NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Thursday, June 7, 2018

இன்கிலாப் ஜிந்தாபாத்


(தூக்கிலிடப்படுவதற்குமுன் பகத் சிங் கூறியது என்ன? என்ற தலைப்பில் பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஸல், 23 மார்ச் 2018 அன்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். தற்போதைய நமது நாட்டுச் சூழல்களும், அதிலும் குறிப்பாக தமிழகத்தின் சூழல்களும், துப்பாக்கிகளால் படுகொலைச் செய்யப்பட்ட அப்பாவிகளின் நினைவுகளும், மார்ச் 23, 1931-ம் ஆண்டுக்கு தள்ளுவதை என்னால் தடுக்க முடியவில்லை. வீரப்போராளிகள் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவை வெள்ளை ஏகாத்பத்யம் தூக்குமேடைக்கு ஏற்றிய அந்த நாளில் நடந்த அலங்கோலங்கள் எல்லாம் இன்றைய விடுதலை இந்தியாவில் தூத்துக்குடியில் நடந்தேறியுள்ளதை கனத்த மனத்தோடு நினைக்க வேண்டியுள்ளது. தூக்குக் கயிறுகளுக்கு பதிலாக துப்பாக்கிகள் என்ற வேறுபாடு  தவிர வேறு எதையும் பிரித்தறிய முடியவில்லை. அந்த மாவீரர்களின் சடலங்களைக் குப்பையைப் போல ஒரு டிரக்கில், அள்ளிக் கொண்டு, அவர்களுக்கான இறுதிச் சடங்குளை கூட பரிபூரணமாக நிறைவேற்றாமல் சட்லஜ் நதிக்கரையில் விட்டுச் சென்றான் கொடும் வெள்ளையன். அதேபோன்ற கொடுமைகள் இன்றும் தமிழகத்தில் நடந்துள்ளது வியப்பானது!

வெள்ளையனின் அதே அதிகாரம், அடக்குமுறைகளின் வேதமாய் அவன் வகுத்த சட்டப்புத்தகங்கள் இன்றும் நடப்பில் இருப்பதை அறியும்போது இந்திய நாட்டின் பரிபூரண விடுதலைக்காக மனம் ஏங்குகிறது.

பிபிசியின் அந்தக் கட்டுரையை நன்றியோடு இங்கு பதிவு செய்கிறேன் ~இக்வான் அமீர்)
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி...

லாகூர் மத்தியச் சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று அதிகாலையிலேயே அங்கு ஒரு சோகப்புயல் நுழைந்து மையம் கொண்டது. அன்றைய மாலைப்பொழுதில், ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதற்கான காரணத்தையும் சிறை கண்காணிப்பாளர் கூறவில்லை.

மேலிடத்து உத்தரவு என்பதைத் தவிர வேறு எந்த காரணமும் கூறப்படவில்லை. இதன் பின்னால் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்தாலும், குழப்பமாகவே இருந்தது. பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப்போவதாக சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவல் சொல்லிப்போனார்.

அனைவரையும் உலுக்கிப்போட்ட இந்தச் செய்தியால், சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது. கலகம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள் அடைக்கப்பட்டது புரிந்தது. நிலைமையை மாற்றமுடியாது என்று உணர்ந்த கைதிகள், தாங்களும் பகத்சிங்குடன் சிறை வாழ்க்கையை கழித்தவர்கள் என்று பெருமையுடன் கூற ஆசைபட்டார்கள். பகத்சிங் பயன்படுத்திய பேனா, சீப்பு, கடிகாரம் போன்ற எதாவது ஒரு பொருள் கிடைத்தால், தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு காண்பிக்கலாம் என்று தெரிவித்தார்கள்.

பர்கத், பகத்சிங் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவர் பயன்படுத்திய பேனா, சீப்பு போன்றவற்றை எடுத்துவந்தார். அதை எடுத்துக் கொள்வதற்காக கைதிகளுக்குள் போட்டா-போட்டி நிலவியது. இறுதியில் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு மீண்டும் அமைதி திரும்பியது. இப்போது அறையில் இருந்து வெளியே செல்லும் பாதையின் மீது அனைவரின் கவனமும் குவிந்தது. தூக்கில் இடப்படுபவர்கள் அந்த வழியிலே தான் வெளியே செல்லவேண்டும்.

ஒரு முறை பகத்சிங் அந்த வழியாக செல்லும் போது பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் பீம்சேன் சச்சர் உரத்தக் குரலில் பகத்சிங்கிடம் கேட்டார், "நீயும், உன் நண்பர்களும், லாகூர் சதி வழக்கில், தவறு செய்யவில்லை என்று ஏன் நீதிமன்றத்தில் முறையிடவில்லை?" என்று கேட்டார்.

அதற்கு பகத்சிங்கின் பதில் என்ன தெரியுமா? "போராட்டக்காரர்கள் என்றாவது ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும், அவர்களின் உயிர்த் தியாகம்தான் அமைப்பை வலுவாக்கும். நீதிமன்றத்தில் முறையிடுவதால் மட்டுமே அமைப்பு ஒருபோதும் வலுவாகாது".

பகத் சிங்கிடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர் சரத் சிங், தன்னால் முடிந்த உதவிகளை செய்துவந்தார். அவரின் உதவியால்தான் லாகூரின் துவாரகதாஸ் நூலகத்தில் இருந்து பகத்சிங்கிற்காக புத்தகங்கள் சிறைச்சாலைக்குள் வந்தது.

புத்தகப்பிரியர் பகத்சிங்

புத்தகப்பிரியரியரான பகத்சிங், தன்னுடைய பள்ளித்தோழர் ஜெய்தேவ் கபூருக்கு எழுதிய கடித்த்தில், கார்ல் லிப்னேக்கின் "மிலிட்ரியிசம்", லெனினின் "இடதுசாரி கம்யூனிசம்", அப்டன் சின்க்லேயரின் "தி ஸ்பை" (உளவாளி) ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பகத்சிங்கின் சிறை தண்டனை பாதி முடிந்துவிட்டது. அவருடைய செல் (அறை) எண் 14 -இன் தரை, புல் முளைத்த கட்டாந்தரை. ஐந்து அடி, பத்து அங்குல உயரம் கொண்ட பகத்சிங், படுக்கும் அளவிலான அறை அது.

பகத்சிங்கை தூக்கில் இடுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு, அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மெஹ்தா சிறைக்கு வந்தார். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போன்று பகத்சிங் காணப்பட்டதாக பின்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பகத்சிங் புன்னகையுடன் மெஹ்தாவை வரவேற்று, "ரெவல்யூஷனரி லெனின்" புத்தகத்தை கொண்டு வரவில்லையா?" என்று கேட்டாராம்! அந்த புத்தகத்தை மெஹ்தா பகத்சிங்கிடம் கொடுத்ததும் அதை உடனே படிக்க தொடங்கிவிட்டாராம் பகத்சிங்! படிப்பதற்கு அவரிடம் அதிக நேரம் இல்லையே...

நாட்டிற்காக எதாவது செய்தி சொல்லுங்கள் என்று மெஹ்தா கேட்டதற்கு, புத்தகத்தில் இருந்து கண்ணை விலக்காமல் பகத்சிங் சொன்னது, "இரண்டு செய்திகள்... ஏகாதிபத்தியம் ஒழிக.... இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)".

தன்னுடைய வழக்கில் அதிக அக்கறை செலுத்திய பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸிடம் தனது வணக்கத்தை தெரிவிக்குமாறு, மெஹத்தாவை கேட்டுக்கொண்டார் பகத்சிங். பிறகு மெஹ்தா, ராஜ்குருவின் அறைக்கு சென்றார்.

"விரைவில் மீண்டும் சந்திப்போம்" -இதுதான் ராஜ்குருவின் கடைசி வார்த்தை. மெஹ்தாவிடம் பேசிய சுக்தேவ், தன்னை தூக்கில் போட்டபிறகு, சிறை அதிகாரியிடமிருந்து தான் பயன்படுத்திய கேரம்போர்டை வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். மெஹ்தா சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் அந்த கேரம்போர்டை வாங்கிக் கொடுத்திருந்தார்.

மெஹ்தா சென்ற பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்கு 12 மணி நேரம் முன்னதாகவே, அதாவது, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தூக்கில் போடுவதற்கு பதிலாக அன்று மாலை ஏழு மணிக்கே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மெஹ்தா கொடுத்துச் சென்ற புத்தகத்தின் சில பக்கங்களை மட்டுமே பகத்சிங்கால் படிக்க முடிந்தது. இந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தைக் கூட படிக்க விட மாட்டீர்களா? என்று அவர் சிறை அதிகாரியிடம் கேட்டாராம்.

தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற இஸ்லாமியரின் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம்.

ஆனால் பகத்சிங்கின் கடைசி ஆசையை பேபேவால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். சிறைக்குள் செல்ல பேபே அனுமதிக்கப்படவில்லை.

சுதந்திர கீதம்

சிறிது நேரத்திற்கு பிறகு, மூன்று புரட்சியாளர்களை தூக்குமேடைக்காக தயார் செய்வதற்காக வெளியே அழைத்து வந்தார்கள். அப்போது, பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களை பாடத் தொடங்கினார்கள் -

அந்த நாளும் கண்டிப்பாக வரும்...

நாம் சுதந்திரம் அடையும் போது,

இந்த மண் நம்முடையதாக இருக்கும்

இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்... என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.

பிறகு ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு, குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு இருந்ததைவிட அதிகமாகியிருந்தது! இறுதிக் குளியலை மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. பிறகு கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, ஆனால், அவர்களுடைய முகம் மூடப்படவில்லை.

"வாயே குரு" என்ற சீக்கியர்களின் புனிதமான வார்த்தையை நினைவில் கொள்ளுமாறு சரத் சிங், பகத்சிங்கின் காதில் சொன்னார்.

தூக்கு மேடை

"என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை. உண்மையில், ஏழைகளின் துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன். அவர்களிடம் இப்போது நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு யாரும் இருக்கமுடியாது. இவனுடைய இறுதி காலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என்று நினைப்பார்கள்" என்று பகத்சிங் கூறினார்,

சிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது. அத்துடன், பாடலும் கேட்டது.

"தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது" என்ற பொருள் கொண்ட பாடல் அது.

"இன்குலாப் ஜிந்தாபாத்" என்றும், "ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ" ("புரட்சி ஓங்குக", இந்தியா விடுதலை வேண்டும்") என்ற முழக்கங்கள் எழுந்தன. தூக்குக்கயிறு மிகவும் பழையதாகவும், வலுவிழந்தும் இருந்தது. ஆனால், தூக்கில் இடப்படுபவர்களோ மிகவும் பலமானவர்களாக இருந்தார்கள். தூக்கில் இடும் பணியை நிறைவேற்றுவதற்காக, லாகூரில் இருந்து சிறப்புப் பணியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.

மூவரில் பகத் சிங் நடுநாயகமாக நின்றார். தனது தாயை மனதில் நினைத்துக்கொண்ட பகத் சிங், தூக்கில் இடப்படும்போதும் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கப்போவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டார்.

லாகூர் மத்திய சிறைச்சாலை

லாகூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிண்டி தாஸ் சோந்தியின் வீட்டிற்கு அருகாமையில் தான் லாகூர் மத்திய சிறைச்சாலை இருந்தது. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற பகத்சிங்கின் உரத்த முழக்கம் சோந்தியின் காதுகளையும் எட்டியது.

பகத் சிங்கின் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக் கைதிகளும் முழக்கங்களை எழுப்பினார்கள். மூன்று இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டப்பட்டது. அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன. அப்போது தண்டனையை நிறைவேற்றுபவர் கேட்டார், "யாருக்கு முதலில் செல்ல விருப்பம்?".

சுக்தேவ் முதலில் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக் கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினார் தண்டனை நிறைவேற்றுபவர். தூக்கில் இடப்பட்ட புரட்சியாளர்களின் வீர உடல்களும் நீண்ட நேரத்திற்கு தொங்கிய நிலையிலேயே விடப்பட்டன.

இறுதியில் அவர்களை கீழே இறக்கியபோது, அங்கிருந்த மருத்துவர்கள், லெஃப்டிணென்ட் கர்னல் ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெஃப்டிணென்ட் கர்னல் எம்.எஸ்.சோதி மூவரின் மரணத்தையும் உறுதி செய்தனர்.

இறுதிச் சடங்கு

இவர்களை தூக்கிலிட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், அங்கிருந்த ஒரு சிறை அதிகாரி மிகுந்த மனவேதனை அடைந்தார். மரணத்தை உறுதிப்படுத்துமாறு அவரிடம் கூறப்பட்டபோது, அவர் மறுத்துவிட்டார். பிறகு மற்றொரு இளைய அதிகாரிதான் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

இறுதிச்சடங்குகள் சிறைச்சாலைக்குள்ளேயே செய்துவிடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டம், இங்கு சிதை மூட்டப்பட்டு, புகை வெளிவந்ததுமே, சிறையை தாக்கக்கூடும் என்ற பேரச்சத்தின் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.

எனவே, சிறையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு, அந்த வழியாக டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது. மிகவும் தரக்குறைவான முறையில், பொருட்களைப் போல வீரர்களின் உடல் டிரக்கில் ஏற்றி, கொண்டு செல்லப்பட்டது.

ராவி நதிக்கரையில் இறுதிச்சடங்குகளை நடத்தும் யோசனை, அங்கு நீர் குறைவாக இருந்ததால் கைவிடப்பட்டது, பிறகு சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட முடிவு செய்யபட்டது.

லாகூரில் நோட்டீஸ்

புரட்சியாளர்களின் சடலங்கள் ஃபிரேஜ்புர் அருகில் சட்லஜ் நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. இதற்குள் காவல்துறை கண்காணிப்பாளர், சுதர்ஷன் சிங், கசூர் கிராமத்தில் இருந்து ஜக்தீஷ் என்ற பூசாரியை அழைத்துவந்துவிட்டார்.

சிதையூட்டப்பட்ட பிறகு, இது குறித்து மக்களுக்கு தகவல் தெரிந்துவிட்டது. மக்களின் கூட்டம் வெள்ளமென தங்களை நோக்கி வருவதைக் கண்ட பிரிட்டன் சேனைகள், சடலங்களை அப்படியே விட்டு, அங்கிருந்த தங்கள் வாகனங்களை நோக்கி ஓடினார்கள். மக்கள் கூட்டம் இரவு முழுவதும் சிதைகளை சுற்றி நின்றது.

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு என மூவருக்கும் ஹிந்து மற்றும் சீக்கிய மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதாக, அடுத்த நாள் காலை அருகில் இருந்த மாவட்ட நீதிபதியின் கையொப்பத்துடன், லாகூரின் எல்லா பகுதிகளிலும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.

இந்த செய்தி மக்களின் மனதில் பெரும் எதிர்ப்பை எழுப்பியது. இறுதிச் சடங்குகள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களின் சடலங்கள் முழுமையாக எரிக்கப்படவில்லை என்று மக்கள் கோபக்கனலை கக்கினார்கள். இதை மாவட்ட நீதிபதி மறுத்தாலும், யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மூன்று மைல் தொலைவுக்கு பேரணி ஒன்று நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில் ஆண்கள் கருப்பு நிற பட்டைகளையும், பெண்கள் கருப்பு நிற உடைகளையும் அணிந்திருந்தார்கள்.

ஏறக்குறைய அனைவரும் கையில் கருப்புக் கொடியை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டார்கள். லாகூரின் மால் வழியாக சென்ற ஊர்வலம், அனார்கலி சந்தைப்பகுதியில் நடுவில் நின்றது.

அங்கு ஊர்வலம் நின்றதும் பேரமைதி நிலவியது. பகத் சிங்கின் குடும்பத்தினர், மூன்று மாவீரர்களின்  அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த சடலங்களுடன்  ஃபிரோஜ்புரில் இருந்து வந்துவிட்டது தான் அதற்கு காரணம்.

மலர் தூவிய சவப்பெட்டிகள் அங்கு வந்ததும், மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகள் கரை கடந்தன. அனைவரின் கண்களின் இருந்து கண்ணீர் பொங்க, கண்ணீரஞ்சலி நடந்தேறியது.

பிரிட்டன் சாம்ராஜ்யம்

"வீரர்களின் உடல் பாதி எரிந்த நிலையில், திறந்தவெளியில் தரையில் இருந்தது" என்பது பற்றிய செய்தியை அந்த இடத்தில் இருந்த பிரபல பத்திரிகையாளர் மெளலானா ஜஃபர் அலி வாசித்தார்.

அங்கே, சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சரத் சிங் தளர்ந்த நடையில் தனது அறைக்கு சென்று, மனம் விட்டு கதறினார். அவருடைய முப்பதாண்டு பணிக்காலத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருந்தாலும், இது போன்ற தீரமிக்கவர்களுக்கு அவர் மரணதண்டனையை நிறைவேற்றியதே இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.

16 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் சாம்ராஜ்யம், இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு வெளியேறுவதற்கு இந்த நாளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

(நன்றி: பிபிசி. இணைப்புக்கு: https://www.bbc.com/tamil/india-43511943)

(படம்: இடமிருந்து வலமாக பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ்)
Share:

Wednesday, June 6, 2018

Flowerhorn

Share:

சீமானின் தம்பிகளுக்கு ஒரு மடல்:



சீமானின் தம்பிகளுக்கு,

“உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக..!”

அன்பு தம்பிகளுக்கு இந்த மூத்த அண்ணனின் சுருக்கமான அறிவுரை இது. கேட்போர் கேட்கலாம். புறக்கணிப்போர் வழக்கமான பாணியில் புறக்கணித்துவிடலாம். படைப்பியல் ரீதியாகவே இது உங்களுக்கு தரப்பட்டுள்ள சுதந்திரம்.

நான் ஏற்கனவே தம்பி சீமானுக்கு இதே ரமலான் மாதத்தில் எழுதிய கடிதத்தில், (வலைப்பூவில் வாசிக்க: http://ikhwanameer.blogspot.in/2017/05/blog-post_27.html) அவரும், அவர் சார்ந்த இயக்கமும் வெகு விரைவில் பெரும் நெருக்கடிக்கு ஆளாக இருப்பதைக் குறித்து எச்சரித்திருந்தேன். அந்த மடல் கிடைக்கப் பெற்ற சீமானும் எனது கருத்துக்களை கவனத்தில் கொள்வதாக ஒலி வடிவில் (Audio) சொல்லி நன்றி தெரிவித்திருந்தார்.

தம்பிகளே, இதோ வந்துவிட்டது நாம் தமிழர் கட்சிக்கான வனவாச காலம்.

இயக்கத்தின் மூத்த தலைவர்கள் அனைவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரணமே இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய வெள்ளையனின் சட்டப் பிரிவுகள் இருப்பது உண்மைதான்! ஆயினும், தற்போதைய கைதுகளுக்கும், நெருக்கடிக்கும் சுயமாய் நீங்களாகவே உருவாக்கிக் தந்த காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆம்.. இது நீங்களாகவே உங்கள் முடிவுகளுக்குத் திரித்துக் கொண்ட கயிறுகள் அன்றி வேறில்லை.

தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்பது உங்கள் கொள்யையானாலும், ஆட்சி. அதிகார ஆளுமை என்பது ஒரு இனத்தில் பிறந்ததாலேயே மட்டும் கிடைக்கும் வம்சாவழி உரிமை இல்லை. அது மக்கள் மனங்களைக் கொள்ளைக் கொள்ளும் பண்புநலன். மக்களை ஈர்த்து நம்பிக்கையூட்டி வழிகாட்டும் ராஜபாட்டை.

செவிப்பறையை பிளந்தெடுக்கும் வண்ணம் ஓங்கிய குரலில் உணர்ச்சி வசப்படுத்தும் ஆவேசமான பேச்சுகள்,

திரும்ப.. திரும்ப ஒவ்வொரு இடத்திலும் சலிப்படையச் செய்யும் அதே கருத்துக்கள்,

இவை அனைத்தும் வெறுமனே மனித மனங்களை ஒருகாலும் துளைப்பதில்லை.

இயக்கமும், இயக்கத் தலைமையும் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் மனம் நோகும் அளவுக்கு பெரும் விமர்சனங்களை முன் வைக்க என் மனம் ஒப்பவில்லை. அதனால், மிக எளிமையான சில குறிப்புகளை மட்டும் என்னால் தர முடியும்.

1 பிரச்னைகள்தான் இயக்கம் உயிரோட்டத்துடன் இருக்கிறது என்பதற்கான சான்றுகள். அதனால், பிரச்னைகளைக் கண்டு துவளாமல் இயக்கப் பணியை முன்னெடுத்து சென்றவாறு இருங்கள்.

2 தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்து விடுங்கள். சர்ச்சைகள் உங்களைத் திசைத்திருப்பிவிடும். நேரத்தை வீணாக்கிவிடும்.

3 எதிர்வினையை உருவாக்காதீர்கள். சொல்ல வேண்டிய கருத்துக்களை சூழலுக்கு ஏற்றாற்போல சுருக்கி சொன்னாலே போதுமானது. அந்தக் கருத்தின் எல்லா பக்கங்களையும் தொட வேண்டும் என்பது கட்டாயமல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

4 தயவுசெய்து தொண்டைக் கிழிய கத்தாதீர்கள். கணிணியில் நான் சீமானின் உரைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது என்னருகே வரும் எட்டுவயது பேரன் அந்த கூச்சல் பிடிக்காமல் முகம் சுளித்து கடுமையான விமர்சனமும் செய்கிறான். இதேபோல, இந்தக் கூச்சலுக்கு ஏராளமான விமர்சனங்கள் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

5 சீமானின் தம்பிகள் சீமானைப் போலவே பிரதிபலிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அவரவர்க்கான குரல்வளம். உடல் மொழி, மக்களுக்கு எடுத்துரைக்கும் பாங்கு தனித்தனியானது. அதனால், அமைதியாக பேசுங்கள். மக்களுக்கு புரிய வைக்க தொடர்ந்து முயலுங்கள்.

6 மக்களிடையே சுயநலம் சூழ்ந்து கொண்ட காலமிது. ஒழுக்கவிழுமியங்கள் அதளபாதாலத்தில் சரிந்துள்ள சூழல். இச்சூழலில் பொதுநல வெளிக்கு மக்களை அணித்திரட்டுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நினைவில் வையுங்கள்.

7 இந்திய ஜனநாயக அமைப்பில் எல்லாமே மாற்றத்துக்குரியவை ஆதலால், பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ முதலில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அடிபணியுங்கள். இது பெருமளவு பிரச்னைகளைத் தீர்த்துவிடும். உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். மன உளைச்சலைத் தவிர்க்கும்.

8 பொது எதிரி பூதகரமாய் எழுந்து நிற்கும் நிலையில், உங்கள் கவனம் முழுக்க அந்த எதிரியை வீழ்த்துவதில் இருக்கட்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் இத்தகைய குறிக்கோள் கொண்டவர்களுடன் இணைந்து பயணிப்பதில் ஒரு தவறும் இல்லை.

9 அரசியல் அரங்கில், இதற்கு முன்னிருந்தோர் செய்த தவறுகளால்தான் அவர்கள் வீழ்த்தப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால், மீண்டும்,.. மீண்டும் அவர்களை நிந்தித்துக் கொண்டு பகையுணர்வை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். இதற்கு மாறாக, மேலும், மேலும் உங்கள் ஆளுமைப் பண்புகளை வளர்த்தவாறே இருங்கள்.

11 கடைசியாக உங்கள் அம்புகளை கூர்த்தீட்டிக் கொள்ள அவகாசம் தேடுங்கள். இதற்கு சமயோசிதம், விவேகம் இவற்றுடன் செயல்பட வேண்டியதிருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அன்பு தம்பிகளே, நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போல, மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை நீங்கள் கேட்கலாம். நிராகரிக்கலாம் இது உங்கள் விருப்பம். ஆயினும் படைப்பில் நாம் இரு காதுகளோடு படைக்கப்பட்டவர்கள் என்பதில் கவனத்தில் கொள்க.

அன்புடன்,

இக்வான் அமீர்

மூத்த சுதந்திர இதழியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்.


Share:

Tuesday, June 5, 2018

ரமலான் நோன்புக் கட்டுரை: யார் பரம ஏழை?

மற்ற இறை வணக்க நடைமுறைகளான நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றவற்றின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் ஈடுபடும்போது விரயமாகிவிடும். மாறாக, இறை வணக்கத்தின் நோக்கத்தைப் புரிந்து நடந்து கொள்ளும்போது அற்புதமான நல்லொழுக்கம் கொண்ட மனிதனை வார்த்தெடுப்பதைக் கண்ணாரக் காண முடியும். -இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''

நல்லொழுக்கமும் இறை நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. ஒன்றை விட்டுவிடுபவன் அடுத்ததையும் நிச்சயம் விட்டுவிட வேண்டியதிருக்கும்.

அன்சாரி என்றழைக்கப்படும் மதீனத்துத் தோழர் ஒருவரை நபிகளார் கடந்து செல்லும்போது, அத்தோழரோ தம் சகோதரர் ஒருவரைத் தடித்த வார்த்தைகளால் கடிந்துகொண்டிருந்தார். தன் சகோதரரின் நடத்தை சரியில்லை என்பதே அவரது அந்நிலைக்குக் காரணம். “நன்னடத்தை என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாதலால் அவரை விட்டுவிடுங்கள் தோழரே” என்று விமர்சித்தவருக்கு அறிவுரை வழங்கினார் நபிகளார்.

“இறைவன் மீது ஆணையாக, அவர் முஸ்லிமாக இருக்க முடியாது. அவர் ஒரு முஸ்லிமாக இருக்கவே முடியாது” என்றார் நபிகளார்.

“இறைவனின் திருத்தூதரே, அப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலி யார்?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, “யாருடைய அநீதி, அக்கிரமங்களிலிருந்து அவரது அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர்!” என்கிறார் நபிகளார்.

“இறைவன் மீதும், மறுமையின் மீதும் நம்பிக்கை கொள்பவர் நல்லதையே பேச வேண்டும்” என்பதே அதன் வழிகாட்டலாகும். இறைநம்பிக்கை நற்குணங்களை வளர்ப்பதோடு, அவற்றைக் கட்டிக்காக்கவும் பேருதவி செய்கிறது. அதனால், நல்லொழுக்கமும் இறைவணக்கமும் தனித்தனியானவை அல்ல.

இறைவணக்கத்தின் உயரிய நோக்கம்

இஸ்லாமில் கடமையாக்கப்பட்ட ஐந்து வேளைத் தொழுகையின் நிலைகளைச் சிறு குழந்தையும்கூட உன்னிப்பாகக் கவனித்து திரும்பவும் செய்ய முடியும். கொஞ்சம் முயன்று தொழுகையில் ஓதப்படும் வசனங்களையும் மனனமாக அச்சிறுப்பிள்ளை ஓதிடவும் முடியும்.

ஆனால், இந்த உடலசைவுகளும் உதட்டசைவுகளும் மனிதருள் எவ்வித தாக்கத்தையும் உருவாக்கிட முடியாது. இறை வணக்கங்கள் அளிக்கவிருக்கும் உயரிய குணாம்சங்களையும் இறை வணக்கங்களின் நோக்கத்தையும் நிறைவு செய்ய ஒருக்காலும் உதவாது.

மற்ற இறை வணக்க நடைமுறைகளான நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றவற்றின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் ஈடுபடும்போது விரயமாகிவிடும். மாறாக, இறை வணக்கத்தின் நோக்கத்தைப் புரிந்து நடந்து கொள்ளும்போது அற்புதமான நல்லொழுக்கம் கொண்ட மனிதனை வார்த்தெடுப்பதைக் கண்ணாரக் காண முடியும்.

ஒருமுறை நபிகளார் தம் தோழர்களிடம், “தோழர்களே, பரம ஏழை என்பவர் யார் தெரியுமா?” என்று கேட்டார்.

அதற்கு நபித்தோழர்கள், “இறைவனின் திருத்தூதரே, செல்வமும் சொத்துகளும் இல்லாதவரே ஏழை என்போம்” என்று பதிலளித்தார்கள்.

“தோழர்களே, நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள். இறைவனின் திருச்சன்னிதியில் அனைத்தையும் இழந்து கைச்சேதமுற்று நிற்பவரே பரம ஏழையாவார். அவர் தொழுகை செய்தவராக இருந்திருப்பார். ஜகாத்தும் கொடுத்திருப்பார். நோன்பும் நோற்றிருப்பார். ஆனால், அவர் சிலரை வசைமாரி பொழிந்திருப்பார். சிலரது மனங்களைக் காயப்படுத்தி இருப்பார். சிலர் மீது அவதூறு சுமத்தியிருப்பார், அநீதியாய் அடுத்தவர் பொருளை அபகரித்திருப்பார்.

இப்படியாகப்பட்டவரின் நன்மைகள் எல்லாம் அந்தத் தீர்ப்பு நாளில் அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். இனி நன்மைகள் எவையுமே இல்லை என்ற நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்களின் பாவங்களும் அவரது கணக்கில் ஏற்றப்பட்டு அவர் நரகத்தில் தள்ளப்படுவார். இத்தகைய துரதிர்ஷ்டசாலியே பரம ஏழையாவார்!” என்றார் நபிகளார் வருத்தத்துடன்.

(தி இந்து, ஆனந்த ஜோதி 24 மே, 2018 அன்றைய இணைப்பில் வெளியான எனது கட்டுரை)


Share:

Monday, June 4, 2018

பலே கில்லாடி

மும்பை வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து: நீரவ் மோடி தொடர்பான ஆவணங்கள் எரிந்து சாம்பல்

Share:

ரமலான் நோன்பு மாதம்: பசித்திருக்கும் விழித்திருக்கும் நாட்கள்





தான, தர்மங்கள் வழியாகவும், கைம்பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோர் துயர் துடைப்பதன் மூலமாகவும், நோன்பு நோற்க பொருளியல் வசதியற்றோருக்கு நோன்பு நோற்கவும் (ஸஹர்), நோன்பு துறக்கவும் (இஃப்தார்) ஏற்பாடு செய்வதன் மூலமாகவும் மனிதன் சக மனிதன் மீது கருணையைப் பொழியும் மாதமே ரமலான்.~இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
  
ரமலான் மாதத்தில்தான் நபிகளாரும் அவரைப் பின்பற்றுபவர்களும் தங்களது இறை நம்பிக்கை, கொள்கை கோட்பாடுகள் ஆகியவற்றை மீட்டெடுப்பதற்காக தம் எதிரிகளிடம் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த மாதத்தில்தான் நபிகளாரும் அவருடைய தொண்டர்களும் ஒரு பத்தாண்டு கால நாடு துறத்தல் வாழ்க்கையை அனுபவித்தபின், தொடர் யுத்தங்களுக்கு ஊடே, மதீனா மாநகரிலிருந்து தாயகமான மக்காவுக்கு வெற்றியாளர்களாக நாடு திரும்பி வந்தார்கள்.

ரமலான் மாதத்தின், ஆயிரம் மாதங்களைவிடச் சிறப்புமிக்க இரவொன்றில்தான் வான்மறையான திருக்குர்ஆன் நபிகளாருக்கு இறக்கிஅருளப்பட்டது. இந்த மாதத்தில்தான் மனிதனின் உளத்தூய்மைக்கான மாமருந்தாக, நோன்பென்னும் இறைவணக்கம் கடமையாக்கப்பட்டது.

மனித இனத்துக்கு வழிகாட்டியாக திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கு இறையடியார்கள், பசித்திருந்தும் விழித்திருந்தும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் மாதமே ரமலான்.

“மகத்தான, பெரும் பாக்கியங்கள் நிரம்பிய ஒரு மாதம் நிழலிட இருக்கிறது. இந்த மாதத்தில் இரவொன்று இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களைவிட மிகச் சிறந்த இரவாகும். இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். இரவு நேர உபரித் தொழுகையான தராவீஹ் தொழும்படி அறிவுறுத்திஉள்ளான். எவரொருவர் இந்த மாதத்தில் தாமாக முன்வந்து உளபூர்வமாக ஒரு நற்செயல் புரிகிறாரோ, அது மற்ற மாதங்களில் அவர் ஆற்ற வேண்டிய கட்டாய கடமைக்கான நற்கூலியைப் பெற்றுத் தரும். எவர் இந்த மாதத்தில் ஒரு கடமையான நற்செயலை நிறைவேற்றுகிறாரோ, அது மற்ற மாதங்களின் 70 கடமைகளுக்கு நிகரான நற்கூலியைப் பெற்றுத் தரும்” என்று ரமலான் மாதத்தின் சிறப்பை நபிகளார் எடுத்துரைக்கிறார்.

தான, தர்மங்கள் வழியாகவும், கைம்பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோர் துயர் துடைப்பதன் மூலமாகவும், நோன்பு நோற்க பொருளியல் வசதியற்றோருக்கு நோன்பு நோற்கவும் (ஸஹர்), நோன்பு துறக்கவும் (இஃப்தார்) ஏற்பாடு செய்வதன் மூலமாகவும் மனிதன் சக மனிதன் மீது கருணையைப் பொழியும் மாதமே ரமலான்.

“ஒருவன், தன் குடும்ப உறவுகள், கொடுக்கல் வாங்கல், வணிகத் தொடர்புகள், அண்டை, அயலார் உறவுத் தொடர்புகளில் செய்யும் தவறுகள் ஆகியவற்றுக்குத் தொழுகையும் தர்மமும் பரிகாரம்” என்கிறார் நபிகளார்.

“எவர் ஒருவர் இறைநம்பிக்கையுடனும், மறுமையின் கூலியைப் பெறுகிற எண்ணத்துடனும் ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன்னர் செய்த பாவங்களை இறைவன் மன்னித்துவிடுகிறான். எவர் ஒருவர், ரமலான் மாத இரவுகளில் இறைநம்பிக்கையுடனும், மறுமையின் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளும் ஆவலுடனும் தராவீஹ் (ரமலான் மாதத்து பிரத்யேகத் தொழுகை) தொழுகையைத் தொழுகிறாரோ அவர் முன்னர் செய்த பாவங்களை இறைவன் மன்னித்துவிடுகிறான்!” என்னும் நபிகளார், இப்படி எச்சரிக்கையும் செய்கிறார்:

“எவர் நோன்பு நோற்ற நிலையில், பொய் சொல்வதையும் பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் குறித்து இறைவனுக்கு எவ்வித அக்கறையுமில்லை!”

(17.05.2018 அன்றைய இந்துவில், ஆனந்த ஜோதியில் வெளியான எனது கட்டுரை)

இணைப்புக்கு: http://tamil.thehindu.com/…/spirituality/article23903494.ece


Share:

Sunday, May 27, 2018

அன்பு நண்பர்களே




அன்பு நண்பர்களே, எனதருமை சகோதரர்களே,

நோன்பென்னும் யாகத்தீயில் படைத்தவன் ஆணையை சிரமேற்கொண்டு தனது பேரிச்சைகளை கட்டுக்குள் கொணரும் பிரயத்தனத்தில் முஸ்லிம் உலகம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரமிது. மனித இனத்து குழிகற்களாய் இருந்து அவனை நல்வழிப்படுத்தி சமூகத்தின் தீமைகளைக் களையும் அறப்போராளியாக மாற்ற மிக முக்கியத் தேவையான ‘இறைவனின் அச்சத்தைப்’ பெறவே இந்த முயற்சி. அதற்கான பயிற்சி பாசறையே ரமலான்.

பசித்திருந்தும், விழித்திருந்தும், தனித்திருந்தும் ஒரு மாதம் பெறும் இந்த ஆன்மிக பயிற்சியின் விளைவாக உள்ளாற்றலில் புத்துயிர் பெற்று அதைத் தொடர்ந்துவரும் பதினொரு மாதங்களில் அந்தப் பயிற்சியை செயல்படுத்தும் திட்டமே நோன்பின் அடிப்படை. 

இந்த நன்நோக்கத்தை உணராதவர் கடைப்பிடிக்கும் நோன்பு வீணாகிவிடும். வெறும் பசி-பட்டினி, தாகம், இரவில் கால்கடுக்க நின்று, தூக்கமிழந்து தொழுத தொழுகைகளின் பலன் இவை அனைத்தையும் இழந்து சடங்கு, சம்பிரதாயங்களை நிறைவேற்றியவர் போலாகிவிடுவார். 

ஏனெனில் தனது படைப்புகளிடம் எத்தகைய தேவையும் இல்லாதவன் இறைவன். அத்தகைய நிலையில் நமது பசி, பட்டினி விரதங்களில் அவனது தேவைதான் என்ன? 

இறையச்சத்தை கேடயமாக கொண்டு சமூகத்தின் நன்மைக்கு அச்சுறுத்துலாக இருக்கும் அத்தனை தீமைகளுக்கு எதிராக மனிதனை ஆர்த்தெழவைக்கும் புனித மாதமே ரமலான்.

மனிதனுக்கு வழிகாட்டியாக, நன்மை, தீமைகளை பிரித்தறிவித்து வழிநடத்தும் ஒளிவிளக்காய் திருக்குர்ஆன் அருளப்பட்டதும் இந்த மாத்த்தில்தான்! இறைவனின் பேரருளுக்கு ஆளான ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓரிரவும் இருப்பதும் இந்த மாத்த்தில்தான். ஒரு நன்மைக்கு பகரமாக  பல்லாயிரம் நன்மைகளை வாரி வழங்க வள்ளலுக்கெல்லாம் வள்ளல் பரம்பொருள், கருணையாளன், இரக்கமுடையோன் இறைவன் இருகரம் நீட்டி காத்திருப்பதும் இந்த மாதத்தில்தான்!

இத்தகைய சிறப்புக்குரிய மாதமான ரமலான் நம்மிடையே கடந்து கொண்டிருக்கிறது.

இதே கடப்பில், மற்றொருபுறம் நமது அருமை உறவுகள், ஆதிபிதாவின் மைந்தர்கள, இரத்தபந்தங்கள் ஸ்டெர்லைட் என்னும் கொடியவனுக்கு எதிராக நடத்தப்பட்ட அறவழி யுத்தமும் அரங்கேற்றப்பட்ட மாதமும் ரமலான்தான்!  தம்மையும், தம் சந்ததியையும். தம் மண்ணையும் காக்க அப்பாவிகள் மேற்கொண்ட நல்முயற்சியில் இதயமே அற்ற அதிகார எடுபிடிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி தங்கள் இன்னுயிரை இழந்ததும் இந்த மாதத்தில்தான்!

தம் கண்முன்னால் குடும்பத்தலைவனை இழந்த உறவுகள், பிள்ளைகளைப் பறிக்கொடுத்து பரிதவிக்கும் பெற்றோர்கள், நூற்றுக் கணக்கில் தங்கள் சொந்தங்களைக் காணாமல் தேடிக் கொண்டிருப்போர் என்று சுக்குநூறாகிப் போயிருக்கிறது தூத்துக்குடி.

இந்நிலையில், அதிகாரக் கொலைக்காரர்களை அடையாளம் கண்டு, அவர்கள் செய்த கொலைகளுக்கான மரண தண்டனையைப் பெற்றுத் தருவதும், இந்த படுகொலைகளுக்குக் காரணமான அரசியல் அரியணைப் பித்தர்களை பதவிகளிலிருந்து இறக்கி அவர்களுக்கான தக்க தண்டனைப் பெற்றுதருவதும் அவசியமானது.

வெள்ளையனின் சட்டங்களை இன்னும் நடைமுறைப் படுத்திக் கொண்டு சொந்த மக்களுக்கு எதிராக, அந்த மக்களின் வியர்வையால் பெற்ற வரிப்பணத்திலிருந்து ஊதியம் வாங்கிக் கொண்டு, மக்களைக் காக்க வேண்டிய ஆயுதங்களால் மக்களின் உடல்களை சிதறடிக்கும் இந்த கொடிய சட்டங்களை உடனடியாக மாற்றியமைக்க வேண்டியது இவற்றைவிட முக்கியமானது.

ஜனநாயக அமைப்பின் மிக முக்கியத்தூணாக இருக்க வேண்டிய ஊடகங்களோ அரசியில்வாதிகளின் ஊதுகுழல்களாய், தலையாட்டி பொம்மைகளாய் மாறி நிற்கும் அவலநிலை. ஒவ்வொரு ஊடகத்தின் பின்னும், அவை வெளியிடும் செய்திக்கு பின்னும் ஓர் அரசியல். உண்மைகள் மறைக்கப்பட்டு அரசியல் அதிகாரங்கள் அரங்கேற்ற கடும் முயற்சியில் நடைபெற்று வருவது உண்மை. இதன் நீட்சிதான் தூத்துக்குடி பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் அந்த மக்களுக்கான நீதி கிடைக்கும்வரை முனைப்பு காட்ட வேண்டிய ஊடகங்கள் தற்போது “அம்மா பேசினார்!” என்று மக்களை திசைத்திருப்ப முயல்வதும்.

இச்சூழலில் எனதருமை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், பெருமதிப்பு மிக்க சமூக ஊடகங்களை தூத்துக்குடி மக்களுக்கும், தமிழகத்தின் கிராமங்கள் தோறும் நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பதிவுகளை முடுக்கிவிடுங்கள். உங்கள் ஒவ்வொரு பதிவும் உண்மையை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும். நடப்பு நிகழ்வின் முகங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதாக இருக்கட்டும். தேவையற்ற பதிவுகளை முற்றிலும் தவிர்த்து, அரசியல் வர்ணங்களிலிருந்தும், மத மாச்சர்யங்களிலிருந்தும் விலகி மக்களுக்கான பதிவுகளாக இருக்கட்டும்.

அதேபோல, சட்டம் படித்தவர் தூத்துக்குடி மக்களின் சட்டப்பிரச்னைகளுக்கு எவ்வித கைமாறும் கருதாமல் சட்ட உதவிகள் செய்யட்டும்.

பொருள் கொண்டவரோ தம்மால் முடிந்தளவு பொருளாதார உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு செய்யட்டும்.

கற்றறிந்தோரோ, எவ்வித எதிர்பார்ப்பின்றி தங்கள் அறிவுத் திறன் கொண்டு தூத்துக்குடி படுக்கொலைகளை உலகறியச் செய்யட்டும்.

எதுவும் செய்ய இயலாத பெண்கள், குழந்தைகள் இவர்கள் ஒன்றுபட்டு பாதிக்கப்பட்டோர்க்கு தேவையான சிறு சிறு உதவிகள் செய்யட்டும்.

இவை அனைத்தும் நீறு பூத்த நெருப்பு நிலையிலேயே இருக்கட்டும். இந்த அதிகாரம் மக்கள் கையிலெடுக்கும் காலம்வரை இந்த போக்கு தொடரட்டும்.

தமிழகத்திலிருந்து தொடரும் இந்த மக்கள் எழுச்சி இந்தியா முழுவதும் பரவட்டும்.

ஒவ்வொரு முகநூல் கணக்காளரின் குறைந்த கணக்கீடாய் நூறு.. நூறு பேராய் திரண்டாலே இந்த எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டி விடும்.

கொடியவர்கள் வீழ்த்தியிருப்பது மனித உயிர்களை அல்ல. பெரும் பிரளயத்துக்கான விதைகளையே இவர்கள் தூவி உள்ளார்கள். காலம் இதை நிச்சயம் உணர்த்ததான் போகிறது.




Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive