ஒற்றை வரியில் இறைவனுக்கு அடிபணிவதில், அவனது கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதில், தந்தையை மிஞ்சிய தனயனாக வரலாற்றில் உயர்ந்து நிற்கிறார் இஸ்மாயீல் நபி. அந்த திருப்பலி தடுக்கப்படுகிறது. வரலாற்றில் மனித பலிகள் தடுக்கப்பட்டு, அந்த நிகழ்வை நினைவுறுத்தும்விதமாக நினைவூட்டல் பலிகளாகவே கால்நடைகள் பலியிடும் சம்பவம் வழிகாட்டப்படுகிறது >>> இக்வான் அமீர் <<<
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ஈகைத்திருநாள் எனப்படும் ரமலானைப் போலவே ஒரு சிறப்பு மிக்க மகத்தான நாள்தான் தியாகத்திருநாள். ‘ஈதுல் ளுஹா’ எனப்படும் இந்நாள், அன்றாட சொல்வழக்கில், ‘ஹஜ் பெருநாள்’ என்றும், ‘பக்ரீத்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திருநாளில் பொங்கி பிராவகமெடுக்கும் மகிச்சிக்கும், கொண்டாடங்களுக்கும் பின்புலமாக திகழ்கிற தியாகமும், அர்ப்பணிப்புகளும் அளவற்றவை. மகத்தானவை. ஒவ்வொரு கதாபாத்திரமாக எழும் வரலாற்று நாயகர்களின் சம்பவங்களும் உணர்வுபூர்வமானவை. கஅபாவை தரிசிக்கச் செல்லும் ஹாஜிகள் எனப்படும் புனித பயணிகளால் இன்றளவும் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளாக இருப்பவை.
தியாகத்திருநாள் என்று விளிக்கப்படும் போதெல்லாம் சிறப்பு மிக்க ஹஜ் எனப்படும் புனிதப் பயண நிகழ்வு நினைவில் எழுகிறது. புனித பயணிகளின் ஓர் இறை கேந்திரமான புனித மக்காவும், உலக இறைநம்பிக்கையாளர்களின் முன்னுதாரணமாக திகழும் பெருமதிப்புக்குரிய இப்ராஹீம் (ஆப்ரஹாம்) நபியும் அவர்களின் அழகிய குடும்பத்தினருக்கும் நினைவில் எழுகின்றனர். “நீங்கள் ஒருமனப்பட்ட இப்ராஹீமின் வழிமுறையையைப் பின்பற்றுங்கள்” - என்று திருக்குர்ஆனும் அந்த ஆளுமையைச் சிறப்பிக்கின்றது.
அதனால், தியாகத்திருநாளில் இப்ராஹீம் நபியின் தியாகங்களை நினைவுகூறாமல் யாரும் கடந்துவிட முடியாது. இறைவனுக்காகவும், அவனது திருப்பொருத்தத்துக்காகவும் வீடு, வாசல், சொந்த, பந்தங்கள், மனைவி, மக்கள் என்று அனைத்தையும் அர்ப்பணம் செய்தவர் அவர். இறைவனின் திருப்தி மட்டுமே தனது மூச்சாக கொண்டவர். “அகிலமனைத்தின் அதிபதிக்கு நான் முற்றிலும் அடிபணிந்துவிட்டவன்!” என்று பறைச்சாற்றியவர்.
அடுத்ததாக, தியாகத்தில் விண்ணளாவி நிற்கும் இதே குடும்பத்து உறுப்பினரான இப்ராஹீம் நபியின் மைந்தர் இஸ்மாயீல் நபி.
இறைவனின் கட்டளைகளை சிரமேற்கொண்டு தள்ளாத வயதில் பெயர் சொல்லக் கிடைத்த ஒரு சந்ததியையையும் இழக்கத் தயாரான இப்ராஹீம் நபி, தனது மகனை திருப்பலி மேடையில் ஏற்றுவதாக கனவு கண்டவர். அவர் தனது உணர்வுகளை உள்ளடக்கிக் கொண்டு கனத்த மனத்தவராக, தட்டுத்தடுமாறி, தனது மகனிடம் மேற்கொள்ளும் உணர்ச்சி மிக்க உரையாடலை, அந்த நிகழ்வை திருக்குர்ஆன் இப்படி வர்ணிக்கிறது:
“அன்பு மகனே, நான் உன்னை பலியிடுவதாக ஒரு கனவு கண்டேன். இது குறித்து உனது கருத்து என்ன?” – என்று இப்ராஹீம் நபிகளார் மகனிடம் கேட்டபோது, “அருமை தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளை இடப்பட்டிருக்கிறதோ அதையே செய்யுங்கள். இறைவன் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்!”
