NewsBlog

Wednesday, July 18, 2018

ஒரு தீயாய் எழு மகளே..!



மிகச் சுருக்கமாக சொல்லப்போனால், ஓர் ஆண் மகனுக்கு தாயான 34 வயதான கூட்டுக்குடும்பத்தில் வாழும், பெண்ணொருத்தி தனிக்குடித்தனம் போக விரும்புகிறார்.

அதற்கு கணவன் உடன்படவில்லை. மறுக்கிறார். அடிக்கவும் செய்கிறார்.

இத்தகைய சூழல்களில் கணவனை விட்டு பிரிந்துவிட நினைக்கிறார் மனைவி.

ஆனால், தானாக மணவிலக்கு பெற்றுக் கொண்டால் ஒன்றும் கிடைக்காது அதனால் கணவன் மணவிலக்கு அளித்தால் ஜீவனாம்சம் கிடைக்கும் என்ற நினைப்பில் இருக்கிறார் அவர். பிரிந்து சென்றால் மறுமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்றும் சொல்லி தன்னிடம் ஆலோசனைக் கேட்டதாக  Nasrath S Rosy Nsr ஒரு https://www.facebook.com/rosyrascalring/posts/2041841332517129 பதிவிட்டிருந்தார்.

நேரிடையாக சொல்ல வேண்டுமென்றால்… பெண்ணுரிமைகள் சம்பந்தமான இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்தவர்கள் அனைவரும் ஆண்கள்.

•    சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நல்ல மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை.
•    பொறுத்துக் கொள்ள சொல்லுங்கள்.
•    ஊர் சுற்ற நினைக்கும் பெண்ணுக்கு அறிவுரை சொல்லுங்கள்.
•    பேராசைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்

இப்படி தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ஏக அறிவுரைகள்

அவரவர் பார்வையில், கருத்துக்களும், அறிவுரைகளும் வரைந்திருந்தார்கள்.  ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்ட அந்த சகோதரியின் பிரச்னையை உள்வாங்கி, விவாதிக்க முன்வரவில்லை. 

இந்த மனோநிலை முகநூலில் மட்டுமல்ல. பொதுவிலும் இப்படிதான் நடைமுறையில் உள்ளது.

பெண்கள் சம்பந்தமாக பள்ளிவாசல்களுக்கு வரும் குடும்ப வழக்குகளை விசாரிக்க மிடுக்காய் அமரும் ஜமாஅத் நிர்வாகிகளில் ஒருவர்கூட பெண்களாய் இருப்பதில்லை.  விஷய ஞானமுள்ள ஒரு பெண்ணிடமும் அந்தப் பிரச்னை குறித்து ஜமாஅத் நிர்வாகிகள் விவாதிப்பதுமில்லை.

பிறகு அந்தப் பிரச்னைக்கு பெண்ணீய மனோநிலையில் எப்படி தீர்வு காண முடியும்? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் எப்படி வழங்க முடியும்?

இதில், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்து வானளாவிய சொற்பொழிவுகள் வேறு!

இந்த நடைமுறை சிக்கல்களோடு 14 நூற்றாண்டுகள் கடந்து இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது அருள் நபி கொணர்ந்த மார்க்கம்.

பெண்கள் தனிக்குடித்தனம் போக விரும்பினால்… அதற்கு ஏற்பாடு செய்வது கணவனின் கடமையா? இல்லையா?

இந்தக் கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்ல இந்த சமூகம் ஏன் மழுப்புகிறது?

ஒரே பேராத்மாவிலிருந்து வெளிப்பட்டவர்கள் ஆண், பெண் என்பது உண்மையானால், பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் என்ற வழிகாட்டுதல்களைத் தவிர இவர்களில் மேலானாவர், கீழானவர் என்ற பாகுபாடெல்லாம் எதற்கு? ஆணாதிக்கம் எதற்கு?


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Pages

Labels