இறை நம்பிக்கையாளர்கள் பரஸ்பரம் தங்களுக்கிடையே அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொள்ள ஒரு அழகிய வாழ்த்து மொழியை திருக்குர்ஆன் சொல்கிறது. இரண்டு உள்ளங்களின் பிணைப்புக்கான அழகிய பிரார்த்தனையான அதை ஒருவர் மற்றவரின் நலம்நாடிப் பிரார்த்திக்க வேண்டும். ஒருவர் “அஸ்ஸலாமு அலைக்கும்!”, அதாவது உங்கள் மீது சாந்தி நிலவட்டும் என்று கூற, அடுத்தவர் “வ அலைக்கும் சலாம்!”, உங்கள் மீதும் சாந்தி நிலவட்டும்! என்று பதிலாய்ச் செய்ய வேண்டிய பிராத்தனை அது.
“நீங்கள் இறை நம்பிக்கையாளராய் ஆகும்வரை சுவனம் புக மாட்டீர்கள். நீங்கள் உங்களிடையே அன்பு பாராட்டாதவரை இறைநம்பிக்கையாளராய் ஆக மாட்டீர்கள். நீங்கள் உங்களுக்கிடையே அன்பை அதிகரித்துக்கொள்ளும் வழிமுறையொன்றை நான் கற்றுத் தரட்டுமா? நீங்கள் உங்களுக்கிடையே சலாத்தைப் பரப்புங்கள்” என்று நபிகளார் அறிவுறுத்துகிறார்.
அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஒருவர் சொல்லும்போது, பதில் முகமனாய் சலாம் கூறுபவரும் இத்தனை உட்பொருளையும் உள்வாங்கி பதிலளிக்கும்போது அன்பு, அமைதி, சாந்தியின் ஊற்றான இறைவனின் பேரருள் முதலில் சலாம் சொன்னவர் மீதும் பொழிகிறது.
இறைவனின் திருநாமங்களில் ஒன்றான அஸ்ஸலாமை அதிகதிகமாகப் பரப்பும்படி நபிகளார் அறிவுறுத்துகிறார்: “அஸ்ஸலாம் இறைவனின் திருநாமங்களில் ஒன்று. பூமியில் வசிப்போருக்காக அதை இறைவன் தேர்ந்தெடுத்துக்கொண்டான். அதனால், சலாத்தை அதிகம் பரப்புங்கள்!”
இறை நம்பிக்கையாளர்களின் உயிர் பறிக்கும் அந்த இறுதி தருணத்தில் வானவர்கள் சலாம் எனப்படும் இந்த வாழ்த்துரையைத்தான் கூறுவார்கள் என்கிறது திருக்குர்ஆன். அதேபோல, சுவனவாசல்களில் இந்த வாழ்த்துரையோடுதான் சுவனவாசிகள் வரவேற்கப்படுவார்கள். சுவனத்தின் எட்டுத் திக்கிலும் சலாம்.. சலாம் என்ற வாழ்த்துரைதான் கேட்டவாறு இருக்கும் என்கிறது திருக்குா்ஆன்.
ஒருமுறை ஒருவர் நபிகளாரிடம் வந்து, “இறைவனின் திருத்தூதரே! “இஸ்லாத்தில் சிறந்த செயலொன்றை எனக்குக் கூறுங்கள்!” என்று கேட்டார்.
“ஏழைகளுக்கு உணவளிப்பதும், அவர் தெரிந்தவராக இருந்தாலும், தெரியாதவராக இருந்தாலும் அவருக்கு சலாம் கூறுவதும் மிகச் சிறந்த செயல்களாகும்!” என்று நபிகளார் அதற்கு பதிலளித்தார்.
நபித்தோழர் துஃபைல் தமது அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறார்.
“நான் அப்துல்லாஹ் பின் உமர் (ஜனாதிபதி உமரின் மகன்) அவர்களின் அவைக்கு அடிக்கடி செல்வேன். அவருடன் சேர்ந்து கடைவீதிக்கும் செல்வேன். அப்படிச் செல்லும்போது, எங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் அப்துல்லாஹ் பின் உமர், சலாம் சொல்வார். அவர் சாதாரண மனிதராக இருந்தாலும் சரி, ஒரு வணிகராக இருந்தாலும சரி அல்லது ஏழைபாழையாக இருந்தாலும் சரியே!
ஒருநாள் நான் அவருடைய அவைக்குச் சென்றிருந்தேன். வழக்கம்போல கடைவீதிக்குச் செல்ல என்னை அப்துல்லாஹ் பின் உமர் அழைத்தார். எனது நீண்ட நாள் சந்தேகம் ஒன்றை அப்போது கேட்கும் வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக்கொண்டேன். “நண்பரே! கடைவீதிக்குச் செல்லும் நீங்கள் எதையும் வாங்குவதில்லை! எந்தப் பொருளின் விலையையும் கேட்பதுமில்லை! அங்குள்ள மக்களோடு அமர்ந்து உரையாடுவதுமில்லை. பிறகு எதற்குதான் கடைவீதிக்கு செல்கிறீர்கள்?”
“நாம் கடைவீதிக்கு வரும் மக்களுக்கு சலாம் சொல்லத்தான் செல்கிறோம் நண்பரே.. வாருங்கள் போகலாம்!” என்று புன்னகையுடன் அப்துல்லாஹ் பின் உமர் என்னை அழைத்துச் சென்றார்.
‘சலாம் சொல்வதில் கஞ்சனாய் இருக்க வேண்டாம்!’ என்று மற்றொரு நபித் தோழர் அபூஹுரைராஹ் அறிவுறுத்துகிறார்.
“சலாம் சொல்வதில் முந்திக் கொள்பரே இறைவனின் நெருக்கத்திற்கு உரியவர் ஆவார்!” என்கிறார் நபிகளார்.
“சாந்தி நிலவட்டுமாக!”
(26.05.2016 அன்றைய தி இந்து, ஆனந்த ஜோதியில், பிரசுரமான எனது கட்டுரை)
0 comments:
Post a Comment