NewsBlog

Monday, June 4, 2018

ரமலான் நோன்பு மாதம்: பசித்திருக்கும் விழித்திருக்கும் நாட்கள்





தான, தர்மங்கள் வழியாகவும், கைம்பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோர் துயர் துடைப்பதன் மூலமாகவும், நோன்பு நோற்க பொருளியல் வசதியற்றோருக்கு நோன்பு நோற்கவும் (ஸஹர்), நோன்பு துறக்கவும் (இஃப்தார்) ஏற்பாடு செய்வதன் மூலமாகவும் மனிதன் சக மனிதன் மீது கருணையைப் பொழியும் மாதமே ரமலான்.~இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
  
ரமலான் மாதத்தில்தான் நபிகளாரும் அவரைப் பின்பற்றுபவர்களும் தங்களது இறை நம்பிக்கை, கொள்கை கோட்பாடுகள் ஆகியவற்றை மீட்டெடுப்பதற்காக தம் எதிரிகளிடம் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த மாதத்தில்தான் நபிகளாரும் அவருடைய தொண்டர்களும் ஒரு பத்தாண்டு கால நாடு துறத்தல் வாழ்க்கையை அனுபவித்தபின், தொடர் யுத்தங்களுக்கு ஊடே, மதீனா மாநகரிலிருந்து தாயகமான மக்காவுக்கு வெற்றியாளர்களாக நாடு திரும்பி வந்தார்கள்.

ரமலான் மாதத்தின், ஆயிரம் மாதங்களைவிடச் சிறப்புமிக்க இரவொன்றில்தான் வான்மறையான திருக்குர்ஆன் நபிகளாருக்கு இறக்கிஅருளப்பட்டது. இந்த மாதத்தில்தான் மனிதனின் உளத்தூய்மைக்கான மாமருந்தாக, நோன்பென்னும் இறைவணக்கம் கடமையாக்கப்பட்டது.

மனித இனத்துக்கு வழிகாட்டியாக திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கு இறையடியார்கள், பசித்திருந்தும் விழித்திருந்தும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் மாதமே ரமலான்.

“மகத்தான, பெரும் பாக்கியங்கள் நிரம்பிய ஒரு மாதம் நிழலிட இருக்கிறது. இந்த மாதத்தில் இரவொன்று இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களைவிட மிகச் சிறந்த இரவாகும். இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். இரவு நேர உபரித் தொழுகையான தராவீஹ் தொழும்படி அறிவுறுத்திஉள்ளான். எவரொருவர் இந்த மாதத்தில் தாமாக முன்வந்து உளபூர்வமாக ஒரு நற்செயல் புரிகிறாரோ, அது மற்ற மாதங்களில் அவர் ஆற்ற வேண்டிய கட்டாய கடமைக்கான நற்கூலியைப் பெற்றுத் தரும். எவர் இந்த மாதத்தில் ஒரு கடமையான நற்செயலை நிறைவேற்றுகிறாரோ, அது மற்ற மாதங்களின் 70 கடமைகளுக்கு நிகரான நற்கூலியைப் பெற்றுத் தரும்” என்று ரமலான் மாதத்தின் சிறப்பை நபிகளார் எடுத்துரைக்கிறார்.

தான, தர்மங்கள் வழியாகவும், கைம்பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோர் துயர் துடைப்பதன் மூலமாகவும், நோன்பு நோற்க பொருளியல் வசதியற்றோருக்கு நோன்பு நோற்கவும் (ஸஹர்), நோன்பு துறக்கவும் (இஃப்தார்) ஏற்பாடு செய்வதன் மூலமாகவும் மனிதன் சக மனிதன் மீது கருணையைப் பொழியும் மாதமே ரமலான்.

“ஒருவன், தன் குடும்ப உறவுகள், கொடுக்கல் வாங்கல், வணிகத் தொடர்புகள், அண்டை, அயலார் உறவுத் தொடர்புகளில் செய்யும் தவறுகள் ஆகியவற்றுக்குத் தொழுகையும் தர்மமும் பரிகாரம்” என்கிறார் நபிகளார்.

“எவர் ஒருவர் இறைநம்பிக்கையுடனும், மறுமையின் கூலியைப் பெறுகிற எண்ணத்துடனும் ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன்னர் செய்த பாவங்களை இறைவன் மன்னித்துவிடுகிறான். எவர் ஒருவர், ரமலான் மாத இரவுகளில் இறைநம்பிக்கையுடனும், மறுமையின் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளும் ஆவலுடனும் தராவீஹ் (ரமலான் மாதத்து பிரத்யேகத் தொழுகை) தொழுகையைத் தொழுகிறாரோ அவர் முன்னர் செய்த பாவங்களை இறைவன் மன்னித்துவிடுகிறான்!” என்னும் நபிகளார், இப்படி எச்சரிக்கையும் செய்கிறார்:

“எவர் நோன்பு நோற்ற நிலையில், பொய் சொல்வதையும் பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் குறித்து இறைவனுக்கு எவ்வித அக்கறையுமில்லை!”

(17.05.2018 அன்றைய இந்துவில், ஆனந்த ஜோதியில் வெளியான எனது கட்டுரை)

இணைப்புக்கு: http://tamil.thehindu.com/…/spirituality/article23903494.ece


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive