்மிணியைப் போல..!
ஓர் அமைப்போ, இயக்கமோ எனப்படுவது என்ன?
ஒரு கொள்கைக்காக.. அதை நிறைவேற்றும் நோக்கத்துடன் திரளும் பல்வேறு தனிநபர்கள் ஒன்று சேர்ந்து இயங்கும் குழுமம் அது. அதில் இடம் பெற்றிருப்பவர் அனைவரும் மனிதர்தான்..! அந்த இயக்கத்தின் கொள்கை, கோட்பாடுகளால் ஈர்க்கப்படும் அந்த கடைசிநேரம்வரை பல்வேறு விதமான பலவீனங்களில் மூழ்கியிருந்தவர்கள். இவர்கள் வானவர்கள் அல்ல.
தமது அமைப்பின் கொள்கையை நிறைவேற்ற பல்வேறு சூழல்களையும், பிரச்னைகளையும், சொந்த வாழ்க்கையிலும், கூட்டு சமூக வாழ்க்கையிலும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்வளவு அர்ப்பணங்களுக்கு மத்தியில், அவர்கள் முன்வரும் நிலையில், அதைக் கண்டு மகிழ்ச்சியடையாமல், எப்பாடுபட்டாவது அதற்கு ஒத்துழைப்புத் தராமல் .. இயக்கத்தார் மத்தியில் நிலவும் பலவீனங்களை களைந்திட இறைவனிடம் இறைஞ்சாமல், ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு, விதவிதமான கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு மனம் போன போக்கில் செயல்பட்டால் மந்திரத்தால் மாங்காய் விழாது… சகோதரரே… மந்திரத்தால் ஒருகாலும் மாங்காய் விழாது..!
பார்த்தவுடனேயே இயகத்தின் பக்கம் ஈர்க்கப்பட வேண்டுமென்றால், சற்று மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்…. ”என்ன.. அந்தத் தகுதி முதலில் நம்மிடம் இருக்கிறதா?” ஒரு தலைவர் செய்வது தவறுதான்! ஆனால், அதே தவறை தொண்டர் செய்வதும் சரியாகிவிடாதே..! நாம் எப்போது நம்மைச் சீர்த்திருத்திக் கொள்ளப் போகிறோம்? ஒரு வளரும் இயக்கத்தின் ஆரம்ப பயணமிது. நிறைய குறுக்கீடுகள், இடர்பாடுகள், குறைகள் இருக்கலாம். கருத்து வேறுபாடுகள் ஏராளமாக எழலாம். ஆனால், அவற்றைப் பெரிது படுத்தி கொள்கையை, குறிக்கோளை கைவிட்டுவிடக் கூடாது.
காலம் சென்ற மர்ஹும் அலி அஹ்மது சௌத்ரி (ரஹ்) ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அவர் சொல்கிறார்: ”இந்த நாட்டில் இயக்கப் பணிகள் முதல் தரத்தை அடையாவிட்டால்… மாதத்தின் 25 நாட்களை என்னுடைய சுயசீர்த்திருத்தத்துக்காக செலவழிக்கத் தயார்!”
எத்தனை மகத்தான் சொற்கள் இவை! நாம் இப்படி என்றேனும் சிந்தித்ததுண்டா..?
நபிகளார் இறைவனின் திருத்தூதர். சத்தியவான். உண்மையாளர். ஆனாலும், அவரது போதனைகள் உடனே செவிமடுக்கப்பட்டனவா? அவை மக்களின் இதயங்கைளைத் தொட, இருபத்து மூன்று ஆண்டுகள் அல்லவா ஆனாது! இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை எத்தனை துன்பங்கள்..! துயரங்கள்…! தியாகங்கள்..! உயிரிழப்பு அர்ப்பணங்கள்…! இவற்றின் ஒரு சிறு பகுதியை நாம் ஏற்கத் தயாரா? ஆம்.. என்றால்… நம்புங்கள்.. இயக்கம் வளர்ந்துவிட்டது என்று..!
மறுபடியும் நினைவூட்டுகிறேன்:
- பல தனிநபர்களால் கட்டப்பட்ட அமைப்புதான் இயக்கம் என்பது.
- ஒவ்வொரு தனிநபரின் தூய எண்ணத்தின் அடிப்படையிலான உழைப்பு, முயற்சி, அர்ப்பணம் இவற்றின் வழியேதான் இயக்கம் முன்னெடுத்து செல்லப்பட்டு வெற்றி இலக்கை எட்ட முடியும்.
- தனி நபரின் பலவீனங்களை, குறைபாடுகளை பெரிது படுத்த வேண்டாம்.
- அவரின் மற்றொரு புறத்திலுள்ள வலிமைகளைப் பாருங்கள்.
- குற்றங் குறைகளை மன்னித்துவிடுங்கள்.
- குறையுள்ள மனிதருக்காக வருத்தப்படுங்கள். அவர் தம்மைச் சீர்த்திருத்திக் கொள்ள நளினமாக சுட்டிக் காட்டுங்கள்.
- அவருக்காக இறைவனிடம் இறைஞ்சுங்கள்..!
நபிகளார் வலியுறுத்தியுள்ள முக்கியமான ஐந்து விஷயங்கள் திர்மிதியில் பதிவு செய்யப்பட்டிருப்பவை:
1. கூட்டமைப்பு
2. செவியேற்றல்
3. கீழ்ப்படிதல்
4. ஹிஜ்ரத் செய்தல்
5. அறப்போர் புரிதல்
கூட்டமைப்பு இல்லாமல் இஸ்லாம் இல்லை என்கிறார் நபித்தோழர் உமர். கோபத்தால் தனித்து ஒதுங்கியிருந்து இறைக் கோபத்திற்கு ஆளாக வேண்டாம். ஒன்று இயக்கத்துடன் இணைந்து உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுங்கள் அல்லது உங்களுக்குப் பிடித்த இயக்கத்துடன் இணைந்து இந்த பொறுப்புகளை நிறைவேற்றுங்கள்.
கருணையுள்ள இறைவன் நம் பாவங்களையும், பிழைகளையும் மன்னிப்பானக! ஈருலகிலும் வெற்றியைத் தந்தருள்வானாக! உலகெங்கும் அமைதித் தவழ நம்மை வழிநடத்துவானாக!
அன்புடன்,
இக்வான் அமீர்.
0 comments:
Post a Comment