சீமானின் தம்பிகளுக்கு,
“உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக..!”
அன்பு தம்பிகளுக்கு இந்த மூத்த அண்ணனின் சுருக்கமான அறிவுரை இது. கேட்போர் கேட்கலாம். புறக்கணிப்போர் வழக்கமான பாணியில் புறக்கணித்துவிடலாம். படைப்பியல் ரீதியாகவே இது உங்களுக்கு தரப்பட்டுள்ள சுதந்திரம்.
நான் ஏற்கனவே தம்பி சீமானுக்கு இதே ரமலான் மாதத்தில் எழுதிய கடிதத்தில், (வலைப்பூவில் வாசிக்க: http://ikhwanameer.blogspot.in/2017/05/blog-post_27.html) அவரும், அவர் சார்ந்த இயக்கமும் வெகு விரைவில் பெரும் நெருக்கடிக்கு ஆளாக இருப்பதைக் குறித்து எச்சரித்திருந்தேன். அந்த மடல் கிடைக்கப் பெற்ற சீமானும் எனது கருத்துக்களை கவனத்தில் கொள்வதாக ஒலி வடிவில் (Audio) சொல்லி நன்றி தெரிவித்திருந்தார்.
தம்பிகளே, இதோ வந்துவிட்டது நாம் தமிழர் கட்சிக்கான வனவாச காலம்.
இயக்கத்தின் மூத்த தலைவர்கள் அனைவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரணமே இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய வெள்ளையனின் சட்டப் பிரிவுகள் இருப்பது உண்மைதான்! ஆயினும், தற்போதைய கைதுகளுக்கும், நெருக்கடிக்கும் சுயமாய் நீங்களாகவே உருவாக்கிக் தந்த காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆம்.. இது நீங்களாகவே உங்கள் முடிவுகளுக்குத் திரித்துக் கொண்ட கயிறுகள் அன்றி வேறில்லை.
தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்பது உங்கள் கொள்யையானாலும், ஆட்சி. அதிகார ஆளுமை என்பது ஒரு இனத்தில் பிறந்ததாலேயே மட்டும் கிடைக்கும் வம்சாவழி உரிமை இல்லை. அது மக்கள் மனங்களைக் கொள்ளைக் கொள்ளும் பண்புநலன். மக்களை ஈர்த்து நம்பிக்கையூட்டி வழிகாட்டும் ராஜபாட்டை.
செவிப்பறையை பிளந்தெடுக்கும் வண்ணம் ஓங்கிய குரலில் உணர்ச்சி வசப்படுத்தும் ஆவேசமான பேச்சுகள்,
திரும்ப.. திரும்ப ஒவ்வொரு இடத்திலும் சலிப்படையச் செய்யும் அதே கருத்துக்கள்,
இவை அனைத்தும் வெறுமனே மனித மனங்களை ஒருகாலும் துளைப்பதில்லை.
இயக்கமும், இயக்கத் தலைமையும் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் மனம் நோகும் அளவுக்கு பெரும் விமர்சனங்களை முன் வைக்க என் மனம் ஒப்பவில்லை. அதனால், மிக எளிமையான சில குறிப்புகளை மட்டும் என்னால் தர முடியும்.
1 பிரச்னைகள்தான் இயக்கம் உயிரோட்டத்துடன் இருக்கிறது என்பதற்கான சான்றுகள். அதனால், பிரச்னைகளைக் கண்டு துவளாமல் இயக்கப் பணியை முன்னெடுத்து சென்றவாறு இருங்கள்.
2 தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்து விடுங்கள். சர்ச்சைகள் உங்களைத் திசைத்திருப்பிவிடும். நேரத்தை வீணாக்கிவிடும்.
3 எதிர்வினையை உருவாக்காதீர்கள். சொல்ல வேண்டிய கருத்துக்களை சூழலுக்கு ஏற்றாற்போல சுருக்கி சொன்னாலே போதுமானது. அந்தக் கருத்தின் எல்லா பக்கங்களையும் தொட வேண்டும் என்பது கட்டாயமல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
4 தயவுசெய்து தொண்டைக் கிழிய கத்தாதீர்கள். கணிணியில் நான் சீமானின் உரைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது என்னருகே வரும் எட்டுவயது பேரன் அந்த கூச்சல் பிடிக்காமல் முகம் சுளித்து கடுமையான விமர்சனமும் செய்கிறான். இதேபோல, இந்தக் கூச்சலுக்கு ஏராளமான விமர்சனங்கள் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.
5 சீமானின் தம்பிகள் சீமானைப் போலவே பிரதிபலிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அவரவர்க்கான குரல்வளம். உடல் மொழி, மக்களுக்கு எடுத்துரைக்கும் பாங்கு தனித்தனியானது. அதனால், அமைதியாக பேசுங்கள். மக்களுக்கு புரிய வைக்க தொடர்ந்து முயலுங்கள்.
6 மக்களிடையே சுயநலம் சூழ்ந்து கொண்ட காலமிது. ஒழுக்கவிழுமியங்கள் அதளபாதாலத்தில் சரிந்துள்ள சூழல். இச்சூழலில் பொதுநல வெளிக்கு மக்களை அணித்திரட்டுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நினைவில் வையுங்கள்.
7 இந்திய ஜனநாயக அமைப்பில் எல்லாமே மாற்றத்துக்குரியவை ஆதலால், பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ முதலில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அடிபணியுங்கள். இது பெருமளவு பிரச்னைகளைத் தீர்த்துவிடும். உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். மன உளைச்சலைத் தவிர்க்கும்.
8 பொது எதிரி பூதகரமாய் எழுந்து நிற்கும் நிலையில், உங்கள் கவனம் முழுக்க அந்த எதிரியை வீழ்த்துவதில் இருக்கட்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் இத்தகைய குறிக்கோள் கொண்டவர்களுடன் இணைந்து பயணிப்பதில் ஒரு தவறும் இல்லை.
9 அரசியல் அரங்கில், இதற்கு முன்னிருந்தோர் செய்த தவறுகளால்தான் அவர்கள் வீழ்த்தப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால், மீண்டும்,.. மீண்டும் அவர்களை நிந்தித்துக் கொண்டு பகையுணர்வை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். இதற்கு மாறாக, மேலும், மேலும் உங்கள் ஆளுமைப் பண்புகளை வளர்த்தவாறே இருங்கள்.
11 கடைசியாக உங்கள் அம்புகளை கூர்த்தீட்டிக் கொள்ள அவகாசம் தேடுங்கள். இதற்கு சமயோசிதம், விவேகம் இவற்றுடன் செயல்பட வேண்டியதிருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அன்பு தம்பிகளே, நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போல, மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை நீங்கள் கேட்கலாம். நிராகரிக்கலாம் இது உங்கள் விருப்பம். ஆயினும் படைப்பில் நாம் இரு காதுகளோடு படைக்கப்பட்டவர்கள் என்பதில் கவனத்தில் கொள்க.
அன்புடன்,
இக்வான் அமீர்
மூத்த சுதந்திர இதழியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்.
0 comments:
Post a Comment