NewsBlog

Sunday, August 19, 2018

'சங் பரிவாரின் முகமூடி'- மோதிக்கு பாதையை வகுத்துக் கொடுத்த வாஜ்பேய்


(நச்சு மரத்தில் நல்ல கனியா.. வாஜ்பேய்? என்னும் தலைப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சமரசத்தில் நான் எழுதிய ஆய்வு கட்டுரை ஒன்றை நேற்று எனது வலைப்பூவிலும், (http://ikhwanameer.blogspot.com/2018/08/blog-post_18.html) முகநூலிலும் (https://www.facebook.com/ikhwan.ameer.9/posts/1104582359694792?__tn__=K-R) பதிவேற்றியிருந்தேன். இதே கருத்தையொட்டி ராஜேஷ் பிரியதர்ஷி, டிஜிட்டல் எடிட்டர் எழுதிய கட்டுரையொன்றை இன்று பிபிசி தமிழ் இணையம் வெளியிட்டிருக்கிறது (https://www.bbc.com/tamil/india-45238189) எனது கருத்துகளை உள்வாங்கி வலுசேர்க்கும் அக்கட்டுரையை அப்படியே இங்கே தருகிறேன் படியுங்கள் தோழர்களே.. எத்தனை எத்தனை முகமூடிகளுடன் இந்த பாசிஸவாதிகள் உலா வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இக்கட்டுரைகள் நல்ல சாட்சி.  ~இக்வான் அமீர்)
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

அடல் பிஹாரி வாஜ்பேயியை அவரது விரோதிகள் கூட விமர்சிக்க மாட்டார்கள்.  'அஜதாசத்ரு', 'சர்வபிரிய', 'மதிப்பிற்குரிய' போன்ற பெருமைமிகு அடைமொழிகளை கொண்டவர் வாஜ்பேயி.

வாஜ்பேயின் இரக்க குணம், எதிர்கருத்து கொண்டவர்களையும் எதிரியாக கருதாமல் இயல்பாக அணுகுவது, பகைமை பாராட்டாமை போன்ற பண்புகளுக்கு சொந்தக்காரர் வாஜ்பேயி.

அதற்கு காரணம் அவருடைய இனிமையான சுபாவம் என்று நினைப்பது விவேகமற்ற செயல். அவரைப் பற்றிய ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குபவர்கள், அவர் ஒரு மிகச் சிறந்த அரசியல் தலைவர் என்பதை மறந்து விடுகிறார்கள் என்றே கூறலாம்.

'சங் பரிவார் அமைப்புகளின் முகமூடி'

அரசியலில் ஈடுபடும் ஒருவரின் வெற்றி, அவரது அடையாளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஜன்சத்தா பத்திரிகையின் பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் பிரபாஷ் ஜோஷி வாஜ்பேயைப் பற்றி குறிப்பிடும்போது, "சங் பரிவார் அமைப்புகளின் முகமூடி" என்று சொல்கிறார்.

"சங் பரிவாருக்கு தனது வாழ்க்கை முழுவதும் ஒரு பிரசாரகராக செயல்பட்ட வாஜ்பேயி, தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் சங் பரிவாரின் பிரதிநிதியாகவே செயல்பட்டார்" என்கிறார் பிரபாஷ் ஜோஷி.

2001இல் நியூயார்க்கில் வசிக்கும் இந்தியர்களிடம் உரையாற்றிய வாஜ்பேயி, "இன்று பிரதமராக பதவிவகிக்கும் நான், சங் பரிவாரின் முன்னாள் உறுப்பினர் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் அமைப்பின் தன்னார்வலராக தொடர்வேன்" என்று குறிப்பிட்டார்.

அவரது வார்த்தைகள் முற்றிலும் உண்மையானவை, சரியானவை, உறுதியானவை. வாஜ்பேயி சங் பரிவாரில் பிரசாரகராக இருந்தார், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அவரை ஜனசங்கத்தில் பணிபுரிய அனுப்பியது.

மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக வாஜ்பேயி பணியாற்றியபோது, அத்வானி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக பணியாற்றினார். 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சியுடன் ஜன்சங்கம் இணைந்தது.

பிறகு சோஷியலிச கட்சியை சேர்ந்தவர்கள், குறிப்பாக ஜார்ஜ் பெர்ணாண்டஸ், இரட்டை உறுப்பினர் என்ற முறைக்கு எதிரான நிலைப்பாட்டை கோரிக்கையாக முன்வைத்தார். அதாவது ஜனதா கட்சியில் இருப்பவர்கள், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் அதாவது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருக்கக்கூடாது. இதனை தொடர்ந்து, வாஜ்பேயியும், அத்வானியும் விலகினார்கள்.

இதன்பிறகு 1980க்கு பிறகு ஜனசங்கம் 'பாரதிய ஜனதா கட்சி' என்ற புதிய பெயரில் பிறந்தது. இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது என்னவென்றால், பா.ஜ.க தோன்றுவதற்கு முன்பிருந்தே வாஜ்பேயி, அத்வானி இருவரும் சங் பரிவாரின் வழிகாட்டுதலுடன் அரசியலில் ஈடுபட்டார்கள் என்பதே.

 2004ஆம் ஆண்டில் 'ஒளிரும் இந்தியா' தேர்தலில் தோல்வியடையும் வரை ஒற்றுமையாக இருந்த இந்த ஜோடி, இந்துத்வா அரசியலுக்காக போராடியது.

இந்து தேசிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பது அந்த அமைப்பின் வெளிப்படையான குறிக்கோள் என்பதால் இது மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. இந்துக்களின் மேலாதிக்கம் இருக்கவேண்டும் என்பதை விரும்பும் இந்த அமைப்பு, யாருக்கும் பொறுப்பேற்பதில்லை. ஆனால் ஜனநாயக முறைப்படி நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பா.ஜ.கவை சேர்ந்தவராக இருந்தால், அவர் சங் பரிவாரின் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுகிறார்.

ஜஸ்வந்த் சிங்கின் பெயரின் நீக்கம்

அடல் பிஹாரி வாஜ்பேயி 1996 ல் பிரதமராக பதவியேற்றபோது தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங்கை நிதியமைச்சராக்கினார். 1998இல் வாஜ்பேயி தனது அமைச்சரவை பட்டியலை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியபோது, அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன் திடீரென்று வாஜ்பேயியை சந்தித்தார், பிறகு பட்டியலில் இருந்து ஜஸ்வந்த் சிங்கின் பெயர் நீக்கப்பட்டது.

தனது அமைச்சரவையை தேர்ந்தெடுப்பது பிரதமரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், வாஜ்பேயி சங் பரிவாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதால், ஜஸ்வந்த் சிங்கிற்கு பதிலாக, யஷ்வந்த் சின்ஹாவை நிதியமைச்சராக நியமிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

மோதி தலைமையிலான அரசோ, உண்மையில் அரசின் 'ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை' சங் பரிவாரின் தலைவர்களிடம் சமர்ப்பிக்கும் நடைமுறையை பின்பற்றுகிறது.

இரட்டை முகமூடி

எண்பதுகளில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து 2004ஆம் ஆண்டு வரை, ராமர் ஆலயம், இந்துத்துவா மற்றும் கூட்டணி அரசு என்ற கொள்கைகளுக்காக முகமூடி அணிந்து இரட்டை நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்) ஏற்பட்டது.

இந்துத்துவா கடும்போக்கு கொள்கை கொண்டவராகவும், மதரீதியாக பிளவுபடுத்தும் வேலையை செய்தார் எல்.கே. அத்வானி.  அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதற்கும், அரசாங்கத்தை அமைதியாக நடத்துவதற்குமான பொறுப்பை ஏற்றுக் கொண்டார் வாஜ்பேயி.

அத்வானி மற்றும் வாஜ்பேயிக்கு இடையிலான மோதல்கள் மற்றும் கருத்துவேறுபாடுகள் போன்றவற்றை பெரும்பாலான பத்திரிகையாளர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை, உண்மையில், சங் பரிவாரின் 'இறுதி லட்சியம்' நோக்கியப் பயணத்தில் அத்வானியும் வாஜ்பேயும் வெவ்வேறு பாதையில் பயணித்து தங்களுக்கு இடப்பட்ட பணியை மேற்கொண்டனர்.

இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள், ஒருவர் கடும்போக்காளர் மற்றவர் மிதவாதி என்பது முற்றிலும் புனையப்பட்ட தோற்றம். இதை மக்கள் நம்பவேண்டும் என்று திட்டமிட்டு அதற்கேற்ப காய்கள் நகர்த்தப்பட்டன.

உண்மையில் இருவருக்கும் இடையில் பெரிய அளவிலான அடிப்படை வித்தியாசங்கள் கிடையாது.  ஏனெனில் இருவரும் சித்தாந்தங்களின் அடிப்படையில் சங் பரிவாரின் கருத்துக்களை கொண்டவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.  அதாவது மார்க்சியத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால், ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்க முடியாது என்பது போலவே, இந்துத்துவவாதியாக இல்லாத ஒருவர் எப்படி ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கமுடியும்?

பல சந்தர்ப்பங்களில் வாஜ்பேயின் நடவடிக்கை எப்படியிருந்தாலும், இந்துவாதி என்ற விஷயத்தில், 'இரும்பு மனிதன்' என்று அழைக்கப்பட்ட அத்வானிக்கு அவர் குறைந்தவர் இல்லை என்பதை உணர்த்தக்கூடிய பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டலாம்.

2002இல் குஜராத்தில் வகுப்புவாத கலவரங்களின்போது, வாஜ்பேயி பிரதமராகவும், நரேந்திர மோதி குஜராத் மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்தனர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். மோடி "அரசியல் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்" என்றும், "மக்களின் மதம் அல்லது சாதியின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டக்கூடாது" என்பது போன்ற வாஜ்பேயின் வார்த்தை ஜாலங்கள் மிகவும் பிரபலமானவை.

வாஜ்பேயின் பொன்மொழிகள்

எப்போதும் உண்மையையே பேசுங்கள், கடும் உழைப்புடன் உங்கள் பணியை செய்யுங்கள், மற்றவர்களின் இதயத்தை காயப்படுத்தாதீர்கள் என்பது போன்ற பொன்மொழிகளை உதிர்த்ததைத் தவிர வாஜ்பேயி பெரிதான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.

அதன் பிறகு ஏப்ரல் 12ஆம் தேதியன்று கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில், மிதவாதியும், முஸ்லிம்கள் மீது "கருணை கொண்ட" வாஜ்பேயி என்ன பேசினார்?  வாஜ்பேயின் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்தும் சொற்பொழிவு அது.

  "முஸ்லிம்கள் எங்கு வசித்தாலும், பிறருடன் இணைந்து வாழ்வதை அவர்கள் விரும்புவதில்லை.  அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை விரும்புவதில்லை. தங்கள் எண்ணங்களை அமைதியுடன் வெளிப்படுத்தாமல், மதத்தின் பிரசாரத்தை தீவிரவாதம் மற்றும் மிரட்டல்கள் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள்" என்பது தான் கோவா செயற்குழு கூட்டத்தில் வாஜ்பேயி பேசியதன் சாரம்சம்.

அத்வானி, உமா பாரதி முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாபர் மசூதியை இடிக்கும் பணிக்கு தலைமை தாங்குவார்கள் என்பதும், முன்னரே எழுதி செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியே.  அதேபோல், இந்த செயலில் இருந்து திட்டமிட்டே வாஜ்பேயி பிரித்து வைக்கப்படவேண்டும் என்பதும் அந்த உறுதியான திட்டத்தின் ஒரு பகுதி.

'நிலத்தை சமப்படுத்துவார்கள்'

இதன் மூலம் மக்களிடையே பா.ஜ.கவின் ஒரு பிரிவு கடும்போக்காளர்களாகவும், மற்றொன்று மிதவாதிகளை கொண்டது என்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முடியும்.  அதுமட்டுமல்ல, மசூதி இடிக்கப்படும்போது, மிதவாதி வாஜ்பேயி அந்த இடத்தில் இருக்கவேண்டாம் என்பதும் திட்டத்தின் ஒரு பகுதியே.

ஆனால் சம்பவத்திற்கு முன்னர் டிசம்பர் 5ஆம் தேதி லக்னோவில் அவர் அவர் ஆற்றிய உரை, அவர் அத்வானிக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதை நிரூபிக்க போதுமானது. அயோத்தியாவில் கரசேவகர்கள் 'நிலத்தை சமப்படுத்துவார்கள்' என்று சொன்னதை மறந்துவிட முடியாது.

 இதுபோன்ற மற்றொரு உதாரணத்தையும் நினைவுகூரலாம்.  அசாம் மாநிலத்தில் நல்லி என்ற இடத்தில் கொடூரமான படுகொலை நடைபெற்றது

அப்போது, 1983ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பேய் உணர்வுகளை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய உரையாற்றினார்.  அப்போது வாஜ்பேயி ஆற்றிய உரைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தபோது, பா.ஜ.க பின்வாங்கியது.

ஆனால், 1996 மார்ச் 28ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான உரையின்போது, அப்போதைய உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா வாஜ்பேயின் அஸ்ஸாம் உரையை சுட்டிக்காட்டி அவரின் எண்ணப்போக்கை வெளிப்படுத்தினார்.

அதில் வங்கதேசத்தில் இருந்து வந்த வெளிநாட்டவர்களை சகித்துக் கொள்ளவேண்டாம் என்றும் அவர்களிடம் வன்முறையை கையாளலாம் என்றும் வாஜ்பேயி கூறியிருந்தார்.

இறுதி இலக்கை நோக்கிய தொடர் பயணம்

பல தசாப்தங்களாக தொடர்ந்த ஹிந்துத்வாவின் அரசியல் பயணத்தில் அடல் பிஹாரி வாஜ்பேயின் பங்கு மிகவும் முக்கியமானது. படிப்படியாக, அமைதியில் இருந்து இந்துத்துவா கொள்கைக்கான ஒரு தளத்தை உருவாக்குவது வாஜ்பேயி இல்லாமல் சாத்தியமாகியிருக்காது.

1996 முதல் 2004 வரை மூன்று முறை இந்திய பிரதமராக பணியாற்றிய வாஜ்பேயி, காங்கிரஸ் கட்சியை சேராத பிரதமர் ஒருவர் ஐந்தாண்டு பதவி காலத்தை பூர்த்தி செய்தவர் என்ற பெருமை பெற்றவர்.

கட்சிக்கு விசுவாசியாகவும், கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களின் அன்பைப் பெற்ற அபிமானத் தலைவர் வாஜ்பேயி என்பதோடு, அவருடைய தாராளவாத கொள்கைக்காகவும் அறியப்படுபவர் அவர்.

எந்தவொரு நபருடனும் பகைமை பாராட்டாத சிறந்த அரசியல்வாதியான வாஜ்பேயி, தன்னுடைய அரசியல் திறமையால், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற நிலைமையில் இருந்து காங்கிரஸுடன் போட்டியிடும் நிலைக்கு கட்சியை உயர்த்தியவர்.

கட்சியின் வளர்ச்சிக்கு தனது சகா அத்வானியின் உதவியுடன் முழுமூச்சாய் பாடுபட்ட வாஜ்பேயியின் ஆட்சியில், அதிகாரத்தின் நன்மையையும், ஆசீர்வாதத்தையும் பெற்ற சங்க பரிவார், தனது வேர்களை பலப்படுத்திக் கொண்டது.

ஒரு புறம் கடும்போக்காளர் அத்வானி, மறுபுறம் நிலைத்தன்மை மற்றும் கூட்டணி தர்மம் என்று பேசி பிரச்சனைகளுக்கே பிரச்சனை கொடுத்து அதை அடக்கிய மிதவாதி வாஜ்பேயி.

இன்று, நரேந்திர மோதி, சாக்ஷி மகாராஜ், கிரிராஜ் சிங் போன்றவர்கள் அத்வானியின் பாணியை பிந்தொடர்ந்து பணியாற்றுகிறார்கள்.  இன்று அவர்களுக்கு இரண்டு முகங்களோ, முகமூடிகளோ தேவையில்லை.

அவர்களுக்கான முகமூடியாய் இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி போன்றவர்களின் தேவை தற்போது சங் பரிவாருக்கு இல்லை. தனது வாழ்நாளிலேயே சங் பரிவாரின் தேவைகளை பூர்த்தி செய்து தனது கடமையை செவ்வனே ஆற்றினார் வாஜ்பேயி. 

(நன்றி: பிபிசி) 


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive