Thursday, February 23, 2017
தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாதவரை.. மாயாஜாலங்கள் நிகழ்வதேயில்லை..!
தீமைகளில் தம்மைக் கரைத்துக் கொள்வதும், தீமைகளை வளரவிட்டு சுயநலமாய் தம்மை
மட்டும் காத்துக் கொள்வதும் ஒன்றுதான்..! இந்த வகையினரும் தீயவர்கள்தான்!
அதாவது தீயோராய் வாழ்வதும், தீமைகள் சமூகம் முழுக்க படர துணை நிற்பதற்கு
ஏதுவாய் தன்னை மட்டும் நல்லோராய் காத்துக் கொள்ளதும் ஒன்றுதான்! > இக்வான் அமீர் <
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நாட்டின் உயர் பொறுப்பில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்அமர்ந்திருக்கிறார். இங்கு தமிழ்நாட்டிலோ, கொள்ளைக்கும்பலின் பினாமிகள் கூச்சநாச்சமில்லாமல், மூர்க்கத்தனமாய் காட்சிகளை நகர்த்தி கொண்டிருக்கின்றன. ஆக நாடு முழுக்க ஏதோ ஒரு வகையில் கறைப்படிந்த கரங்களாலேயே மக்கள் ஆளப்பட்டுவரும் அவலநிலை தொடர்கிறது.
நாட்டின் ஒவ்வொரு தேர்தல்களிலும், கொலைக்காரர்களும், கொள்ளையரும் முண்டியடித்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற முனைப்புக் காட்டுகிறார்கள். நடப்பு தேர்தல்கள் உட்பட.
இந்நிலையில் நமது பொறுப்புகள்தான் என்ன?
தற்சமய சூழலில் மூன்றுவிதமான நிலைபாடுகள்தான் நாம் எடுக்க முடியும்.
1. தீமைகளில் தம்மையும் கரைத்துக் கொள்வது. தீயோரோடு கரம் சேர்த்து அவர்களுடன் இணைந்து கொள்வது.
2. யார் எக்கேடு கெட்டால் என்ன? நான் மட்டும் நல்லவனாய் வாழ்ந்து கொள்கிறேன் என்று தீமைகளைக் கண்டும், காணாமலும் இருந்து கொள்வது.
3. தன்னை தீமைகள் அண்டாதவாறு பார்த்துக் கொள்வதோடு, அடுத்தவரையும் அந்த தீமைகள் பற்றிப் பீடிக்காமலிருக்க தீமைகளை எதிர்த்து போராடுவது அதாவது தானும் நல்லோராய் வாழ முனைப்பு காட்டுவதோடு, சமூகத்தின் அடுத்த மனிதரும் அந்த வழியில் பயணிக்க பாடுபடுவது.
மேலோட்டமாய் இந்த நிலைப்பாடுகள் மூன்றாக தெரிந்தாலும், உண்மையில் அவை இரண்டு வகைப்பட்டதுதான்.
தீமைகளில் தம்மைக் கரைத்துக் கொள்வதும், தீமைகளை வளரவிட்டு சுயநலமாய் தம்மை மட்டும் காத்துக் கொள்வதும் ஒன்றுதான்..! இந்த வகையினரும் தீயவர்கள்தான்! அதாவது தீயோராய் வாழ்வதும், தீமைகள் சமூகம் முழுக்க படர துணை நிற்பதற்கு ஏதுவாய் தன்னை மட்டும் நல்லோராய் காத்துக் கொள்ளதும் ஒன்றுதான்!
தீமைகளையும், தீயோரையும் தொடர்ந்து எதிர்த்துப் போராடுவதும், அந்த தீமைகள் சமூகத்தை தீண்டாதவாறு விரட்டி அடிப்பதும், அதற்கான அர்ப்பணங்களை மேற்கொள்வதும் நல்லோர் வழி..
இதில் நீங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்று உடனே முடிவெடுங்கள். வளம் மிக்க நாட்டை அதன் உயர் ஒழுக்க விழுமியங்கள் கொண்டவ சமூக மக்களோடு உலக அரங்கில் அடையாளப்படுத்துங்கள்..!
எந்த சமூகமும் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாதவரை இங்கே மாற்றமெனும் மாயாஜாலங்கள் திடுப்பென்று விண்ணிலிருந்து நிகழ்வதேயில்லை என்பதை உறுதியாக நம்புங்கள்!
Tuesday, February 21, 2017
மாசடையும் கடல்
'''''''''''''''''''''''''''''''''''''''''
ஆரம்ப கல்வி நாட்களில் என் தாயாரோடும், அண்டை, அயலாரோடும் காற்றுடன் சேர்ந்து அழகிய சங்கீதம் இசைக்கும் அந்த அடர்ந்த சவுக்குத் தோப்புக்கு சுள்ளி பொறுக்கச் செல்வோம். உயர்நிலைக் கல்வி நாட்களில் ஓட்டப் பயிற்சிக்காக அலைக் கடல் நீரின் ஈரத்தில் தட்.. தட்.. என்று கால்களைப் பதித்து மைல் கணக்கில் ஓடுவது ஒரு பேரின்பம்! பல நூறு மீட்டர் அகலத்தில் வெள்ளை வெளேரென்று பூவாய் படர்ந்திருக்கும் கடலோரத்து வெண் மணல். அதில் முளைத்திருக்கும் புற், பூண்டு தாவரங்கள். அவற்றில் கால்பந்து அளவுக்கு பூக்கும் முட்பூக்கள்! அவை காற்றில் உருண்டு உருண்டு ஓட.. வேட்டை விலங்குகளாய் விரட்டிச் செல்லும் நண்பர்கள் குழு.
கிழக்கில் வங்கக் கடல். மேற்கு மற்றும் வடக்கில் சவுக்கு, உப்பு இவற்றின் நீர்வழி தடமாக விளங்கிய பக்கிங்காம் கால்வாய். இவற்றின் இடையே பெரும் மடியை விரித்து பரந்து விரிந்து எண்ணற்ற உயிரினங்களின் இருப்பிடமாக விளங்கும் கடற்கழி. கரையெங்கும் பச்சைப் பசேல் என படர்ந்திருந்த அலையாத்திக் காடுகள். தெற்கில் நிலப்பரப்பு என்று எல்லைகள் கொண்ட பகுதி.
முந்திரி, சவுக்கு, மணமணக்கும் பூக்களுடன் காணப்படும் தாழம்புதர்கள், கண்ணுக்கெட்டிய தொலைவுரை வெள்ளை வெளேர் உப்பளங்கள் என்று வரைப்படத்தில் சுற்றலாத்தலமாக சிறப்புப் பெற்றிருந்த இடமிது.
இப்படி, ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் இயற்கையின் வசந்தமாய் காணப்பட்ட சென்னை மாநகரின் வடக்குப் பகுதியும், சென்னை மாநகராட்சியின் முதலாவது மற்றும் இரண்டாவது வட்டத்தைச் சேர்ந்த வடசென்னையின் எண்ணூர் இன்று அதன் அசல் வடிவில் இல்லை!
சவுக்குத் தோப்பை நிர்மூலமாக்கிவிட்டு கொட்டப்பட்ட உரத்தொழிற்சாலைகளின் மலைக்குன்றுகள் போன்ற ஜிப்ஸம். அத்தொழிலுக்கு மூலப் பொருளான திரவ நிலை அம்மோனிய வாயு நிரப்பப்பட்ட மெகா சைஸ் பூமி உருண்டை வடிவ கொள்கலன். அம்மோனியம் வாயுவை குழாய் வழியே நிரப்ப கடல் மார்க்கத்தில் காத்திருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட ரோஸ் வண்ண கப்பல்கள்!
இந்த பேராபத்தை உணராமல் ஜிப்ஸத்தின் மீது, “வெள்ளை பிட்ச்“ என்ற சிறப்பு பெயரிட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் சிறார்கள்.
சென்னை துறைமுகத்தை அடுத்து, காமராஜர் செயற்கை துறைமுகத்தை வடிவமைத்த மலிவான தொழில்நுட்பத்தால்… கடற்கரை காணாமல் போய் பாறைகளே கரையாகிப் போன துரதிஷ்டம். பாறையோரத்து கிழிந்த கடலில் மகிழ்ந்து குளிக்கும் சிறுவர்கள்!
இந்தியாவில் குடிநீரில் புளோரைடு நச்சு அதிகளவு கலக்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலில் வடசென்னையும் ஒன்று. நீர் நச்சாகிப் போனதால்.. அதை பயன்படுத்திய மூன்று தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வளைந்த கால்களாகி .. பற்கள் கரைப் படிந்து அழகிழந்தார்கள்.. அத்தனை எலும்பு நோய் தொற்றுக்கும் ஆளானார்கள். முடங்கிப் போனது இளைய பாரதம்!
மாணவப் பருவத்தில் தந்தையாருடன் பொழுதுபோக்காக மீன் பிடிக்கச் செல்லும்போது ஏற்பட்டது அந்த நண்டுசிண்டுகளோடான பரிச்சயம். வடசென்னை எண்ணூர் கடற்கழியைத் தாண்டி அத்திப்பட்டு குருவிமேடு பகுதி கால்வாய் ஓரமாக கலர் கலராய் மஞ்சள், சிவப்பு, நீலம் என்று கண் கொள்ளா காட்சியாக வலைக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் நூற்றுக் கணக்கான நண்டுகள்.
