NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Showing posts with label பசுமைக்கூடாரம். Show all posts
Showing posts with label பசுமைக்கூடாரம். Show all posts

Sunday, July 12, 2020

இயற்கையோடு இயைந்த இல்லம்



இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''' 
என் பெற்றோர், ரயில்வே பணி நிமித்தமாக 60 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவிலிருந்து சென்னை எண்ணூருக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள். பல ஆண்டுகள் இந்த நகரத்தில் வசித்தாலும் அவர்களுக்கு என்று சொந்த இடம் இல்லாமல் வாழ்ந்து முடித்தவர்கள்.

சிறுவயதிலிருந்தே மரம், செடி-கொடிகள், வளர்ப்புப் பிராணிகள் என்று வளர்ந்துவிட்ட சூழலில் திருமணத்துக்குப் பிறகு ஒவ்வொரு வாடகை வீட்டிலும் பிரச்சினைதான். மாடியில் செடி வளர்க்கக் கூடாது. கோழி வளர்க்கக் கூடாது, நாய், பூனை வளர்க்கக் கூடாதுஎனக் கூடாதுகளால் நாடோடியானது எங்கள் வாழ்க்கை.

இந்நிலையில், 90-களில், எனது பால்ய சிநேகிதன் ராஜு சொந்தமாக மனை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினான். எனக்கு அதில் உடன்பாடு இருந்தாலும் சொந்தமாக மனை வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால் என் தயக்கத்தைப் புரிந்துகொண்டு அவனே கைமாற்றாக, பணம் கொடுத்து மனை வாங்க உதவினான். அவன் கொடுத்த பணத்தில் 5 செண்ட் இடம் எங்களுக்குச் சொந்தமானது.

நமக்கு என்று ஓர் இடம் சொந்தமானதும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? வாடகை வீடுகளில் நிறைவேற்றிக்கொள்ள முடியாத என் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டேன். 5 சென்ட் முழுக்கத் தோட்டம் அமைக்க நினைத்து காய்கறிகளைப் பயிரிட்டேன். அதைச் செய்து முடித்ததும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

சுற்றியும் எட்டுத் தென்னைகளை நட்டுச் சில மாதங்கள் கழித்து அந்த இடத்தில் பேஸ்மெண்ட் போட்டுச் சுவர் எழுப்பி மேலே கூரையாய்த் தென்னங் கூரையை வேய்ந்து, அதன் பின் கல்நார் கூரை என்று கொஞ்சம் கொஞ்சமாக உருமாறலாயிற்று எனது மனித நேயக் குடில்’. இதுதான் என் இல்லத்தின் பெயரும்கூட!

தமிழகத்தின் தலைசிறந்த இனமான கோம்பை இன நாய்கள் முதல், காவல் நாய்களான ஜெர்மன் ஷெப்பர்ட், கிரேட் டேன் வரை வளர்த்தேன். இது மட்டுமல்லாது கோழிப் பண்ணை, வாத்துப் பண்ணை, வண்ண மீன் பண்ணைகளையும் வைத்துப் பராமரித்து வந்தேன். எல்லா ஜீவராசிகளும் கை கோத்து வளர்ந்தன.

சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் முழு நேரப் பணியாளனாக வேலை கிடைத்தது. குடும்பத்தின் மூத்தவனாக இருந்ததால் தங்கைகளின் திருமணங்களை நடத்திவைக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. எங்கள் நிறுவனத்தின் வைப்புநிதியிலிருந்து பெற்ற கடன்தொகையில் தங்கைகளின் திருமணம் நடத்தியது போக மிச்சம் மீதி இருந்த தொகையில் ஓரளவு வீட்டைத் தளம் போட்டு முழுமையாக்கினோம்.

வீட்டின் தளத்தில் வெதர் புரூப்புக்காகப் பரப்பிய செங்கல் - சுண்ணாம்புக் கலவையின் மீது மாடித் தோட்டம் அமைக்கப்போய் சில ஆண்டுகளிலிலேயே மழைநீரும், செடிகளுக்கு ஊற்றிய நீரும் ஊறித் தரைத்தளத்தில் விரிசல் விடத் தொடங்கிவிட்டது.

மழை நேரத்தில் ஓலைக் குடிசை வீடு போல தளத்திலிருந்து ஆங்காங்கே மழை நீர் ஒழுகும் இடங்களில் நானும் எனது குடும்பத்தாரும் தட்டு, முட்டுச் சாமான்களை வைத்துச் சமாளிப்பது ஒருபக்கம் என்றால், மறுபக்கமோ வீட்டின் உள்துறை அமைச்சரான என் மனைவியிடமிருந்து, “மாடியில செடி வளர்க்காதீங்க... வளர்க்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே..? வீடே நாசமாய்ப் போச்சு..!என்ற அர்ச்சனை கிடைக்கும்.

வாடகை வீடுகளில் ஏற்பட்ட அனுபவத்தைப் போலவே சொந்த வீட்டிலும் சங்கடமான நிலை தொடர்ந்தது. இச்சூழலில் பதவி உயர்வு, மூத்த அதிகாரி என்று உயர்ந்த ஒரு கட்டத்தில் பத்திரிகை ஆர்வத்திற்காக விருப்ப ஓய்வுபெற்றபோது கிடைத்த கணிசமான பணத்தை, வேறு எதிலும் முதலீடு செய்யத் தைரியமில்லை. வங்கியில் போட்டு வட்டியைச் சாப்பிடவும் முடியாத நிலை.

கடைசியில் ஒரு சொத்தாவது இருக்கட்டுமே என்று மேல் தளம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினேன். மிக அழகிய முறையில் என் மருமகனும், இளைய மகளும் முன்னெடுத்துக் கட்டிய வீடு இறையருளாள் அற்புதமாய் அமைந்தது.

இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை.

அதேபோல, காய்த்து குலுங்கும் கொய்யா மரத்தையும், வெட்ட முடியாது என்று மறுத்ததால், வீட்டுக்குள்ளேயே காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது கொய்யா. கூடவே பசும் மேகமூட்டமாய் படர்ந்துள்ள சப்போட்டா மரம். வாழை, கிணற்றடியில் வளர்ந்து நிற்கும் புளியம் மரம் என்று ஒரு சிறுதோப்பு எனது குடில்.

சமீபத்தில் என்னைப் பார்க்க வந்திருந்த சன் டிவி காமிரா மேன் சலீமுடன்
மேல்தளத்துக்காக மாடியில் சுற்றுச் சுவர் எழுப்பும்போது தோட்டம் வைப்பதற்கு ஏதுவாக அந்தச் சுவருக்கு வடிகால் வசதியோடு தொட்டிகள் போன்ற வடிவமைப்போடு கட்டியாகிவிட்டது.

பெரிய திறமையாளர் என்று சொல்ல முடியாவிட்டாலும், சொன்னதைச் செய்யும் நல்ல மேஸ்திரி, அற்புதமான எலெக்ட்ரீஷியன், நல்ல இன்ட்டீரியர் டெக்ரேட்டர் என்று ஏகத்துக்கும் நல்லவர்கள் கிடைத்தார்கள்; திருஷ்டிக்கு ஒரு தச்சரைத் தவிர.

வீடு கட்டி முடிக்கப்பட்ட கையோடு வீட்டுக்குக் குடிபோனபோது, மேஸ்திரி, எலெக்ட்ரீஷியன், தச்சர் உட்பட ஆளாளுக்கு நாங்கள் தர வேண்டிய நிலுவைத் தொகை கணிசமான கடனாக நின்றது. அப்போது எங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவகாசம் கொடுத்து திரும்பப் பெற்றுக் கொண்ட நல்லுள்ளங்களால்தான் நிமிர்ந்து நிற்கிறது எனது மனித நேயக்குடில்.

(29 Nov 2014 அன்றைய தி இந்து தமிழ் திசை, சொந்த வீடு இணைப்பில் வெளியான https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/20984-.html என் வீடு சம்பந்தமான கட்டுரை இது. அப்போதுதான் கட்டப்பட்டிருந்த வீடானாதால் உடனே மாடி தோட்டம் அமைக்க முடியவில்லை)


Share:

Saturday, July 11, 2020

காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?



ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

பால் வடியும்வரை நிழலான பகுதியில் வைத்து ஓரிரு நாள் கழித்து நடுங்கள்.

பொடி கற்கள், ஆற்று மணல், சிறிதளவு தோட்ட மண், கிடைத்தால் அடுப்பு கரி இவற்றை கலந்து நல்ல வடிகால் வசதியோடு கூடிய ஒரு மண் கலவையை தயார் செய்து நடுங்கள்.

அப்படி நடும்போது, மண்ணில் ஈரமிருந்தால் அதுவே போதுமானது.

அதனால், தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

நல்ல வெய்யிலில் வைத்து விடுங்கள்.

துளிர்விடும்வரை அதிக மழை விழாமல் பார்த்து கொள்ளுங்கள்.

கள்ளி செடிகளுக்கு அதிக தண்ணீர் ஆபத்தாகிவிடும்.
Share:

Wednesday, July 8, 2020

அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"


அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

பொதுவாக அரளிச் செடிகள், குச்சிகள் மூலமாக பதியம் செய்யப்படுகின்றன. ஆனால், விதைகள் மூலமாக நடவு செய்வது அதைவிட வெற்றிகரமாக அமையும்.

அரளிச் செடி பூத்து முடிந்ததும், சுமார் ஆறு அங்குல நீளத்துக்கு காய்கள் (விதைப் பைகள்) உருவாகும். அவை எருக்கன் காய்களைப் போல பஞ்சுக்குள் பொதிந்து கிடக்கும். காய்கள் வெடித்துச் சிதறி பறந்து சென்று தன்னை மீட்டெடுத்துக் கொள்ளும் வசதிக்கான அமைப்பு இது.

அரளிக் காய்கள், தோற்றத்தில் ஏறக்குறைய கொத்தவராங்காய் போல இருக்கும்.

காய்ந்த அரளிக் காய்களிலிருந்து விதைகள் எடுப்பதும் எளிதுதான். ஆனால், அரளிச் செடி ஓரளவு நச்சுத் தன்மை கொண்டதால், வெறும் கையால் விதைகளைப் பிரித்தெடுக்கும்போது, நமைச்சல் போன்ற தோல் பிரச்னைகள் ஏற்படலாம். அதனால், தோட்ட வேலைகளுக்கு பயன்படும் கையுறைகளை பயன்படுத்துவதே சிறந்தது.

பிரித்தெடுக்கப்பட்ட விதைகளில் நல்ல வளமான விதைகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். அப்படி நடவு செய்வதற்கு ஏதுவாக காலியான இனிப்பு பெட்டகங்களை (Sweet Container Box) பயன்படுத்தலாம்.

இந்த காலியான இனிப்பு பெட்டகங்களில், அடிப்புறம் வடிகால் வசதிக்காக, நாலைந்து துளைகளை இட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த பெட்டகத்தின் முக்கால் பகுதி தென்னங்கழிவுத் தூளையோ (Coco Peat) அல்லது நன்றாக மக்கிய தொழு உரம் கலந்த இளகிய தோட்ட மண்ணையோ நிரப்பி கொள்ள வேண்டும்.

மண்ணை ஈரமாக்கி விதைகளை மண்ணின் மேற்புறமாக இலேசாக அழுத்திவிட்டு அந்த பெட்டகத்துக்கு மூடியிருந்தால் மூடியையோ அல்லது நெகிழி தாளையோ வைத்து காற்றுப் புகாமல் மூடிவிட வேண்டும்.

இப்படி சீல் செய்யப்பட்ட பெட்டகத்தை வெய்யிலும், நிழலும் கலந்த ஒரு சூழலில் வைத்துவிட வேண்டும்.

சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது, விதைகள் ஊன்றிய பெட்டகத்தை திறந்து பார்த்து ஈரம் உலராமல் ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும்.

இத்தகைய கண்காணிப்புடன் ஊன்றப்பட்ட விதைகள் ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் முளைக்க ஆரம்பிக்கும்.

அரளி விதைகள் முளைக்கத் தொடங்கியதும் மூடப்பட்ட நெகிழியையோ அல்லது மூடியையோ எடுத்துவிட வேண்டும்.

நான்கைந்து இலைகள் விட்டு வளர்ந்த அரளிச் செடியை அதன் பிறகு தனி தொட்டிக்கு மாற்றி கொள்ள முடியும்.
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive