NewsBlog

Sunday, May 27, 2018

அன்பு நண்பர்களே




அன்பு நண்பர்களே, எனதருமை சகோதரர்களே,

நோன்பென்னும் யாகத்தீயில் படைத்தவன் ஆணையை சிரமேற்கொண்டு தனது பேரிச்சைகளை கட்டுக்குள் கொணரும் பிரயத்தனத்தில் முஸ்லிம் உலகம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரமிது. மனித இனத்து குழிகற்களாய் இருந்து அவனை நல்வழிப்படுத்தி சமூகத்தின் தீமைகளைக் களையும் அறப்போராளியாக மாற்ற மிக முக்கியத் தேவையான ‘இறைவனின் அச்சத்தைப்’ பெறவே இந்த முயற்சி. அதற்கான பயிற்சி பாசறையே ரமலான்.

பசித்திருந்தும், விழித்திருந்தும், தனித்திருந்தும் ஒரு மாதம் பெறும் இந்த ஆன்மிக பயிற்சியின் விளைவாக உள்ளாற்றலில் புத்துயிர் பெற்று அதைத் தொடர்ந்துவரும் பதினொரு மாதங்களில் அந்தப் பயிற்சியை செயல்படுத்தும் திட்டமே நோன்பின் அடிப்படை. 

இந்த நன்நோக்கத்தை உணராதவர் கடைப்பிடிக்கும் நோன்பு வீணாகிவிடும். வெறும் பசி-பட்டினி, தாகம், இரவில் கால்கடுக்க நின்று, தூக்கமிழந்து தொழுத தொழுகைகளின் பலன் இவை அனைத்தையும் இழந்து சடங்கு, சம்பிரதாயங்களை நிறைவேற்றியவர் போலாகிவிடுவார். 

ஏனெனில் தனது படைப்புகளிடம் எத்தகைய தேவையும் இல்லாதவன் இறைவன். அத்தகைய நிலையில் நமது பசி, பட்டினி விரதங்களில் அவனது தேவைதான் என்ன? 

இறையச்சத்தை கேடயமாக கொண்டு சமூகத்தின் நன்மைக்கு அச்சுறுத்துலாக இருக்கும் அத்தனை தீமைகளுக்கு எதிராக மனிதனை ஆர்த்தெழவைக்கும் புனித மாதமே ரமலான்.

மனிதனுக்கு வழிகாட்டியாக, நன்மை, தீமைகளை பிரித்தறிவித்து வழிநடத்தும் ஒளிவிளக்காய் திருக்குர்ஆன் அருளப்பட்டதும் இந்த மாத்த்தில்தான்! இறைவனின் பேரருளுக்கு ஆளான ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓரிரவும் இருப்பதும் இந்த மாத்த்தில்தான். ஒரு நன்மைக்கு பகரமாக  பல்லாயிரம் நன்மைகளை வாரி வழங்க வள்ளலுக்கெல்லாம் வள்ளல் பரம்பொருள், கருணையாளன், இரக்கமுடையோன் இறைவன் இருகரம் நீட்டி காத்திருப்பதும் இந்த மாதத்தில்தான்!

இத்தகைய சிறப்புக்குரிய மாதமான ரமலான் நம்மிடையே கடந்து கொண்டிருக்கிறது.

இதே கடப்பில், மற்றொருபுறம் நமது அருமை உறவுகள், ஆதிபிதாவின் மைந்தர்கள, இரத்தபந்தங்கள் ஸ்டெர்லைட் என்னும் கொடியவனுக்கு எதிராக நடத்தப்பட்ட அறவழி யுத்தமும் அரங்கேற்றப்பட்ட மாதமும் ரமலான்தான்!  தம்மையும், தம் சந்ததியையும். தம் மண்ணையும் காக்க அப்பாவிகள் மேற்கொண்ட நல்முயற்சியில் இதயமே அற்ற அதிகார எடுபிடிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி தங்கள் இன்னுயிரை இழந்ததும் இந்த மாதத்தில்தான்!

தம் கண்முன்னால் குடும்பத்தலைவனை இழந்த உறவுகள், பிள்ளைகளைப் பறிக்கொடுத்து பரிதவிக்கும் பெற்றோர்கள், நூற்றுக் கணக்கில் தங்கள் சொந்தங்களைக் காணாமல் தேடிக் கொண்டிருப்போர் என்று சுக்குநூறாகிப் போயிருக்கிறது தூத்துக்குடி.

இந்நிலையில், அதிகாரக் கொலைக்காரர்களை அடையாளம் கண்டு, அவர்கள் செய்த கொலைகளுக்கான மரண தண்டனையைப் பெற்றுத் தருவதும், இந்த படுகொலைகளுக்குக் காரணமான அரசியல் அரியணைப் பித்தர்களை பதவிகளிலிருந்து இறக்கி அவர்களுக்கான தக்க தண்டனைப் பெற்றுதருவதும் அவசியமானது.

வெள்ளையனின் சட்டங்களை இன்னும் நடைமுறைப் படுத்திக் கொண்டு சொந்த மக்களுக்கு எதிராக, அந்த மக்களின் வியர்வையால் பெற்ற வரிப்பணத்திலிருந்து ஊதியம் வாங்கிக் கொண்டு, மக்களைக் காக்க வேண்டிய ஆயுதங்களால் மக்களின் உடல்களை சிதறடிக்கும் இந்த கொடிய சட்டங்களை உடனடியாக மாற்றியமைக்க வேண்டியது இவற்றைவிட முக்கியமானது.

ஜனநாயக அமைப்பின் மிக முக்கியத்தூணாக இருக்க வேண்டிய ஊடகங்களோ அரசியில்வாதிகளின் ஊதுகுழல்களாய், தலையாட்டி பொம்மைகளாய் மாறி நிற்கும் அவலநிலை. ஒவ்வொரு ஊடகத்தின் பின்னும், அவை வெளியிடும் செய்திக்கு பின்னும் ஓர் அரசியல். உண்மைகள் மறைக்கப்பட்டு அரசியல் அதிகாரங்கள் அரங்கேற்ற கடும் முயற்சியில் நடைபெற்று வருவது உண்மை. இதன் நீட்சிதான் தூத்துக்குடி பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் அந்த மக்களுக்கான நீதி கிடைக்கும்வரை முனைப்பு காட்ட வேண்டிய ஊடகங்கள் தற்போது “அம்மா பேசினார்!” என்று மக்களை திசைத்திருப்ப முயல்வதும்.

இச்சூழலில் எனதருமை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், பெருமதிப்பு மிக்க சமூக ஊடகங்களை தூத்துக்குடி மக்களுக்கும், தமிழகத்தின் கிராமங்கள் தோறும் நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பதிவுகளை முடுக்கிவிடுங்கள். உங்கள் ஒவ்வொரு பதிவும் உண்மையை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும். நடப்பு நிகழ்வின் முகங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதாக இருக்கட்டும். தேவையற்ற பதிவுகளை முற்றிலும் தவிர்த்து, அரசியல் வர்ணங்களிலிருந்தும், மத மாச்சர்யங்களிலிருந்தும் விலகி மக்களுக்கான பதிவுகளாக இருக்கட்டும்.

அதேபோல, சட்டம் படித்தவர் தூத்துக்குடி மக்களின் சட்டப்பிரச்னைகளுக்கு எவ்வித கைமாறும் கருதாமல் சட்ட உதவிகள் செய்யட்டும்.

பொருள் கொண்டவரோ தம்மால் முடிந்தளவு பொருளாதார உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு செய்யட்டும்.

கற்றறிந்தோரோ, எவ்வித எதிர்பார்ப்பின்றி தங்கள் அறிவுத் திறன் கொண்டு தூத்துக்குடி படுக்கொலைகளை உலகறியச் செய்யட்டும்.

எதுவும் செய்ய இயலாத பெண்கள், குழந்தைகள் இவர்கள் ஒன்றுபட்டு பாதிக்கப்பட்டோர்க்கு தேவையான சிறு சிறு உதவிகள் செய்யட்டும்.

இவை அனைத்தும் நீறு பூத்த நெருப்பு நிலையிலேயே இருக்கட்டும். இந்த அதிகாரம் மக்கள் கையிலெடுக்கும் காலம்வரை இந்த போக்கு தொடரட்டும்.

தமிழகத்திலிருந்து தொடரும் இந்த மக்கள் எழுச்சி இந்தியா முழுவதும் பரவட்டும்.

ஒவ்வொரு முகநூல் கணக்காளரின் குறைந்த கணக்கீடாய் நூறு.. நூறு பேராய் திரண்டாலே இந்த எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டி விடும்.

கொடியவர்கள் வீழ்த்தியிருப்பது மனித உயிர்களை அல்ல. பெரும் பிரளயத்துக்கான விதைகளையே இவர்கள் தூவி உள்ளார்கள். காலம் இதை நிச்சயம் உணர்த்ததான் போகிறது.




Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Pages

Labels