“உயிருடனிருந்தபோது பூரண நிலவாய் தகதகத்தது போலவே, இப்போதும் நான் உங்களைக் காண்கிறேன் எனதருமைத் தோழரே!"~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''
“தொழுகை.. தொழுகை.. தொழுகை..பணியாட்கள்… பணியாட்கள்.. பணியாட்கள்.. பெண்கள்.. பெண்கள்.. பெண்கள்..”நேரம் செல்ல.. செல்ல கனக்க ஆரம்பித்தது அந்த பொன்னுடல்.
மூச்சுவிட மிகவும் சிரமமான அந்நிலையிலும், தொழுகையை அதற்குரிய பேணுதலுடன் நிறைவேற்றும்படியும், பணியாட்களின் உரிமைகளைப் பேணும்படியும், பெண்ணுரிமைகளை அளித்து அவர்களைப் போற்றும்படியும் வார்த்தைகள் உதிர்கின்றன.
கடைசியான அந்த தருணம் வரவும் செய்தது.
“உயரிய தோழனான இறைவனிடமே மீள்கிறேன்!”
– என்று மும்முறை அசைந்த அதரங்கள் அதன்பின் மௌனமாயின.
பேரருள் சுமந்துவந்த கண்கள் காரிருளில் கரைந்தன.
நபிகளாரை தமது மடியில் சுமந்திருந்த அன்னை ஆயிஷாவின் விழிகள் அருவியாயின.
இறைவனின் திருத்தூதர் காலமான செய்தி மதீனா பெருநகரெங்கும் நொடியில் எரிதழலாய் பற்றிப் படரியது.
நம்பியும், நம்ப முடியாமலும் திகைத்துப் போன அந்த தோழமை உள்ளங்கள் “எழுந்து வாரும் எமதருமைத் தலைவரே..!” என்று நெஞ்சம் ஓலமிட பதறி அடித்துக் கொண்டு அன்னை ஆயிஷாவின் இல்லம் நோக்கி விரைந்தன.
நபித்தோழர் உமர் அவர்களோ, வாளை உருவிக் கொண்டார். “இறைவனின் தூதர் காலமானார் என்றுரைப்போரின் தலையைத் துண்டிப்பேன்!” - என்று பம்பரமாய் சுற்றிச் சுழல ஆரம்பித்தார்.
இது மக்கள் மத்தியில் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்த அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
இந்நிலையில் இறைத்தூதர் காலமானதை அறிந்து நேராக அருமை மகளார் அன்னை ஆயிஷாவின் இல்லத்தை நோக்கி விரைந்தார் தோழர் அபூபக்கர். நபிகளாரின் பொன் முகத்தை இமைக்காமல் நோக்கினார்.
“உயிருடனிருந்தபோது பூரண நிலவாய் தகதகத்தது போலவே, இப்போதும் நான் உங்களைக் காண்கிறேன் எனதருமைத் தோழரே! இறைவனின் திருத்தூதரே, “தாங்கள் மரணமுற்றது உண்மைதான்..!” – என்று கனத்த இதயத்துடன் கூறியவாறு நபிகளாரின் நெற்றியில் முத்தமிட்டார். துணியால் நபிகளாரின் திருமுகத்தை போர்த்திவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்தார்.
வீட்டுக்கு வெளியே தமது தோழர் உமர் நபிகளாரின் பேரிழப்பை தாங்க இயலாமல் வாளை உருவிக் கொண்டு அங்கும், இங்குமாய் வேட்டைச் சிங்கமாய் நடந்து கொண்டிருப்பதைக் கண்டார். அவரை அமரும்படி கேட்டுக் கொண்டார். பிறகு மக்களிடம் சொன்னார்:
“மக்களே, நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்; இறைவனின் திருத்தூதரை வணங்குபவர்கள் இங்கு யாராவது இருந்தால் அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.. நபிகளார் இறந்துவிட்டார். மாறாக, இறைவனை வணங்குபவர்கள் இருந்தால் அவர்கள் அறிந்து கொள்ளட்டும்… இறைவன் பிறப்பு, இறப்பு அற்றவன். அவன் மரணமில்லா நித்திய ஜீவன்..!”
– இந்த பிரகடனத்துக்கு பின் நபித்தோழர் அபூபக்கர் தொடர்ந்து உரையாற்றினார். மக்களின் இறைநம்பிக்கையை வலுப்படுத்தினார்.
நபித்தோழர் அபூபக்கரின் இந்த பிரகடனத்தைக் கேட்டு நபித்தோழர் உமர் வாளை வீசி எறிந்து அழுது புலம்பலானார்.
மதீனா பெருநகர் முழுவதும் கண்ணீர் சூழ்ந்து கொண்டது.
0 comments:
Post a Comment