ஒற்றை வரியில் இறைவனுக்கு அடிபணிவதில், அவனது கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதில், தந்தையை மிஞ்சிய தனயனாக வரலாற்றில் உயர்ந்து நிற்கிறார் இஸ்மாயீல் நபி. அந்த திருப்பலி தடுக்கப்படுகிறது.
வரலாற்றில் மனித பலிகள் தடுக்கப்பட்டு, அந்த நிகழ்வை நினைவுறுத்தும்விதமாக நினைவூட்டல் பலிகளாகவே கால்நடைகள் பலியிடும் சம்பவம் வழிகாட்டப்படுகிறது.
இப்ராஹீம், இஸ்மாயீல் என்ற மகத்தான நபிமார்களைக் கடந்து வரலாற்றில் உயர்ந்து நிற்கும் மற்றொரு பெயர், இந்த நன்னாளில் மறக்கவே முடியாத பெயர் இப்ராஹீம் நபியின் மனைவியான ஹாஜிரா. இந்த அம்மையாரின் தியாகம் கணவரையும், மகனையும் விஞ்சி நிற்பது.
இறைக்கட்டளையால் திக்கற்ற நிலையில் பாலைவனத்தில் பரிதவித்து நின்ற வரலாற்று நாயகி இவர். கையில் பச்சிளங்குழந்தையோடு (இஸ்மாயீல்) இறையருள் என்ற ஒற்றை ஆதரவு வேறின்றி தவித்து நின்றவர். கொடுக்க பால் இன்றி அழுதழுது நின்ற குழந்தையின் தாகம் தீர்க்க ஒரே ஒரு சொட்டு குடிநீராவது கிடைக்காதா என்று சபா, மர்வா மலைகளுக்கிடையே ஓடோடி தவித்தவர். அந்த அபலைப் பெண்மணியின் தவிப்பும், அலைக்கழிப்பும் இறைவனின் பேரருளுக்கு ஆளாகிறது. தாகத்தால், அழுது புரண்டு கொண்டிருந்த குழந்தையின் காலடியிலேயே ஜம்.. ஜம் என்ற வற்றாத நீரூற்றாய் பெருக்கெடுக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளையும் தாண்டி லட்சக்கணக்கான ஹஜ் புனித பயணிகளின் தாகம் தீர்க்ககும் அற்புத நீரூற்றைப் பெற்றுத் தந்த அம்மையார் ஹாஜிரா. ‘ஜம் ஜம்’ நீரூற்றின் ஒவ்வொரு துளி நீரிலும் அந்த அம்மையாரின் தவிப்பை இன்றளவும் புனித பயணிகள் உணர்வது தவிர்க்க இயலாதது.
ஹாஜிரா அம்மையாரின் தவிப்பை வெளிப்படுத்தும் விதமாகவே, துல்ஹஜ் மாதத்தில் மேற்கொள்ளப்படும் கஅபாவை சந்திக்கும் ஹஜ் பயணத்திலும் அல்லது பிற காலங்களில் மேற்கொள்ளப்படும் உம்ராவிலும், சபா, மர்வா மலைகளுக்கிடையே ஹாஜிரா அம்மையாரின் தியாக வரலாற்றை நினைவுறுத்தும் விதமாக புனித பயணிகள், ‘ஸயீ’ எனப்படும் தொங்கோட்டம் ஓடுகிறார்கள்.
“எங்கள் இறைவனே..! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்தருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக..! எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக..! தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தந்தருள்வாயாக..! மேலும், மறுமை நாளில் எங்களைக் கேவலப்படுத்தி விடாதே..! திண்ணமாக நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்..!” – என்று இறைநம்பிக்கையாளர்களின் பிரார்த்தனைக்கு இறைவன் இப்படி பதில் அளிப்பதை திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது:
“உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்க மாட்டேன். அவர் ஆணாயினும் சரி.. பெண்ணாயினும் சரியே! நீங்கள் ஒருவர் மற்றொருவரிடமிருந்து தோன்றிய ஒரே இனத்தவரே!”
இந்த நல்லுரைகள் ஹாஜிரா அம்மையாரின் தியாகத்துக்கும், பெண்ணினத்துக்கும் இறைவன் தரப்பிலிருந்து கிடைக்கும் ‘சமத்துவ’ சிறப்பாகும்.
0 comments:
Post a Comment