உண்மையில் இறைத்தூதர்கள் யாரொருவரும்,
துன்பத்துயரங்களுக்கும்,
இன்னல், இடர்பாடுகளுக்கும் அஞ்சி தாய்மண்ணை
விட்டு துறத்தல் என்பது அபத்தமானது. எல்லையற்ற அருளாளனின் வழிகாட்டுதல் பிரபஞ்சத்தின் குறிப்பிட்ட
ஒரு பகுதிக்கு மட்டுமானது என்ற கருத்தை தகர்த்தெறிந்து எங்கும்
நிறைந்திருக்கும் அப்பரம்பொருளின் வழிகாட்டுதலை உலகின் யாராலும் பின்பற்ற
இயலும் என்ற சாசுவதத்தின் காரணமிது ~இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
1438 ஆண்டுகளுக்கு முன்னர்
இறைவழிகாட்டுதலுக்கு ஏற்ப, நபிகளார்
தமது தோழர்
அபூபக்கருடன் மதீனா நகருக்கு புலம்பெயர்ந்து சென்றார். வீடு, வாசல், மனைவி, மக்கள், உற்றார், உறவுகள் என்று தாய்மண்ணை விட்டு
நபிகளார் பிரிந்து சென்ற இந்நிகழ்வு வரலாற்றில் ஹிஜ்ரத் எனப்படுகிறது. இதுதான்
இஸ்லாமிய நாட்காட்டியின்
துவக்க ஆண்டாக கணக்கிடப்பட்டு முஹர்ரம் முதல் மாதமாக வழங்கப்படுகிறது. ஹிஜ்ரத் நிகழ்வின்போது,
நபிகளாரின் கொள்கை
வழி ஆதரவாளர்களாக
மதீனா நகரில் இணைந்து நின்றவர் வெறும் 75 பேர் மட்டுமே!
இஸ்லாத்தின் அரசியல்,
அதிகார தலைமையகமாக
மதீனா தேர்வு செய்யப்படுவதற்கு காரணம் என்ன? இறைவனின் இல்லமான கஅபாவும், அதை கட்டியமைத்த நாயகரான இறைத்தூதர்
இப்ராஹீம், அவரது
மகனார் இஸ்மாயீலும் காலடி பதித்த இடங்கள் மக்காவாக இருக்க… அதிகார பீடமாக மக்கா ஏன் தேர்வு செய்யப்படவில்லை?
என்ற கேள்விகள்
எழுவது சகஜம். இதற்கான மேலோட்டமான பதில், நபிகளார் மக்காவில் கடும் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவரது
பரப்புரைகளுக்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான்.
ஆனால், உண்மையில் இறைத்தூதர்கள் யாரொருவரும்,
துன்பத்துயரங்களுக்கும்,
இன்னல், இடர்பாடுகளுக்கும் அஞ்சி தாய்மண்ணை
விட்டு துறத்தல் என்பது அபத்தமானது. எல்லையற்ற அருளாளனின் வழிகாட்டுதல் பிரபஞ்சத்தின் குறிப்பிட்ட
ஒரு பகுதிக்கு மட்டுமானது என்ற கருத்தை தகர்த்தெறிந்து எங்கும்
நிறைந்திருக்கும் அப்பரம்பொருளின் வழிகாட்டுதலை உலகின் யாராலும் பின்பற்ற
இயலும் என்ற சாசுவதத்தின் காரணமிது.
நபிகளாரின் இந்த
ஹிஜ்ரத் புலம்பெயர்தல் நிகழ்வு மனித இனத்தில் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவந்த
அத்தனை பழக்கவழக்கங்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்தது. மனித இனம் அதுவரையில்
இறைநம்பிக்கையாளர், இறைநம்பிக்கையற்றவர்
என்று இருவேறு உலகங்களாக பிளவுப்பட்டிந்தது. இந்நிலையை மாற்றியமைத்து, எல்லா உலகிலும் அதிகாரம் செலுத்துபவன்
இறைவன் என்றது.
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவையும் ஆக்கியாள்பவன், அவற்றின் மீது முழுமையான அதிகாரம் கொண்டவன் இறைவன்
என்று நிரூபித்தது. குறைந்த எண்ணிக்கையினராக இருந்தாலும் தம்
செய்தியை அடுத்தவர்க்கு பகிர முடியும் என்று அப்பட்டமாக்கியது.
ஹிஜ்ரத் நிகழ்வாக
நபிகளார் மதீனா மாநகருக்கு மேற்கொண்ட பயணம் ஒவ்வொரு இனத்தாரும்
பன்முகசமூகத்தில் இணந்து வாழ முடியும் என்று
நிதர்ச்சனப்படுத்தியது. அதுவரையில் பல்வேறு கோத்திரங்களாக பிரிந்து, பிளவுப்பட்டுக் கிடந்தவர்களை நபிகளார் ஒருங்கிணைத்தார்.
அதற்காக பிரதானமாக செல்வாக்கு பெற்ற கோத்திரத் தலைவர்களை அழைத்து, ஒப்பந்தங்களையும் செய்து சமூகத்தில்
அமைதி நிலவுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். இன,
சமய பின்னணி
எதுவானாலும் ஒவ்வொரு தனிமனிதனும் சுயசுதந்திரம் கொண்டவனாக மதீனாவில் நடமாடுவது
அவனது பிறப்புரிமை
என்பதை அரசியலமைப்பு சட்டமாகவே வடிவமைத்தார். அவரவர் கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றி வாழும்
ஒரே நாட்டின் ஒரே மக்களாகவும், பன்முகசமூகத்தின்
ஒரு முன்மாதிரி நகரமாகவும் மதீனாவை மாற்றியமைத்தார்.
மதீனா மாநகரின்
பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும்விதமாக எல்லா தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து வலிமை வாய்ந்த
ஒரு ராணுவத்தை கட்டமைப்பதற்கான அனைத்துவித முயற்சிகளையும் நபிகளார்
மேற்கொண்டார். எல்லையில் நாட்டைக் காப்பதற்காக உயிர் துறக்கும் அமரர்களின்
குடும்பத்தாரின் அத்தனை தேவைகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்றுக்
கொண்டது. இதுதான்
இன்றைய சொல்வழக்கில்
இன்ஷீரன்ஸ் காப்பீடு என்றழைக்கப்படுகிறது. அதேபோல, ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு சமயத்தாரும் அவரவர் சட்டங்களை
பின்பற்றி வாழ்வதற்கான அனைத்து சூழல்களும் உருவாக்கப்பட்டன.
ஹிஜ்ரத் நிகழ்வின் விளைவாக பெண்ணுரிமைகளுக்கும்,
ஒடுக்கப்பட்டவர்களின்
உரிமைகளுக்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அத்தோடு
நபிகளாரின் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து நின்ற அவாஸ் கோத்திரத்தாரின் நான்கு
உட்பிரிவினர் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் அளிக்கப்பட்டது.
ஆக மொத்தத்தில் நபிகளார்
மதீனா மாநகருக்கு மேற்கொண்ட ஹிஜ்ரத் புலம்பெயர்வு வரலாற்றில் ஜனநாயகத்தின்
முன்மாதிரி வடிவம் பெற்ற நிகழ்வானது.
0 comments:
Post a Comment