மற்ற இறை வணக்க
நடைமுறைகளான நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றவற்றின் நோக்கத்தைப்
புரிந்துகொள்ளாமல் ஈடுபடும்போது விரயமாகிவிடும். மாறாக, இறை வணக்கத்தின்
நோக்கத்தைப் புரிந்து நடந்து கொள்ளும்போது அற்புதமான நல்லொழுக்கம் கொண்ட
மனிதனை வார்த்தெடுப்பதைக் கண்ணாரக் காண முடியும். -இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''
நல்லொழுக்கமும் இறை நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. ஒன்றை விட்டுவிடுபவன் அடுத்ததையும் நிச்சயம் விட்டுவிட வேண்டியதிருக்கும்.
அன்சாரி என்றழைக்கப்படும் மதீனத்துத் தோழர் ஒருவரை நபிகளார் கடந்து செல்லும்போது, அத்தோழரோ தம் சகோதரர் ஒருவரைத் தடித்த வார்த்தைகளால் கடிந்துகொண்டிருந்தார். தன் சகோதரரின் நடத்தை சரியில்லை என்பதே அவரது அந்நிலைக்குக் காரணம். “நன்னடத்தை என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாதலால் அவரை விட்டுவிடுங்கள் தோழரே” என்று விமர்சித்தவருக்கு அறிவுரை வழங்கினார் நபிகளார்.
“இறைவன் மீது ஆணையாக, அவர் முஸ்லிமாக இருக்க முடியாது. அவர் ஒரு முஸ்லிமாக இருக்கவே முடியாது” என்றார் நபிகளார்.
“இறைவனின் திருத்தூதரே, அப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலி யார்?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, “யாருடைய அநீதி, அக்கிரமங்களிலிருந்து அவரது அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர்!” என்கிறார் நபிகளார்.
“இறைவன் மீதும், மறுமையின் மீதும் நம்பிக்கை கொள்பவர் நல்லதையே பேச வேண்டும்” என்பதே அதன் வழிகாட்டலாகும். இறைநம்பிக்கை நற்குணங்களை வளர்ப்பதோடு, அவற்றைக் கட்டிக்காக்கவும் பேருதவி செய்கிறது. அதனால், நல்லொழுக்கமும் இறைவணக்கமும் தனித்தனியானவை அல்ல.
இறைவணக்கத்தின் உயரிய நோக்கம்
இஸ்லாமில் கடமையாக்கப்பட்ட ஐந்து வேளைத் தொழுகையின் நிலைகளைச் சிறு குழந்தையும்கூட உன்னிப்பாகக் கவனித்து திரும்பவும் செய்ய முடியும். கொஞ்சம் முயன்று தொழுகையில் ஓதப்படும் வசனங்களையும் மனனமாக அச்சிறுப்பிள்ளை ஓதிடவும் முடியும்.
ஆனால், இந்த உடலசைவுகளும் உதட்டசைவுகளும் மனிதருள் எவ்வித தாக்கத்தையும் உருவாக்கிட முடியாது. இறை வணக்கங்கள் அளிக்கவிருக்கும் உயரிய குணாம்சங்களையும் இறை வணக்கங்களின் நோக்கத்தையும் நிறைவு செய்ய ஒருக்காலும் உதவாது.
மற்ற இறை வணக்க நடைமுறைகளான நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றவற்றின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் ஈடுபடும்போது விரயமாகிவிடும். மாறாக, இறை வணக்கத்தின் நோக்கத்தைப் புரிந்து நடந்து கொள்ளும்போது அற்புதமான நல்லொழுக்கம் கொண்ட மனிதனை வார்த்தெடுப்பதைக் கண்ணாரக் காண முடியும்.
ஒருமுறை நபிகளார் தம் தோழர்களிடம், “தோழர்களே, பரம ஏழை என்பவர் யார் தெரியுமா?” என்று கேட்டார்.
அதற்கு நபித்தோழர்கள், “இறைவனின் திருத்தூதரே, செல்வமும் சொத்துகளும் இல்லாதவரே ஏழை என்போம்” என்று பதிலளித்தார்கள்.
“தோழர்களே, நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள். இறைவனின் திருச்சன்னிதியில் அனைத்தையும் இழந்து கைச்சேதமுற்று நிற்பவரே பரம ஏழையாவார். அவர் தொழுகை செய்தவராக இருந்திருப்பார். ஜகாத்தும் கொடுத்திருப்பார். நோன்பும் நோற்றிருப்பார். ஆனால், அவர் சிலரை வசைமாரி பொழிந்திருப்பார். சிலரது மனங்களைக் காயப்படுத்தி இருப்பார். சிலர் மீது அவதூறு சுமத்தியிருப்பார், அநீதியாய் அடுத்தவர் பொருளை அபகரித்திருப்பார்.
இப்படியாகப்பட்டவரின் நன்மைகள் எல்லாம் அந்தத் தீர்ப்பு நாளில் அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். இனி நன்மைகள் எவையுமே இல்லை என்ற நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்களின் பாவங்களும் அவரது கணக்கில் ஏற்றப்பட்டு அவர் நரகத்தில் தள்ளப்படுவார். இத்தகைய துரதிர்ஷ்டசாலியே பரம ஏழையாவார்!” என்றார் நபிகளார் வருத்தத்துடன்.
(தி இந்து, ஆனந்த ஜோதி 24 மே, 2018 அன்றைய இணைப்பில் வெளியான எனது கட்டுரை)
0 comments:
Post a Comment