காம, குரோதங்களிலிருந்து விலகி, இல்லற இன்பங்களைத் துறந்து, தேவையற்ற வீண் பேச்சுக்கள், தூஷணைகள், கோபதாபங்கள், புறம்பேசுதல், கோள்சொல்லுதல் போன்ற அனைத்துத் தீய பண்புகளையும் பொசுக்கிவிடும் வேள்வி அது. மனிதனை தூயவனாய் புடம் போடும் ஒரு வேள்வி அது!
ஒவ்வொரு ஹஜ் பயணியும் அணியும் இஹ்ராம் என்னும் வெள்ளுடை சமாதானத்தின் சீருடை. அரசனோ-ஆண்டியோ, செல்வந்தனோ-ஏழையோ அனைவரும் ஒன்றுதான் எனச் சொல்லும் சமத்துவத்தின் பேருடை அது! ஆடம்பர பட்டோடபங்களைத் இழந்து இறைவன் திருமுன் அனைவரும் சமம் என நினைவுறுத்தும் நல்லுடை அது. •இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''
இன்றைக்குச் சற்றேறக்குக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பேழையிது!
“இறைவன் ஒருவன்! அவன் இணை-துணையில்லாதவன்!” – என்ற இந்த ஓரிறைத் தத்துவத்தை உரக்க உச்சரித்து வீடு-வாசலையும், நாடு-நகரத்தையும், சொந்த-பந்தங்களையும், பொன்-புகழையும் துறந்து கொள்கையின் கோமானாய் வரலாற்றில் உயர்ந்து நிற்பவர் இப்ராஹீம் நபி என்றால்… இறைவனின் ஆணைக்கேற்ப சிரம் தாழ்த்தி சுயமாக தம்மை ஒப்புக் கொடுத்தவர்தான் அவரது மகன் இஸ்மாயீல் நபி!
இப்பெருந்தகைகள் இறைவனின் விருப்பப்படி கஅபா ஆலையம் கட்டிட முனைப்பு காட்டிய சமயம், அவர்களின் நெஞ்சிலிருந்து அளவிலா அன்பு கண்ணீராய்ப் பெருக்கெடுத்த வழிகிறது. பிரார்த்தனை வடிவில் கசிந்துருகுகிறது:
“எங்கள் இறைவனே! எங்களுடைய இந்தப் பணியை ஏற்றுக் கொள்வாயாக…. எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக – முஸ்லிம்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் வழித்தோன்றல்களிலிருந்து முற்றிலும் உனக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பாயாக!... இம்மக்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை எழுப்புவாயாக! அவர் உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுபவராகவும், வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருபவராகவும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துபவராகவும் திகழ வேண்டும்”
பொட்டல்வெளியில், புற்பூண்டுகூட முளைக்காத பாலைவெளியில் ஓர் ஆலயம் கட்டி, வெறும் பிரார்த்தனையோடு உலகின் கேந்திரமாக அது திகழ வேண்டுமென 4000 ஆண்டுகளுக்கு முன் கண்ட கனவு பலித்தது!
பொட்டல்வெளியில் கஅபா கட்டப்பட்டது உண்மைதான். அது முயற்சி! ஆனால், அதனோடவே வெளிப்பட்டது நம்பிக்கை இப்படி: “என் இறைவனே! மக்காவாகிய இந்நகரத்தை அமைதி அளிக்கக்கூடியதாய் ஆக்கிவைப்பாயாக! நான் என் மக்களை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்தற்கருகில் குடியமர்த்தி விட்டேன். அவர்கள் இங்கு தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக! அவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! இவர்களுக்கு உண்பொருளை வழங்குவாயாக!”- இப்படி உறுதியுடன் பரம்பொருளை சார்ந்து வாழும் நம்பிக்கை அது. இதில்தான் பொட்டல்வெளி உயிர்பெற்றது. அகில உலக முஸ்லிம்களின் ஓரிறை தலைமைக் கேந்திரமாக கஅபா உருப்பெற்றது.
இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையிலான கஅபா என்னும் இறையில்லத்தை ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் தம் வாழ்நாளில் ஒருமுறை ‘சந்திக்க’ நாடும் நாட்டமே ‘ஹஜ்’ எனப்படுகிறது.
ஹஜ் பயணம் மனிதனின் பாவங்களை தொலைத்திட உதவும் ஒரு வழி. அண்ணல் நபிகளார் அதைத்தான் நவின்றார்கள்:
“ஒருவர் இந்த கஅபா ஆலயத்தை தரிசிக்க வருகை தந்து, மன இச்சை சம்பந்தமான சொல் எதனையும் பேசாமலும், இறைவனுக்கு மாறு செய்யும் செயல் எதனையும் செய்யாமலும் இருந்தால் அவருடைய அன்னை அவரைப் பெற்றெடுத்த அதே நிலையில் – பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட – தூய நிலையில் தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வார்!”
ஹஜ்ஜுப் பயணம் இறைநம்பிக்கையாளர்களிடம் உண்டாக்கும், உற்சாகம், உத்வேகம் உணர்வுகளின் கதம்பம். வார்த்தைகளில் வடிக்க இயலாத தெய்வீகம். நினைத்தாலே உள்ளமெல்லாம் குளிர்ந்திடும் நல்லின்பம்.
பூமி பெரிதுதான்! ஆனால், அது சில சமயங்களில் சிறுத்துப் போவதுண்டு.. ஹஜ் போன்ற நாட்களில்!
ஆறுகள் கடலில் சங்கமிக்கும் என்பது நிஜம்தான்! ஆனால், முழு உலகமே திரண்டு ஓரிடத்தில் நின்றிடும் நாள் ஹஜ்ஜுப் பெருநாளாகும்.
எத்தனை நிறங்கள்..! எத்தனை மொழிகள்..! எத்தனை.. எத்தனை மனிதர்கள்..! மனித சமூகம் முழுவதும் திரண்டு வந்ததோ என ஐயம் எழுப்பும் இடம் அது.
ஓயாமல் ஒலிப்பது கடல் அலை மட்டுமா? “அல்லாஹீம்ம லப்பைக்க.. அல்லாஹீம்ம லப்பைக்க.. அதாவது இறைவா..! நான் வந்துவிட்டேன்! இறைவா..! நான் வந்துவிட்டேன்!” – என ஒவ்வொரு ஹஜ் பயணியும் மாறாத லயத்துடன் ஒலிக்கும் ‘தல்பியா’ முழக்கமும்கூடத்தான்!
ஹஜ்ஜின் தொடக்கமே ஒரு வேள்வி!
காம, குரோதங்களிலிருந்து விலகி, இல்லற இன்பங்களைத் துறந்து, தேவையற்ற வீண் பேச்சுக்கள், தூஷணைகள், கோபதாபங்கள், புறம்பேசுதல், கோள்சொல்லுதல் போன்ற அனைத்துத் தீய பண்புகளையும் பொசுக்கிவிடும் வேள்வி அது. மனிதனை தூயவனாய் புடம் போடும் ஒரு வேள்வி அது!
ஒவ்வொரு ஹஜ் பயணியும் அணியும் இஹ்ராம் என்னும் வெள்ளுடை சமாதானத்தின் சீருடை. அரசனோ-ஆண்டியோ, செல்வந்தனோ-ஏழையோ அனைவரும் ஒன்றுதான் எனச் சொல்லும் சமத்துவத்தின் பேருடை அது! ஆடம்பர பட்டோடபங்களைத் இழந்து இறைவன் திருமுன் அனைவரும் சமம் என நினைவுறுத்தும் நல்லுடை அது.
இறைவனை உணர்வது. அவனுக்கு இணைத்துணை கற்பிக்காமலிருப்பது. இறைவன் காட்டிய வழியில் நடப்பது. அதிலேயே நிலைத்திருப்பது. நற்சமூகம் அமைப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் பொறுப்பாகும்.
இதற்கு நல்லுதாரணங்களாக இப்ராஹீம் மற்றும் அவரது அருமை மகனார் இஸ்மாயீல் நபியும் திகழ்கிறார்கள். இவர்களின் நற்பணிகளின் தொடராக அண்ணல் நபிகளாரின் வாழ்வியலையும், அன்னாரின் தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் முன்னிறுத்தி வாழ முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இந்த பெருந்தகைகள் உருவாக்க முயன்ற அமைதி தவழும் சமூகத்தை, மனித நேய சமூகத்தை உருவாக்க பாடுபடுவதும் இவர்கள் மீதுள்ள கடமையாகும். இந்தநினைவுகளை பசுமையாக்கிட உதவும் பயணம்தான் ஹஜ்ஜுப் பயணமாகும்.
''''''''''''''''''''''''''''''''''''''
தி இந்து ஆனந்த ஜோதி இணைப்பில் 24.09.2015 அன்று பிரசுரமான எனது கட்டுரை.
0 comments:
Post a Comment