ராணுவ வீரனைப் போல தடித்த ஒரு கொடுக்குடன் அவை கையாட்டி கையாட்டி அவற்றுக்குள் தகவல் பறிமாறிக் கொள்ளும் அழகே தனி!
இது முடிந்து பொதிகை தொலைக்காட்சிக்காக 'கல்ஃப் ஆசியா' தரப்பில் குறும்படங்களைத் தயாரிக்க (உப்பளம் சம்பந்தமாக) அந்தப் பக்கம் போனபோது அதே நண்டுசிண்டுகள் எண்ணிக்கையில் குறைந்திருந்திருப்பதை காண முடிந்தது.
ஆனால், தற்போது அதே பால்ய கால சிநேகிதர்களைத் தேடிப் போனபோது.. அவை காணாமல் சுற்றி.. சுற்றி தேட வேண்டியிருந்தது. கண் கவரும் வண்ணங்கள் இல்லை. கருத்துப் போய் கால நிலைக்கேற்ப அந்த நண்டுகளும் மாறுதல் அடைந்திருந்தது அதிர்ச்சியளித்தது.
பெருகிவரும் தொழிலகங்களும், அவற்றின் மாசுகளும் நம்மைச் சுற்றி வசிக்கும்.. நமக்காக உயிர் வாழும் உயிரினங்களை கொன்றுவருவது சகிக்க முடியாதது. சக ஜீவன்களை அழித்துவிட்டு என்னதான் சாதிக்கப் போகிறோம் நாம்? வருத்தமே மிஞ்சுகிறது. வேதனை நெஞ்சைப் பிளக்கிறது.
எண்ணூர் அனல்மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என்று ஒன்றுக்கு மூன்று மின்நிலையங்களின் எரிபொருளான நிலக்கரியின் சாம்பலை சுவாசித்துக் கொண்டிருக்கும் மக்கள்.
இந்த மின்நிலையங்களுக்காக நூற்றுக்கணக்கில் கையகப்படுத்தப்பட்ட காட்டுப்பள்ளி வனங்களும், அவற்றில் வாழும் எண்ணற்ற உயிரிகளும் இன்னும் சிலநாளில் காணாமல் போகும் அவலம். வடசென்னைக்கு ஒட்டியுள்ள இந்தப் பகுதியில்தான் அடர்த்தியான பனை மரங்களும், முந்திரி, சவுக்குத் தோப்புகளும் குறும்புதர்களும் நிரம்பியுள்ளன.
பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் சாம்பலால் ஆழம் குறைந்து போன கால்வாய். இதனால், பழவேற்காடுவரையிலான மீனவர்களின் கேள்விகுறியாகும் ஜீவாதாரம்.
ஒருமுறை, பூஉலக நண்பர் சுந்தரராஜனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ”நமது உள்ளுர் தேவைக்கு ஏற்ப மின்நிலையங்களை அமைத்துக் கொள்வது சூழல்மாசுவுக்கு பாதுகாப்பானது.!”- என்றார்.
உண்மைதான்… உற்பத்தி செய்யப்படும் விளைப்பொருட்கள் விவசாயிகளுக்கு சொந்தமில்லை என்பது போல, இங்குள்ள மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உள்ளுா் பயன்பாடுக்கு இல்லை என்பது அவலமானது.
இது போதாதென்று மணலியைச் சுற்றியுள்ள இரசாயன தொழிற்சாலைகள் உமிழும் கருமேக தீ சுவாலைகள் ஒட்டுமொத்த வான்பரப்பையும் நஞ்சாக்கி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் அண்மையில் காமராஜர் துறைமுகத்துக்கு அருகில் நடந்த கப்பல் விபத்தும், கச்சா எண்ணெய் கசிவும்! ஏற்கனவே மயானமான பகுதியில் மற்றுமோர் தகனமேடை இது எனலாம்!
இந்த கப்பல் விபத்து சம்பந்தமாக ஆரம்பத்தில் வெளியான தகவல்கள் பொறுப்பற்ற நமது நிர்வாக அமைப்பை அடையாளப்படுத்துகிறது.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சமையல் எரிவாயுவை இறக்கிய பி.டபுள்யூ மாபில் என்ற டேங்கர் கப்பல், துறைமுகக் கால்வாய் வழியாக வெளியேறியது. அப்போது டீசல், மோட்டார் ஸ்பிரிட் ஏற்றிக்கொண்டு டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் துறைமுகத்துக்கு உள்ளே வந்தது. இந்த இரு கப்பல்களும் எதிர்பாராத விதமாக, "டி' வடிவில் மோதிக் கொண்டன.
விபத்து நடந்த நாளன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் லேசான விபத்துதான் என்றும் இதனால் எவ்வித எண்ணெய்க் கசிவும் ஏற்படவில்லை என்றும் சொன்னார்கள்.
ஆனால் அதற்கு அடுத்தநாள் காலை கருப்பு நிற போர்வை போன்ற எண்ணெய்ப் படலம் எண்ணூர் எர்ணாவூர் பாரதியார் நகர் அருகே கடற்கரையில் ஒதுங்கியது. இந்தப் பகுதியில் ஏராளமான ஆமைகள், மீன்கள் செத்து மிதந்தன. இதனையடுத்து உஷரான நிர்வாகத்துறை அன்று இரவே எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
எண்ணெய் படலத்தை உறிஞ்சி எடுக்கும் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பணி தோல்வியில் முடிந்தது.
இதனால், இரண்டாம் நாளில் ஊழியர்கள் மூலம் நேரடியாக பக்கெட்டுகளைக் கொண்டு எண்ணெய்க் கழிவை கையால் அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.
விசித்திரமான பக்கெட் தொழில்நுட்பம் இது. 200-300 மீட்டர் கடற்கரையில் ஒதுங்கியுள்ள தார் போன்ற வடிவில் காணப்படும் கச்சா எண்ணெயை பக்கெட்டால் வாரி அப்புறப்படுத்தும் விசித்திரமான தொழில்நுட்பம்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் கடலோரக் காவல்படையினருடன் இணைந்து இந்தப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
அப்புறப்படுத்தும் பணி தொடங்கியபோது, 4 டன் அளவில் மட்டுமே எண்ணெய் கழிவு கடலில் கலந்துள்ளதாக சொல்லப்பட்டது.
தொடக்கத்தில் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 25 பேர் மட்டுமே அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நிலையில், இப்போது மாநகராட்சி, கழிவு நீர் அகற்றல் வாரியம், தீயணைப்பு படையினர், நெடுஞ்சாலைத் துறை, சென்னை, எண்ணூர் துறைமுகங்களின் ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இருந்தபோதும், எடுக்க எடுக்க எண்ணெய் படலம் குறைவதாக இல்லை.
இதற்கு மதிப்பீடு, திட்டமிடலில் ஏற்பட்ட தோல்வியே காரணம் என்கின்றனர் நிபுணர்கள். வெளியேறிய எண்ணெய்க் கசிவின் அளவை, கப்பல் நிறுவனம் தெரிவிக்காத நிலையில் கழிவுகளை மதிப்பீடு செய்தது யார்? அகற்றும் பணிக்கான வரைவுத் திட்டம் யாரால் வகுக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது கடலோரக் காவல் படையினரிடமோ பதில் இல்லை.
மேலும் இப்பிரச்னையால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தாரு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தாரு, காங்கிஸ் கட்சி மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் வந்தாரு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் எல்லாம் வந்து வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
எண்ணெய் படலத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அவசர அவசரமாகக் கழிவுகள் கடலிலிருந்து அகற்றப்பட்டு வரும் நிலையில், அவற்றிலிருந்து வெளியேறும் சிதறல்களால் கடற்கரை மணல் பகுதி, தடுப்புச் சுவர்கள், அருகாமையில் அமைந்துள்ள சாலைகளிலும் எண்ணெய்க்கழிவுகள் பரவியுள்ளன.
தண்ணீருக்குள் இருந்தபோது ஒரளவு கெட்டியாக இருந்த இக்கழிவுகள், வெயில் காரணமாக உருகி சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலைமைத் தொடர்ந்தால் ஏற்கனவே கடும் சூழல்மாசுவால் பாதிக்கப்பட்டிருக்கும் வடசென்னைவாசிகளை பொக்லைன் எந்திரத்தால் அப்புறப்படுத்தி புதைக்குழிக்குள் தள்ளிவிட வேண்டிய துரதிஷ்டநிலைதான் ஏற்படும்.
(சமரசம் மாதமிருமுறை பிப்.16-28 இதழில், வெளியான முகப்புக் கட்டுரை)
Sunday, February 19, 2017
மறைமுக வாக்கெடுப்பும், அதிகார குவிமையமும்
இதற்கு, நாட்டாமை செய்து கொண்டிருந்தவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு
கிளம்பியது. கோவை அசம்பாவிதங்கள் என்று ஏக பிரச்னைகளில் சிறுபான்மையினம்
சிக்கியிருந்த நேரம். அந்தச் சூழலையொட்டி தீவிரத்தனத்துக்கும் எங்களுக்கும்
எவ்வித சம்பந்தமும் இல்லையாயினும், எங்களை தீவிரவாதிகள் என்று சொல்லி
பிடித்துக் கொடுத்துவிடுவதாக அந்த அச்சுறுத்தல் நீண்டது - இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
1980-களின் பிற்பகுதி அது. எங்கள் பள்ளிவாசலில் காலங்காலமாக நிர்வாகத்தில் அமர்ந்து நாட்டாமை செய்துவந்த ஒரு குழுவுக்கு எதிராக நாங்கள் களம் இறங்கிய கால கட்டம்.
பள்ளிவாசலில் தேர்தல் இல்லாமல் நியமன முறையில் சிலர் தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வந்தனர். சுரண்டலும், முறைகேடுகளும் மலிந்துவிட்டிருந்த நேரமது. இது பொதுமக்களுக்கு பிடிக்காத நிலையில்கூட எழுந்து நின்று கேட்க அச்ச உணர்வு அவர்களை ஆட்கொண்டிருந்தது. எதிர்த்து கேட்டவர்கள் சொல்லப்படாத சமூக விலக்கு செய்யப்பட்ட நிலை என்று அதிகார குவிமையத்தின் முரட்டுத்தன வலிமை தொடர்ந்தது.
இடதுசாரி இயக்கங்களிலிருந்து விலகி இஸ்லாத்தின் பக்கம் அப்போதுதான் வந்திருந்தேன் இளைஞனாகிய நான்.
எவ்வித அச்ச உணர்வின்றி சில சிறுவர்களை மட்டும் எனது தரப்பில் வைத்துக் கொண்டு ஜனநாயக முறையிலான மறைமுக வாக்கெடுப்பு வேண்டும் என்று அறவழியில் போராட்டத்தைத் துவக்கினோம்.
வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலின் ஓரமாக நின்று வாக்குமுறையிலான தேர்தல் வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி அமைதியாக நிற்பதுதான் எங்கள் போராட்டத்தின் யுக்தி.
இதற்கு, நாட்டாமை செய்து கொண்டிருந்தவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவை அசம்பாவிதங்கள் என்று ஏக பிரச்னைகளில் சிறுபான்மையினம் சிக்கியிருந்த நேரம். அந்தச் சூழலையொட்டி தீவிரத்தனத்துக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையாயினும், எங்களை தீவிரவாதிகள் என்று சொல்லி பிடித்துக் கொடுத்துவிடுவதாக அந்த அச்சுறுத்தல் நீண்டது.
நாங்கள் கேட்டது பள்ளி நிர்வாகத்தில், மக்கள் அனைவரும் பங்கெடுக்கும் விதமான ஒரு பொதுவான தேர்வு முறை. ஆனால், அந்த முரட்டு நாட்டாமைகளோ அதிகார தக்க வைத்தலுக்காக மக்களின் ஆதரவைத் திரட்டாமல் பொய் குற்றச்சாட்டுகள் மூலமாக எங்களைப் பணிய வைக்கப் பார்த்தது. எங்கள் எதிர்காலத்தை மையமாக வைத்து விளையாடவும் அச்சப்படவில்லை அந்த பதவி வெறியர்கள்.
இந்த அச்சுறுத்தல்கள் எங்களை எவ்விதத்திலும் அசர வைக்கவில்லை. அந்த காலகட்டத்தில், தினமணி, மணிச்சுடர், தீக்கதிர் போன்ற நாளேடுகளில் அதிகமாக எழுதி கொண்டிருந்த நேரமது.
மனிதரிடையே அன்பும், இணக்கமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று எழுத்திலும், நடைமுறை வாழ்க்கையிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது எங்களின் அழுத்தமான வாழ்வியல் அடையாளங்கள்.
கடைசியில் பதவி வெறியர்களின் மூர்க்கத்தனமான நடவடிக்கையின் அடிப்படையில் பொய்யான புகாரையொட்டி நாங்கள் கைது செய்யப்பட்டதும், அதன் பின் மேற்குறிப்பிட்ட எழுத்துவடிவிலான எங்கள் வாழ்க்கைகான ஆவணங்களை திரட்டி காவல்துறையின் உயர்மட்டம்வரை அனுப்பி, அதை சரிப்பார்த்தல், சோதித்தல், தொடர்ந்து எங்களை நச்சரித்தல் என்று தொடர்ந்த நடவடிக்கைகள் இறைவன் நாடினால்… மற்றுமோர் சமயத்தில் பார்க்கலாம்.
நான் இங்கு சொல்ல வந்தது… மறைமுக வாக்கெடுப்புக்கு அச்சப்படுவது என்பது தங்கள் சொல்லாலும், செயலாலும் மக்களை அச்சப்படுத்தி தங்களுக்கு அடிபணிய வைக்கும் ஒரு எதேச்சாதிகார முறைமையை அதிகார விரும்பிகள் எப்போதும் தங்கள் கையில் வைத்திருக்க நினைப்பதுதான்!
இந்த அச்ச உணர்வின் வெளிப்பாடுதான் இரண்டு நாட்களுக்கு முன் சட்டமன்றத்தில் நடந்த ரகளை.
மறைமுக வாக்கெடுப்பு என்பதுதான் சரியான அரசியல் தீர்வாக இருக்க முடியும்.
கிட்டதட்ட ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக எங்கள் பள்ளியில் ஒவ்வொரு தேர்தல் காலம்தோறும் வாக்கு பெட்டிகள்தான் நிர்வாகிகளை தேர்வு செய்கின்றன… இது எதிர் தரப்பினருக்கு பிடிக்காமல் இருந்தாலும் சரியே..!
நியமனங்கள் சர்வாதிகாரத்தின் வெளிப்பாடகிவிடும் என்பதே யதார்த்தம்.
சபாநாயகர் எதிர்கட்சிகளின் கோரிக்கையான மறைமுக வாக்கெடுப்பை ஏற்று அதை பின்பற்றியிருந்தால்… தமிழக சட்டமன்றத்தில் புதிய வழக்கொன்று நாடு முழுவதும் முன்னுதாரணமாகியிருக்கும். வரலாறு தமிழகத்தை அடிகோட்டிட்டவாறே இருந்திருக்கும். போற்றப்பட்ட முடிவாக அது இருக்கும்.
ஆனால், கத்தியின் மீது நடக்கும் சோதனைக்கு ஒப்பான இதை வெறும் அதிகார விரும்பிகள் ஏற்க வாய்ப்பில்லை என்பதை நிரூபித்திருக்கின்றன தொடரும் களேபரங்கள்!
Saturday, February 18, 2017
காக்கைகள் எவ்வளவோ மேல்!
காக்கை மீது பரிதாபம் கொண்ட நான் நீண்ட கழியால் அது சிக்கியிருந்த
இடத்திலிருந்து விடுவிக்க முயன்றும், அது ஏனோ வாழவே பிடிக்காததைப் போல
மனோநிலையில் இருந்தது. தானே விடுவித்துக் கொள்ள வழியிருந்தும்,
விடுவித்துக் கொள்ளாமல் நான் செய்த உதவிகளையும் ஏற்றுக் கொள்ளாமல் தூக்கு
மேடையில் ஏற்றப்பட்ட கைதியைப் போல நிலைக்குலைந்திருந்தது. கால்களால்
மரக்கிளையைப் பற்றிக் கொண்டு சிறிது சிறிதாக நழுவி தலைக்கீழாக தொங்கியது.-இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
காலையில் மாடி தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தபோதுதான் காக்கைகள் கும்பல்… கும்பலாக கரைந்து கொண்டிருந்த சத்தம் கேட்டது.எனது அனுபவத்தில் இப்படி காக்கைகள் கும்பலாக கரைவதன் பொருள்,
• ஒன்று குரங்குகளின் வருகையை பிரதிபலிப்பதாக இருக்கும் அல்லது
• பஞ்சாயத்து சபை கூடிவிட்டது என்று பொருள்.
ஆம்… காக்கைகள் தங்களுக்குள் உயரிய நீதிபரிபாலன முறைமைக்காக ஒன்று கூடும் நிகழ்வாக அது இருக்கும்.
இந்த நேரத்தில்தான் என் மனைவி என்னை அழைத்தார்… ”ஏங்க.. ஏங்க.. பாவம் அந்த காக்கா… மரத்தில் மாட்டிட்டிருக்கு.. காப்பாத்துங்களேன்..!”
மாடியிலிருந்து எட்டிப் பார்த்தால் வார்தா புயலால் அடிப்பகுதி முறிந்து தென்னையில் சாய்ந்திருந்த காய்ந்து போன கால் நூற்றாண்டு வயதுடைய சப்போட்டா மரத்தில் காக்கை ஒன்று சிக்கியிருந்தது.
அதுதான் குற்றவாளி காகம் என்று எனக்கு தெரிந்துவிட்டது.
சக காக்கைகள் கொத்தியதாலும், அதன் உள்ளுணர்வு தவறை உணர்த்தியதாலும் அது தனது முடிவு காலத்தில் இருந்தது எனக்குப் புரிந்தது.
காக்கைகள் நீதிமன்றம் குறித்து என் மனைவியிடம் சொன்னபோது, அவர் நம்ப மறுத்து, ”காக்காவ முதல்ல காப்பாத்துற வழியைப் பாருங்க” – என்றார் ஒற்றை வரியில்.
காக்கை மீது பரிதாபம் கொண்ட நான் நீண்ட கழியால் அது சிக்கியிருந்த இடத்திலிருந்து விடுவிக்க முயன்றும், அது ஏனோ வாழவே பிடிக்காததைப் போல மனோநிலையில் இருந்தது. தானே விடுவித்துக் கொள்ள வழியிருந்தும், விடுவித்துக் கொள்ளாமல் நான் செய்த உதவிகளையும் ஏற்றுக் கொள்ளாமல் தூக்கு மேடையில் ஏற்றப்பட்ட கைதியைப் போல நிலைக்குலைந்திருந்தது. கால்களால் மரக்கிளையைப் பற்றிக் கொண்டு சிறிது சிறிதாக நழுவி தலைக்கீழாக தொங்கியது.
தலைக்கு மேல் கும்பலாக காக்கைகள் கரைந்தவாறு பறந்து கொண்டிருந்தன.
கடைசி வாய்ப்பாக, காகம் நீர் அருந்த உதவும் வகையில், தொலைவிலிருந்து அதன் உடலில் நீர் ஊற்றினேன். உடலில் நீர்பட்டு தலைவழியே வழிந்தும் அந்த காக்கை நீரருந்த ஆர்வம் காட்டவில்லை.
கடைசியில் மரத்திலிருந்து கீழே விழுந்து தனக்கான தண்டனையை அனுபவித்துவிட்டது.
காக்கைகளுக்கும் சட்ட திட்டங்கள் உண்டு. நீதிமன்றங்களும் உண்டு என்பது வியப்பான செய்தி அல்லவா!
• அடுத்த காக்கைகளின் கூட்டை அபகரிப்பது குற்றம்.
• அடுத்த காக்கையின் ஜோடியை அபகரிப்பது கடும் குற்றம்.
• இளம் குட்டி காக்கைகளின் உணவை திருடி தின்பது குற்றம் என்று காக்கைகள் உலகில் பல சட்ட திட்டங்கள் உண்டு.
குற்றவாளி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார். குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும்.
ஒரு காகம் மற்றொரு காகத்தின் கூட்டை அபகரிக்கும்போது, அந்த கூடு பிரித்துப் போடப்படும். குற்றவாளி மீண்டும் புதிய கூட்டை உருவாக்கி தர வேண்டும்.
ஒரு காகம் தனது ஜோடியை விட்டு விட்டு அடுத்த காகத்தின் ஜோடியை அபகரிக்கும்போது காக்கைகள் நீதிமன்றத்தில் அந்த குற்றவாளிக்கு தண்டனை மரணம்தான்!
எல்லா காக்கைகளும் கும்பலாய் சேர்ந்து தங்கள் அலகுகளாலேயே குற்றவாளியை குத்தி கிழித்து கொன்றுவிடுகின்றன.
இளம் குட்டி காக்கைகளின் உணவை திருடி உண்ணும் காக்கையின் இறகுகள் பிடுங்கப்பட்டு குட்டி காக்கைகளைப் போலவே பறக்க முடியாமல் உணவுக்காக சிரமப்படும் தண்டனைத் தரப்படும்.
இப்படிப்பட்ட நீதிமன்றங்கள் திறந்த வெளியிலும், வயற்காடு போன்ற ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியிலும் நடக்கும்.
அனைத்து காக்கைகளும் ஆஜராகும்வரை இரவு, பகல் என்று அந்த காக்கைகள் அங்கேயே குழுமி இருக்கும். குற்றம் சாட்டப்பட்ட காக்கை அதற்கான காவலர்களால் தப்பிக்க முடியாமல் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும்.
நீதிமன்றம் ஆரம்பம் என்பதன் அறிகுறியாய் காக்கைகள் ஒரு சேர கரைய ஆரம்பிக்கும்.
அதன்பிறகு, குற்றம் சாட்டப்பட்ட காக்தை தனியாக கரைய வேண்டும்.
அடுத்தததாக, குற்றத்தைக் கண்ட சாட்சி காக்கை ஆவேசமாக வால் இறகையும், உடலையும் ஆட்டியவாறே கரைந்து குற்றத்தை உறுதிப்படுத்தும்.
அதை மறுக்கும்விதமாக குற்றவாளி கரைய ஆரம்பிக்கும்.
கடைசியில், பலமான சாட்சியால் குற்றவாளி கரைவதை நிறுத்திவிடும். தலையையும், இறகுகளையும் தொங்கவிட்டு குற்றத்தை ஒப்புக் கொள்ளும்.
அதன் பிறகு தண்டனை நிறைவேற்றப்பட்ட காகத்தின் உடலை, ஒரு குழுவாய் சில காக்கைகள் சுமந்து சென்று கண்ணியத்துடன் அடக்கம் செய்து விடுகின்றன. பிறகு கலைந்து பறந்து விடுகின்றன.
காக்கைகளின் நீதி, நியாயம் மனிதர்களைவிட மேன்மையானது.
நீதிமன்றம் ஆரம்பம் என்பதன் அறிகுறியாய் காக்கைகள் ஒரு சேர கரைய ஆரம்பிக்கும்.
அதன்பிறகு, குற்றம் சாட்டப்பட்ட காக்தை தனியாக கரைய வேண்டும்.
அடுத்தததாக, குற்றத்தைக் கண்ட சாட்சி காக்கை ஆவேசமாக வால் இறகையும், உடலையும் ஆட்டியவாறே கரைந்து குற்றத்தை உறுதிப்படுத்தும்.
அதை மறுக்கும்விதமாக குற்றவாளி கரைய ஆரம்பிக்கும்.
கடைசியில், பலமான சாட்சியால் குற்றவாளி கரைவதை நிறுத்திவிடும். தலையையும், இறகுகளையும் தொங்கவிட்டு குற்றத்தை ஒப்புக் கொள்ளும்.
அதன் பிறகு தண்டனை நிறைவேற்றப்பட்ட காகத்தின் உடலை, ஒரு குழுவாய் சில காக்கைகள் சுமந்து சென்று கண்ணியத்துடன் அடக்கம் செய்து விடுகின்றன. பிறகு கலைந்து பறந்து விடுகின்றன.
காக்கைகளின் நீதி, நியாயம் மனிதர்களைவிட மேன்மையானது.
- காக்கைகள் ஒருபோதும் மனிதனைப் போல பொய்சாட்சி சொல்வதுமில்லை.
- குற்றவாளியை தப்பவிடுவதுமில்லை!
- வழக்கின் தீர்ப்பு சொல்ல பல ஆண்டுகள் எடுத்துக் கொள்வதுமில்லை!
படிப்பினைகள் தரும் தாயிப் பயணம்
கிருத்துவ
சமயத்தை சேர்ந்த அத்தாஸ் இராக்கை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதை நபிகளார்
தெரிந்து கொண்டார். மலர்ந்த முகத்துடன் நபிகளார், ”எனதருமை சகோதரர் யூனுஸ்
(Jonah) அவர்களின் நகரத்தைச் சேர்ந்தவரா நீங்கள்?” – என்று அன்புடன்
விசாரிக்கவும் செய்தார்.
”யூனுஸை
உங்களுக்கு எப்படி தெரியும்?” - என்று பணியாள் வியப்புடன் கேட்க,
”அத்தாஸ், யூனுஸ் என்னைப் போலவே இறைவனின் தூதராவார்!” என்று நபிகளார்
பதிலளித்தார். உண்மையின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட அத்தாஸ் உடனே பணிந்து
நபிகளாரின் தலையிலும், கரத்திலும், பாதத்திலும் முத்தமிட்டலானார். •இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகளார் வாழ்ந்த காலத்து அரபு சமூக கட்டமைப்பில் தனிநபர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கோத்திரத்தாரின் பாதுகாப்பை பெற்றிருப்பது தவிர்க்க இயலாததாக இருந்தது. இந்த வழக்கத்தையொட்டிதான் மக்காவில், நபிகளார் தமது நபித்துவத்து ஆரம்ப நாட்களில் பனு ஹாஷிம் கோத்திரத்தின் தலைவரான தமது பெரிய தந்தையார் அபுதாலிபின் பாதுகாப்பை பெற்றிருந்தார். அபுதாலிபின் மரணத்துக்கு பிறகு கோத்திரத் தலைமைத்துவம் மற்றொரு சிறிய தந்தையான அபுலஹபின் வசம் வந்தது. அபுலஹபோ நபிகளாரின் போதனைகளை கடுமையாக எதிர்த்து வந்தவர். அதனால், அடைக்கலம் தர அவர் மறுக்கவே சிக்கல் ஆரம்பித்தது. இதிலிருந்து மீண்டு தமது பணிகளைத் தொடர ஆதரவு தேடி நபிகளார் மேற்கொண்ட அயலக பயணம்தான் தாயிப் பயணம்.
இளம் நபித்தோழரும், வளர்ப்பு மகனுமான ஜையித் இப்னு ஹாரிதாவுடன் மக்காவுக்கு கிழக்கில் 65 மைல் தொலைவில் அமைந்திருந்த கோடை வாசஸ்தலமான தாயிப் நகரத்தை நோக்கி நபிகளார் மேற்கொண்ட பயணம் அது. தாயிப் நகரில் நபிகளாரின் உறவினர் சிலர் இருப்பினும், அதிகாரம் என்னவோ அபு யாலைல், மசூத் மற்றும் ஹபீப் என்ற மூன்று தனிநபர்களிடம் இருந்தது.
நபிகளாரின் கோரிக்கையை ஏற்று அடைக்கலம் தர இந்த மூவரும் மறுத்துவிட்டார்கள். அத்துடன், அவமதிக்கவும் செய்தார்கள். அவர்களில் ஒருவர், ”ஒருவேளை, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர் நீங்களாக இருந்தால், நான் கஅபாவின் திரைச்சீலையை கிழித்தெறிவேன்!” – என்றார். அடுத்தவரோ,”இறைவனுக்கு உம்மை விட்டால் வேறு யாரும் இறைத்தூதராக கிடைக்கவில்லையோ?” – என்று நகைத்தார். மூன்றாவது பிரமுகரோ, ”நீர்தான் இறைவனின் தூதர் என்றால், உம்மிடம் உரையாட எனக்குத் தகுதியில்லை அல்லது நீர் இறைத்தூதர் இல்லை என்றால், என்னிடம் உரையாட உமக்குத் தகுதியில்லை!” – என்று நையாண்டி செய்தார்.
நபிகளாரை உடனடியாக தாயிப்பை விட்டு வெளியேற சொன்னதோடு நில்லாமல், அவர் மீது வன்முறையும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதன் விளைவாக அடைக்கலம் தேடி தாயிப் சென்ற நபிகளார் சொல்லடியோடு கல்லடிப்பட்டு இருள் கப்பிய அந்த வேளையில், ஊருக்கு வெளியிலிருந்த ஒரு திராட்சைத் தோட்டத்தில் புகலிடம் தேடி சென்றார்.
உடடெல்லாம் குருதி மயமான அந்த நிலையிலும் நபிகளார் தமது இயலாமைக் குறித்தும், இறைவனிடம் அடைக்கடலம் தேடியும், பிரார்த்தித்தவாறே இருந்தார்.
திராட்சைத் தோட்டமோ உத்பா மற்றும் ஷைபா என்ற இரண்டு சகோதரர்களுக்கு சொந்தமானது. நபிகளாரின் நிலையைக் கண்டு இரக்கம் கொண்ட அவர்கள், இளைப்பாற அனுமதித்தார்கள். கூடவே, தட்டு நிறைய திராட்சைக்கனிகளைப் தங்களின் பணியாள் கிருத்துவ சமயத்தைச் சேர்ந்த அத்தாஸிடம் கொடுத்தனுப்பினார்கள்.
அத்தாஸிடம் திராட்சைக் கனிகளைப் பெற்றுக் கொண்ட நபிகளார், “இறைவனின் திருநாமத்தால்” என்று பொருள்படும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!” – என்று மொழிந்துவிட்டு உண்ண ஆரம்பித்தார்.
அதுவரையிலும் அந்தப் பகுதியில் கேட்காத இந்த சொல்லாடல், அத்தாஸீக்கு வியப்பளித்தது. அதை, நபிகளாரிடம் வெளிப்படுத்தவும் செய்தார்.
கிருத்துவ சமயத்தை சேர்ந்த அத்தாஸ் இராக்கை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதை நபிகளார் தெரிந்து கொண்டார். மலர்ந்த முகத்துடன் நபிகளார், ”எனதருமை சகோதரர் யூனுஸ் (Jonah) அவர்களின் நகரத்தைச் சேர்ந்தவரா நீங்கள்?” – என்று அன்புடன் விசாரிக்கவும் செய்தார்.
”யூனுஸை உங்களுக்கு எப்படி தெரியும்?” - என்று பணியாள் வியப்புடன் கேட்க, ”அத்தாஸ், யூனுஸ் என்னைப் போலவே இறைவனின் தூதராவார்!” என்று நபிகளார் பதிலளித்தார். உண்மையின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட அத்தாஸ் உடனே பணிந்து நபிகளாரின் தலையிலும், கரத்திலும், பாதத்திலும் முத்தமிட்டலானார்.
இந்த சம்பவத்தை உத்பாவும், ஷைபாவும் பார்த்தவாறே இருந்தார்கள். ”இவர் நமது பணியாளை தனது பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அதோ… பார்..!” என்றார் ஒருவர் மற்றொருவரிடம்.
இந்த சம்பவத்தை உத்பாவும், ஷைபாவும் பார்த்தவாறே இருந்தார்கள். ”இவர் நமது பணியாளை தனது பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அதோ… பார்..!” என்றார் ஒருவர் மற்றொருவரிடம்.
அத்தாஸ் திரும்பி வந்ததும், ”அவர் முன் பணிவதும், கை,கால்களில் முத்தமிடுவதும் உனக்கு அவமானமாக இல்லையா?” – என்று கண்டிக்கவும் செய்தார்கள்.
”இந்த உலகில் இவரைவிட எனக்கு முக்கியமான நபர் வேறு யாரும் இல்லை. அவர் என்னிடம் சொன்னது, ஒரு இறைத்தூதர் அன்றி வேறு யாராலும் சொல்ல முடியாதது!” - என்று அத்தாஸ் உறுதியுடன் சொன்னார்.
தாயிப் நகரத்தை நோக்கிய ஒரு வரலாற்றுப் பயணத்தில் நபிகளார் மூன்று விதமான மக்களைச் சந்தித்து மூன்று விதமாக நடத்தப்பட்டார்.
முதலாவதாக ஒரு பிரிவினர், நபிகளார் மீது சொல்லடியும், கல்லடியும் சொறிந்தார்கள். இரண்டாவது பிரிவினரோ, நபிகளாரை விருந்தினராய் உபசரித்தார்கள். மூன்றாவதாக திராட்சைத் தோட்டத்து ஏழைப் பணியாளர் நபிகளாரின் நபித்துவத்துக்கு சாட்சி சொன்னார்.
முடிவு என்பது முற்றில்லாதது என்ற படிப்பினைத் தரும் வரலாற்று சம்பவம் இது. ஒதுங்கக்கூட நிழலற்ற வெட்டவெளி என்று விரக்தி தரும் நிலையில், ஒதுங்கி இளைப்பாற ஒரு சிறு மரம் நிச்சயம் தென்படலாம். ஆதரவற்றோர் என்று மனம் தளரும் நிலையில் ஆதரவாய் அரவணைக்க சிலர் ஓடோடி வரலாம். அதனால், ஒரு சிலர் தரும் துன்பத் துயரங்களைக் கண்டு திகைத்து நிற்கவோ, துவண்டுவிடவோ தேவையில்லை.
எந்நிலையிலும், எதிர்மறையாக செயல்படாமலிருப்பதும், வாய்மையில் நிலைத்திருப்பதும் இறையன்பைப் பெற்று தரும். மக்கள் மனங்களை கொள்ளைக் கொள்ளும் என்கிறது நபிகளாரின் தாயிப் பயணம்.
(தி இந்து தமிழ், ஆனந்த ஜோதி 16.02.2017 அன்றைய இணைப்பில் வெளியான கட்டுரை)
Tuesday, February 14, 2017
Saturday, February 11, 2017
இந்திய ஜனநாயகத்தில் நமது பொறுப்புகள்
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்த அனுமதி அளித்ததற்காக முதல்வர் பன்னீர் செல்வத்தை
தூற்றுவதும், சசிகலா முதல்வராக வந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒடுக்கி
சிறுபான்மையினரின் காவல் தெய்வமாக மாறிவிடுவார் என்று நம்புவதெல்லாம்
அபத்தமானது! ஏனென்றால் இந்துத்துவ அதி தீவிரவாத பாசிஸம் என்பது சிந்தனை
ரீதியானது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஊடுருவக்கூடியது. ஏற்கனவே எல்லா
துறைகளிலும் ஊடுருவி இருப்பது - இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நான் அதிமுக கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. ஆனாலும், எனது தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் தகுதிக்கேற்ப சில நேரங்களில் அதிமுகவை ஆதரித்தும் வாக்களித்தும் இருக்கிறேன். எதிர்த்தும் வாக்களித்திருக்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை அவரை, கடுமையாக விமர்சித்தும் இருக்கிறேன். ஆனால், அவர் நோயுற்றபோதும், அதைத் தொடர்ந்து இறந்ததாக சொல்லப்பட்டபோதும் அந்த அனுதாபம் என்னையும் தொற்றிக் கொண்டது என்ற உண்மையை ஒப்புக் கொண்டாகதான் வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவர் பெண் என்ற ஒரு முக்கிய காரணமும் அதில் உண்டு.
நடிகை சிலுக்கு ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டபோது அவர் சம்பந்தமாக சமரசம் இதழில் ஒரு கட்டுரை எழுதி அனுதாபம் தெரிவித்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவன் நான். மௌலானா குத்புதீன் பாகவி தனது மரண காலம்வரை அதை சொல்லியே என்னை கிண்டலடிப்பதும் உண்டு. ஆனாலும் என் நிலையில் நான் தெளிவாகவே இருக்கிறேன். ஒரு எழுத்தாளன் எப்போதும் துணிச்சலுடன் உண்மையை உரைத்தவண்ணமாகவே இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான சமரசமும் இல்லை.
அந்த அடிப்படையில் காலமெல்லாம் எனது விமர்சனத்துக்கு ஆளானா ஜெயலலிதாவின் மரணம் என்னை பாதிக்கவே செய்தது. அந்த பாதிப்பை இரங்கலாக.. “ஒற்றைப் போராளி வீழ்ந்தார்“ என்ற கட்டுரை வடிவில் எனது வலைப்பூவில் http://ikhwanameer.blogspot.in/2016/12/blog-post_97.html பதிவும் செய்தேன்.
அதேபோல, இரும்பு மனுஷி எனப்படும் ஜெயலலிதாவின் மிக மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அவரின் நேர்காணல் ஒன்றை அவருடைய இறுதி ஊர்வல காட்சிகளோடு https://www.youtube.com/watch?v=NM4qPP4-5uo&t=1s காணொளியாக பதிவேற்றமும் செய்திருந்தேன். இன்றைக்கும் எனக்கு மிகவும் பிடித்த காணொளி இது.
கடந்த சட்டமன்ற தேர்தல்களின் வெற்றி தோல்விகள் குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை, ”நாகூரானின் வாக்கு யாருக்கு?” http://ikhwanameer.blogspot.in/2016/05/blog-post_14.html அந்த கட்டுரையின் முக்கிய பகுதிகளை வாசிப்புக்காக அடியில் தந்துள்ளேன்.
2014-ம், ஆண்டு, விழிகள் வெளிப்புற படப்பிடிப்புக்காக, சென்னைக்கு வடக்கே ஏறக்குறைய ஒரு முப்பது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் காட்டுப்பள்ளிக்கு சென்றிருந்தபோதுதான் முதன் முதலாக நாகூரானை சந்தித்தேன். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=tpixA1-gGY8)
நாகூரான் என்றதும் முஸ்லிம் என்று கருதிவிட வேண்டாம். குழந்தை இல்லாத ஒரு தலித் தம்பதிக்கு நாகூராரை வேண்டி பிறந்த குழந்தையாதலால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. ஒரு கையில் புட்டி தண்ணீர், மறு கையில் ஒரு கழி, தலைப்பாகை சகிதமாக அந்த நண்பகல் வெய்யிலில் ஆட்டு மந்தையுடன் வந்த நாகூரான் அந்தப் பகுதியின் நடமாடும் வரலாற்று புத்தகமாக இருந்தார். அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிவந்த மேய்ச்சல் நிலம் அனல் மின்நிலைய விரிவாக்கத்துக்காக அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே சுற்றியும் எண்ணூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின்நிலையங்கள். இவை போதாதென்று நூற்றுக் கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு காட்டுயிரிகள் உயிரிழக்கும் அபாயம். ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்கள் பாரம்பர்ய மீன்பிடித் தொழில் இழக்கும் அபாயம். அனல் மின்நிலைய நிலக்கரி சாம்பல் கழிவால் பாதரசம் வெளிப்பட்டு பூமி மலடாகி நச்சு வடிவாகிப் போகும் அபாயம். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg)
இத்தகைய சூழல்மாசுவின் அபாயங்கள் சுற்றிப் படர்ந்துள்ள பூமியில்தான் நாகூரானை சந்தித்தேன். அதையெல்லாம் அறிந்து கொள்ளும் கல்வி அறிவு அவரிடம் நான் எதிர்பார்க்க முடியாது. உண்மையும் அதுதான். அந்த ஆபத்துகள் ஏதும் நாகூரானுக்கு தெரியவில்லை. கடைசியாக விடை பெறும்போது, அவர் கட்டியிருந்த கரை வேட்டியை சுட்டிக் காட்டி அவரது வாக்கு யாருக்கு என்று கேட்டபோது, அவர் பளிச்சென்று பதில் சொன்னார்.
அண்மையில், அதே காட்டுப்பள்ளியைத் தாண்டி காளாஞ்சி கிராமத்தில் காட்டுயிரி ஆய்வுக்காக சென்றிருந்தேன். அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த நாமக்கல் பகுதியைச் சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்த அந்த ஏழை உழைப்பாளிகளை அவர்கள் விருப்பப்படி படமெடுத்து முடித்தேன். கடைசியாக, ”உங்கள் வாக்கு யாருக்கு?” - என்று கேட்டபோது அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாகூரான் சொன்ன அதே பதிலைதான் பளிச்சென்று இப்படி சொன்னார்கள்.
”நாங்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இரட்டை இலைதான் சாமி!”
ஒரு நாகூரானோ, ஒரு சில ஏழை தொழிலாளர்களோ மட்டும் சொன்ன கருத்துக்கள் அல்ல இவை. வாரத்தில் இரண்டு முறைகள் காட்டுயிரி ஆய்வுக்காகவும், தினமும், ஒளிப்படங்களுக்காகவும் செல்லும் பல பகுதிகளில் நான் சந்தித்த மீனவ மக்கள், இருள இன ஏழைபாழைகள், ஒடுக்கப்பட்டோர், விவசாய கூலிகள் மற்றும் நடுத்தர மக்கள் இவர்கள் எல்லாம் தெரிவித்த ஒரே சின்னம் இரட்டை இலை.
ஆக, இறைவன் நாடினால், ஜெயலலிதா வெல்வது உறுதியாகிவிட்டது. ஜெயலலிதா அம்மையாருக்கு எனது வாழ்த்துக்கள்!
- என்று அந்தக் கட்டுரையில் நான் தெளிவாக தெரிவித்திருந்தேன்.
எனது கணிப்பைப் போலவே ஜெயலலிதாக அதிபெரும்பான்மைப் பெற்று ஆட்சியும் அமைத்தார். கடைசியில் அவருக்கான நேரம் முடிந்து காலத்தில் கரைந்தும் விட்டார்.
இப்போது, தலைமைச் செயலகத்தைக் கடக்கும்போதெல்லாம் ஒரு வெறுமையைதான் உணர முடிகிறது. கம்பீரமான அந்த கோட்டை களையிழந்து கிடக்கிறது. கனத்த மனதுடன்தான் கடந்து செல்ல முடிகிறது.
அதிமுக கட்சியுடனும், அதன் தலைவருடனும் கொள்கை ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லாத என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆழ்மனதில் ஏற்படும் பாதிப்புகள், ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக அவரது நிழலாக நின்ற சசிகலாவுக்கு ஏன் ஏற்படவில்லை என்று வியப்பாக இருக்கிறது.
உண்மையில், ஆதாயங்களோடு பெரும் கணக்கிட்டுதான் சசிகலா ஜெயலலிதாவுடன் இருந்தாரா? என்ற சந்தேகத்தையும் நடப்பு சம்பவங்கள் எழுப்புகின்றன.
ஜெயலலிதாவுக்கு பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம் “ஸ்டாண்ட்-பை“ முதல்வராக இருந்தவர் பன்னீர் செல்வம்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னும் அந்த தொடர்ச்சி தொடர்ந்திருக்கும் என்றுதான் நான் கணித்திருந்தேன். அரசியல் பின்னணிகளோ, அரசியல் போராட்ட முன்னெடுப்புகளோ இல்லாத சசிகலா பன்னீர் செல்வத்தை தஞ்சாவூர் பொம்மையாய் உருட்டி ஆட எந்த தடையும் இல்லை. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு இந்த வெள்ளுடை ஆசாமிகள் எல்லாம் சற்றே நிமிர்ந்திருந்தார்கள். ஆனால், அடிமைத்தனம் இன்னும் ஆழ்மனதில் பதிந்தேயிருந்தது.
சசிகலா புத்திசாலியாக இருந்திருந்தால், ஆட்சி, அதிகாரத் தொடரை தனது கட்டுக்குள் வைத்து அரசியல் ஆட்டத்தை தொடர்ந்திருப்பார். மத்திய அரசுடன் புரிந்துணர்வுடன் இருந்து தனது பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு முடிவை கண்டிருப்பார். அது விவேக வெளிப்பாடாக இருந்திருக்கும். இந்த மகாபாரத காட்சிகள் எல்லாம் அரங்கேறியிருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது!
கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப்போன கதையாய் தற்போது சசிகலா எடுத்த முடிவுகள் எல்லாம் அவருக்கு எதிராககத்தான் திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்களே… இங்கே ஒரு கூத்தாடி அல்ல பல கூத்தாடிகளுக்கு கொண்டாடமாகிவிட்டது இப்போது.
நடப்பு அரசியல் போர்க்களம் சம்பந்தமாக மற்றொரு முக்கிய விஷயத்தையும் பதிவு செய்தாக வேண்டும் அதாவது முதல்வர் பன்னீர் செல்வம் மோடி சரக்காருக்கு வேண்டப்பட்டவரோ, சசிகலா அம்மையார் பாசிஸத்தை விரும்பாதவரோ அல்ல. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சுயஆதயங்களுக்காக எதையும் செய்பவர்கள். கடந்த காலங்களில் மக்களுக்கான திட்டங்களை எல்லாம் பெட்டி பெட்டிகளாக மாற்றிக் கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுபவர்கள்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்த அனுமதி அளித்ததற்காக முதல்வர் பன்னீர் செல்வத்தை தூற்றுவதும், சசிகலா முதல்வராக வந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒடுக்கி சிறுபான்மையினரின் காவல் தெய்வமாக மாறிவிடுவார் என்று நம்புவதெல்லாம் அபத்தமானது! ஏனென்றால் இந்துத்துவ அதி தீவிரவாத பாசிஸம் என்பது சிந்தனை ரீதியானது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஊடுருவக்கூடியது. ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊடுருவி இருப்பது.
இந்திய நாட்டில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்த அதே சங்பரிவார குழுவினர்தான் தற்போது இந்திய அமைப்பின் உயரிய ஆட்சி அதிகாரத்தில் மிருகபலத்துடன் அமர்ந்திருப்பவர்கள்.
அதனால், லாப, நட்டங்களை தங்களை மட்டும் முன்வைத்து பார்க்கும் அளவுகோலை சிறுபான்மை சமூகத்தார் தூக்கி எறிந்திட வேண்டும். பொத்தாம், பொதுவாக சமூக நலன் குறித்து கவலைப்படுபவர்களாகவே அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதிதீவிர இடதுசாரிகள், சூழலியலாளர்கள் இவர்கள் எல்லாம் தாங்கள் ஏதோ ஒரு காரணத்தால் பாதிக்கப்பட்டதற்காக, பன்னீர் செல்வத்தை வேண்டப்படாதவராக பார்க்கும் போக்கும் சரியானதல்ல.
மக்கள் நலன் நாடும் தலைவர்கள் அதிகார பீடங்களில் அமரும்வரை ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் http://ikhwanameer.blogspot.in/2017/01/blog-post_23.html தொடர்ந்தவாறேதான் இருக்கும் என்பதை இந்த அறிவுஜீவிகளுக்கு தெரியாததல்ல. இதில் பன்னீர் செல்வமோ, சசிகலாவோ விதிவிலக்கானவர்களும் அல்ல.
அதனால், ஒட்டுமொத்த ஆற்றல்களையும் ஒருங்கிணைக்க முடியாமல் பிளவுட்டிருக்கும் சிறுபான்மையினரும், தொடர்ந்து தோல்விகளால் வரலாற்றில் பதித்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகளும் அதிகார மீட்புக்கான வழிமுறைகளை, தீர்வுகளைத் தேட வேண்டியது முக்கியமானது.
தற்போது புரையோடிப் போயிருக்கும் மொத்த அமைப்பையும் புரட்டிப்போடும் காலத்துக்காக வெறுமனே காத்திராமல், அதற்கான செயல்ரீதியான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதே புத்திசாலிதனமானது.
தேனீர் விற்பனை செய்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர் நாட்டின் பிரதமராக இந்திய ஜனநாயகம் அனுமதிக்கிறது.
பணியாளராக சேர்ந்த ஒருவர் ஒரு மாநிலத்தின் மொத்த அதிகாரத்தையும் கைப்பற்றும் முயற்சிகளுக்கான வழிதேடல்களும் இதே ஜனநாய கட்டமைப்பில் முடிகிறது என்னும்போது, மக்கள் நலன் நாடும் மக்கள் தலைவர்கள் இதே ஜனநாயக அமைப்புக்கு உட்பட்டு அதிகார அமைப்பை கைப்பற்ற என்ன தடை?
Thursday, February 9, 2017
சுவனவாசிகள், நரகவாசிகள்...
ஒருமுறை. நபிகளார் சுவனம் மற்றும் நரகவாசிகளைப் பற்றி தமது தோழர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். சுவனவாசிகளின் பண்புகள் குறித்து சொல்லும் போது இப்படி சொன்னார்:
”தோழர்களே, சுவனத்திற்கு சொந்தமானவர்கள் மூன்று வகைப்படுவார்கள். அவர்களில் முதலாம் பிரிவினர், தங்கள் பரஸ்பர விவகாரங்களில் மிகவும் நீதியுடனும், நடுநிலையுடனும் நடந்து கொண்டவர்கள். வள்ளல் தன்மையும், நற்செயல்களையும் மக்களிடையே பரப்பியவர்கள். அத்துடன் தமது நடவடிக்கைகளில் மென்மையும், நேர்மையுடனும் நடந்து கொண்டவர்கள்.
இரண்டாம் பிரிவினர், மிகவும் தயாள குணம் மிக்கவர்கள். அவர்கள் தங்களின் உற்றார், உறவினரிடையே இளகிய மனதுடனும், சக மனிதர்களுடன் தாராளத் தன்மையுடனும் நடந்து கொண்டவர்கள்.
மூன்றாம் பிரிவினரோ, மனைவி, மக்கள் குடும்ப நெருக்கடிகள், வாழ்வியல் தள்ளாட்டங்கள் இவை அனைத்தையும் தாங்கியவர்கள். தடுக்கப்பட்டவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டு வாழ்ந்வர்கள்”
சுவனவாசிகளை அடையாளப்படுத்திய கையோடு நபிகளார் நரகவாசிகள் பற்றியும் சொல்லலானார்:
“நரகவாசி நேர்மையின்மையை மட்டுமே தனது அடையாளமாக்கிக் கொண்டவன். அதைப் பின்பற்றுவதையே வாடிக்கையாக கொண்டவன். அவனது பேராசையை யாரும் அடையாளம் காணமுடியாத அளவு மறைவாக இருக்கும். ஆனால், தொடர்ந்து அடுத்தவரின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டே இருப்பான். கஞ்சத்தனம் மிகைத்திருக்கும். ஆபாச உரையாடல்களில் திளைத்திருப்பான். இங்கிதமற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவான்” - என்று நபிகளார் நரகவாசிகள் குறித்த ஒரு நீண்ட பட்டியலிட்டார்.
மனித வாழ்வில் எதிர்படும் இன்னல்கள் எல்லையற்றவை. சூழ்நிலைகள் மனிதனை வசப்படுத்த முனைபவை. அவற்றில் சிக்கிக் கொண்டாலோ கேவலமான வாழ்க்கையில் அவனை வீழ்த்திவிடும். இந்த புறச்சூழல்கள் மனிதனை விரக்தியின் விளிம்பில் தள்ளி அவனது பிற செயல்கள் அனைத்தையும் முடக்கிவிடும். அன்றாட வாழ்க்கையை பாதித்து விடும்.
இத்தககைய சூழல்கள் ஓர் இறைநம்பிக்கையாளனைப் பற்றிப் படரும்போது, அவன் அச்சமற்றிருக்க வேண்டும் என்பதோடு அவற்றை துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டியதும் இன்றியமையாதது. அந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து தனது இலக்கை நோக்கி நகர்வது முக்கியமானது.
புறச்சூழல்களின் தாக்கம் அதிகமாகும்போதெல்லாம் நபிகளார் இறைவனிடம் பாதுகாவல் தேடுவது வழக்கம். இரு கரமேந்தி இப்படி இறைஞ்சுவதும் நபிகளாரின் பழக்கமாகவும் இருந்தது
”இறைவா.! துன்பத் துயரங்களிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். விரக்தியிலிருந்தும், சோம்பலிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கொடுங்கோலர்களின் கொடுமைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்!”
பொறுமையும், தன்னம்பிக்கை என்னும் விண்கலங்கள் மூலமாகவேதான் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு மனிதன் கடந்தாக வேண்டும். இந்த மந்திரம் கற்றுக் கொண்டவர்கள் வாழ்வியல் போராட்டங்களை சமாளிக்க தெரிந்தவராவர். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி இலக்கை எட்டுபவராவர். தன்னைப் படைத்தவனற்றி வேறு எவருக்கும் சிரம் பணியாதவராவர்.
( தி இந்து தமிழ் நாளேட்டில் 09.02.2017 - வியாழன், அன்று வெளியான எனது கட்டுரை)
ஜல்லிக்கட்டு தடியடி மற்றும் வன்முறை : நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை தொடங்கியது.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்செயல்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவரான நீதிபதி ராஜேஷ்வரன் இன்று விசாரணையைத் துவக்கினார்.
கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸ் தடியடியால் வன்முறை வெடித்தது.
காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வன்முறையில், மெரினா கடற்கரை பகுதிக்கு அருகே இருந்த மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்செயல்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இன்று காலை மெரினா பகுதியில் விசாரணையைத் துவக்கிய நீதிபதி, பின்னர் நடுக்குப்பம் பகுதிக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசாரணை முடிய நான்கு மாதங்களாகலாம் என்று அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும், கிரீன்வேஸ் சாலையில் அதிகாரப்பூர்வ அலுவலகம் ஒன்று திறக்கப்படும் என்று தெரிவித்த ராஜேஷ்வரன், அங்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், அனைத்து ஆதாரங்களும் தீவிரமாக ஆராயப்படும் என்றும் கூறினார்.
சென்னை மட்டுமின்றி மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு தொடர்பில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் விசாரிக்கப்படும் என்றும், யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்க கமிஷனுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் நீதிபதி ராஜேஷ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Wednesday, February 8, 2017
அமெரிக்க அவலம்: குழந்தை பாலியல் தொழிலாளர்கள்
அமெரிக்க நாட்டின் சிறுமிகள் வணிக ரீதியில் வக்கிரம் பிடித்த ஆணினத்தின் பாலியல் தேவைகளுக்காக கட்டாயப்படுத்தப்பட்டு விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இது நிரூபனமானது. ஆயிரக்கணக்கான அமெரிக்க சிறுமிகள், “பாலியல் தேவைகளுக்காக தங்களை விற்க நிர்பந்திப்பதாக” - அந்த ஆய்வில் தெரிவித்திருந்தனர்.
இதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட லாஸ்ஏஞ்சலீஸ் காவல்துறையினர் சுமார் ஐநூறு பேரைக் கைது செய்து, அவர்களில் ஐம்பது பேரை மீட்டனர்.
Tuesday, February 7, 2017
ஜெ. நினைவிடத்தில் தியானத்துக்கு பின் ஓபிஎஸ் அதிரடி பேட்டி: சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரி குற்றச்சாட்டு
தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தனர் என்றும் முதல்வராக தான் சிறப்பாக பணியாற்றியது சசிகலாவின் குடும்பத்தாருக்கு எரிச்சல் ஏற்படுத்தியது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 9 மணியளவில் திடுப்பென்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தார். அங்கு 40 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்திருந்தார். இது பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ்., முன்னாள் முதல்வர் நினைவிடத்தில் மவுன அஞ்சலி செலுத்திய தகவல் பரவியதையடுத்து அங்கு ஊடகவியளாளர்கள் குவிந்தனர். அவர் தொடர்ந்து மவுன நிலையிலேயே இருந்தார். அவ்வப்போது கண்களில் கசிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தார். அதிமுக நிர்வாகிகள் பலரும் அங்கு குவிந்தனர்.
தியானத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனது மனசாட்சியின் உந்துதலால் நான் மவுன அஞ்சலி செலுத்தினேன்.
சில உண்மைகளை உங்களிடத்தில் சொல்ல வந்திருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான்தான் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். இரண்டு முறை ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவரை விடுத்து வேறு ஒருவரை முன் நிறுத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்ததாலேயே பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் பதவி மதுசூதனனுக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு மாறாக சசிகலா அதிமுக பொதுச் செயலாளரானார். அதற்கு முன்னதாக திவாகரன் தனது அக்கா சசிகலாவை ஊருக்கு கூட்டிச் செல்லவிருப்பதாகக் கூறியதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து சொன்னார், "சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர்" என்றார். நானும் சம்மதித்தேன். அதன் பின்னரே சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.
அந்த வேளையில் 'வார்தா’ புயல் தாக்கியது. புயல் பாதிப்புகளில் இருந்து சென்னை நகரை மீட்டெடுப்பதில் சிறப்பாக பணியாற்றினேன். எனது சிறப்பான பணி அவர்களை (சசிகலா குடும்பத்தாரை) எரிச்சல் படுத்தியது.
தொடர்ந்து சென்னை நகரின் குடிநீர் தேவையை ஈடுகட்ட ஆந்திர அரசிடம் பேசி தண்ணீர் பெற்றேன். அதுவும் அவர்களுக்கு எரிச்சலூட்டியது.
பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. அதிலும், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு வெற்றி கண்டேன். அதிலும் அவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது. பின்னர்தான், அதிமுக சட்டமன்ற குழு கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்தார்கள்.
அந்தக் கூட்டம் நடைபெறப்போவதே எனக்குத் தெரியாது. அந்த நிலையில்தான் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவை நான் சந்தித்தேன். அப்போது, எனது பதவியை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார்கள். சசிகலா முதல்வராவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என வினவினேன். ஆனால், என்னைத் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். நான் வேண்டாம் என்ற பதவியை கொடுத்துவிட்டு இப்போது அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்துவது நியாயமா எனக் கேட்டேன்.
ஆனால், அவர்களோ என் கையைப் பிடித்துக் கொண்டு இதற்கு சம்மதிக்காவிட்டால் கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாகிவிடும் என்று வற்புறுத்தினர். அதனாலேயே பதவியை ராஜினாமா செய்தேன். என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.
அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்" என்றார்.
தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கவுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடிப் பேட்டி தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது .
Sunday, February 5, 2017
நிழல் நிஜமாகுமா?
சசிகலாவுடன் பிறந்தவர்கள் - சுந்தரவதனன், வினோதகன், ஜெயராமன், வனிதாமணி, திவாகரன் ஐந்து பேர். திருத்துறைப்பூண்டியில் பிறந்து வளர்ந்தாலும் சில ஆண்டுகள் கழித்து, குடும்பம் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தனர்.
மன்னார்குடிக்கு அருகில் இருந்த விளார் என்ற ஊரைச் சேர்ந்த நடராஜனை திருமணம் செய்தார் சசிகலா. இந்தத் திருமணத்தை நடத்திவைத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
1984-ஆம் ஆண்டில் வினோத் வீடியோ விஷன் என்ற வீடியோ கடையை வைத்திருந்த சசிகலா, அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவின் பரிந்துரையின் பேரில் ஜெயலலிதாவுக்கு முதன் முதலாக அறிமுகமானார்.
அப்போது அவரது கணவர் மா. நடராஜன் கடலூர் மாவட்டத்தில் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார்.
அந்த நேரத்தில், அ.தி.மு.கவின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைக்க, ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்தார் சசிகலா.
அதற்குப் பிறகு, மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக வளர ஆரம்பித்தார். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினரானபோது, அவரோடு தில்லி செல்லும் அளவுக்கு நெருக்கமானார் சசிகலா.
தமிழக முதலமைச்சரும் ஜெயலலிதாவின் அரசியல் ஆசானுமாக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் மறைந்த போது, கட்சி இரண்டாக உடைந்த சமயத்தில், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவிற்குப் பின்னால் அணி திரண்டனர். இதுவே, ஜெயலலிதா வெகுவாக சசிகலாவைச் சார்ந்திருப்பவராக மாற்றியது.
1991-இல் ஜெயலலிதா முதன் முறையாக தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சமயத்தில், அவருக்கு எல்லாமுமாக மாறியிருந்தார் சசிகலா. அப்போதிலிருந்து ஜெயலலிதா, அம்மாவாகவும் சசிகலா சின்னம்மாவாகவும் அழைக்கப்பட ஆரம்பித்தார்கள். ஜெயலலிதா எங்கு சென்றாலும் நிழலாகப் பின்தொடர்ந்தார் சசிகலா.
இதனால், சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் சகோதரர்கள், அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கமும் அ.தி.மு.கவின் மீது பற்றிப் படர ஆரம்பித்தது.
1995-இல் சசிகலாவின் உறவினரான வி.என். சுதாகரனை தனது தத்துப் பிள்ளையாக தத்தெடுக்கும் அளவுக்கு சசிகலாவை நம்பினார் ஜெயலலிதா. அந்த சுதாகரனுக்கு ஜெயலலிதா செய்துவைத்த ஆடம்பரத் திருமணம், உலகில் மிகவும் செலவழித்து நடத்தப்பட்ட திருமணமாக சாதனை படைத்தது.
இதற்குப் பிறகு, ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்தே சிறைக்குப் போக நேர்ந்தது. பிறகு சிறிது காலத்திற்கு அவரை ஒதுக்கிவைக்கவும் செய்தார் ஜெயலலிதா. ஆனால், இது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார் சசிகலா.
அதற்குப் பிறகு, 2011 வரை போயஸ் தோட்ட இல்லத்திலும் அ.தி.மு.க என்ற கட்சியிலும் சசிகலாவின் அனுமதியின்றி எதுவும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டது.
2011-இல், தனக்கு எதிராக சசிகலா செயல்படுவதாகக் கருதிய ஜெயலலிதா, அவரை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார். ஆனால், சில மாதங்களிலேயே சசிகலாவின் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் அவரை போயஸ் தோட்டத்திற்குள் அனுமதித்தார். அதற்குப் பிறகு, ஜெயலலிதா காலமாகவும் வரை, அவரை நிழலாகத் தொடர்ந்தார் சசிகலா.
2014-ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா-சசிகலா இருவருமே ஒன்றாக சிறைசெல்ல நேர்ந்தது.
ஜெயலலிதாவின் நிழலாகவே இருந்தாலும், கட்சியின் முன்னணியில் ஒருபோதும் சசிகலா தென்பட்டதில்லை. ஆனால், கட்சியின் முக்கியமான தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பவராக சசிகலாவே இருந்தார்.
2002-இல் ஜெயலலிதா முதல்வராக பதவி வகிக்க முடியாமல் போனபோது, ஓ.பன்னீர்செல்வம் அந்த இடத்திற்கு முன்னிறுத்தப்பட்டது சசிகலாவின் ஆலோசனையின்பேரில்தான். அதற்குப் பிந்தைய தேர்தல்களில் எல்லாம் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்போது அதில் சசிகலாவின் பங்கும் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஜெயலலிதாவால் உடன்பிறவா சகோதரி என்று அழைக்கப்பட்ட சசிகலா, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினார்.
டிசம்பர் 29-ஆம் தேதியன்று சென்னையில் நடந்த பொதுக் குழுக்கூட்டத்தில் அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு முன்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும் முதலமைச்சருமான ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதியன்று உயிரிழந்ததையடுத்து அந்தப் பதவி காலியானது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுவித்துவிட்டாலும், இது தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் முடிவடைந்து, இதன் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு, சசிகலாவின் எதிர்கால அரசியல்வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமையக்கூடும்.
இருந்தாலும் இப்போதைக்கு சசிகலா உச்சத்தை அடைந்திருக்கிறார். கட்சியைக் கைப்பற்றியிருக்கும் சசிகலா, முதல்வர் பதவி குறித்து என்ன முடிவுசெய்திருக்கிறார் என்பது விரைவில் தெரிய வரும்.
ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள், அவர் மறைந்த பிறகு அவரது உடலைச் சுற்றி நின்றது கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. சசிகலா தற்போது கட்சியின் உயரிய பதவியை அடைந்திருக்கும் நிலையில், அவரது சொந்தங்கள் அதற்கான பலனை அடைய நினைக்கலாம்.
கட்சியின் நிர்வாகிகள் இப்போது சசிகலாவை ஏற்றுக்கொண்டிருந்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் ஜெயலலிதா என்ற ஆளுமைக்குதான் வாக்களித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா என்ற யதார்த்த நிலையில், அ.தி.மு.கவுக்கு வாக்களித்த எளிய வாக்காளர்கள் சசிகலா தலைமையிலான அ.தி.மு.கவையும் ஆதரிப்பார்களா என்ற மற்றொரு கேள்விக்கும் விரைவில் காலம் பதில் சொல்லிவிடும்.