Wednesday, October 11, 2017
உலக பெண் குழந்தைகள் தினம்: சுவனத்தின் நுழைவுச் சீட்டுகள்
”யார் மூன்று
பெண் மக்கள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி,
ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை கருணையுடனும்,
பரிவுடனும் அவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அத்தகையோருக்கு இறைவன்
சுவனத்தைக் கடமையாக்கிவிட்டான்” – என்று நபிகளார் கூறியபோது,
அங்கிருந்தவர்களில் ஒருவர், ”ஒரு பெண் குழந்தை இருந்தபோதும் இந்த உயர் பதவி
கிடைக்குமா?” – என்று விசாரிக்க ”ஆம்..!” – என்று ஆமோதிக்கிறார் நபிகளார். >>> இக்வான் அமீர் <<<
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
”பெண்ணே! நான் எப்போது திரும்பி வருவேன் என்று தெரியாது! அதோ! உனது கட்டிலுக்குக் கீழே ஒரு பள்ளம் வெட்டியுள்ளேன். பிறக்கப் போகும் குழந்தை ஆணாக இருந்தால்… அதை பத்திரமாய் வளர்த்து வா..! பிறப்பது பெண்ணாக இருந்தால்…. அவளைப் பள்ளத்தில் போட்டு மூடிவிடு!” – நிறைமாத கர்ப்பிணியான மனைவியிடம் வணிகம் நிமித்தம் விடைபெற்றுச் செல்லும் கணவன் சொன்னவை இவை.
குழந்தையும் பிறந்தது, கொழு கொழு பெண் சிசுவாய்! தாய்மைக்கு சிசுவைக் கொல்ல மனம் ஒப்பவில்லை. ஒரு திட்டம் போட்டாள். விளைவு, பெற்ற குழந்தை எதிர்வீட்டில் வளர்ந்தது.
செங்கீரைப் பருவம், தாலப்பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம் என்று குழந்தை வளர்கிறது. சொந்த வீட்டிற்கும் வருகிறது. அங்குள்ளவர்களிடம் ஒட்டிக் கொள்கிறது. ”மாமா..! மாமா..!” – என்று சதா சொந்தத் தந்தையின் மடியிலேயே கொஞ்சி குலாவுகிறது.
இதை மறைந்திருந்து பார்க்கும் பெற்றவளுக்குக் கண்கள் குளமாகின்றன. ”எப்படியோ.. நம் குழந்தை தகப்பனிடம் ஒட்டுதலாகிவிட்டதே!” – பெரு மூச்சு வெளிப்பட்டு மனம் சமாதானமடைகிறது.
ஒரு நாள்.
‘இவ்வளவு பாசத்துடன் குழந்தையிடம் பழகுகிறாரே! உண்மையைச் சொல்லிவிட்டாள் என்ன?’ - என்று யோசித்தாள். சொல்லவும் செய்தாள் அந்த அபலைத் தாய்.
உண்மைத் தொிந்ததும், கணவன் மகிழ்ச்சியால் குதிப்பான் என்று எதிர்பாா்த்திருந்தவளுக்கு அதிா்ச்சி! கண்கள் சிவக்க.. நெஞ்சு துடிக்க.. மனம் கொதிக்க.. ”எங்கே அவள்?” – என்று சீற, சிரித்தவாறு, ”மாமா..!” – என்று வந்தாள் யாழினும் இனிய மழலை மொழியுடன் பிஞ்சு அவள்.
ஓட்டமும், நடையுமாய் ஊருக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. தக்க இடம் தேடி கெல்லினார் பள்ளத்தை.
”ஓ..! மாமா.. புது விளையாட்டு கற்றுத் தருகிறார் போலும்..!” – என்று எண்ணிய குழந்தை தானும் கூடச் சேர்ந்து மண் எடுத்தாள்.
”மாமா! ஓ மாமா..! உங்க தாடி எல்லாம் மண்.. ஹி..ஹி..!” – பிஞ்சுக் கரங்களால்.. தாடியில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டுச் சிரித்தாள். கடைசியில், பள்ளத்தில் தான் இறக்கப்பட்டது ஏனென்று தொியாமல் விழித்தாள். மண் சரிய ஆரம்பித்ததும், கத்தினாள். கதறினாள். ”மாமா..! மாமா..! மா.. மா..!” – குரலோசை முனகலாய் மறைய, புதைகுழி மூடிக்கொண்டது.
முடிந்தது, ஒரு கொலை. தணிந்தது கோபம். பாலைப் பெருவெளியில் மழலையின் மரண ஓலம் கலந்து மறைந்தது.
முந்தைய அறியாமைக் காலத்து அரபு சமூகத்து உசிலம்பட்டிகள் இவை. வீடு தோறும் அரங்கேறிவந்த கொடூரங்கள். வறுமையின் அச்சமும், குலப்பெருமையும் பெண் சிசுக்களின் உயிர் பறிக்கும் காரணங்களாயின.
இதனை ஆணவம் என்பதா? அறியாமை என்பதா? பழகிப் போன முட்டாள்தனம் என்பதா? என்னவானாலும் இந்த அக்கிரமத்துக்கு ஒரு முடிவு வரத்தான் செய்தது!
”வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலைச் செய்யாதீர்கள். நாம்தாம் அவர்களுக்கு உணவளிக்கின்றோம். உங்களுக்கும் உணவளிக்கின்றோம். உண்மையில், அவர்களை கொல்வது பெரும் பாவமாகும்!” –
”எவர்கள் தம் குழந்தைகளை அறியாமையினாலும், மூடத்தனத்தினாலும் கொன்று விட்டார்களோ அவர்கள் நிச்சயமாக பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். உண்மையில் அவர்கள் வழித் தவறிப் போய் விட்டார்கள்”
சிசுக் கொலைக்கு முடிவு கட்டி திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கியருளப்பட்டன.
தோழர் ஒருவர், நபிகளாரிடம் எழுப்பிய வினா – விடை இவை:
”இறைனின் தூதரே! எல்லாவற்றையும்விட கொடிய பாவம் எது?”
”இறைவனுக்கு இணை வைப்பது!”
”அதற்கு அடுத்தது?”
”பெற்றோருக்கு மாறு செய்வது”
”அதற்கும் அடுத்தது?”
”உங்களுடன் அவர்களும் சாப்பிடுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகளைக் கொன்றுவிடுவது”
சிசுக்கொலை கொடும் பாவமானது என்று எச்சரிக்கிறார் நபிகளார். பெண் சிசுக்களை மனநிறைவோடு பேணி வளர்க்க வேண்டும். அது சுவனம் செல்வதற்கான நற்செயல் என்றும் ஊக்கம் தருகிறார்.
”யார் மூன்று பெண் மக்கள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை கருணையுடனும், பரிவுடனும் அவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அத்தகையோருக்கு இறைவன் சுவனத்தைக் கடமையாக்கிவிட்டான்” – என்று நபிகளார் கூறியபோது, அங்கிருந்தவர்களில் ஒருவர், ”ஒரு பெண் குழந்தை இருந்தபோதும் இந்த உயர் பதவி கிடைக்குமா?” – என்று விசாரிக்க ”ஆம்..!” – என்று ஆமோதிக்கிறார் நபிகளார்.
வீட்டில் ஏதுமில்லாத நிலையில், தம்மிடம் வந்த ஏழைப் பெண்ணொருத்தியிடம் இருந்த ஒரே ஒரு பேரீத்தம் தரப்பட்ட நிலையில், அவள் அதை இரண்டாக்கி தனது இரு பெண் குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்ட சம்பவத்தை ஆயிஷா நாச்சியார், நபிகளாரிடம் பகிர்ந்துகொண்டார்.
”யார் பெண் மக்களின் பிறப்பால் சோதனைக்குள்ளாகி, அச்சோதனையிலும், வெற்றி பெறுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் மறுமை நாளில் நரகத்திற்கு தடுப்பாய், கேடயமாய் மாறி நிற்பார்கள். பெற்றோர் நரகத்திலிருந்து காக்கப்படுவார்கள்!” – என்று தம் மனைவியார் ஆயிஷா நாச்சியாரிடம் அப்பெண் குறித்து உயர்வுடன் சொல்கிறார் நபிகளார்.
குழந்தைகளிடம் சம அன்பு காட்ட வேண்டும். பாராபட்சம் கூடாது என்று வலியுறுத்தும்விதமாக, ”யாருக்குப் பெண் குழந்தை பிறந்து அதை அவர் அறியாமைக் காலத்து முறைப்படி உயிரோடு புதைக்காமல், கேவலமாகவும் கருதாமல், அந்தப் பெண் குழந்தைக்கு எதிராக ஆண் குழந்தைக்கு எள்ளளவும் முக்கியத்துவம் தராமல் சமமாக நடத்துகிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழையச் செய்வான்!” – என்றும் அறிவுறுத்துகிறார்.
”நான் உங்களுக்கு மிகச் சிறந்த தர்மம் ஒன்றைக் கூறட்டுமா? அது தனக்குப் பொருளீட்டி உணவளிக்கக் கூடியவர் வேறு எவருமில்லை என்ற இயலாத நிலையில் இருந்தபோதிலும், திருப்பி அனுப்பப்பட்ட மகளை பராமரிப்பதுதான்!”
அழகின்மை, உடல் ஊனம் போன்ற காரணங்களால் மணமாகாத பெண் அல்லது இன்னும் பல காரணங்களால் விவாகரத்துப் பெற்று தனது வாழ்வாதாரத்துக்காக பிறரை நம்பியிருக்கும் பெண் இவர்களைப் போஷிப்பது தர்மத்தில் மிகச் சிறந்த தர்மம் என்கிறார் நபிகளார்.
திருக்குர்ஆனின் கட்டளைகளும், திருநபிகளாரின் அருளுரைகளும், ஆண், பெண் இருவருக்கும் சம கல்வி அளித்தல், சொத்துக்களில், பெண் குழந்தைகளின் பங்கை முழு மனதோடு பிரித்து கொடுத்தல், சிசுக்களைப் பாதுகாத்தல், அவர்களைப் பாராபட்சம் காட்டாமல் போஷித்தல் இன்னும் பல்வேறு வாழ்வியல் கூறுகளை இறைநம்பிக்கையின் அங்கமாகவே ஆக்கியுள்ளன.