Thursday, September 28, 2017
ஹிஜ்ரத் புலம்பெயர்வில் எண்ணற்ற படிப்பினைகள்
உண்மையில் இறைத்தூதர்கள் யாரொருவரும்,
துன்பத்துயரங்களுக்கும்,
இன்னல், இடர்பாடுகளுக்கும் அஞ்சி தாய்மண்ணை
விட்டு துறத்தல் என்பது அபத்தமானது. எல்லையற்ற அருளாளனின் வழிகாட்டுதல் பிரபஞ்சத்தின் குறிப்பிட்ட
ஒரு பகுதிக்கு மட்டுமானது என்ற கருத்தை தகர்த்தெறிந்து எங்கும்
நிறைந்திருக்கும் அப்பரம்பொருளின் வழிகாட்டுதலை உலகின் யாராலும் பின்பற்ற
இயலும் என்ற சாசுவதத்தின் காரணமிது ~இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
1438 ஆண்டுகளுக்கு முன்னர்
இறைவழிகாட்டுதலுக்கு ஏற்ப, நபிகளார்
தமது தோழர்
அபூபக்கருடன் மதீனா நகருக்கு புலம்பெயர்ந்து சென்றார். வீடு, வாசல், மனைவி, மக்கள், உற்றார், உறவுகள் என்று தாய்மண்ணை விட்டு
நபிகளார் பிரிந்து சென்ற இந்நிகழ்வு வரலாற்றில் ஹிஜ்ரத் எனப்படுகிறது. இதுதான்
இஸ்லாமிய நாட்காட்டியின்
துவக்க ஆண்டாக கணக்கிடப்பட்டு முஹர்ரம் முதல் மாதமாக வழங்கப்படுகிறது. ஹிஜ்ரத் நிகழ்வின்போது,
நபிகளாரின் கொள்கை
வழி ஆதரவாளர்களாக
மதீனா நகரில் இணைந்து நின்றவர் வெறும் 75 பேர் மட்டுமே!
இஸ்லாத்தின் அரசியல்,
அதிகார தலைமையகமாக
மதீனா தேர்வு செய்யப்படுவதற்கு காரணம் என்ன? இறைவனின் இல்லமான கஅபாவும், அதை கட்டியமைத்த நாயகரான இறைத்தூதர்
இப்ராஹீம், அவரது
மகனார் இஸ்மாயீலும் காலடி பதித்த இடங்கள் மக்காவாக இருக்க… அதிகார பீடமாக மக்கா ஏன் தேர்வு செய்யப்படவில்லை?
என்ற கேள்விகள்
எழுவது சகஜம். இதற்கான மேலோட்டமான பதில், நபிகளார் மக்காவில் கடும் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவரது
பரப்புரைகளுக்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான்.
ஆனால், உண்மையில் இறைத்தூதர்கள் யாரொருவரும்,
துன்பத்துயரங்களுக்கும்,
இன்னல், இடர்பாடுகளுக்கும் அஞ்சி தாய்மண்ணை
விட்டு துறத்தல் என்பது அபத்தமானது. எல்லையற்ற அருளாளனின் வழிகாட்டுதல் பிரபஞ்சத்தின் குறிப்பிட்ட
ஒரு பகுதிக்கு மட்டுமானது என்ற கருத்தை தகர்த்தெறிந்து எங்கும்
நிறைந்திருக்கும் அப்பரம்பொருளின் வழிகாட்டுதலை உலகின் யாராலும் பின்பற்ற
இயலும் என்ற சாசுவதத்தின் காரணமிது.
நபிகளாரின் இந்த
ஹிஜ்ரத் புலம்பெயர்தல் நிகழ்வு மனித இனத்தில் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவந்த
அத்தனை பழக்கவழக்கங்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்தது. மனித இனம் அதுவரையில்
இறைநம்பிக்கையாளர், இறைநம்பிக்கையற்றவர்
என்று இருவேறு உலகங்களாக பிளவுப்பட்டிந்தது. இந்நிலையை மாற்றியமைத்து, எல்லா உலகிலும் அதிகாரம் செலுத்துபவன்
இறைவன் என்றது.
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவையும் ஆக்கியாள்பவன், அவற்றின் மீது முழுமையான அதிகாரம் கொண்டவன் இறைவன்
என்று நிரூபித்தது. குறைந்த எண்ணிக்கையினராக இருந்தாலும் தம்
செய்தியை அடுத்தவர்க்கு பகிர முடியும் என்று அப்பட்டமாக்கியது.
ஹிஜ்ரத் நிகழ்வாக
நபிகளார் மதீனா மாநகருக்கு மேற்கொண்ட பயணம் ஒவ்வொரு இனத்தாரும்
பன்முகசமூகத்தில் இணந்து வாழ முடியும் என்று
நிதர்ச்சனப்படுத்தியது. அதுவரையில் பல்வேறு கோத்திரங்களாக பிரிந்து, பிளவுப்பட்டுக் கிடந்தவர்களை நபிகளார் ஒருங்கிணைத்தார்.
அதற்காக பிரதானமாக செல்வாக்கு பெற்ற கோத்திரத் தலைவர்களை அழைத்து, ஒப்பந்தங்களையும் செய்து சமூகத்தில்
அமைதி நிலவுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். இன,
சமய பின்னணி
எதுவானாலும் ஒவ்வொரு தனிமனிதனும் சுயசுதந்திரம் கொண்டவனாக மதீனாவில் நடமாடுவது
அவனது பிறப்புரிமை
என்பதை அரசியலமைப்பு சட்டமாகவே வடிவமைத்தார். அவரவர் கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றி வாழும்
ஒரே நாட்டின் ஒரே மக்களாகவும், பன்முகசமூகத்தின்
ஒரு முன்மாதிரி நகரமாகவும் மதீனாவை மாற்றியமைத்தார்.
மதீனா மாநகரின்
பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும்விதமாக எல்லா தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து வலிமை வாய்ந்த
ஒரு ராணுவத்தை கட்டமைப்பதற்கான அனைத்துவித முயற்சிகளையும் நபிகளார்
மேற்கொண்டார். எல்லையில் நாட்டைக் காப்பதற்காக உயிர் துறக்கும் அமரர்களின்
குடும்பத்தாரின் அத்தனை தேவைகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்றுக்
கொண்டது. இதுதான்
இன்றைய சொல்வழக்கில்
இன்ஷீரன்ஸ் காப்பீடு என்றழைக்கப்படுகிறது. அதேபோல, ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு சமயத்தாரும் அவரவர் சட்டங்களை
பின்பற்றி வாழ்வதற்கான அனைத்து சூழல்களும் உருவாக்கப்பட்டன.
ஹிஜ்ரத் நிகழ்வின் விளைவாக பெண்ணுரிமைகளுக்கும்,
ஒடுக்கப்பட்டவர்களின்
உரிமைகளுக்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அத்தோடு
நபிகளாரின் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து நின்ற அவாஸ் கோத்திரத்தாரின் நான்கு
உட்பிரிவினர் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் அளிக்கப்பட்டது.
ஆக மொத்தத்தில் நபிகளார்
மதீனா மாநகருக்கு மேற்கொண்ட ஹிஜ்ரத் புலம்பெயர்வு வரலாற்றில் ஜனநாயகத்தின்
முன்மாதிரி வடிவம் பெற்ற நிகழ்வானது.
Thursday, September 21, 2017
Sunday, September 17, 2017
சாரணர் இயக்க தலைவராக மணி வெற்றி: பாஜக எச்.ராஜா தோல்வி
தமிழ்நாடு சாரண,
சாரணியர் இயக்கத் தலைவர்
பதவிக்காக நடைபெற்ற தேர்தலில்
பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார். இப்பதவிக்கு போட்டியிட்ட
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தோல்வி அடைந்தார்.
தமிழ்நாடு சாரணர்
இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர்
உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ம் ஆண்டு நடந்தது. தொடர்ந்து, 2013-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய தலைவர் பதவிக்கு போட்டிக்கான தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில்
வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில்,
தமிழ்நாடு சாரணர்
அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-ம் தேதி கூடி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு செப்டம்பர்
16-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர்
பதவிக்கு பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர்
போட்டியிட்டனர்.
தமிழ்நாடு சாரணர்
இயக்கத் தலைவர் பதவிக்கு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் போட்டியிட்டது இதுவே
முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில்
இருந்தது.
தலைவர் உள்ளிட்ட
மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று காலை 10.20 மணியளவில் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில்
உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க
தலைமையகத்தில் தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு தேர்தல் நடத்தும் அதிகாரி எம்.வி.கலாவதி தலைமையில், மதியம் 2 மணி வரை நடைபெற்றது. சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 504 வாக்காளர்களில் 286 பேர் வாக்களித்தனர்.
மாலையில் அறிவிக்கப்பட்ட தேர்தல்
முடிவுகளின்படி, மொத்தம் பதிவான 286 வாக்குகளில், பி.மணி 232 வாக்குகளும், எச்.ராஜா 52 வாக்குகளும் பெற்றனர். 2 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, பி.மணி வெற்றி
பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல்
முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு சாரணர் இயக்க தேர்தல் தொடர்பாக பாரத
சாரணர் இயக்க தலைமையகத்துக்கு பல புகார்கள் சென்றதால் நேற்று முன்தினம் மதியம்
தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தலைமையகத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதில்,
பாரத சாரணர் இயக்கத்தின்
தேசிய ஆணையர் உத்தரவு வரும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என
அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, இந்த தேர்தல்
செல்லாது” என்றார்.
தேர்தல்
வெற்றிக்குப் பிறகு பி.மணி கூறும்போது, “பள்ளிக் கல்வித்துறை உதவியுடன் சாரணர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் உள்ள
அனைத்து பள்ளிகளிலும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதை பொதுமக்கள் இயக்கமாக
மாற்றுவேன் எனவும் உறுதி அளிக்கிறேன்” என்றார்.
Saturday, September 16, 2017
சாமான்ய மக்களைக் கவனியுங்க மகாராஜா..!
"முதலில், வயிற்றுப்பாட்டையும், வயிற்றுக்கு சோறு போடுபவர்களையும்
கவனியுங்க மோடி மகாராசா! புல்லட் ரயில் கனவுகள் எல்லாம் எங்களுக்கில்லை
மன்னவா..!"
தற்போது, தி இந்துவில் வாக்களிக்க: http://tamil.thehindu.com/
தற்போது, தி இந்துவில் வாக்களிக்க: http://tamil.thehindu.com/
யாருக்கு சுவனம் சாத்தியம்?
மனிதன்
பதற்றக்காரனாகப் படைக்கப் பட்டிருக்கிறான் என்பது உண்மை. ஒரு துன்பம்
அவனுக்கு நேர்ந்துவிட்டால், பதறித் துடித்துப் போகிறான். பொறுமையிழந்து
தவிக்கிறான். ஆனால், அந்தத் துன்பம், துயரம் அவனைவிட்டு நீங்கி வசதி
வாய்ப்பு ஏற்படும்போது, கஞ்சத்தனம் புரிகிறான். >>>> இக்வான் அமீர் <<<<
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
திருக்குர்ஆனின் கட்டளைகள் மற்றும் திருநபிகளாரின் சொல், செயல், அனுமதிகளின் தொகுப்பான நபிமொழிகள் ஆகியவற்றின் வழிகாட்டுதலே இஸ்லாமிய வாழ்க்கை நெறி எனப்படுகிறது. சமூக அமைப்பின் கட்டமைப்பு முழுவதும், நல்லொழுக்கத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
“வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனைத் தவிர வேறு கடவுளர் இல்லை! முஹம்மது நபிகளார் இறைவனின் தூதர்!” என்ற ‘கலிமா’ எனப்படும் சொற்றொடரைப் பிரகடனப்படுத்தி, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் எனப்படும் ஐந்து கடமைகள் மூலமாக அதைச் செயல்படுத்துபவர்கள் முஸ்லிம்கள் எனப்படுகிறார்கள்.
வெறுமனே யாரும் சுவனத்தில் நுழையும் வாய்ப்பில்லை. அதற்கு இறைவனின் கருணை என்னும் அனுமதி தேவை. அதைப் பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள திருக்குா்ஆனில், இறைவன் ஒரு பட்டியலே தருகிறான். அதைப் பின்பற்றி நடக்க வலியுறுத்துகிறான்.
கஞ்சத்தனம் புரிகிறான்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மனிதன் பதற்றக்காரனாகப் படைக்கப் பட்டிருக்கிறான் என்பது உண்மை. ஒரு துன்பம் அவனுக்கு நேர்ந்துவிட்டால், பதறித் துடித்துப் போகிறான். பொறுமையிழந்து தவிக்கிறான். ஆனால், அந்தத் துன்பம், துயரம் அவனைவிட்டு நீங்கி வசதி வாய்ப்பு ஏற்படும்போது, கஞ்சத்தனம் புரிகிறான்.
இந்தப் பலவீனத்திலிருந்து விலகிய பண்பாளர்கள் குறித்து திருக்குா்ஆனில் இறைவன் ஒரு பட்டியலிடுகிறான். இந்தப் பட்டியலில் முதலாவது இடம் பெறுவது தொழுகையாளிகள். இவர்கள் ஐந்து வேளை தொழுகைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பவர்கள். அத்தோடு, தங்கள் செல்வங்களில் யாசிப்போருக்கும் தேவையுள்ளோருக்கும் பங்கு உண்டு என்று நம்புகிறவர்கள். உடலால் குனிந்து, நிமிர்ந்து சிரம் பணிவது என்ற நிலையில் மட்டும் இவர்கள் இருப்பதில்லை. மாறாக, சமூத்தின் நலிந்த பிரிவினருக்கும் தங்கள் செல்வத்தில் ஜகாத் என்ற பிரிவின் அடிப்படையில் பங்கிருப்பதாக நம்புபவர்கள். அதை ஆண்டுதோறும் ரமலான் காலங்களில் தவறாமல் அதற்குரிய சரியான அளவில் கணக்கிட்டுத் தேவையுள்ளோருக்குப் பங்களிப்பவர்கள். அப்படிப் பிரித்துத் தராமல் இருப்பது தங்கள் செல்வத்தை அசுத்தமாக்கிவிடும் என்று உறுதியாக நம்புபவர்கள்.
நபித்தோழர் அபூபக்கர், ஜனாதிபதியாகப் பொறுப்பில் இருந்தபோது, ஜகாத் தராதவர்களைச் சட்டரீதியாகத் தண்டிக்க முனைந்தார். அவர்கள் ஐந்து வேளை தொழுகையை விடாமல் தொழுபவர்களாக இருந்தாலும் சரியே!
உண்மையில், திருக்குா்ஆனில் தொழுகை சம்பந்தமாக திருவசனங்கள் இடம்பெறும் இடங்களில் எல்லாம் கூடவே ஜகாத் குறித்தும் வலியுறுத்தப்படுகிறது.
ஜகாத் என்னும் சமூக நலநிதியை இறைவனுக்கு அளிக்கும் அழகிய கடன் என்றும் திருக்குா்ஆன் வர்ணிக்கிறது.
வெற்றிக்கான ரகசியம்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
உயர்பண்பாளர்களின் அடுத்த முக்கியமான பண்பு, உதட்டளவில் அல்லாமல் மனப்பூர்வமாகத் தங்கள் செயல்கள் அனைத்துக்கும் மறுமையில் பதில் அளிக்க வேண்டும் என்று நம்பிச் செயல்படுவது.
மறுமையில் வெற்றியாளருக்குரிய செயலேட்டை வலக்கரத்தில் பெறுபவர், தனது வெற்றிக்கான ரகசியத்தை இப்படிக் கூறுவார்:
“இதோ... பாருங்கள் படியுங்கள் எனது வினைச்சுவடியை! நிச்சயம் என்னுடைய கணக்கைச் சந்திப்பேன் என்று எண்ணியே நான் வாழ்ந்திருந்தேன்!”
அடுத்த பண்புநலன், இறைவனின் தண்டனை குறித்து, சதா அச்சம் கொண்டிருப்பவர்கள்.
மறுமையில் இறைவனின் தண்டனை குறித்த அச்ச உணர்வு சம்பந்தமாக ஒருமுறை நபித் தோழர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. அதை நபிகளாரிடம் கேட்கவும் செய்தார்கள்.
“இறைவனின் திருத்தூதரே! இறைத்தண்டனை குறித்து எங்களைப் போலவே தாங்களும் அச்சம் கொண்டிருக்கிறீர்களா?“
“இறைத்தண்டனை குறித்து அச்சமில்லாமல் எப்படி இருக்க முடியும் தோழர்களே அதைக் குறித்த அச்சத்துடனேயே சதா நான் வாழ்கிறேன்!” என்று நபிகளாரும் பதிலளித்தார்.
அடுத்த பண்பு நலன், இல்லற உறவைத் தவிர, விபச்சாரம் போன்ற தீமைகளிலிருந்து விலகி இருப்பவர்கள்.
இதற்கும் அடுத்ததாக, ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களைப் பாதுகாப்பவர்கள், செய்துகொண்ட ஒப்பந்தங்களை மதித்து நடப்பவர்கள், சாட்சியங்களின் போது, நீதியில் நிலைத்திருப்பவர்கள் என்று பண்பாளர் பட்டியல் தொடர்கிறது.
சும்மா கிடைப்பதில்லை வெற்றியின் கோப்பைகள்!
நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்வதன் மூலமே சுவனங்களை அடைய முடியும். உயர்பண்பாளர்களின் இருப்பிடம்தான் சுவனம்.
(தி இந்து, ஆனந்த ஜோதியில், 14.09.2017 அன்று பிரசுரமான எனது கட்டுரை)