அன்பு நண்பர் ஒளிப்பட வித்தகர் சுபான் பீர் முஹம்மது, தனது திருமண நாளன்று முகநூலில் https://www.facebook.com/subhan.mohamed.5/posts/10212695087706457 பதிவேற்றிய நினைவலை இது. அழகான வட்டார மொழியில், மலராய் சரம் சரமாக தொடுத்து நினைவுகூர்ந்திருந்த நினைவுகள். மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். இனி சுபானின் நினைவுகள் அவரோடு எழுத்துக்களாய்.. -இக்வான் அமீர்
எந்த ஒரு நோய் நொடி என்றாலும் நாசரேத் லூக்காஸ் ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும்.. எங்க ஊரு பக்கத்துலே அந்த காலத்துலே அதுதான் பெரிய மிசன் ஆஸ்பத்திரி. தம்பிக்கு உடல்நலக்குறைவு இளப்பு அதிகமாகிவிட்டது.உம்மா ,அக்காச்சி என்கிற முதிய பெண்மணியும் ஆறு வயதான அவனையும் அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாகிவிட்டது இரண்டு நாள் தங்கி பார்க்கனுன்னு டாக்டர் சொல்லிட்டார். குசினி வார்டில் ரூம். அவசரமா புறப்பட்டதால் சமையல் பாத்திரங்கள் அதிகம் எடுத்து வரவில்லை.
அடுத்த நாள் காலை அவனிடம், "வாப்பா, பே வார்டுலே நம்ம ஊர்காரங்க பிரசவத்துக்கு வந்துருகாங்கலாம். அவங்ககிட்ட போயி டீ போட ஒரு வலந்து (பாத்திரம் ) வாங்கிட்டு வாம்மா"
அவனும் பே வார்டு போய் அங்கிருந்த வயதான கம்மா (பாட்டி) விடம் சலாம் சொல்லி “இன்னாங்கோ எனக்கு சித்தன் தெருவு, பகரைன் வீடு, தம்பிக்கு சுகமில்லை குசினி வார்டுலே தங்கி இருக்கோம் உம்மா உங்ககிட்டே டீ போட ஒரு வலந்து வாங்கிகிட்டு வர சொன்னோ”
அந்தம்மா பாத்திரம் எடுக்க அடுப்பாங்கறை போக இவன் மெதுவாக அந்த அறையை நோட்டமிட்டான். பிரசவம் முடிந்து தாய் அரை மயக்கத்தில் தூங்கி கொண்டிருக்க அருகே ஆஸ்பத்திரிக்கு சொந்தமான வெள்ளை நிற இரும்பு தொட்டிலில் குழந்தை.
“வாப்பா, இந்த இதை கொண்டு போயி உம்மாகிட்டே கொடு” அவன் பாத்திரத்தை வாங்கி புறப்பட முற்பட்ட போது, "பொம்பளை புள்ளே பொறந்திருக்கு. காலைலே தான் பொறந்தா. அவோ வாப்பா மூணு நாளா கூடவே இருந்துட்டு நேத்து நைட்டு தான் அவசர வேலைன்னு திருநெல்வேலி போனோ. புள்ளைய பார்த்து மோந்துட்டு (முகர்ந்துவிட்டுப்) போமா”
தொட்டிலின் கிட்டே சென்று எட்டிபார்கிறான் பிஞ்சு கை கால்களை அசைத்தபடி சிறிய விழிகளால் அவனை நோக்கி புன்னகைத்த அவளின் நெற்றியில் முத்தமிட்டு கன்னத்தை விரல்களால் வருடி அந்த விரல்களுக்கும் ஒரு முத்தம் தந்து பாத்திரத்தோடு புறப்பட்டான் அவன்.
ஆறு வருடங்களுக்கு பின்னர்...
பக்கத்துக்கு வீட்டு முறுக்கு கஸ்ஸாலியப்பா குடும்பத்துடன் ஏரலுக்கும் பழைய காயலுக்கும் இடையே உள்ள கஸ்ஸாலி மரைக்கார் சாலையில் தர்காகந்தூரிக்கு செல்ல நானும் கூடப்போவேன் என உம்மாவிடம் அடம்பிடிக்க அரை மனதுடன் அவர்களோடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
தர்காவும் அம்மன் கோவிலும் அடுத்து அடுத்து ஒற்றை சுவர் கொண்டுப் பிரிக்கப்பட்டிருக்கும். அம்மன் கோவிலையொட்டி அகன்ற வாய்கால். அதன் கரைகளில் பெரிய தடித்த மரங்கள் கால்வாய்க்கு கூரை போட்ட மாதிரி தன் கிளைகளை பரப்பி படர்ந்து இருக்கும். மரங்களில் ஏறி கால்வாய்க்குள் குதிப்பது சிறார்களின் விளையாட்டாய் இருந்தது.
தண்ணீர் வருகின்ற பகுதியில் பெண்களும் சற்று தள்ளி தண்ணீர் போகின்ற பகுதியில் ஆண்களும் துணிகள் துவைத்துக் கொண்டும் குளித்துக் கொண்டும் இருந்தார்கள்.
இவன் மரத்தில் ஏறி குதிக்க தயாரானபோது பெண்கள் பகுதியில் படிக்கட்டில் அமர்ந்து இருந்த சிறுமி கால் தவறி தண்ணீரில் விழுந்து விட்டாள். கூட வந்திருந்த அதே கம்மா (பாட்டி) "அல்லாஹ்வே! எம்புள்ளே தண்ணிலே விழுந்துட்டே!" - என்று சத்தமிட மரத்தின் மேலிருந்த அவன் சட்டென நீரில் குதித்து அந்த சிறுமியை தூக்கி அந்தக் கம்மா (பாட்டி) யிடம் ஒப்படைத்தான். ஆறுவயது சிறுமியின் கண்களில் கண்ட நன்றிப் பார்வையை பரிசாக பெற்று நகர்ந்தான் ..
பத்தொம்பது வயசுலேயே நல்ல வேலை நல்ல சம்பளம் என்றிருந்தவனுக்கு தந்தை பெண் பார்க்க தொடங்கிவிட்டார்.
"இப்ப என்ன அவசரம்?" - என தாயார் சொல்ல, "எம் புள்ளைய பத்தி எனக்கு தெரியும் கல்யாணம் ஆனானும் அவன் கடமைகளை சரி வர செய்வான்” - என மகனின் மேல் உள்ள முழு நம்பிக்கையோடு சொல்லிட்டார்.
பல இடங்களில் கேட்டு வந்தார்கள்.
இவனுக்கு எதிலும் சரியான நாட்டமில்லை.
இறுதியா “தீவு தெரு,அப்துல்லா தங்கை பொண்ணு பத்தாம் கிளாஸ் படிக்குது. +2 முடித்ததும் கல்யாணம் வச்சிகிறலாம்னு சொல்லுறாங்க உன் பதில் என்ன?”
- வாப்பா போனில் கேட்ட போது “சரி வாப்பா, உங்களுக்கும் உம்மாக்கும் பிடிச்சி இருந்தால் முடிவு பண்ணுங்க” என ஒரு வரி பதில் சொல்லி முடித்தான்.
முகம் பார்க்காமலே, குறைந்தபட்சம் ஒரு போட்டோ கூட பார்க்காமலே நிச்சயமாயிற்று. (அப்புறம் போட்டோ கேட்டதற்கு அவளின் மூன்றை வயசில் எடுத்த போட்டோ ஓன்று தரப்பட்டது)
இரண்டு வருஷம் கழித்து 1985, செப்டம்பர் 12-ம் தேதி வியாழக்கிழமை காலை கல்யாணம். அப்போதும் சரி வர பெண்ணை பார்க்க முடியலே. பூவும், முக்காடும் முகத்தை மறைத்து இம்சை படுத்தியது. இரவு தாலி கட்டு, ஒட்டுப்பணம், பல்லாங்குழி என குடும்பத்தார் முன்னிலையில் கலகலப்பாக நிகழ்வுகள்.
“அவ பொறந்த அன்னிக்கே வந்து மொத மொத அவளை மோந்துட்டு போனவருலோ அவரு! அல்லாஹ் இவ பொறந்த அன்னிக்கே மாப்பிளையை கண்ணுலே காமிச்சிட்டான்”
அந்த (கம்மா) பாட்டியம்மா பெருமையோடு சத்தமா சொன்ன போது, இவனும் பக்கமா அமர்ந்திருந்த பெண்ணை திருப்பி பார்க்க... ஆஹா..! அதே கண்கள்!“
அந்த அவன் நான்தான்.. வாழ்க்கைத் துணையுடன் இணைந்து இன்றுடன் வருடங்கள் முப்பத்திரண்டு.
"யப்பு ...நாங்க பொறந்த உடனே பொண்ணை பார்த்தவைங்க...."
Happy anniversary and God bless
ReplyDeleteமிக்க நன்றி ஜி
ReplyDelete