வங்கதேசத்து பிரதான எதிர்கட்சி ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் பேரறிஞர் மோதியுர் ரஹ்மான் நிஜாமி (72) தூக்கிலிடப்பட்டார். (அந்த ஆன்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர்ந்தது!) பெரும் சர்ச்சைக்குரிய வங்கதேசத்து போர்க்குற்றங்களுக்கான நடுவர் நீதிமன்றம் அளித்த அரசியல் காரணங்களுக்கான இந்த தீர்ப்பையொட்டி செவ்வாய் கிழமை நள்ளிரவு அவரது தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1971-ல், நடந்த அன்றைய மேற்கு பாகிஸ்தான் பிரிவினைப் போரின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்ததாகவும், போர்க்குற்றங்கள் புரிந்ததாகவும் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் மோதியுர் ரஹ்மான் நிஜாமியின் மீது 2014-ம், ஆண்டு குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
2013-ம், ஆண்டிலிருந்து அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து முக்கியத் தலைவர்களில் ஒருவரான மோதியுர் ரஹ்மான் நிஜாமி ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவராவார்.
போர்க்குற்றங்கள் சம்பந்தமாக இதுவரை குற்றம் சாட்டப்பட்டுள்ள 16 பேரும் வங்கதேசத்தின் பல்வேறு முக்கிய எதிர்கட்சிகளைச் சேர்ந்த பெருந்தலைவர்கள் என்பது முக்கியமானது.
மோதியுர் ரஹ்மான் நிஜாமி அவருக்குரிய அற்புதமான உறைவிடத்தை தன் இறைவனிடம் பெற்றுகொண்டார்.
கொலைவெறிப்பிடித்த ஆட்சியாளர்கள் முன் மண்டியிடாமல், உயிர்பிச்சைக் கேட்டு கருணை மனு செய்யாமலும் ஓர் இலட்சிய வீரனாகவே அவர் தூக்குமேடையில் நின்றார்.
மரணம் என்பது குடும்பத்தினருக்கு, உற்றார், உறவுகள், அன்பு உள்ளங்களுக்கு மட்டும் தீராத இழப்பைத் தரும் என்பதே உண்மை.
ஆனால், இன்னும் சில மரணங்களோ வரலாற்றில் நீங்காத இடம் பெறுகின்றன. உலகம் முழுமைக்கும் காலந்தோறும் இளம்தலைமுறையினருக்கு எழுச்சியைத் தருகின்றன. அத்தகைய பேறு பெற்ற மரணம் மோதியுர் ரஹ்மான் நிஜாமிக்கு அமைந்தது இறையருள் அன்றி வேறென்ன?
இந்தத் தருணத்தில், அன்பு நபிகளாரின் இந்த அறிவுரை நினைவில் எழுகிறது:
”இஸ்லாம் என்னும் இயந்திரம் சுழன்று கொண்டிருக்கிறது. எத்திசை நோக்கி திருக்குா்ஆன் சென்று கொண்டு இருக்கிறதோ, அத்திசை நோக்கி நீங்களும் திரும்பிக் கொள்ளுங்கள்.
வெகுவிரைவில் ஒரு காலம் வரும்.
அப்போது, திருக்குா்ஆனும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் தனித்தனியே பிரிந்துவிடுவார்கள்.
(எச்சரிக்கை, அப்போது) நீங்கள் திருக்குா்ஆனை எந்நிலையிலும் கைவிட்டுவிடாதீர்கள்.
(மேலும்) வரும்காலங்களில் உங்கள் மத்தியில் எத்தகைய ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள் என்றால்… அவர்கள் உங்களைக் குறித்து தீர்ப்புகளை மேற்கொள்வார்கள். அவர்களை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை வழி பிறழச் செய்துவிடுவார்கள். மேலும், நீங்கள் அவர்களுக்கு மாறு செய்தாலோ, அவர்கள் உங்களை கொன்று விடுவார்கள்.
நபிகளார் இவ்வாறு கூறியபோது, அவர்களின் தோழர்கள் கேட்டனர்:
”இறைவனின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்வது?”
அன்பு நபிகளார் பதிலளித்தார்கள்:
”ஈஸா (அலை) – (இயேசு பிரான்) அவர்களின் தோழர்கள் செய்ததையே நீங்களும் செய்து கொள்ளுங்கள்!
அவர்கள் இரம்பத்தால் அறுக்கப்பட்டார்கள். தூக்கிலிடப்பட்டார்கள்.
இறைவனுக்கு மாறு செய்து கொண்டு உயிர்வாழ்வதைவிட இறைவனின் கட்டளைகளை சிரமேற்கொண்டு அந்தப் பாதையில் உயிர் நீப்பதே மிகவும் மேன்மையான செயல்!” (ஆதாரம் முஸ்லிம்)
0 comments:
Post a Comment