NewsBlog

Saturday, May 14, 2016

எனது பார்வையில்: நாகூரான் வாக்கு யாருக்கு?


 நாகூரான் என்றதும் முஸ்லிம் என்று கருதிவிட வேண்டாம். குழந்தை இல்லாத ஒரு தலித் தம்பதிக்கு நாகூராரை வேண்டி பிறந்த குழந்தையாதலால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. ஒரு கையில் புட்டி தண்ணீர், மறு கையில் ஒரு கழி, தலைப்பாகை சகிதமாக அந்த நண்பகல் வெய்யிலில் ஆட்டு மந்தையுடன் வந்த நாகூரான் அந்தப் பகுதியின் நடமாடும் வரலாற்று புத்தகமாக இருந்தார். அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிவந்த மேய்ச்சல் நிலம் அனல் மின்நிலைய விரிவாக்கத்துக்காக அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. - இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அதிகாலை நடை பயிற்சி முடித்துவிட்டு, உறவினரின் ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். ஹோட்டல்கள், டீக்கடைகள் இவையெல்லாம் வாய்மொழி ஊடகங்கள். உண்மையான கருத்து கணிப்புகளுக்கு ஏற்ற இடங்கள். நடுத்தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் கூடும் இடமாகையால் நாட்டு நடப்புகள் இங்கு உடனுக்குடன் பிரதிபலிக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இன்று அமைதிதான் காணப்பட்டது. நடைபெறவிருக்கும் தேர்தல்கள் சம்பந்தமாக வலிய பேச்சுகொடுத்தும் யாரும் பிடிகொடுத்து பேசுவதாக காணோம். “கமுக்கமாக“ தேர்தல்கள் முடிவுகள் தீர்மானிக்கப்படவிருக்கின்றன என்பதற்கான அறிகுறி இது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிகிறது.  மாலை 6 மணிக்குப் பின் யாரும் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 776 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேரும் குறைந்த பட்சமாக, ஆற்காடு, கூடலூர், மயிலாடுதுறையில் தலா 8 பேரும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 9-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கி, 12-ம் தேதி நெல்லையில் முடித்தார். இதேபோல், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்தனர். தங்கள் கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பா.ஜ வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல இடங்களில் வாக்கு சேகரித்தனர்.

மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடப்பதையொட்டி, தேர்தல் விதிகளின்படி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் பிறகு எந்த வகையிலும் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும், மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும் பிரச்சாரத்தை முடிக்கின்றனர். கனிமொழி திருச்சியிலும், வைகோ தூத்துக் குடியிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி, மணலி, திருவொற்றியூர் மற்றும் வேளச்சேரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுதவிர, அன்புமணி ராம தாஸ் தான் போட்டியிடும் பென்னாகரத்திலும், காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையிலும் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்கின்றனர்.

இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மட்டுமின்றி ஊடகங்களும் கண் காணிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணிக்கு மேல் 16-ம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை, முகநூல் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் உட்பட தேர்தல் தொடர்பான எந்த விளம்பரமும், பிரச்சாரமும் கூடாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் விதிமீறலில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகி றது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்?

ஒருமுறை மூத்த இதழியாலாளரான சகோரர் சிராஜுல் ஹஸனின் முகநூல் பதிவொன்றுக்கு பின்னூட்டமிடும்போது அவர், ”இக்வான்.. நீங்கள் எந்த கட்சி?” - என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த நேரத்தில் நான் மௌனம் சாதிக்க வேண்டியிருந்தது. இப்போது நான் அந்த கேள்விக்கு பதில் சொல்லிவிடுகின்றேன்.

80-கள்வரை நான் இடதுசாரி அமைப்பின் முன்னணி ஊழியன். ஆசியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தில் நான் முழு நேர பணியாளனாக இருந்ததாலும், இளமையை கடும் வறுமையில் கழித்ததாலும் இயல்பாகவே நான் சுரண்டலுக்கு எதிராக என்னைத் தீட்டிக் கொள்வது தவிர்க்க இயலலாததாக இருந்தது.

80-களுக்கு பிறகு, இஸ்லாம் பரிச்சயம், பிறகு அதற்கு ஒப்புக் கொடுத்தது என்று சித்தாந்த ரீதியாக நான் வேறு முகாமுக்கு புலம் பெயர்ந்தாலும், இதுவரையிலும் நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லை. எந்த கட்சியின் ஆதரவாளனும் இல்லை. எந்தக் கட்சியின் சார்பாளனும் இல்லை.

இந்தியாவில் உள்ள கட்சிகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு மாற்று வழிமுறை என்னிடம் உள்ளது. அதனால் மட்டுமே இன்றைய அமைப்பை மாற்றி முற்றிலும் வேறொரு அமைப்பை நிறுவ முடியும் என்பதிலும் அசைக்க முடியாத ஆதராமும் என்னிடம் உள்ளதால் பிற கட்சிகளுக்கு ஊதுகுழலாக, வழக்குரைஞராக அல்லது எனது தலைவர் நபிகளாரை பிற்படுத்தி பிற கட்சிகளின் தலைவர்களை முற்படுத்தி எனது “ரஸீலாக“ அதாவது எனது வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும்  அவசியமும் எனக்கில்லை. இது இந்திய கட்சிகள் அனைத்துக்கும் பொருந்தும்.

நான் ஒரு இஸ்லாமியவாதியாகவே இருப்பேன். இறைவன் நாடினால், இஸ்லாமியவாதியாகவே மரணிப்பேன். நான் எந்தக் கட்சி என்பதற்கு விடை இதுவே.

இந்த கட்டுரை ஊடே இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று உங்கள் புருவங்கள் எழலாம். காரணம் உள்ளது. இந்தத் தேர்தலில் யார் வெல்வார்கள்? என்று எனது கருத்தை அறிவிக்க இருக்கும் தருணத்தில் என் மீது யாரும் சார்பு முத்திரை குத்திவிடக் கூடாது என்பதற்காவே இந்த விளக்கம்.

2014-ம், ஆண்டு, விழிகள் வெளிப்புற படப்பிடிப்புக்காக, சென்னைக்கு வடக்கே ஏறக்குறைய ஒரு முப்பது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் காட்டுப்பள்ளிக்கு சென்றிருந்தபோதுதான் முதன் முதலாக நாகூரானை சந்தித்தேன். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=tpixA1-gGY8)

நாகூரான் என்றதும் முஸ்லிம் என்று கருதிவிட வேண்டாம். குழந்தை இல்லாத ஒரு தலித் தம்பதிக்கு நாகூராரை வேண்டி பிறந்த குழந்தையாதலால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. ஒரு கையில் புட்டி தண்ணீர், மறு கையில் ஒரு கழி, தலைப்பாகை சகிதமாக அந்த நண்பகல் வெய்யிலில் ஆட்டு மந்தையுடன் வந்த நாகூரான் அந்தப் பகுதியின் நடமாடும் வரலாற்று புத்தகமாக இருந்தார். அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிவந்த மேய்ச்சல் நிலம் அனல் மின்நிலைய விரிவாக்கத்துக்காக அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே சுற்றியும் எண்ணூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின்நிலையங்கள். இவை போதாதென்று நூற்றுக் கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு காட்டுயிரிகள் உயிரிழக்கும் அபாயம். ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்கள் பாரம்பர்ய மீன்பிடித் தொழில் இழக்கும் அபாயம். அனல் மின்நிலைய நிலக்கரி சாம்பல் கழிவால் பாதரசம் வெளிப்பட்டு பூமி மலடாகி நச்சு வடிவாகிப் போகும் அபாயம். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg)

இத்தகைய சூழல்மாசுவின் அபாயங்கள் சுற்றிப் படர்ந்துள்ள பூமியில்தான் நாகூரானை சந்தித்தேன். அதையெல்லாம் அறிந்து கொள்ளும் கல்வி அறிவு  அவரிடம் நான் எதிர்பார்க்க முடியாது. உண்மையும் அதுதான். அந்த ஆபத்துகள் ஏதும் நாகூரானுக்கு தெரியவில்லை. கடைசியாக விடை பெறும்போது, அவர் கட்டியிருந்த  கரை வேட்டியை சுட்டிக் காட்டி அவரது வாக்கு யாருக்கு என்று கேட்டபோது, அவர் பளிச்சென்று பதில் சொன்னார்.




அண்மையில், அதே காட்டுப்பள்ளியைத் தாண்டி காளாஞ்சி கிராமத்தில் காட்டுயிரி ஆய்வுக்காக சென்றிருந்தேன். அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த நாமக்கல் பகுதியைச் சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்த அந்த ஏழை உழைப்பாளிகளை அவர்கள் விருப்பப்படி படமெடுத்து முடித்தேன். கடைசியாக, ”உங்கள் வாக்கு யாருக்கு?” - என்று கேட்டபோது அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாகூரான்  சொன்ன அதே பதிலைதான் பளிச்சென்று சொன்னார்கள்.

”நாங்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இரட்டை இலைதான் சாமி!”

ஒரு நாகூரானோ, ஒரு சில ஏழை தொழிலாளர்களோ மட்டும் சொன்ன கருத்துக்கள் அல்ல இவை. வாரத்தில் இரண்டு முறைகள் காட்டுயிரி ஆய்வுக்காகவும், தினமும், ஒளிப்படங்களுக்காகவும் செல்லும் பல பகுதிகளில் நான் சந்தித்த மீனவ மக்கள், இருள இன ஏழைபாழைகள், ஒடுக்கப்பட்டோர், விவசாய கூலிகள் மற்றும் நடுத்தர மக்கள் இவர்கள் எல்லாம் தெரிவித்த ஒரே சின்னம் இரட்டை இலை.

ஆக, இறைவன் நாடினால், ஜெயலலிதா வெல்வது உறுதியாகிவிட்டது. ஜெயலலிதா அம்மையாருக்கு எனது வாழ்த்துக்கள்!

இதில் எரிச்சல் அடையவோ, வேதனைப்படவோ காரணம் ஒன்றுமேயில்லை! மக்களைப் போலதான் அவர்களின் தலைவர்களும் அமைவார்கள். இதுதான் இயக்கவியல் விதி.

இன்று காலையில்கூட எனது இல்லத்தரசியுடன் தேர்தல்கள் சம்பந்தமாக நடந்த உரையாடலில் இடையில் வந்த எனது மகள் ஒருவரை ”ஊத்திக் கொடுத்த உத்தமி” என்று விமர்சிக்கிறார்கள். சரி. அப்போ ஊத்திக் கொடுக்க சாராய ஆலைகளை திறந்து வைத்திருக்கிற மற்றொருவரை ”ஊத்திக் கொடுக்க சீரழிக்கும் உத்தமர்கள்!“ – என்று சொல்லலாமா அப்பா?” என்றாள்.

இருப்பவரில் சற்று மேலானவர்தான் ஆட்சி அதிகாரத்துக்கு வருவார்கள் என்பதே உலக வரலாறு.

''''''''''''''''''''''
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive