"இப்ராஹீம் நபி பாலையில் கால் வைத்தபோது, காய்ந்த சருகுகள், தீய்ந்த
தாவரங்கள் தவிர அவரை கைநீட்டி வரவேற்க வேறு ஆளில்லை. அந்த மாபெரும்
இறைத்தூதரையும் அவரது குடும்பத்தாரையும் வரவேற்க அங்கு யாருமேயில்லை.
தாகித்த பாலகனுக்கு நீருட்ட அன்னை ஹாஜிரா சபா, மர்வா மலைக்குன்றுகளுக்கு
இடையே ஓடியோடி நீர்த்தேடி களைத்து நின்ற துயரச்சம்பவம் நிகழ்வு பெற்ற
இடமது. கடைசியில், குழந்தை இஸ்மாயீலின் கை,கால்பட்டு வற்றாத ஜம், ஜம்
நீரூற்று பீரிட்டது. இதுவரையிலும் அந்த அற்புத நீரூற்று லட்சபோப லட்சம்
மக்களின் தாகத்தை தணித்துக் கொண்டிருக்கிறது."•இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''
”இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை விளைவாக பிறந்தவன்தான் நான்!” – என்கிறார் ஒருமுறை நபிகளார்.
மக்காவிலுள்ள கஅபாவை நிர்மாணிக்கும் வேளையில்தான் இப்ராஹீம் நபிகளாரும், அவரது மைந்தர் இஸ்மாயீலும் அந்த பிரார்த்தனைப் புரிகிறார்கள்.
திருக்குர்ஆனின் பதிவாக உள்ள அந்த இறைஞ்சுதல் இதுதான்:
”எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும், உனக்கு முற்றிலும் வழிபடுபவர்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் வழித்தோன்றல்களிலிருந்து முற்றிலும் உனக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பாயாக! மேலும், இந்த மக்களுக்காக இவர்களிலிருந்தே ஒரு தூதரை தேர்ந்தெடுப்பாயாக! அவர் உன்னுடைய வசனங்களை மக்களுக்கு ஓதிக் காட்டுபவராகவும், வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பவராகவும், அவர்களை தூய்மைப்படுத்துவராகவும் திகழச் செய்வாயாக!“ – என்று ஒரு நீண்ட பிரார்த்தனை அவர்களின் உள்ளங்களிலிருந்து ஊற்றெடுக்கிறது.
இப்ராஹீம் நபியின் இந்த பிரார்த்தனைக்கும், நபிகளாரின் வருகைக்கும் இடைப்பட்ட காலம் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள்! சீர்க்கெட்டுப் போயிருந்த மொத்த அமைப்பையும் புரட்டிப்போட்டு புத்தம் புதிய சமூக அமைப்பொன்றை நிர்ணயிக்கவே இந்த நீண்ட நெடிய காலத்தை இறைவன் நிர்ணயித்தான்.
இறைவனின் திட்டப்படி இப்ராஹீம் நபி நாகரீகத்தின் தொட்டிலாக இருந்த இராக்கிலிருந்து புலன்பெயர்ந்து மனித சஞ்சாரமேயற்ற ஒரு புற்பூண்டும் முளைக்காத, உலகின் மொத்தப் பகுதிகளோடும் துண்டிக்கப்பட்ட அரபு நாட்டின் பகுதியான பாலை நிலப்பரப்பில் மனைவி, மக்களான ஹாஜிரா இஸ்மாயீலோடு குடியேறினார்.
”இறைவா! என் குடும்பத்தார் சிலரை எந்த விவசாயம் செய்வதற்கான வசதியற்ற ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியத்திற்குரிய உன்னுடைய கஅபா இல்லத்தருகே குடியமர்த்தி விட்டேன். தொழுகையை நிலைநிறுத்தி நின்னைப் பணிந்து துதிக்கவே இவ்வாறு செய்தேன்! அதனால், இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் மனங்களில் மன மாற்றங்களை உருவாக்குவாயாக! இவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக! இதன் மூலம் இவர்கள் உனக்கு நன்றியுடையவராய் மாறக்கூடும்!” – என்று சமூகசூழல்களையும், இயற்கை சூழல்களையும் முன்வைத்து அவற்றின் சொந்தக்காரனான இறைவனிடமே இப்ராஹீம் நபி கையேந்துகிறார்.
மனித இனத்தை நெறிப்படுத்த வேண்டிய கடினமான பணி அது. அதுவரையிலான மனித பண்பாடுகள் தோல்வியுற்ற நிலையில் இந்தப் பணியை கையிலெடுக்க வேண்டிய நிலை. இந்த தோல்விகளிலிருந்து படிப்பினைப் பெற்று பற்பல தலைமுறைகளைத் தாண்டி அதுவரையும் நிலவி வந்த ஒழுக்கச் சீர்கேடுகளின் சாயலே இல்லாத முற்றிலும் புத்தம் புதிய உயரிய நிலையுடைய பண்பாட்டை தோற்றுவித்தலுக்கான இடைவெளிதான் இந்த நீண்ட நெடிய 2500 ஆண்டுகள் தாண்டிய இடைவெளி.
இப்ராஹீம் நபி பாலையில் கால் வைத்தபோது, காய்ந்த சருகுகள், தீய்ந்த தாவரங்கள் தவிர அவரை கைநீட்டி வரவேற்க வேறு ஆளில்லை. அந்த மாபெரும் இறைத்தூதரையும் அவரது குடும்பத்தாரையும் வரவேற்க அங்கு யாருமேயில்லை. தாகித்த பாலகனுக்கு நீருட்ட அன்னை ஹாஜிரா சபா, மர்வா மலைக்குன்றுகளுக்கு இடையே ஓடியோடி நீர்த்தேடி களைத்து நின்ற துயரச்சம்பவம் நிகழ்வு பெற்ற இடமது. கடைசியில், குழந்தை இஸ்மாயீலின் கை,கால்பட்டு வற்றாத ஜம், ஜம் நீரூற்று பீரிட்டது. இதுவரையிலும் அந்த அற்புத நீரூற்று லட்சபோப லட்சம் மக்களின் தாகத்தை தணித்துக் கொண்டிருக்கிறது.
சொந்த - பந்தம், நாடு நகரம் என்று அனைத்தையும் இழந்து பாலைவெளியில் குடியேறிய இப்ராஹீம் நபிக்கு முதுமையில் பெயர் சொல்ல பிறந்த இஸ்மாயீல் சிறுவனானபோது, மீண்டும் ஒரு சோதனை குழந்தையை பலிகேட்டு! கடைசியில், மனித பலிகளுக்கு முற்றிலும் தடையாக ஆடொன்று பதிலியானது!
எதை இழக்க மனிதன் துணியமாட்டானோ அதை வரிசையாக எல்லாம் இழக்க இப்ராஹீம் நபி துணிந்து நின்றார். தியாகத்தின் உச்சமாக மகனையும் துறக்க சித்தமானார். மிகச் சிறப்புக்குரியவர் என்று உலக மக்கள் கண்டுணரவே இறைவனின் இந்த ஏற்பாடு.
இளைஞர் இஸ்மாயீல் வளர்ந்து ஜம், ஜம் நீரூற்று பெருக்கெடுத்த பகுதியிலேயே ஜுர்ஹும் கோத்திரத்துப் பெண்ணை மணந்து நிரந்தரமாக தங்கிவிட்டார்.
அரேபிய பாலைவனத்தில் இஸ்மாயீலின் சந்ததிகள் இப்படிதான் பல்கிப் பெருகினர்.
இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்ட நேரம் அது. மக்காவின் பனு ஹாஷிம் கோத்திரத்தைச் சேர்ந்த வஹப் இப்னு அப்து மனாப்பின் மகளான ஆமினாவின் வயிற்றில் குழந்தை முஹம்மது சூல் கொண்ட அருளுக்குரிய தருணம். மாய, மந்திர அற்புதங்கள் ஏதும் நிகழ்த்தாமல் உலகைப் புரட்டிப்போடும் ஒரு மாபெரும் பணிக்காக “அல்முருஅ“ என்ற அடைமொழியால் குழந்தை முஹம்மது அடையாளப்படுத்தப்பட்டது. மிக.. மிக.. உயரிய பண்பாளரை அரபு நாட்டினர் குறிக்கும் சொல் இது.
பிரபல வரலாற்று பேராசிரியர் பிலிப் கே ஹிட்டி, “ஹிஸ்டரி ஆஃப் அரப்ஸ்“ என்னும் நூலில் அரபு மக்களின் பண்புகளை விமர்சிக்கும்போது, “சிக்கலான நேரங்களில் நிலைகுலையாத பண்பாளர், அடுத்தவர் உரிமைகளை மீட்டெடுக்கும் போர்க்குணம் மிக்கவர்கள், உயரிய பண்பு, பெருந்தன்மை, விருந்தோம்பலில் நிகரற்றவர்கள் என்று பதிவு செய்கிறார். இத்தகைய மனித பண்பாளர்களிலிருந்துதான் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையாக முஹம்மது நபிகளார் (ஸல்) ஜனிக்கிறார். தமது வாழ்நாளுக்கு பின்னாலும் மனித இனத்துக்கான சீர்த்திருத்தம் என்ற அந்த அரும் பணியை தாங்கிச் செல்லும், தோழர், தோழியர் கொண்ட தோழமைக் குழுவினரை நபிகளார் உருவாக்கினார்.
அனுதினமும் இயற்கை பெரும் மோதலோடு அரபு மக்களின் வாழ்வியல் கழிந்ததால் அவர்கள் இயல்பிலேயே சுயநலமற்றவராய் திகழ்ந்தார்கள். ஆரம்பத்தில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலிருந்த இவர்கள்தான் முழு அரபுலகின் பிரதிநிதிகளாக விளங்கினார்கள். நபிகளாரின் வாழ்வியல் சீர்த்திருத்த அரும்பணிக்காக அனைத்தையும் இழக்க முன்வந்தார்கள். ”எங்கள் திருத்தூதர் பாதங்களில் ஒரு சிறுமுள் தைக்கவும் அனுமதியோம்!” – என்று தங்கள் உயிரை அர்ப்பணிக்கவும் தயாரானார்கள். நபிகளாரின் இலட்சிய சமூகத்தின் குழிக்கற்களானார்கள்.
(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 15.09.2016 அன்று பிரசுரமான எனது கட்டுரை)
0 comments:
Post a Comment