NewsBlog

Wednesday, July 18, 2018

சனிக்கிழமைக்காரர்கள்

தான் வாழும் சமூகத்தில் தீமைகள் மிகைத்திடும்போது அல்லது நல்வழி தெரியாமல் மக்கள் தவிக்கும்போது, அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதும், நல்வழிக்கான நேர்வழிப்படுத்துவதும் அந்த சமூகத்தில் வாழும் நல்லவர்களின் கடமையாகும் அதிலும் குறிப்பாக அறிவுஜீவிகளின் பொறுப்பாகும்.

இந்தக் கடமையுணர்வுக்கும், பொறுப்புணர்வுக்கும் அச்சுறுத்தல் தற்போது தமிழகத்தில் எழுந்துள்ளது. 'போராட்டங்களைத் தூண்டிவிடுவோர் கடுமையாக ஒடுக்கப்படுவர் என்று சட்டமன்றத்தில் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது விந்தையாக உள்ளது.

இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுத்துகளும் தனது இருத்தலுக்காக போராடதான் வேண்டியிருக்கிறது.. நமது உடல் உட்பட. போராட்டமில்லாத நேரம் மரணமின்றி வேறில்லை. அந்த மரணத்தின் ஜடமாய் தெரியும் உடலையும் புழு-பூச்சிகள் போராடி மக்க வைக்க வேண்டியுள்ளது என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

எட்டுமணி நேர வேலைக்காக போராடிதான் உரிமைகள்  பெற வேண்டியிருந்தது. நாட்டு விடுதலைக்காக வெள்ளையனுக்கு எதிராக மண்டையுடைந்தோர், நெஞ்சு துளைக்கப்பட்டோர், தூக்கு மேடை ஏறியோர் என்று இந்தியர்கள் செய்த தியாகம் விலை மதிப்பற்றதாய் விடுதலையானது!

நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இத்தகைய ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்போர் யார்? இந்த அணுகுமுறை எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதா? மக்களின் உரிமைகளைப் பறித்தலாகாதா? என்ற கேள்விகளும், கவலைகளும் தொற்றிக் கொள்கின்றன.

இந்த சந்தர்பத்தில் திருக்குர்ஆனின் 'சனிக்கிழமைக்காரர்கள்' என்று பிரசித்திப் பெற்று வழங்கப்படும் இந்த வரலாற்று சம்பவம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கருதி அதை பதிவிடுகிறேன். இந்த வரலாறு வெறும் மக்களின் மனோநிலையை மட்டும் பிரதிபலிப்பதல்ல.. ஆட்சியாளர்கள் உட்பட படிப்பினைத்தருவது.-இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கடற்கரையோரம் அமைந்திருந்த அந்த பட்டினத்தின் பெயர் அய்லா என்பதாகும். போக்குவரத்து முதலான எல்லா வசதிகளும் கொண்ட பெரு நகரம் அது.

மீன்பிடித்தல் முக்கியத் தொழிலாகக் கொண்ட அய்லாவாசிகள் நல்ல வசதியுடன் வாழ்ந்தார்கள். அறிஞர்களும், அறிவாளிகளும் சமுதாயத்தில் மிகைத்திருந்தார்கள். சனிக்கிழமை அவர்களுக்கு சிறப்பு நாளாக இருந்தது.

புனித சனிக்கிழமையில் இறைவழிப்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். உலகப் பணிகளில் அறவே ஈடுபட கூடாது. வணிகம், வேளாண்மை, வேட்டை இவை அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தன. பணியாட்களிடம் வேலை வாங்கக் கூடாது. அடுப்பெரிக்கவும் கூடாது என்று கடுமையான சட்டங்களும் அமலில் இருந்தன. சட்டங்களை மீறுவோர் தண்டிக்கப்பட்டார்கள். தலைமுறை தலைமுறையாக இந்த சட்டங்கள் பேணப்பட்டும் வந்தன.

ஆனால், வாரந்தோறும் பெரும் சோதனையாக அந்த விந்தையான சம்பவம் தவறாமல் நடந்து வந்தது.

சனிக்கிழமை பொழுது விடிந்ததோ இல்லையோ கடல்மட்டத்தில், கரையோரம் மீன்கள் அலை அலையாய் திரண்டுவரும். ஆனால், சனிக்கிழமை பொழுது சாய்ந்ததும் நிலைமை தலைக்கீழாய் மாறிவிடும். ஒற்றை மீன்கூட தென்படாது.

வெள்ளிக்கிழமை மாலை கடற்கரையோரமாக பெரும் கால்வாய்களை வெட்டி அவற்றின் முனைகளில் ஆழமான பள்ளங்களை அமைப்பது. சனிக்கிழமை திரளாய் வரும் மீன்கள் கால்வாய்களின் வழியே பள்ளங்களில் வீழ்ந்துவிடும். அடுத்தநாள் மீன்களைப் பிடித்து கொள்ளை லாபம் சம்பாதிப்பது போன்ற சூழ்ச்சிகளில் எல்லாம் அவர்கள் ஈடுபடலானார்கள்.

“நாங்கள் என்ன சனிக்கிழமைகளிலா மீன் பிடித்தோம்? இறைவனின் கட்டளைகளையா மீறினோம்?” – என்று அப்பாவித்தனமாய் பதிலளித்து கேட்பவரை வாயடைக்க செய்வார்கள்.

காலம் செல்லச் செல்ல, அய்லாவாசிகளிடம், புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டது. சமூகத்தில் தீமைகள் அதிகரித்தன. இறைவழிபாடு பெரும் சுமையாகி, அது முதியவர்களுக்கு மட்டுமே என்றானது.

அய்லாவில் நல்லோர் சிலர் இருக்கவே செய்தார்கள். அவர்களும் இரு பிரிவினராக இருந்தார்கள்.

முதல் பிரிவினர், “இவர்கள் நாம் சொல்வதை கேட்கப் போவதில்லை. இவர்களை நம்மால் திருத்தவும் முடியாது. அதனால், நாம் மட்டும் இறைவனுக்கு அஞ்சி பயபக்தியுடன் வாழ்ந்தாலே போதுமானது” - என்ற சுயநல மனப்பான்மை கொண்டவர்கள்.

இரண்டாவது பிரிவினரோ, பயபக்தியுடன் வாழ்ந்ததோடு, தாங்கள் மட்டும் நல்லோராய் இருந்தால் போதாது. தங்கள் சமூகத்தாரும் நல்லோராய் வாழ வேண்டும் என்று பொதுநலத்தை விரும்பியவர்கள்.

ஆனால், நல்லவற்றை போதித்து, தீயவற்றை தடுக்க முயன்ற இந்தப் பிரிவினர் தீயோரின் கேலி, கிண்டலுக்கு ஆளானார்கள். சில சமயம் வன்முறையையும் இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இத்தகைய சந்தர்பங்களில், நல்லவர்களில் முதல் பிரிவினர், “நாங்கள் சொன்னதை நீங்கள் கேட்டால்தானே? உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்!” - என்று கடிந்துரைத்தார்கள்.

அந்த நிலையிலும் நல்லோரில் இரண்டாம் பிரிவினர், “முடிந்தளவு நாங்கள் முயற்சிக்கிறோம். எங்கள் முயற்சிகளுக்கு இறைவன் சாட்சியாக இருக்கிறான்” - என்று பதில் தந்து தீமையைத் தடுக்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தார்கள்.

அய்லாவாசிகள் நல்லோராக வாழ விரும்பவில்லை. நல்லோர் சொல்லையும் கேட்கத் தயாராக இல்லை. தொடர்ந்து அவர்கள் தீமைகளிலேயே திளைத்து வந்தார்கள். அவர்களுக்கான இறுதி வாய்ப்பும் முடிந்தது. இறைவனின் கோபமும் அவர்களின் மீது இறங்கியது.

இந்தத் தண்டனையிலிருந்து நல்லோரில் முதல் பிரிவினரான ‘தானுண்டு தன் வேலையுண்டு!’ - என்றிருந்தவர்களும் தப்பவில்லை.

தாங்களும் நல்லோராக வாழ்ந்து பிறரையும் நல்லோராக்க முயன்று கொண்டிருந்த நல்லோரில் இரண்டாம் பிரிவினர் மட்டுமே உயிர் தப்பினர்.

‘அஸ்ஹாபுஸ் ஸப்த் – சனிக்கிழமைக்காரர்கள்’ என்றழைக்கப்படும் இந்த அய்லாவாசிகள் வரலாறு திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது.


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Pages

Labels