முதல் பயணம் கல்பாக்கம், செஞ்சி, திண்டிவனம், சென்னை என்று ஒரு 400 கி.மீ சுற்றளவு முடிந்தபின்... இது எனது இரண்டாவது போட்டோகிராபி வெளியூர் பயணம்!
சென்னையிலிருந்து சுமார் 150 கி.மீ தொலைவில்.. ஆந்திரம் கூடூர் அருகே உள்ள குக்கிராமங்கள் எங்கள் இலக்கு.
என்னோடு எனது பஜாஜ் சி.டி. 100-ல், எனது மாணவன் Ïmřãñ Şhäkìŕ
நாயுடைப்பேட்டையைத் தாண்டி ஒரு குக்கிராமத்தின் வழியே பயணம் செய்தபோது, வழிநெடுக நாவல் மரங்கள் பரப்பிய நிழலில் அவ்வையாரின் சுட்டப் பழங்களை விற்றுக் கொண்டிருந்த இந்தப் பெண்ணை தொலைவிலிருந்து எடுத்த படம்.
ஏறக்குறைய ஒரு 300 கி.மீட்டர் பயணம் முடித்து கணிணியில் ஏற்றி படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, இந்தப் பெண்ணின் விழிகளை எதிர்கொள்ள முடியாமல் நான் தலைகுனிந்து நின்றேன்.
கண்கள் பனிக்க.. ”மாடுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை எங்கள் ஆட்சியாளர்கள் மனிதர்களுக்குத் தருவதில்லை! உனது அவலத்தைப் போக்க முடியாத அபாக்கியவான் நான். என்னை மன்னித்துவிடு தாயே..!” - என்ற ஆற்றாமை கனத்து என்னுள் வெளிப்பட்ட அந்த தருணங்களை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன் - இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
என்னை மன்னித்துவிடு தாயே..!
““““““““““““““““““““““““““
குளு குளு…
நாவல் மரங்களுக்குக் கீழ்
மண் மெத்தையில்,
சருகு போர்வையைப் போர்த்தி
உன் எதிர்கால கனவுகளை
பொத்திப் பொத்திப்
பாதுகாக்கிறாய்!
உனது கனவு இளவரசன்
எங்கள் என்றைக்குமான
ஏவலாள் என்பதை ஏனோ
உணர மறுக்கிறாய்..!
குடை நிழல் தரும் மரங்கள்
உன் வயிற்றுப் பசியையாற்றும்
முயற்சிதான்
அசைந்தசைந்து கொட்டும்
நாவல் பழங்கள்..!
அத்தனையும்
சுவை மிகுந்த
அவ்வையின்
சுட்டப் பழங்கள்!
மண்ணுக்கும்,
இலைத் தழைக்கும்
மரங்களுக்கும்
சுற்றியிருக்கும்
இயற்கைக்கும்
இருக்கும்
பொறுப்புணர்வு
எங்கள்
ஆட்சியாளர்களுக்கு
சொந்த மக்களிடம்
இல்லை தாயே!
மாடுகளுக்குத்
தரும் மரியாதை
இங்கே
மனிதர்களுக்கு இல்லை!
நதிகளின் புனிதத்துவம்
இங்கே
தாய்க்குலங்களுக்கில்லை!
மண்ணுக்கும்,
மலைமுகடுகளுக்கும்
தரும் மகத்துவம்…
நாங்கள்
மனிதத்துவத்துக்கு
தர மறுப்பதால்..
என்னை
மன்னித்துவிடு தாயே..!
கையாலாகாத
என்னை
மன்னித்துவிடு தாயே..!
0 comments:
Post a Comment