NewsBlog

Friday, April 22, 2016

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 17: 'தலைக்கு மேல் பறந்த தாய்க் குருவி!'


மனிதனின் சுயநலத்தால்.. தன்னைச் சுற்றியும் உள்ளதை எல்லாம் அவன் இழந்துவிட்டான். இன்னும் கொஞ்சம் நாளில் இயற்கையின் ஒவ்வொரு அழகையும், அம்சத்தையும் அவன் விலைக் கொடுத்து வாங்கியே ஆக வேண்டிய துரதிஷ்ட நிலை எதிர்பட இருக்கிறது.

சுற்றுச் சூழல் மாசு என்னும் பெருங் கேடுக்கு ஆளாகி அற்புதமான எத்தனையோ பறவை இனங்களை நாம் தொலைத்து விட்டோம். அதில் மிக முக்கியமானது சிட்டுக் குருவி!

நபி பெருமானார் சின்னஞ் சிறு குருவி இனத்து மேல் கூட அபரீதமான பாசம் பொழிந்தார்கள் என்பது வியப்புற வைக்கிறது.

இன்றைய 'அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்', தலைக்கு மேல் பறந்த அந்த தாய்க் குருவியின் சம்பவம்.


ஒரு நாள்.

அன்பு நபி தமது தோழர்களுடன் பயணத்தில் இருந்தார்கள்.

இடையில், நபிகளார் தமது தோழர்களை விட்டு பிரிந்து எங்கோ சென்றார்கள்.

வானத்தில் அழகான பறவைகள் பறந்து கொண்டிருந்தன. நபித் தோழர்கள் அதை கவனித்தார்கள்.


"அதோ, பாருங்கள்! " - நபித்தோழர்களில் ஒருவர் ஒரு குருவியைச் சுட்டிக் காட்டிச் சொன்னார்.

"எவ்வளவு அழகான குருவி! இது அம்மாவாகதான் இருக்க வேண்டும். அதோ..! பார்த்தீர்களா? அந்த இரண்டும் இதன் குஞ்சுகளாக இருக்கும்..! - என்றார் அவர் தொடர்ந்து.

அது ஒருவகையான சிட்டுக் குருவி. அந்த இரண்டும் அதனோட குஞ்சுகள்.

மூன்று குருவிகளும் நபித்தோழர்களின் தலைக்கு மேலாக பறந்தன. "விருட்.. விருட்.." என்று அவை பறந்த விதம் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

நபித்தோழர்களும் அவற்றை ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

குஞ்சுகள் அப்போதுதான் பறக்கத் தொடங்கியிருந்தன போலும்! அதனால், நீண்ட நேரம் பறக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நபித் தோழர்களின் தலைக்கு மேலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தன.

"ஆஹா..! எவ்வளவு அழகான குஞ்சுகள்! கைக்கு எட்டும் தூரத்தில்தானே பறக்கின்றன. இவற்றைப் பிடித்தால் என்ன?" - என்றார் நபித்தோழர்களில் ஒருவர். மற்றவரும் அதற்குச் சம்மதித்தார்கள்.

பறந்து கொண்டிருந்த குருவிக்குஞ்சுகள் சோர்வடைந்தன. தொடர்ந்து பறக்க முடியாமல் கீழே இறங்க ஆரம்பித்தன.

நபித்தோழர்களில் ஒருவர் சட்டென்று குருவிக் குஞ்சுகளைப் பிடித்தார். கவனமாக கைகளில் ஏந்திக் கொண்டார். ஏனென்றால்.. உயிரினங்களிடம் அன்புடன் நடந்து கொள்ளும்படி அன்பு நபி அறிவுறுத்தி இருந்தார்கள்; அதனால்தான்!

நபித்தோழர்கள் குருவிக்குஞ்சுகளுக்கு எந்தவிதமான தீங்கும் விளைவிக்கவில்லை. அதற்காகவும் அவற்றை அவர்கள் பிடிக்கவில்லை.

குருவிக்குஞ்சுகளைப் பிடித்தது அவற்றின் அழகை அருகில் கண்டு ரசிக்கத்தான்!


பயந்துபோன குருவிக் குஞ்சுகள் "கீச் ... கீச்.." - என்று கத்தின. சின்ன அலகால் பிடித்திருந்தோரின் கைகளைக் கொத்தின. ஆனால், பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.

குருவிக்குஞ்சுகளைப் பிரிந்த தாய்ப்பறவையோ, 'பட பட' என்று சிறகு அடித்துப் பறந்தது.

நபித்தோழர்களின் தலைக்கு மேலாக பறந்து .. பறந்து.. அழுவது போல கத்தியது. "அய்யோ.. என் குழந்தைகளை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!" - என்று கதறுவது போல, அது இருந்தது. அவர்கள் தன் அருமைக் குஞ்சுகளை ஏதாவது செய்துவிடப் போகிறார்கள் என்று பதற்றத்துடன் சுற்றிச் சுற்றி பறந்தது. "கீச்..கீச்..- என்று கத்திக் கதறியது.
நபித்தோழர்கள் தாய்க் குருவியை விரட்டிப் பார்த்தார்கள். "... ச்சூ..ச்சூ..!" -என்று கைகளை வீசினார்கள்.

ஊஹீம்..தாய்க் குருவி பயப்படுவதாக இல்லை. அங்கிருந்து அது போவதாகவும் இல்லை. " என் குழந்தைகளை கொடுத்துவிடுங்கள்!" - என்று கெஞ்சுவது போல சுற்றிச் சுற்றி வந்தது. " என் குழந்தைகள் இல்லாமல் என்னால்.. வாழவே முடியாது!" - என்று கதறி அழுவது போல பறந்தது.

அந்த நேரம் பார்த்து அங்கு நபிகளார் திரும்பி வந்தார்கள். தாய்க் குருவி பதற்றத்துடன் பறப்பதைக் கண்டார்கள். அது ஏதோ துன்பத்தில் சிக்கி இருப்பதை உடனே புரிந்து கொண்டார்கள். நபித்தோழர்களின் கைகளில் இருந்த குருவிக் குஞ்சுகளை கண்டதும் அவர்களுக்கு எல்லா விஷயமும் விளங்கிவிட்டது. தாய்க் குருவியின் துன்பமும் புரிந்துவிட்டது.

" குருவிக்குஞ்சுகளைப் பிடித்து இந்த தாய்க்குருவிக்கு துன்பம் இழைத்தவர் யார்?" - என்று நபிகளார் சற்று கோபமாக கேட்டார்கள். " ... உடனே குருவிக் குஞ்சுகளை விட்டுவிடுங்கள்!"- என்று அதட்டவும் செய்தார்கள்.

நபித்தோழர்களின் குற்ற உணர்வால்.. அங்கே இறுக்கமான சூழல் நிலவியது.

தமது தவறை உணர்ந்த நபித்தோழர் கையை விரித்தாரோ இல்லையோ குருவிக்குஞ்சுகள் இரண்டும் "விர்" என்று பறந்து சென்று தாய்க்குருவியிடம் சேர்ந்து கொண்டன.

இப்போது தாய்க்குருவியின் பதற்றம் மறைந்தது. மகிழ்ச்சியின் அடையாளமாக குஞ்சுகளை இறககைகளால் பொத்தி அணைத்துக் கொண்டது. நன்றியுடன் நபித்தோழர்களின் தலைக்கு மேலாக ஒரு வட்டம் போட்டது. பிறகு தனது குஞ்சுகளோடு மேலே பறந்து வானத்தில் மறைந்தது.

தாய்க்குருவியும் அதன் குஞ்சுகளும் பறக்கும் காட்சி, பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.அதுவரை அங்கே நிலவிய இறுக்கமான சூழலும் கலைந்தது. மீண்டும் கலகலப்பு திரும்பியது.

அன்பு நபிகளாரின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

~~~~ இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.


முந்தைய அருட்கொடைகளுக்கு:

1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html
11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html
12. குற்றம் குற்றமே!:  http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html
13 . பாவங்களின் பரிகாரம் http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html
14. அழுதபடியே தொழுத அண்ணல்http://ikhwanameer.blogspot.in/2015/12/14.html
15 இருளில் வந்த வெளிச்சம்: http://ikhwanameer.blogspot.in/2016/01/15.html
16 உதவி சிறிது. பதவி பெரிது: http://ikhwanameer.blogspot.in/2016/01/16.html



Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive