NewsBlog

Wednesday, June 20, 2018

சமூகம்: ஜப்பானியர்களின் அந்த உதாரணம்




மேற்கத்திய கலாச்சாரத்தை கடுமையாக சாடும் நாம் நம்மை அறியாமலேயே அதற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம். சமுதாயத்துக்காக எல்லாவற்றையும் இழக்கத் தயார் என்று முழக்கமிடும் நாம் செயல்பட மட்டும் தயாராக இல்லை. இஸ்லாத்தைக் குறித்தும் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் குறித்தும்.. மணிக்கணக்கில் பேசும் நாம் அதன் ஒரே ஒரு கட்டளையையும் செயல்படுத்த முன்வருவதில்லை. செய்யாததை சொல்லிக் கொண்டிருப்பதே நமது பிழைப்பாகிவிட்டது ~இக்வான் அமீர்

 '''''''''''''''''''''
உலகளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ’-வின் அறிக்கையின்படி 2003-ஆம் ஆண்டின் மொத்த முஸ்லிம்களின் மக்கள் தொகை 1.48 பில்லியன்கள் அதாவது 148 கோடி. இதற்கு முந்தைய புள்ளிவிவரங்களின்படி இது 1.2-1.3 பில்லியன்கள். அதேபோல, 2003-ஆம் ஆண்டு முஸ்லிம்களின் எண்ணிக்கை சம்பந்தமாக எடுக்கப்பட்ட வேறு புள்ளிவிவரங்களின்படி உலகளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1.70 பில்லியன்கள் அதாவது உலகளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23 விழுக்காடு. கனடாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கனடா நாட்டு மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவமாகும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை முஸ்லிம்.

இந்த வளர்ச்சி எதைக் காட்டுகிறது?

நமது பொறுப்புணர்வுகளை நாம் மனித சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய மகத்தான கடமைகளை இந்த பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்றுவதற்கான களம் நமது முன் விரிந்து பரந்திருக்கிறது. யார் யார் எல்லாம் இஸ்லாத்தின் கொடியை தோள்களில் தாங்கி முன் செல்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். நமது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கிறது. நமது பொறுப்புகளையும், கடமைகளையும் உணரும் பட்சத்தில் நமது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால்மங்காத ஒளிமயம்தான்!

உலகின் செல்வத்தை இறைவன் நமது காலடியில்தான் கொட்டி குவித்துள்ளான். இறையருள் பெருமழை முஸ்லிம் நாடுகளின் மீது பொழிந்து கொண்டிருக்கிறது. உலகின் 40 விழுக்காடு கனிமவளம் முஸ்லிம்களின் காலடியில்தான் புதைந்து கிடக்கிறது. அறிவுபஞ்சத்துக்கும் இங்கு குறைவில்லை என்றுகூட சொல்லலாம். ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், அறிவு ஜீவிகள் என்று உலகளவில் உள்ளனர். ஆனாலும், நாம் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருவது ஏன்?

இதுதான் அந்தக் காரணம்:

நாம் அதிகமாக பேசுகிறோம்.

குறைவாகவே செயல்படுகிறோம்.

இப்படி செயல்படாத சொற்களால் என்ன விளைவுகளைதான் ஏற்படுத்த முடியும்? இதனால் யாருக்கு என்ன பலன்? நம்முடைய வீழ்ச்சிக்கும், இழிநிலைக்கும் நம்மைத் தவிர வேறு யாரும் காரணமில்லை. ஆனாலும், இதற்கான காரணங்கள் பிறசமுதாயத்தினர்தான்என்று வாய்க் கூசாமல் சொல்லி வருகிறோம். நமது பேரழிவுகளுக்கு நம்மைச் சுட்ட வேண்டிய விரல்கள் பிறரைச் சுட்டுவது விந்தையானது.

சமூக எழுச்சிக்கு நாம் எதுவும் செய்ய முடியும். ஆனாலும், ஒவ்வொரு விடியலையும் நாம் வருத்தமில்லாமல் கழித்துவருகிறோம். இஸ்லாத்துக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசும் நாம் அதன் ஒரே ஒரு செயலையும் செயல்படுத்த தயாராக இல்லை.

அது, நாள்தோறும் ஐவேளை நிறைவேற்ற வேண்டிய தொழுகைகளானாலும்,

ஆண்டுக்கு ஒருமுறை ஒருமாதம் நிறைவேற்ற வேண்டிய நோன்புகளானாலும்,

ஆண்டில் ஒருமுறை கணக்கிட்டு ஏழைகளுக்கு வழங்கி தூய்மைப்படுத்த வேண்டிய ஜகாத்தானாலும் அல்லது

ஆயுளில் ஒருமுறை நபிமார்களின் தந்தையார் இப்ராஹீம் நபி மற்றும் இஸ்மாயீல் நபிகளின் திருக்கரங்களால் கட்டி இறையருளுக்கு ஆளாகிய ஓர் இறையின் தலைமையகமான கஅபாவை சந்திக்க நாடுவதாக இருந்தாலும் சரி எதுவொன்றுமே அலட்சியம்தான்!

மேற்கத்திய கலாச்சாரத்தை கடுமையாக சாடும் நாம் நம்மை அறியாமலேயே அதற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம். சமுதாயத்துக்காக எல்லாவற்றையும் இழக்கத் தயார் என்று முழக்கமிடும் நாம் செயல்பட மட்டும் தயாராக இல்லை. இஸ்லாத்தைக் குறித்தும் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் குறித்தும்.. மணிக்கணக்கில் பேசும் நாம் அதன் ஒரே ஒரு கட்டளையையும் செயல்படுத்த முன்வருவதில்லை. செய்யாததை சொல்லிக் கொண்டிருப்பதே நமது பிழைப்பாகிவிட்டது.

மேற்கத்திய நாடுகளையும், அவர்களது கலாச்சார அமைப்பையும் கடுமையாக விமர்சிக்கும் நாம்உள்ளுக்குள் அந்த அமைப்பின் ஒழுக்க்க் கேடுகளும், சமூகத் தீமைகளுக்கும் அடிமையாகிக் கிடக்கிறோம்.

உலகளவில் கொள்கை வழியிலான நமது சொந்த சகோதர சகோதரிகள் பலஸ்தீனத்திலும், போஸ்னியாவிலும், செசென்யாவிலும், அல்ஜீரியா, சூடான், குர்திஸ்தான், சோமாலியா, இராக், மியான்மர் இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படும் வேதனைகள் நமக்கு பெரிதாக தெரியவில்லை அல்லது பொருட்படுத்த்த் தயாராக இல்லை.

இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

இறைநம்பிக்கை கொண்டவர்களே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், ஒவ்வொரு மனிதனும் நாளைய தினத்துக்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவன் அறிபவனாக இருக்கின்றான்” (59:18-20)

நாம் நமது உலகியல் தேவைகளை, சுகங்களை, மனைவி மக்களின் சிறிய, பெரிய தேவைகளை, ஆசை அபிலாஷைகளை மறப்பதே இல்லை. மிகவும் சிரத்தையுடன் இவற்றை நிறைவேற்றுகின்றோம். ஆனால், இறைவனை மறந்துவிட்டோம். நமது தேவைகளையும், நமது குடும்பத்தாரின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற இன்பங்களை வாரி, வாரி வழங்கிக் கொண்டிருக்கின்ற இறைவனை மறந்துவிட்டோம்.

இறைவனை மறந்து போவது தன்னைத்தானே இறைநிராகரிப்பு முட்கூண்டில் சிறைப்படுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அவன் தன்னைத்தானே பேரழிவுக்குள் ஆழ்த்திக் கொண்டான் என்பதே உண்மைப் பொருளாகும்.

இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தையும், இறைவனின் திருத்தூதரான முஹம்மது நபிகளாரின் (ஸல்) வழிமுறையையும் செயல்படுத்திக் காட்ட வேண்டாமா? அந்த வாழ்வியல் விருட்சத்தின் அருங்கனிகளைச் சுவைக்க வேண்டாமா? எல்லா இழிவுகளையும், விட்டு விலகி தூய மனிதனாக இறைவனின் அடிமையாகநல்ல முஸ்லிமாக வாழ வேண்டாமா?

சூரே அல்பலத்தில் இறைவன் இப்படி கேள்வி எழுப்புகின்றான்: அவனுக்கு நாம் இரு கண்களையும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் அளிக்கவில்லையா? ஞானம், அறிவு, சிந்திக்கும் ஆற்றல் இவற்றுக்கான வழிவகைகளை அளிக்கவில்லையா? என்று இறைவன் கேட்கின்றான்.

இஸ்லாத்துக்கு எதிரான உலகளாவிய சக்திகள் கைக்கோர்த்துக் கொண்டு நிற்கின்றன. உண்மையில், அந்த சக்திகளுக்கிடையே ஓராயிரம் பிரிவினைகள் இருந்தாலும், சத்தியத்துக்கு எதிராக ஆர்ப்பரித்து ஓரணியில் நிற்கின்றன. குலங்கள், கோத்திரங்கள் என்று பிளவுப்பட்டிருந்த அன்றைய குறைஷிகள், யூதர்கள், இணைவைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நபிகளாரை எதிர்த்ததைப் போல கடும் பகைமையுடன் நிற்கின்றன.

ஒன்றுபடுங்கள்..! ஒற்றுமையாய் வாழுங்கள்..! வெல்வீர்கள்..!” – என்று இஸ்லாம் படித்துப் படித்துச் சொல்கிறது.

ஆம்.. நாம் ஒன்றுபட்டுதான் நிற்கிறோம்.. ஒன்றுபட கூடாது..!என்பதற்காக..!

மொழி ரீதியாக, ஊர் ரீதியாக, அமைப்புகள் ரீதியாக இஸ்லாமிய பிக்ஹ் மஸாயில் சட்டங்கள் சம்பந்தமாக தனித்தனியாக பிரிந்து நிற்கிறோம். ஒவ்வொரு பிரிவும் தன்னை உயர்ந்தவராக காட்டிக் கொள்ள ஓராயிரம் பிரயத்னங்கள் செய்கின்றோம். இந்த பிரிவுகளுக்குள் வளர்ச்சியை எப்படி காணமுடியும்?

நாம் எல்லாமுமாய் இருக்கிறோம்; முஸ்லிம் என்ற அந்தஸ்தைத் தவிர! இந்த நிலைமையில் நாம் வெற்றி பெறுவது எப்படி? இந்த குழப்பங்களிலா நாம் ஓங்கி வளர முடியும்? காலத்தின் அருமை நமக்கு எப்போதுதான் புரியப் போகிறது?

பனிக்கட்டியைப் போல கரைந்துருகிடும் காலத்தைவாழ்க்கையை முன்னிறுத்தி, “காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்து கொண்டும், மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும், பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர!” (103:1-3) என்கிறான் இறைவன்.

1. இறைநம்பிக்கை
2. நற்செயல்கள்
3. சத்தியத்தை எடுத்துரைத்தல்
4. அதனால் ஏற்படும் விளைவுகளை பொறுமையுடன் சகித்தல் என்று தொடராய் அதி அற்புதமான அருங்குணங்களை உணர்த்துகின்றான் இறைவன்.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தங்களுக்கு என்று திட்டங்களை வைத்துள்ளன. உலகை தனது கட்டுக்குள் கொண்டு வர முனைப்பு காட்டுகின்றன. இந்த ஆபத்துக்களை எதிர்கொள்ள சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு ஒரு பொது திட்டம் கட்டாயத் தேவை.

முஸ்லிம்கள் திருக்குர்ஆன் மற்றும் திரு நபிகளாரின் வழிமுறைகளையே அனைத்துக்கும் மேலாக நேசிக்க வேண்டும். வாழ்வின் அனைத்துத் துறைகளும் இஸ்லாமிய வாழ்வியல் திட்டத்தின்படி வார்த்தெடுக்க வேண்டும். நாடு-நிறம், மொழி, இனம் கடந்து ஒன்றுபட வேண்டும்.

ஒரு முஸ்லிமின் அளவுகோல் எது?

தனது பண்புகள், சமூக உறவுகள் அனைத்தும் இஸ்லாத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, அதற்கொப்ப தன்னை தகவமைத்துக் கொள்வதுதான் மிக முக்கியமானது.

உதாரணமாக, தங்கத்தையும், ஆண்களையும் வரலாற்றுடன் பொருத்திப் பார்த்தால்,

முஸ்லிம்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்று தடைவிதிக்கிறது இஸ்லாம்.

ஒருமுறை நபிகளார், தங்க மோதிரம் அணிந்த ஒருவரை பார்க்கிறார். தகிக்கும் நெருப்புக் கங்கை தனது கரத்தில் வைத்துக் கொள்ள உங்களில் யாராவது விரும்புவார்களா? – என்று கேட்கிறார்.

அதன்பின் மோதிரம் கையிலிருந்து அகற்றப்படுகிறது.

வினா வடிவிலான ஒரு யுக்தியால் நபிகளார் சமூகத்துக்கு அறிவூட்டும் நிகழ்வு இது.

நபிகளாரின் அறிவுரையை அல்லது கண்டிப்பை அந்த இறையடியார் எவ்வாறு உள்வாங்குகிறார் என்பதைக் கவனியுங்கள். இறைவனுக்கும், இறைவனின் திருத்தூதருக்கும் வழிபடுவதற்கான பேராவல் பொங்கு வெள்ளமாய் பிரவாகமெடுக்கிறது என்பதை தொடர்ந்து கேளுங்கள்:

கழற்றி எறியப்பட்ட மோதிரத்தைக் கண்ட மோதிரத்து சொந்தக்காரரிடம் அவரது தோழர் இப்படி அறிவுறுத்துகிறார்:

தோழரே..! உம் மோதிரத்தை எடுத்துக் கொள்ளும். அதை விற்று பணமாக்கிவிடலாம்..!

இதைக் கேட்டு அந்த மோதிரத்தின் உரிமையாளர் சொல்கிறார்: இறைவனின் மீது ஆணையாக..! நிச்சயமாக அப்படி செய்ய மாட்டேன். இறைவனின் திருத்தூதர் வேண்டாம் என்று தூக்கி எறிந்த மோதிரத்தை திரும்ப எனது கரங்களால் தொடவே மாட்டேன்” (முஸ்லிம்)

திருக்குர்ஆன் சொல்கிறது: நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் மனமொப்பி எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை உங்களுக்குத் தடுத்திருக்கிறாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்” (59:7)

நற்குணங்களாலான மிகச் சிறந்த சமூகம் இறைநம்பிக்கையோடு முடிச்சு போடப்பட்டதாகும். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால்.. அது அவர்களுக்குத்தான் நன்மையாக இருந்திருக்கும்” – என்று ஆலு இம்ரானில் யூதர்களை சுட்டி இறைவன் கூறுகின்றான். யூதர்களே, இறைநம்பிக்கையின் மூலமாக உயரிய பண்புகளை நீங்களும் வெளிப்படுத்தியிருக்கலாமே!’- இறைவனின் ஆதங்கம் வார்த்தையாய் வெளிப்படுகிறது.

ஆனால், இவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்கள். இவர்களால் உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது. தற்போது நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சிறியவைதான். சிறு சிறு தொல்லைகள்தான்! அவையும் இம்மை சம்பந்தமான பிரச்னைகள்தான்! மறுமை சம்பந்தமான முடிவுகளில் அவர்களால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. அதேபோல, உறுதியான இறைநம்பிக்கையோடு நிலைத்திருக்கும் நிலையில் அதிலும் உங்களை வெல்ல முடியாது என்று முஸ்லிம் சமூகத்திற்கு உறுதி அளிக்கிறான் இறைவன்.

யூதர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு இறைவனின் பொறுப்பில் அல்லது மனிதர்களின் பொறுப்பில் எங்கேயாவது அடைக்கலம் கிடைத்தாலே தவிர இவர்களது வாழ்வியல் நிலைமை மிகவும் மோசமானதாகவே இருந்தது. உலகின் அகதிகளாய்.. நாடோடி இனத்தவராய் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களுக்கு தற்போது கிடைத்திருக்கும் உலகளாவிய ஆதரவு, அடைக்கலம் எல்லாம் அவர்களது சொந்த முயற்சிகளால் கிடைத்ததல்ல. உலக மக்களின் அன்பால், ஆதரவால் கிடைத்ததாகும். இன்னும் சில முஸ்லிம் நாடுகளில் இறைவனின் பெயரால்.. யூதர்களுக்குக் கிடைத்த புகலிடமாகும். தன்னந்தனியாக அல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற உலக மகா முரடர்களின் தோள்களில் அமர்ந்து கொண்டு இஸ்ரேல் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறது.

சொந்த மண்ணின் மைந்தர்களான பலஸ்தீனர்களை அகதிகளாக்கி வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. வெறும் கவண்கல் ஆயுதங்களாக்கி போராடி வருகிறார்கள் மண்ணின் மைந்தர்களான பலஸ்தீனர்கள். அவர்களது ஒவ்வொரு மாணவனும் பள்ளிக்கூடம் செல்லும்போது மறக்காமல் புத்தகங்களோடு கொண்டு செல்லும் ஆயுதம் கவண்கல். ஆயிரக்கணக்கான சிறார்களும், பெண்களும் இஸ்ரேலின் கொடுஞ்சிறைகளில் அல்லல் பட்டாலும் அவர்களது இருப்புகளுக்கான போராட்டம் தொடர்ந்தவாறே இருக்கிறது.

உஹது போர். உஹது இளம் முஸ்லிம் சமுதாயத்துக்கு பெரும் சோதனையாக அமைந்த போர்க்களம். முஸ்லிம்கள் தங்கள் தலைவரின் எஃகு போன்ற உறுதியையும், இறைநம்பிக்கையில் விளைந்த பலத்தையும் பத்ர்ரில் நேரிடையாக கண்டிருந்தார்கள்.

பத்ர் போர். மக்காவாசிகள் பெரும் சேதத்துக்கு ஆளான யுத்தம். அபூஜஹல் போன்ற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்ட யுத்தம். ஆயுத பலத்தாலும், இராணுவ சேனைகளாலும் எதையும் செய்திடலாம் என்று நம்பினோர் முகம் குப்புறக் கவிழ்ந்து புற முதுகிட்டு ஓடிய யுத்தம். எப்படி இது சாத்தியமானது?” - என்று வியப்பால்.. ஓராயிரம் கேள்விகள் அவர்களின் இதயங்களைத் துளைத்தெடுத்த யுத்தம்.

விமர்சனங்களால் பாடம் பெறாமல், அனுபவங்களை உரசிப் பார்க்காமல் ஒழித்தல்என்ற ஒரே நோக்கோடு மீண்டும் மக்காவே ஆயுதமேந்தி வந்தது உஹத் களத்துக்கு!

சுமார் 3 ஆயிரம் சிறப்புப் பயிற்சி பெற்ற போர் வீர்ரகள். அதுவும் மிகச் சிறந்த இராணுவ தளபதியான அபூசுப்யான் தலைமையில்! திட்டவட்டமான வெற்றி முடிவோடு ஆடல், பாடல் உற்சாகமூட்டும் நங்கைகளோடு குறைஷிகள் களத்தில் குதித்திருந்தார்கள்.

நபிகளாருக்கு பெருத்த சிரமத்தை உண்டாக்கிய யுத்தமே உஹத். வெறும் 700 லிருந்து 1000 – க்குள், முஸ்லிம் படை வீரர்கள்.

ஒரு கட்டத்தில், போரில் ஏற்பட்ட மோசமான திருப்பத்தால் முஸ்லிம்கள் பெருத்த இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

முஸ்லிம்களுக்கு பாடம் புகட்ட இறைவன் முடிவெடுத்தபின் அதை யாரால்தான் தடுக்க முடியும்?

எதிரிகளுக்கு சாதகமான அம்சங்கள் கூடிவிட்டன. யுத்தத்தின் போக்கு மாறிவிட்டது. நேருக்கு நேர்.. வாழ்வா? சாவா? என்று தீர்மானிக்கும் நிலை முஸ்லிம்களுக்கு. எதிரியா? நண்பரா? என்று அடையாளம் காண கூட அவர்களுக்கு நேரமில்லை!

80-க்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அமர்ரானார்கள்; ஷஹீதாக்கப்பட்டார்கள். ஹம்ஸா போன்ற மாவீரர்கள் கொல்லப்பட்டு அவரது உடல் கடுமையாக சிதைக்கப்பட்டது. இந்த மாபெரும் வீரர்களின் மண்ணறைகள் இன்றைக்கும் உஹத் களத்தில் உலக முஸ்லிம்களுக்கு சாட்சியாய் உள்ளன.

நபிகளாரின் அமைதி, பொறுமை, வீரம் அனைத்தும் வெளிப்பட்ட யுத்தமே உஹத் யுத்தம்.

கடைசியில், வெற்றிப் பெற வேண்டிய குறைஷிகள் பின்வாங்கி சென்றது ஏன் என்று இதுவரையிலும் புரியாத புதிராகி வரலாறு வியக்கிறது. குறைஷிகள் பின்வாங்கி, மதீனா காக்கப்பட்டது உண்மைதான்! ஆனால், ‘ஈமானுக்கு இறைநம்பிக்கைக்குபடிப்பினையாக அமைந்த்து உஹத் யுத்தம்.

இங்கு உலக வரலாறு ஒன்றை இணைத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். உலகியல் வெற்றிகளுக்காக எத்தனை எத்தனை முயற்சிகள்…! ஆனால், மறுமை வெற்றிக்கு என்னதான் முயற்சித்தோம் நாம்?

ஜப்பானியர்களுக்கு புத்தம் புதிய மீன்களை சமைத்துண்பதில் அலாதிப் பிரியம். ஆனால், கரைக்கருகில் மீன்கள் கிடைப்பதில்லை. அதனால், மீன்களைப் பிடிக்க ஜப்பானிய மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம்.

அப்படி ஆழ்கடலில் பிடித்த மீன்களைக் கரைக்கு கொண்டு வருவதில் ஏக சிக்கல். ஏனென்றால், மீனவர்கள் கரைக்குத் திரும்ப சில நாளானது. அதனால், மீன்கள் அழுகிப் போகும் நிலைமை ஏற்பட்டது. இப்படிப்பட்ட மீன்களை ஜப்பானியர்கள் விரும்புவதில்லை.

இந்தப் பிரச்னைக்கு தீர்வாக மீன்பிடி நிறுவனங்கள் தங்களுடன் குளிர்சாதப் பெட்டகங்களையும் கொண்டு செல்ல ஆரம்பித்தன. இந்தப் பெட்டகங்கள் மீனவர்களை நிம்மதியாக பல நாள் கடலில் மீன் பிடிக்க உதவின. ஆனாலும், ஜப்பானியர்கள் ருசி கண்ட நாக்குகள் ஐஸ் பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட மீனுக்கும், புத்தம் புதிய மீனுக்கும் இடையேயுள்ள சுவையின் வேறுபாட்டை கண்டுவிட்டன. அவர்கள் இந்த மீன்களை விரும்பவில்லை. மீண்டும் ஜப்பான் மீனவர்களுக்கு தலைவலி ஆரம்பித்தது.

இப்போது மீன் பிடிக்கும் படகுகளுடன் மீனவர்கள் தொட்டிகளை இணைத்து கடலுக்குள் சென்றார்கள். கடலில் பிடிக்கும் மீன்களை உயிருடன் இந்தத் தொட்டியில் போட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள். துரதிஷ்டவசமாக ஜப்பானியர்கள் இந்த மீன்களையும் அவ்வளவாக விரும்பவில்லை. ஏனென்றால், தொட்டியில் மீன்கள் உயிருடன் இருந்தன என்பது என்னவோ உண்மைதான்! ஆனால், அவை இயற்கையாக நீரில் ஓடியாடி வாழ்வது போல அல்லாமல் சலனமற்று இருந்ததால் சுவைக்குன்றிய மீன்களாக அவற்றை அவர்கள் உணர்ந்தார்கள்.

கடைசியில், இந்தச் சிக்கலை ஜப்பானிய மீன் பிடி நிறுவனங்கள் எப்படி சமாளித்தன? தங்கள் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியை எப்படி வெற்றிக் கொண்டன தெரியுமா?

ஜப்பானிய மீன்பிடி நிறுவனங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டது உண்மைதான்..! கடைசியில், யாரோ ஒருவர் ஓர் ஆலோசனை சொல்ல அதைச் செயல்படுத்திப் பார்க்க அவர்கள் முடிவெடுத்தார்கள்.

அந்த ஆலோசனையின்படி, கடலில் பிடித்த மீன்களை தொட்டியில் போட்ட மீனவர்கள் கூடவே சுறா மீன் ஒன்றையும் அதில் போட்டார்கள். அந்த சுறா மீன் ஓரிரு மீன்களை வேட்டையாடிச் சாப்பிட்டாலும் மற்ற மீன்கள் சுறா மீனிடமிருந்து தப்பிக்க அங்குமிங்குமாக ஓடியதால், கடலிலிருக்கும் இயல்பு நிலைக்கு மீன்கள் திரும்பின. அவற்றின் சுவையும் இயற்கையாகவே இருந்தது.

முஸ்லிம்களின் வாழ்விலும் ஜப்பானிய மீனவர்களுக்கு ஏற்பட்டதைப் போல எத்தனையோ பிரச்சினைகள் எதிர்படலாம். ஒவ்வொரு நொடிக்கும் அறைக்கூவல்களாய் எழுந்து அச்சுறுத்தலாம். ஆனால், இவற்றைக் கண்டு அஞ்சிடாமல் அவற்றை நேசத்துடன் எதிர்க்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

உங்களை மீனாகவும், அறைக்கூவல்களை சுறாக்களாகவும் கருதிக் கொள்ளுங்கள். வாழ்க்கை இயல்பாகும். வெற்றியின் இலக்கை அடையச் செய்யும். பிறர்க்கு உதவும் மனப்பான்மையாய் வாழ்வின் போக்கு மாறி நிற்கும்.

(மனாருல்ஹீதா, மாத இதழ் நவம்பர் 2004-ல், பிரசுரமான எனது கட்டுரை)



Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive